கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து மனிதன் மாறவில்லை. ஆண்டான் இருந்தான். அடிமை இருந்தனர். அடக்குமுறை இருந்தது, இருக்கிறது; இருக்கும்.

இருக்கும் என்று எதிர்காலத்தில் பேசுவது கேட்டு பதட்டம் அடைதல் வேண்டா. அடக்குமுறைக்கான காரணம் வேறாக இருக்குமே ஒழிய, அஃது ஒழிதல் யுடோப்பியக் கனவு.

அப்படி இருக்கையில், மனிதனின் சம உரிமைப் போராட்டமும் ஆதியிலிருந்தே தொடங்கி விட்டது.

அந்தப் போராட்டம் பல நேரங்களில் வெடித்து, அடங்கிப் போய், நைந்து, பின் வீறு கொண்டு எழுந்து உலகெங்கிலும் வெவ்வேறு சமூகங்களில் புரட்சியாக மலர்ந்துள்ளது.

அப்போராட்டம் ‘போர்’ அடிக்கும் என்று நினைக்கும்போதெல்லாம், கலை அதை உயிர்ப்பிக்கக் கை கொடுத்தது. அவ்வாறான ஒரு நெடிய கலைப்பட்டியலில் புதிய வரவு – காலா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், மாப்பிள்ளை தனுஷ் தயாரிப்பில், உலகெங்கிலும் வெளியிடப்பட்ட காலா, முழுக்க முழுக்க சமூகச் செய்திகளுக்கு இடையே, மசாலா கலந்த ஒரு கலவை!

ரஞ்சித் தன்னுடைய முந்தைய படங்களில் (அட்டக்கத்தி, மெட்ராஸ்) இதைப் பற்றி இலை மறைவு காய் மறைவாகப் பேசியிருப்பார். நானும் அவை ஏழைகளை முன்னேற்ற ரஞ்சித்தின் படைப்புகள் என்று எண்ணுகையில், ‘டேய் முட்டாள், அவை எந்த சாதாரண ஏழைகள் பற்றியில்லை. சமூகத்தில் அழுத்தப்பட்ட தலித்துகள் பற்றி!’ என்று தலையில் தட்டி யாரோ சொன்ன பிறகுதான் உரைத்தது.

கபாலி படமும் அதே பாணியில், இன்னும் தைரியமாக, நேரடியாக இதே செய்தியை விளக்கமாக வழங்கினாலும், அதன் கதைக்களன் வேறொரு நாடாக இருந்தது. அம்பேத்கர், சே குவாரா என்று தலித்துக்களின் அடையாளங்கள் பல இடங்களில் பளீரெனத் தெரிந்தனர். ‘நான் கோட்டு சூட்டு போடுவேன்டா, கெத்தா இருப்பேன்டா!’ என்று ரஜினி உறுமும்போது தலித் சமூகம் மட்டுமல்ல, ரஜினியின் ரசிகர் கூட்டமே கொண்டாடியது என்பது நாடறிந்த பாக்ஸ் ஆஃபீஸ் செய்தி!

இப்போது காலா!

காலா – என்ன பேருடா இது காலா ?
வில்லன் நானா படேகர் ஒரு இடத்தில் கேட்பார்.

காலா என்றால் கருப்பு. உழைப்பின் நிறம்.
காலன் என்றால் எமன். தர்மத்தின் அடையாளம்.
காலன் என்றால் கரிகாலன். அன்றே கொல்லும் அரசன்.

இப்படி பலப்பல அடையாளங்கள் கொண்டு ரஜினி, ஆண்டைகளை எதிர்த்து அடிமைகளை வழிநடத்தி வலம் வருவது படத்தின் அழகு.

படத்தின் அடிமைகள் வாழ்வது உலகிலேயே மூன்றாவது ஆகப் பெரிய சேரியான தாராவியில். மும்பையின் கறையாக, கண் அராவியாக, 10 லட்சம் பேர் புளிமூட்டை போல ஒட்டி ஒட்டி இருக்க, பிறப்பு, இறப்பு, அன்பு, காதல், கோபம், கல்வி, கலவி, சண்டை, ரத்தம், புத்தன், ஏசு, ராமன், அல்லா, இப்படி எல்லா உணர்ச்சிகளும் அந்த ஒரு சதுர மைல் பரப்பில் கொட்டிக் கிடக்கிறது.

வாழ்வில் நெருக்கம் இருக்கிறதோ இல்லையோ, தங்குமிடத்தில் இருக்கும் நெருக்கடி, ஒரு சிறிய அறையில் 15 பேர்வரை இருக்கும் அளவுக்கு இருக்கிறது என்பதைக் காலா நமக்குக் காட்டுகிறது.

கதை என்னவோ பழங்கதைதான்.

ரஜினி தாராவியை ஆளும் நல்தாதா. நாற்பதாயிரம் கோடி மதிப்புள்ள அந்த இடத்தைக் கூறு போட்டு விற்க விழையும் வில்லன் நானா படேகர். ரஜினி தடுக்க, நானா அடிக்க, இருவருக்கும் சேதம். இறுதியில் வில்லன் மரணிக்க, எதிர்காலம் சுபீட்சம்.

‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ – மலைக்கள்ளனில் எம்ஜிஆர் பாடுவார். இந்தக் கதையினைக் கேட்கும் போது உங்களுக்கும் அதே தோன்றியிருப்பின், அதில் தவறில்லை. சரி, மீண்டும் ஒரு முறை ஏன் ஏமாற வேண்டும் என்று கேட்டால், ஒரே ஒரு காரணம்.

ரஜினி, ரஜினி, ரஜினி. அவ்வளவுதான்.

68 வயதிலும் திரையை ஆக்கிரமிக்கும் ஆளுமை, எம்ஜிஆருக்குப் பின் ரஜினிக்கு மட்டும்தான் என்பதைச் சின்னக் குழந்தை கூடச் சொல்லும்.

ஆரம்பக் காட்சிகளில் ஸ்டைல் மன்னனாய்ப் பவனி வருவதாகட்டும்.

தன் மாஜிக் காதலியான ஹூமா குரேஷியைக் கண்டவுடன் பதட்டம், காதல், முன் நினைவுகள், சிரிப்பு, (லேசான) கண்ணீர், அசத்தும் கண் சாடைகள், உடல் மொழி என்று வரிசையாக அவர் அளிக்க அளிக்க, ‘நல்லதோர் வீணை செய்தே அதை மசாலாப் புழுதியில் எரிந்து விட்டோம்’ என்று சுயநிந்தனையில் இறங்கத்தான் தோன்றுகிறது.

அதைத் தாண்டி அவரது நகைச்சுவை அழகிய புடவையில் சரிகைக்கரை போல பல இடங்களில் பளிச்சிட, காவல் நிலையத்தில் சாயாஜி ஷின்டேயை மீண்டும் மீண்டும் வெறுப்பேற்றி வெறி கொள்ள வைக்கையில், அரங்கம் அதிர்ந்தது.

கபாலியில், ரஜினியின் தீவிர ரசிகர்கள், அவருக்கே உரித்தான சண்டைக் காட்சிகளைக் காணாமல் மிகவும் ஏங்கினார்கள். இதில் அதற்குக் குறைவே இல்லாமல் வகை வகையாகச் சண்டைகள். அதுவும் அந்தக் குடைச் சண்டை ரசிகர்கள் கண்களில் ஆனந்த பாஷ்பம் வரவழைக்கும் என்பது திண்ணம்.

எப்போதும் போதையில் ஏதாவது உளறிக் கொண்டே ஃபேஸ்புக்கில் அலையும் சமுத்திரக்கனி

‘எனக்கும் அம்பையிலே பெருமாள் இருக்கான்’ என்று லந்து கொடுக்கும் அன்பு மனைவியாய் ஈஸ்வரி ராவ்

‘உன் வழி எனக்கு வேண்டாம். ஆனால் நானும் மக்களுக்காகப் போராடுவேன்,’ என்று அப்பனையே எதிர்க்கும் லெனின் மணிகண்டன்.

அழுக்கை அழித்து ஆளப்பிறந்தவன் நான் என்று அனைவரையும் காலில் விழவைக்கும் வில்லனாய் நானா படேகர்

முழுக்கை ரவிக்கையுடன் தாராவி மக்களின் வாழ்வை முழுமையாக்கப் பாடுபடும் முன்னாள் காதலி ஹூமா

இப்படிப் பலரும் ரஜினியின் – தப்பு தப்பு – காலாவின் வண்ணத்திற்கு மெருகூட்டுகிறார்கள்.

ஆனாலும் இது ரஞ்சித்தின் படம் அல்லவா?

வெறும் மசாலா மட்டுமே இருக்காது என்பது தமிழ் கூறும் நல்லுலகமே அறியும்.

அவருடைய புரட்சி தலித் மற்றும் அப்பழுக்கில்லாத இந்து ஆரியர்கள் பற்றிய குறியீட்டுச் செய்திகள் படமெங்கும் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற விரவிக்கிடக்கின்றன.

 • ரஜினியும் அவர் குடும்பமும் படத்தில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர் வண்டி கூட BR 1956 என்று BR அம்பேத்கரின் இறந்த வருடத்தைக் காட்டுகிறது.
 • ஒரு காட்சியில் அவருக்கு மாட்டிறைச்சி சமைக்குமாறு ஈஸ்வரி சொல்கிறார்.
 • பல முறை போராளிகளை சிறுத்தைகள் (விடுதலைச் சிறுத்தைகள் என்பது இந்தியாவில் உள்ள தலித் கட்சியின் பெயர்) அல்லது யானைகள் (பகுஜன் சமாஜ் கட்சி என்னும் இன்னொரு தலித் கட்சியின் சின்னம் யானை) என்ற குறியீடுகள்.
 • பீம் நகர், பீம் இடம், பீம் என் பெயர்… என்று பல இடங்களில் பீம்ராவ் அம்பேத்கரை நினைவு படுத்துதல்
 • திரும்பிய இடமெல்லாம் அம்பேத்கரின் படங்கள்
 • வில்லனின் நிறுவனத்தின் பெயர் மனு பில்டர்ஸ். அதாவது மனுநீதியை வில்லன் வலியுறுத்துவதாகக் காட்டல்
 • திராவிட காவியம் எனப் போற்றப்படும் ராவண காவியம் புத்தகத்தை ரஜினி படிக்க…
 • கலவரக் காட்சியில் நானா படேகர் கோவிலில் அமர்ந்து கொண்டு ராவண வதத்தை ரசித்துக் கேட்க, அங்கே ஒவ்வொருவராய் அவர் அடியாட்கள் ரஜினியின் ஆட்களைக் கொல்ல- நமக்கு யார் வில்லன் யார் நாயகன் என்ற சந்தேகம் எழாமல் இல்லை. இருப்பினும் நல்லதொரு கற்பனைதான் எனச் சொல்ல வேண்டும்.
 • அம்பேத்கரின் முழக்கம் கற்றவை பற்றவை தயாராயிருEducate Agitate Organize – பல இடங்களில் பாடலாய், வசனமாய் காட்சியாய் மிளிர்ந்தது.
 • கபாலியில் கோட்டும் சூட்டும் போடுவது ஒரு புரட்சிச் சின்னமாய் இருப்பின், இங்கே காலில் விழாமல் சமத்துவத்தைக் காட்ட, கை குலுக்க வேண்டும் என்று கூறுதல்.

இப்படி நெடுகிலும் நெட்டை மரங்கள். ஆனால் சிறிது நேரத்துக்குப் பின், இதை மட்டுமே கவனிக்க மனம் போக, படத்தின் கதையை கவனிக்க முடியவில்லை. கவனிக்காததால் நஷ்டமுமில்லை.

இருப்பினும் ஓரிரு இடங்கள் நன்றாகவே இருந்தன.

 1. தாராவியை அப்படியே தத்ரூபமாக உருவாக்கிய கலை அலங்காரம். குறுகிய சந்துக்கள், வீட்டுக்குள்ளேயே ஏணிகள், முக்கியக் குடிசைத் தொழிலான பானைகள், பொதுக் கழிப்பிடங்கள்… கண்களில் நீர்!
 2. ரஜினியும் நானா படேகரும் அவர் வீட்டில் சந்திக்கும் போது பொறி பறந்த விடாக்கண்டன்-கொடாக்கண்டன் வசனங்கள்.

ர – நிலம் எங்கள் உரிமை

நா – அதிகாரம் என் உரிமை

ர – அவ்வளவு நிலம் வைத்து என்ன செய்வாய்? ஆறடி நிலம்தானே போனவுடன் கடைசியில் உனக்கு?

நா – கீதையில் கண்ணன் ஏற்கனவே சொன்னதுதான். ஒரு நாளாகினும் நிலம் எனக்கு வேண்டும்.

தன் குரலிலேயே பேசிய நானாவின் தமிழ் கொஞ்சினாலும் நடிப்பு அற்புதம்.

 1. கடைசிக் காட்சியில் கருப்பு பல வண்ணங்களாய் மாறி மாறி வெள்ளையை இல்லாமல் ஆக்கும் விதம், வாவ்! அதுவே பின்னர் மக்களுக்கு ஒரு வழியாக ஆக… சூப்பர்!
 2. அவ்வப்போது நிலைமைக்கு ஏற்ப பாட்டுப் பாடும் ஆடும் தெருப்பாடகர்கள் – கொஞ்சம் ஹிப்ஹாப், கொஞ்சம் கானா – எனக் கலக்கும் அந்தக் கும்பல் மனதைக் கவர…

நல்லவை அவ்வளவே 😊

திரும்பத் திரும்பப் பார்த்த மாதிரியே இருப்பதால், பல இடங்களில் கொட்டாவி விட்டது பக்கத்தில் உட்கார்ந்த மனைவிக்கும் தொற்ற, பாப்கார்ன் சாப்பிட்டு அடுத்த காட்சியைக் கண்விழித்துப் பார்த்தோம்.

அதுவும் ரஜினிக்கும் ஹூமாவுக்கும் இடையே நடக்கும் ‘மீண்டும் காதலிக்கலாமா வேண்டாமா’ குழப்படிக் காட்சிகள் மெல்லிய மல்லிகை வாசம் போல் மயக்கடித்தாலும் எவ்வ்வ்வளவு நேரம்?

பா ரஞ்சித் முதற்பாதியில் நிறைய பாத்திரங்களை நிரப்புகிறார். ஆனால் இரண்டாம் பாதியில் அவை அனைத்தையும் மாஹிம் கடலில் வீசி எறிந்து விடுகிறார். அதற்கு பதிலாகக் கிடைப்பது தூத்துக்குடி போன்ற ஒரு கலவரம். பற்றாது ரஞ்சித்!

ரஜினி இது போன்ற படம்தான் செய்ய வேண்டும் என்று ரஞ்சித்திடம் சொன்னதாகக் கேள்வி. ஹூம்…

படம் அரசியல் பற்றியே நிறைய பேசுவதால்… ரஜினியின் நிஜ வாழ்க்கையையும் இப்படத்தின் நிழல் வாழ்க்கையையும் ஒப்பிட முடியாமல் இருக்க முடியவில்லை. காரணம்? காயங்கள் இன்னும் ஆறவில்லை!

அவர் போராட்டத்தை நடத்துகிறார். எப்படிப் போராட வேண்டுமென்று கற்பிக்கிறார். பொது மக்களில் யாரோ ஒருவர் போராளிகளை, 60 விழுக்காடு சமூக விரோதிகள் என்று கூறுகிறார்.  போலீசுக்கும் மக்களுக்கும்  சண்டைகள் நடக்கின்றன. போலீஸ் அராஜகம் புரிகின்றனர். துப்பாக்கிகள் வெடிக்கின்றன. மக்கள் இறக்க, தொலைக்காட்சியால் வில்லன் மாட்ட, நல்லவேளை பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏதும் நிகழவில்லை.

என்ன எங்கேயோ கேட்ட குரலாய் இருக்கிறதா?

என்ன, படத்தில் மும்பை போலீஸ் கெட்டவர்கள்.

நிஜத்தில் தமிழகப் போலீஸ் நல்லவர்கள். ஆனால் சமூக விரோதிகள் என்று மக்களால் கூறப்பட்டவர்களால்தான் துப்பாக்கிச்சூடு நடந்தது,

காலா = ரத்தம். தூத்துக்குடி = தக்காளிச் சட்னி – அப்படித்தானே அன்பரே?

இதற்கிடையில் அங்கே உப்பளங்களின் உஷ்ணக்காற்றில் 13 குடும்பங்கள் இன்னும் போன உயிர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் தவிக்கின்றன.

ரஜினி என்னும் நடிகன் எப்படி இருந்தாலும் விசிலடித்து வரவேற்று வீட்டுக்குச் செல்வது ரசிகனின் மரபு. அதையே நிஜ வாழ்க்கையில் எதிர் பார்த்தால்… கடினம்தான்.

காலா – அரசியலுக்கு அப்பால் பார்த்தால் கூட, எனக்குப் பிடித்த முதல் ஐந்து ரஜினி படங்களுக்குள் வர இயலவில்லை. நுழைவுச்சீட்டு விலை குறைந்தால் போய்ப் பார்க்கலாம். 😊

மகன், கணவன், தந்தை, மனிதன் – இப்படி அனைத்து வேடங்களையும் சரியாகத் தரிக்க முடியாத ஒரு சராசரி. கிரிக்கெட் நடுவராய் பல்லாண்டுகள் பலரின் வாழ்வைக் குலைத்தவர். கைக்கு வந்தததை எழுதி அதை மற்றவர் ரசித்தால், ‘இவர்களுக்கு என்ன ஆயிற்று?’ என்று வியக்கும் ஓர் அப்பிராணி

5 COMMENTS

 1. கடைசியாய் என்ன தான் சொல்லவர்ரீங்க கணேஷ்?

 2. ஹாஹா, வாசுகி! நல்ல கேள்வி!
  ௧. ரஜினியின் கவர்ச்சியயும் தாண்டி, படம் ௨. பழங்கதையினால் படுத்துகிறது.
  ௩. சிலபல இடங்கள் ‘அட!’ என்று சொல்ல வைக்கின்றன.
  ௪. ரஞ்சித் தன் தலித் செய்திகளை அழுத்தமாக பதிவு செய்கிறார்.
  ௫. ரஜினியின் திரை அரசியலும் நிஜ அரசியலும் வேறு வேறு!
  ௬. மற்றபடி கடைசி வரி.
  படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி!

 3. இனறைய முகநூல் தங்கமீன் ! தளப்பதிவில் வாழ்த்துக்கள்! வணக்கம் !
  வெளிப்படையான விமர்சனம்.
  யாம் பன்முகத்தன்மை கொண்ட
  படைப்பாளன் தொடர்வோம்
  ஆத்மா சக்திவேல்

 4. மிகவும் கூர்மையாக அனைத்தையும் கவனித்து எழுதியுள்ளீர்கள்! 🙂 மிகச் சிறப்பு uncle!

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here