சிங்கப்பூரின் அழகுக்கு அழகு சேர்ப்பன வீடமைப்புக் குடியிருப்புகள். அந்தக் குடியிருப்புகளுக்கு அழகு சேர்ப்பவை இங்கிருக்கும் விளையாட்டுத் திடல்கள் என்று சொன்னால் மிகையாகாது. விளையாட்டுத் திடல்கள் மூலம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடனான அணுக்கமான உணர்வு ஏற்படும். சமூகப் பிணைப்பை மேம்படுத்தும் ஒரு கருவிபோல  செயலாற்றும் தன்மையுள்ளவை இந்த விளையாட்டுத் திடல்கள். இங்குள்ள ஒவ்வொரு குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் விளையாட்டுத் திடல்கள் நிச்சயமாக இடம்பிடித்திருக்கும். அதிலும் பெரும்பாலானவை, விழுந்தால் அடிபடாத ரப்பர்போன்ற திடல்கள். இவை குழந்தைகளின் நலன் கருதியே உருவாக்கப்பட்டவை. ஆயினும் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாதவையாக ஆன நிலையில் இன்று இத்திடல்கள் உள்ளன.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன் பார்த்தோமானால் காலையும் மாலையும் இவ்வகையான திடல்கள் தத்திச் செல்லும் வண்ணத்துப் பூச்சிகளின் அழகில் மிளிர்ந்தபடி இருக்கும். ஆனால் இப்போதோ பாலைவனத்தின் பட்டமரம்போன்று காட்சியளிக்கிறது. இந்தப் பரிதாபத்திற்குக் காரணமென்ன? முன்பிருந்ததுபோல இப்போது குழந்தைகளுக்குப் பஞ்சமா என்ன என்று பார்த்தால் அப்படியுமில்லை! குழந்தைப் பிறப்பு விகிதம் முன்பிருந்ததைவிட முன்னேற்றத்தை நாடியே சென்றுகொண்டுள்ளது. பிறகு ஏனிந்த நிலையென்று பார்க்கப்போனால் தகவல் தொழில் நுட்பத்தின் மீதுதான் பழியைப் போட வேண்டியுள்ளது.

“மாலை முழுதும் விளையாட்டு” என்றார் பாரதியார். இப்போது குழந்தைகள், மாலை என்ன நாள் முழுதுமே விளையாடிக் கொண்டுதானிருக்கின்றனர். என்ன ஒன்று பாரதி சொன்னதுபோல ஓடி விளையாடுவதில்லை, ஓய்ந்துபோய் விளையாடுகின்றனர். ஓடி விளையாட வேண்டியப் பருவத்தில் கைகளில் ஏதோ ஒரு கருவியில் தங்களை மறந்த நிலையில் தளிர்கள். அவர்களது கண்கள் களைப்புற்றதைக்கூட அறியாத வகையில்!

இப்போதெல்லாம் குழந்தைகள் கையில் பால் புட்டியைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்களோ இல்லையோ அவர்களின் கைகளில் கருவிகள் கொடுக்கப்பட்டு விடுகின்றன. பிள்ளைகள் பசி, தூக்கம் இவற்றுக்கு அழுவதை மறந்து கருவியில் ஆழ்ந்து விடுகின்றனர். இதனால் அவர்களது சிந்திக்கும் திறனுக்கு வேலையற்றுப் போகும் துர்பாக்கியநிலை உருவாகிறது.

வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகள் ஓடியாடி விளையாடினால்தான் அவர்களது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆற்றல் கிட்டும். இதனால் குழந்தைகளின் உடல் வலுவடைவதுடன், தேவையற்றக் கொழுப்புகளும் கலோரிகளும் வியர்வையாக வெளியேற்றப்படும். மேலும் நாள் முழுதும் கருங்கல் கட்டடத்திற்குள் அடைந்திருக்கும் பிள்ளையானது வெளியே வந்தால்தான் சுத்தமானக் காற்றையும் வெயிலையும் அனுபவிக்க முடியும். இவை பிள்ளைகளது ஆரோக்கியத்திற்குத் தூண்கள் போன்றவையாகும். இவை மட்டுமின்றி மற்றப் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவதால் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறமை மேம்படுவதுடன் விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வு போன்றவை இளவயதிலேயே அவர்களுக்குக் கிடைக்க ஏதுவாகிறது.

இன்றைய கசக்கிப் பிழியும் வேலைச் சூழலில் களைத்து வீடு வரும் பெற்றோருக்கு, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது பெரிய வேலையாகப்படுகிறது. ஓய்வு என்று பெற்றோர் ஏதோ ஒரு கருவியில் தங்கள் காலத்தைக் கடத்த, பிள்ளைகளும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோலக் கருவிகளின் வசம். அலுப்பின் காரணமாய்ப் பெருகும் ஆரோக்கியக் கேடுகள்! இந்நிலையைக் களைய வேண்டிய பெரும் பொறுப்பில் இன்றைய பெற்றோர் இருக்கின்றனர். வருங்காலச் செல்வங்களின் வளர்ச்சி குன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவர்களின் தலையாயக் கடமை என்பதையுணர வேண்டும்.

தற்கால வாழ்க்கைமுறையில் கருவிகளிடம் நம்மை இழக்கும் அதேசமயம் சுற்றியிருக்கும் மனிதர்களையும் நம்மையறியாமலே விலகிச் செல்கிறோம். இந்த விலகலைச் சரிசெய்ய வேண்டியது நமது கடமையாகும். உறவுக்குப் பாலமாய் இருக்கும் விளையாட்டுத் திடலுக்கு குழந்தைகளை அழைத்து வந்து விளையாட விடுவோம். நம் சந்ததியினரை வீணே சாதனங்களுக்கு அடிமையாக்காது சாதிக்கப் பிறந்தவர்களாக உருவாக்குவோம்!

‘முகமூடிகள்’ என்ற சிறுகதை நூலின் ஆசிரியர். தன் கட்டுரைகளுக்காகப் பரிசுகள் பெற்றவர். உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ‘இனிய தமிழ்க் கட்டுரைகள்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here