காலை ஒன்பது மணி, ரயிலின் கதவுகள் மூடத் தொடங்கிய வேளையில், அவசரமாய் ஓடிவந்து ரயிலினுள்ளே தன்னைத் திணித்துக் கொண்டவர்களை ஏற்றும், நொடிப்பொழுதில் நுழைவு மறுக்கப்பட்டவர்களை ஏமாந்த முகங்களுடன் அங்கேயே விட்டு விட்டும் நகரத் துவங்குகிறது ரயில். கதவினருகே நின்றிருந்தவர்கள், கைத்தொலைபேசியில் புதைத்திருந்த முகத்தை எடுக்காமல் உள்ளே நுழைந்தவர்களுக்கு அனிச்சையாய் உடலைக் குறுக்கி வழிவிடுகிறார்கள். ரயிலினுள்ளேயிருந்த பெரும்பாலானவர்களும் தங்களின் கைப்பேசியில் தான் மூழ்கிக் கிடக்கிறார்கள். வெளியே நகர்ந்து செல்லும் கட்டிடங்களை, மரங்களை, கைவண்டியில் பொம்மையாய் அமர்ந்திருக்கும் குழந்தையின் சிரிப்பை, எதையும் நிமிர்ந்து பார்க்க அவகாசமின்றி இணையத்தில் தங்களின் இருப்பைப் பதிவு செய்தபடியிருக்கிறது, ஓடும் ரயிலினுள்ளிருக்கும் அக்கூட்டம்.

மேலிருக்கும் காட்சி நமக்கு மிகவும் பழக்கமானது. தொலைப்பேசியில் முகம் தொலைக்கும் அக்கூட்டத்தில் நாமும் ஒருவராக இருந்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறை, பயண நேரத்தைக் கூட சின்ன சின்ன விஷயங்களுக்கு விரயம் செய்ய முடியாத அளவிற்கு மனிதர்களைத் தனது மின்னணுச் சுழலுக்குள் இழுத்துக் கொண்டு விட்டது. நாமும் விழித்திருக்கும் நேரம் முழுக்க எதையாவது செய்து கொண்டேயிருக்கப் பழகிவிட்டோம். இன்றைய நவீன யுகத்தில் வெற்றுப் பொழுதுகளை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. பொதுவாகவே நாம், நிற்க நேரமின்றி வேலை செய்து கொண்டிருப்பவர்களைச் சுறுசுறுப்பானவர்கள், வெட்டியாய் இருப்பது சோம்பேறிகளுக்கான அடையாளம் என்ற மனபிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். கைத்தொலைபேசிகளுக்குள் நுழைய இதை ஒரு காரணமாக்கி வாழ்க்கையின் சின்ன சின்ன வியப்புகளை அலட்சியமாய் கடந்து கொண்டிருக்கிறோம்.

இதை நம்மோடு நிறுத்திக் கொள்ளாமல், குழந்தைகளுக்கும் போரடித்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறோம். அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, அடம் பிடிக்கும் நேரம் அவர்களைச் சமாளிக்க நமக்குப் பொறுமையில்லாமல் அவர்களின் கைகளிலும் கைத்தொலைபேசிகளைத் திணித்து விடுகிறோம். இதன் காரணமாக, ஒருகாலத்தில் படிப்பாளிகளின் அடையாளமாய் இருந்த மூக்குக் கண்ணாடி, இப்பொழுது தொலைப்பேசியை அதிகம் பயன்படுத்துபவர்களுக்குச் சொந்தமாகி விட்டது. ஸ்மார்ட் தொலைப்பேசி இன்று நம் வாழ்வில் அத்தியாவசியமானது தான். இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் எந்த நொடியும் விரலுடன் சேர்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் அளவிற்கு அவ்வளவு அதற்கு நம் வாழ்வில் இடம் தேவைப்படுகிறதா என்பதை யோசிக்க வேண்டும்.

இன்றைய குழந்தைகளுக்கு  வெற்றுப் பொழுதுகள் முழுமையாக அறிமுகமாகவேயில்லை. அவ்வப்போது செய்ய எதுவுமற்று உட்கார்ந்திருப்பதன் சுகத்தை அவர்கள் முற்றிலுமாக இழந்து கொண்டிருக்கிறார்கள். அந்நேரங்களைக் கைத்தொலைப்பேசிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் போரடிக்கிறது என்று சொல்லும் பொழுது, அவர்கள் உண்மையில் புதிய விஷயங்களை ஆராய, அதைக் கற்றுக் கொள்ள நம்மிடம் உதவிக் கேட்கிறார்கள். வெளியே சென்று விளையாட அனுமதி கேட்கிறார்கள். நம்மை அவர்களுடன் இணைந்து கொள்ள அழைக்கிறார்கள். நாம் அதை அலட்சியப்படுத்தி அவர்களின் கைகளில் தொலைப்பேசிகளைத் திணிக்க, அவர்கள் கண்ணாடிகளை மாட்டிக் கொண்டு செயற்கை உலகிற்குள் புதைந்து போகிறார்கள்.

முன்பொரு காலத்தில் நாம் செய்வதற்கு வேலை எதுவுமற்ற இத்தகைய கணங்களைக் கடந்து வந்திருக்கிறோம். வெறுப்புற்று அமர்ந்திருக்கும் அந்நொடிகளில் மனதின் அடியாழத்தில் புதைந்திருக்கும் நிகழ்வுகள் மெல்ல மேலெழுந்து வரும். அவற்றை மனம் மீண்டும் மீண்டும் அசை போடத் துவங்கும். அப்படியெழும் சம்பவங்கள், அந்நேரத்தில் வேறு ஒரு கோணத்திலிருந்து காட்சியளிக்கும். நாம் இதை வேறு மாதிரி செய்திருக்கலாமோ என யோசிக்கத் தோன்றும். அடுத்த முறை அதே சம்பவம் நிகழும் போது அதை நோக்கிய நம்முடைய அணுகுமுறை வேறாக இருக்கும். இப்படி, நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளும் நேரமாக அவை அமைந்திருந்தன.

வெற்றுப் பொழுதுகளின் போது நம் உள்ளுணர்வுடன் நமக்கிருக்கும் உறவு வலுவடைகிறது. அந்த நேரம், நம்மைப் பற்றிய, நம்முடைய விருப்பு வெறுப்புகளைப் பற்றிய தெளிவான சிந்தனை நம் மனதில் உருவாகிறது. நம் மனதில் ஆழப் புதைந்து கிடக்கும் திறமைகள் வெளிவருவதும் அந்நேரங்களில் தான். வரிசையில் காத்து நிற்கும் போதும், பயணங்களின் போதும் சும்மாயிருந்தால், சுற்றிலும் உள்ள சூழ்நிலையை நம்மால் அவதானிக்க முடிகிறது. அச்சூழலுக்கு நம்மைப் பழக்கிக் கொள்ளமுடிகிறது. வெறுப்படைந்து கிடக்கும் அது போன்ற காலங்களில் முறையாகச் செய்யப்படாத செயல்களைப் பற்றிய நெருடல்கள் அதிகம் ஏற்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏற்படும் குற்றவுணர்வைத் தவிர்ப்பதற்காக நம் எண்ணங்களைச் செப்பனிடுகிறோம். எப்படி ஒழுங்காகச் செய்வது என்று திட்டமிடுகிறோம்.

அதனால் அவ்வப்போது வெட்டியாய் இருக்க பழகிக் கொள்வோம், குழந்தைகளையும் பழக்குவோம்.

சிங்கப்பூரின் முக்கியமான சிறுகதை ஆசிரியர். சிறுகதைக்காகப் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். நல்ல விமர்சகரும் கூட. கட்டுரையாளர், கவிஞர் என்ற அடையாளங்களோடும் எளிதில் பொருந்துபவர்.

2 COMMENTS

  1. வெற்றுப் பொழுதுகளின் போது நம் உள்ளுணர்வுடன் நமக்கிருக்கும் உறவு வலுவடைகிறது….உண்மைதான் ஹேமா.

    அதனால் அவ்வப்போது வெட்டியாய் இருக்க பழகிக் கொள்வோம், குழந்தைகளையும் பழக்குவோம்👌👌👌

  2. சும்மா இருப்பது என்பது சும்மா இருப்பது என்பதல்ல என்பதைப் புரியவைக்கும் கட்டுரை.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here