புத்தம் புதிய பயணத்திற்கு ஆயத்தமாகும் தருணம். கடந்த பிரயாணத்தில் உடன் வந்த மனைவி வைசாலி ஏறக்குறைய இப்போது என் நிலையில் இருந்தாள். அதை நினைத்துப் பார்க்க இனி நேரமில்லை. முற்றிலும் புதியச் சூழல் என்னைப் பிரமிக்க வைக்கிறது.

அவ்வுலகில் நுழைந்தவுடனே என் வரவிற்காகக் காத்திருந்த பிரமுகர் மிஸ்டர் ஒய் என்னைக் கைகுலுக்கி வரவேற்க, அவருக்குப் பின்னால் தலையசைத்து எதிர்கொள்ளும் மிஸ்டர் எஸ். அவர்களுடைய பெயர் உடையிலேயே பொறிக்கப்பட்டிருந்ததால், குழப்பம் என்னை அண்டாது போனது. நானறிந்தவரை எமன், சித்திரகுப்தன் இவர்களுடைய ஆடை அணிகலன்களே வேறு அல்லவா? கண்ணுக்கெட்டிய தூரம்வரை எருமையைக் காணவில்லை. மிஸ்டர் ஒய்யின் கையில்கூட கதாயுதத்திற்குப் பதிலாக, சிறிய ஒரு கருவி மட்டுமே இருந்தது.

எனக்கு முன்னும் பின்னும் மக்கள் வந்தபடியே இருந்தனர். இனியும் இவர்களை மக்கள் என்று சொல்வது முறையாகுமா? இந்நேரம் வைசாலி இருந்திருந்தால் திருத்தியிருப்பாள். இனி அவளை நினைத்துப் புண்ணியமில்லை. ‘ஆங்… இவை ஆன்மாக்கள்!’ அட… என்னாலும் யோசிக்க முடிகிறதே! மனைவி அருகில் இருந்திருந்தால் மட்டம் தட்டியிருக்கலாம். அதுக்கு வழியில்லாம போயிடுச்சே…! சரி.. பிரகிருதத்துக்கு* வருவோம்! அடடா… வைகுந்தப் பதவியை அடைந்த பிறகு தமிழ் என் நாவில் நடனமாடுகிறதே! தமிழ்மொழி மாதத்தின் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுக்கே இப்படியென்றால்? ‘நீ எங்கேயோ போய்விட்டாய் சேது’ என்று காலரைத் தூக்கிவிடப் பார்க்க… காலர், ‘மிஸ்ஸிங்’.

“கொஞ்சம் முன்னே போறீங்களா?” என் பின்னாலிருந்து வரும் கடுமையானக் குரல். ‘சே… மேலோகமென்றாலும் வரிசை என்றாலே முந்தத்தான் நினைப்பார்களோ?’ என்ற யோசனையோடு கீழ்ப்படிகிறேன். அந்த வரிசையோ கிளைகள்போலச் செல்லும் பல பிரிவுகளைக் காண்பித்தது. ஒவ்வொரு பிரிவிலும் ஒளிரும் எழுத்துக்களைக்கொண்ட பதாகைகள். எனது பார்வையில் தமிழ் மட்டுமே தெரிகிறது. எவ்விதக் குழப்பமுமின்றி கடந்து சென்றுகொண்டிருந்தன உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துகொண்டிருக்கும் ஆன்மாக்கள்! வைகுந்தத்தைத் திட்டமிட்டு வடிவமைத்தவர்கள் சிங்கப்பூரில் பயிற்சியெடுத்த விஞ்ஞானிகளாக இருப்பார்களோ!

கூட்டமாகவும் தனித்தும் வந்த ஆன்மாக்கள் வறட்சி, நோய், விபத்து, கொலை, தற்கொலை என வெவ்வேறு வரிசையில் இடம்பிடித்துக் கொள்கின்றன. எல்லாவற்றையும் பளபளக்கும் பார்வையுடன் கண்டுகொண்டே வந்த நான், விபத்துப் பகுதியில் என்னை நுழைத்துக்கொள்கிறேன்.

‘கட் க்யூ செய்யாதே!’ என்று பிரகோபமாய்* ஒலிக்கும் குரல்.

‘கட் க்யூ? ஓ… என் பின்னால் இருப்பதும் சிங்கப்பூரிலிருந்து வரும் ஆன்மாவா?’ திரும்பிப் பார்க்க என்னைக் பார்த்து சிலிர்த்துக்கொண்டு நிற்கிறார் ஒரு சீனப்பாட்டி.

‘அங்கே இருந்து தொல்லை கொடுத்ததுமில்லாமல் இங்கும்…’ அவர் முணுமுணுப்பது எனக்குத் தெளிவாய்க் கேட்கிறது.

‘ஸ்கேன்’ செய்வதுபோன்ற இடத்தில் நிறுத்தப்படுகிறேன். மிஸ்டர் எஸ் ஓர் இயந்திரத்தை இயக்க, அங்கிருந்த ஒளித்திரையில் வார்த்தைகள் அணிவகுக்கின்றன. அதுவரை மெளனியாக இருந்த நான் “இங்கே என்ன நடக்கிறது?” என்று வினவுகிறேன்.

“அடுத்து நீங்கள் எங்கே போகவேண்டும் என்பதற்கான சோதனைதான் இது” என்கிறார் மிஸ்டர் எஸ்.

ஆவல் தாங்காது “அப்படியா, இனி எங்கே போகப் போகிறேன்?” என்று கேட்கிறேன். வைசாலியின் தொல்லையின்றி இனிமையானப் பயணம் எனும் நினைவே, ‘ஸ்னோ சிட்டியில்’ இருப்பதுபோன்றப் பொழிவை அள்ளி இறைக்கிறதே!

“அதிகப்படியானப் பேச்சுகளுக்கு இங்கே இடமில்லை. நீங்கள் போகலாம்…” என்ற மிஸ்டர் எஸ்ஸின் முகத்தில் சிறிதுகூடக் காருண்யம் இல்லை. ‘பூமியில்தான் மக்கள் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிறார்கள் என்றால் இங்குமா?’ வியப்பில் இருந்த என்னை சித்திரகுப்தனின் ஆக்குரோதம்* நிறைந்த பார்வை விரட்டியது. மிரட்சியுடன் கணமும் நிற்காமல் செல்ல, நான் செல்வதற்கானக் கதவின் திட்டிவாசல் திறந்தது. அதன் அனல் தாங்காது ஆசாரவாசலின்* மேற்புறம் பார்வையைச் செலுத்திய நான் அலறுகிறேன். “என்னது… நரகமா…? நான் ஒரு பாவமும் செய்யலையே…? எனக்கேன் நரகம்…?”

“உன் பாவத்திற்கான கணக்குகள்படிதான் உன் இருப்பிடம் இங்கே தீர்மானிக்கப்பட்டுள்ளது… ம்… செல்” என்கிறார் மிஸ்டர் எஸ்.

“முடியாது… இங்கே ஏதோ தவறு நடந்திருக்கிறது. நான் கொலை செய்யலை, கொள்ளையடிக்கலை, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டது இல்லை. நான் இங்கே வந்ததுகூட யாரோ என்னுடைய வாகனத்தை மோதியதால்தான். எனது வாழ்க்கையில் யாரோ இழைத்தக் குற்றத்திற்கு நான் பலிகடாவா?” என்று அத்தனை சக்திகளையும் திரட்டி அலறுகிறேன்.

“யாரோ உன் வாகனத்தை மோதினார்கள் என்கிறாயே, எதனால் மோதப்பட்டாய் என்பது உனக்குத் தெரியாது?” என்றுமிஸ்டர் எஸ் கேட்க, என் நெஞ்சு குறுகுறுத்து தலை குனிந்துகொள்கிறது.

“பொய்க்கணக்குக் காட்டுவது பூலோகவாசிகளின் பிழைப்பு. கைலாயத்தில் உள்ளக் கணக்குகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கும். ஏடும், எழுத்தும்கொண்டு பிறந்தவனான சித்திரகுப்தன் நான் போடும் கணக்கு இது. உனக்குப் பின்னால் எவ்வளவு நீளமான வரிசை தேங்கி நிற்கிறது பார். இதைப் பார்த்து மிஸ்டர் ஒய் சினங்கொள்ளுமுன் இங்கிருந்து கிளம்பு” என்று துரிதப்படுத்துகிறார் மிஸ்டர் எஸ்.

“முடியாது… இங்கே ஏதோ பிசகு நடந்திருக்கிறது. நரகத்திற்குப் போகுமளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என்று தெரியாமல் இங்கிருந்து ஒரு அடிகூட எடுத்து வைக்கமாட்டேன்” என்கிறேன். பின்னால் நிற்கும் சீனப்பாட்டியின் உக்கிரம் என்னைத் துளைத்துக்கொண்டிருக்கிறது. அட, நீ வேறம்மா .. என் வலி எனக்குதான தெரியும்!

இங்கே நடக்கும் அமளிதுமளியைத் தூர இருந்து கவனித்த மிஸ்டர் ஒய் என்னிடம் வருகிறார். “மற்றவர்களுக்கு வழிவிட்டு, இங்கே வா” என்று கூறி என்னை அழைக்கிறார். நான் சித்திரகுப்தனைப் பார்க்க, அவர் பார்வையில் துளியளவும் சிநேகம் இல்லை.

‘யாரோ எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். என் வார்த்தைக்கு மதிப்பளித்து அழைத்துப் போகும் எமன் இருக்க, இனி எதைப் பற்றியும் கவலையில்லை. செய்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டு, கடிதில்* என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கப் போகிறார்கள்’ துள்ளலுடன் பொங்குகிறது உள்ளம்.

எமன் என்னை ஓர் அறைக்கு அழைத்துச் செல்ல, அங்கே, இதுவரை நான் கற்பனையில்கூட நினைத்திராத பல்வேறு கருவிகள் இயங்கிக்கொண்டிருந்தன. ‘இப்படிப்பட்டக் கண்டுபிடிப்புகளை எல்லாம் நிகழ்த்தியது யாராக இருக்கும்?’ ஆச்சரியம் தாங்காது நான் மூட மறந்த வாயுடன் நிற்கிறேன்.

“யாவற்றையும் எமது குழுவினர்தான் கண்டுபிடித்தனர்” என்கிறார் மிஸ்டர் ஒய். ‘நான் நினைத்ததற்குப் பதில் சொல்கிறாரே! அதனால்தான் அரிய பெரிய செயல்களைச் செய்பவர்களை ‘அவன் எமன்’ என்கிறார்களோ?’

“உயிரை எடுப்பது மட்டும்தான் உங்கள் பணியென நினைத்தேன்” எனப் பகன்றேன் தர்மராஜனிடம்.

“என்ன செய்வது? இந்த மானிடர்கள் படுத்தும்பாட்டை நினைத்தால் தாங்க முடியவில்லை. விழி சோராது பணிபுரிந்தாலும் கடமை முடிந்தாற்பாடில்லை. மக்கள் தங்களை அழித்துக்கொள்ளவே அநேக காரியங்களைச் செய்கின்றனர். எருமைமீது சென்று அழைத்து வரத் தாமதமாகிவிடும் என்றுதான் விரைவு ரக வாகனத்துக்கு மாறிவிட்டேன். உயிர்களை இன்னும் அதிகமாகப் பறிக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படவே பணியில் புத்தாக்கத்தைப் புகுத்த எண்ணினோம். வழக்கமான வேலையைச் செய்துகொண்டே எங்கள் குழுவினர் இந்தக் கடமையைச் செவ்வனே நடத்தி முடித்தனர்” என்கிறார் கர்வம் பொங்க.

அடுத்து, காரியமே கண்ணாய்த் தன்னிடமிருந்த கருவியில் எதையோ அழுத்தினார். திரையில் என் முகம் தோன்றியது. ‘போட்டோதானே எடுக்கிறாங்க… என்னமோ போருக்குப் போறமாதிரி ஏன் இப்படி மூஞ்ச வச்சிக்கிருக்கீங்க’ மனைவியின் நையாண்டி சமய சந்தர்ப்பம் அறியாது வந்து போகிறது. ‘எமனிடம் பேச்சுவார்த்தையில் இருக்கும்போது இந்த அற்பமானவளின் நினைவு எதற்கு?’ என்று சிந்தையில் வந்தவளை நிந்தனையுடன் துரத்தியடிக்கிறேன்.

இப்போது என் முகம் திரையில் சிறிது சிறிதாகக் குறைந்து ஒரு மூலையில் போய்விட்டது. நட்சத்திரக் கூட்டம்போல ஒளிரும் எழுத்துகள் திரையில் தோன்றி நேர்த்தியாக வரிசைப் பிடிக்கின்றன. நன்மை, தீமை என இரு பகுதிகள் திரையில் பெரிய எழுத்துகளில் தெரிந்தன. நன்மை என்ற பகுதிக்கும் கீழ் சில வரிகளோடு முடிந்திருக்க, தீமையிலோ வரிகள் இன்னும் நீண்டுகொண்டே…. ‘இவ்வளவு தீமைகள் நான் செய்தேனா?’

“இது நிச்சயம் என்னுடையக் கணக்காக இருக்காது. நான் இப்படியெல்லாம் தப்பு செய்யுற ஆளே கிடையாது. உங்களது இயந்திரத்தில் ஏதேனும் குளறுபடி நிகழ்ந்திருக்கலாம்… என்னை நம்புங்க மிஸ்டர் ஒய்”

“குளறுபடியா? எனது இயந்திரத்திலா? ஹா… ஹா….” அதிர்ந்தது வைகுந்தம். ‘திருவிளையாடல் படம் பார்த்திருப்பாரோ?’

“அப்படியெல்லாம் நேரத்தைப் பாழடிக்கும் வழக்கம் வைகுந்தத்தில் எவருக்கும் இல்லை.” ‘மைண்ட் வாய்சுக்குக்கூட வழியில்லா நிலையா?’

“அடியேனைத் தாங்கள் பொறுத்தருள வேண்டும். என்னைத் தாங்கள் நம்பாவிடில் என் மனைவியை சீக்கிரமாக அழைத்து விசாரியுங்கள். என்னைப்பற்றிய உண்மை விளங்கிவிடும்.” ‘எப்படியும் எப்பாடுபட்டாவது இந்தச் சிக்கலிலிருந்து வைசாலி என்னைக் காப்பாற்றிவிடுவாள்.’

“மைண்ட் வாய்ஸ் எல்லாம் பூலோகத்துடனே முடிந்துவிட்டது என்பதை உணர மறுக்கிறாய். நீ நினைக்கிறார்ப் போன்று இங்கு தப்பு நடக்க வாய்ப்பே இல்லை. பல அக்னிப் பரீட்சைகளைக் கடந்து சத்தியத்தின் பிரதிநிதியாய் நின்று ஆத்ம விடுதலையளித்து வருகிறேன். நீ பூமியில் இழைத்தக் குற்றங்கள் என்னவென்று பார்” என்று கூறிய எமன், பட்டியலில் இருந்த எழுத்துகளின் மீது கருவியைக் கொண்டுபோகிறார். பலூனுக்குக் காற்றடிப்பதுபோல எழுத்துகள் பெரிதாகின்றன. அதைக் கண்ணுற்ற எனது விழிகளும் அதுபோலவே!

நெகிழி, புகை, தண்ணீர், மின்சாரம் என்று குற்றத்தில் நான்கு ‘மெகா’ பிரிவுகள். அந்தந்தப் பிரிவுகளிலிருந்து சிற்றோடைகளைப்போல பிரிந்து நிற்கும் காரணங்கள். குற்றத்திலிருந்தக் காரணங்களோ என்னை மறுபடியும் சாகடித்தன!

“தாகத்திற்குத் தண்ணீர் குடித்தது ஒரு பாவமா?” வியப்பில் நான்.

“தண்ணீரைக் குடித்தது பாவமல்ல. நினைத்த நேரமெல்லாம் தண்ணீரைக் குடித்துவிட்டு அந்தப் போத்தலைத் தூக்கி எறிந்தாயே. அதை இங்கே பார்” என்று சொல்லிவிட்டு நெகிழியின் மேல் கிளிக்குகிறார் எமன். ‘புக்கிட் தீமா’ மலைபோலக் குவிந்திருக்கும் பாட்டில்கள். இந்தப் புட்டிகளெல்லாமா குற்றத்தின் பட்டியலில்?

“இது எப்படி தீங்காகும்?” என் சந்தேகத்தை முன்வைக்கிறேன்.

“நெகிழிக் குப்பையானது மண்ணில் மட்க யுகம் யுகமாய் ஆகும் என்று உனக்குத் தெளிவாய்த் தெரிந்திருந்தும் அதைப் பாவித்தது* பாவமில்லையா?” என்கிறார் எமன். வீட்டைவிட்டு எங்குக் கிளம்பினாலும் தண்ணீர் பாட்டிலுடன் கிளம்பும் வைசாலியை “கருமி” எனக் கிண்டலடித்தது நினைவுக்கு வர, என் தலை தானாகக் குனிகிறது. இருந்தும் அடுத்தக் கணமே சிலிர்த்துக்கொண்டு உயர்ந்த அது, “அது என்ன புகை?” என்று கேட்கிறேன் ஆர்ப்பாட்டமானக் குரலில். இது நிச்சயம் பிழையேதான்…. ‘நான் சிகரெட்டைத் தொட்டுக்கூடப் பார்க்காதவனாக்கும்’ எனும் செருக்கும் உடன் சேர்ந்துகொள்கிறது.

“புகைப்பது மட்டுமே ஆகாதது என நம்பும் அறிவிலிகள் இன்னும் பூமியில் இருக்கின்றனரே! இன்னுமா உனக்குப் புரியவில்லை…?” என்று வினவிய எமன், சீற்றத்துடன் புகையைக் கிளிக்கினார். கருவியிலிருந்து குபுகுபுவென கிளம்பியப் புகை என் கண்ணை மறைத்தது. “போதும்… போதும்…” அலறினேன் நெடி தாங்காது.

“வாகனம் ஓட்டினால் புகை வருவது இயல்புதானே… இதை ஒரு குற்றம்னு சொன்னா எப்படி?” புகையினால் கண்கள் சிவந்ததுபோல துடைத்துக்கொள்கிறேன்.

“அவசியத்திற்கு ஓட்டுவதற்கும், அனாவசியமாய் சுற்றுவதற்கும் வித்தியாசம் உண்டுதானே…! கார்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமென்று பாடுபடும் தேசத்தில் இருந்துகொண்டு, வாகனத்தில் பெரும்பாலும் தனியாளாய் அலைந்தது பாவமில்லையா?” என்ற எமனின் கண்கள் இப்போது சிவந்திருந்தன.

‘சும்மா எதுக்கெடுத்தாலும் கார்லயே சுத்தறதுக்கு அது என்ன தண்ணியிலா ஓடுது?’ அலுத்துக்கொள்ளும் மனைவியின் ஆதங்கம் மனக்கண்ணில். ‘இப்படியெல்லாம் நடக்கும்னு இவளுக்கு முன்னவே தெரிந்திருக்குமோ?’

அடுத்து தண்ணீரைப்பற்றி எமனிடம் கேட்கும் தைரியம் எனக்குக் கொஞ்சமும் இல்லாது போனது. ‘தண்ணியைத் திறந்துவிடும் மனுஷனுக்கு அதை மூடத் தெரியாது?’ என்று குளியலறையில் வாளி நிரம்பி வழிந்தோட வாள்வாளெனக் கத்தும் மனைவி. ‘தண்ணிதானே ஓடிச்சி. அதுக்குப்போய் குடிமுழுகிட்ட மாதிரி ஏன் கத்துறே?’ என்று வைசாலியை அடக்கியது வசமாய் என் நினைவில் இறுக்கியது.

மின்சாரத்தைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். வீட்டில் நான் நுழைந்தாலே மின்விசிறியுடன் குளிர்சாதனமும் இயங்க வேண்டும். ‘உங்களை மாதிரியான ஆளுங்களுக்காகத்தான் தண்ணி, மின்சாரக் கட்டணத்தில் முப்பது விழுக்காட்டை உயர்த்தி இருக்காங்க அரசாங்கம். இன்னும் மாறலைன்னா எப்படி?’ எனது செயலுக்காக எப்போதும் முகஞ்சுளிக்கும் மனைவி. ‘வைசாலி… வாழ்க்கைன்னாலே வாழ்ந்து அனுபவிக்கணும். செத்துப்போனா என்னவாகும்? இருக்கும்போதே அனுபவிக்கக் கத்துக்கோ’ என்று மனைவிக்குப் பாடமெடுத்தது மனத்தில் தோன்றி மறுகச் செய்தது. பலவீனம் என்னைப் பாதாளத்திற்கு இட்டுச்செல்ல “தீர்ந்ததா உனது ஐயம்?” தோரணையுடன் கேட்கிறார் எமன்.

“இதுக்கெல்லாம் நரகத்துக்குப் போகணும்னா, கொலை செஞ்சவங்கல்லாம்?” எனக்குச் சற்றும் சம்பந்தமில்லாதபோதும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற தூண்டுதலில் எமனிடம் சந்தேகத்தைக் கிலியுடன் முன்வைக்கிறேன்.

“அது அவரவரது செயலின் தன்மையைக்கொண்டு தீர்மானிக்கப்படும். ஒன்றை மட்டும் தெளிவாய்ப் புரிந்துகொள். கொலை செய்தவனால் ஓர் உயிர் மட்டுமே போகும்… ஆனால் பொறுப்பற்ற விதமாய் இப்படி பூமியைப் பாழாக்குபவர்களால் அடுத்தடுத்த தலைமுறைகளே நாசமாகும். புரிந்ததா? வா பின்னே…” என்ற எமன் முன் செல்கிறார்.

விபத்தில் அடிபட்ட வேதனையைவிடப் பெருகிய வலியில், அவரைத் தொடர்ந்த என் பார்வையில் படுகிறாள் வரிசையில் நிற்கும் வைசாலி.

என்னுயிரே வைஷு…. வந்துவிட்டாயா செல்லமே! அத்தானைப் பிரிந்திருக்க முடியாது அரைமணியில் என்னைத்தேடி வந்துவிட்டாயா தேவதையே…. மனைவியைப் பார்த்தவுடன் மனம் ‘ஹீலியம் வாயுவை’ அடைத்தப் பலூனைப்போல மேகத்தினூடே பறக்கிறது. உடனே தலையை உதறிக்கொள்கிறேன். ‘மதிப்பு வாய்ந்த ஹீலியம் வாயுவை நீ நினைத்தாய்?’ என்றுகூட என்னுடையப் பாவக்கணக்கைக் கனக்கச் செய்துவிடுவார்கள்! எத்தகைய இக்கட்டில் நான் மாட்டினாலும் என் வைஷுவால் என்னை இட்டு வரமுடியுமே! புளகாங்கிதத்தில் இருந்த என்னை எமனும் சித்திரகுப்தனும் விந்தையாய் நோக்கினர்! ‘என் பாரியாளைப்பற்றி* இவர்களுக்கெங்கே தெரியப் போகிறது?’

“வைசாலி…. நான் இங்கேதான் இருக்கேன்” திறந்துவிட்ட பீர் பாட்டில்போல மனம் பொங்கக் கூவுகிறேன் மையலோடு மனையாளை நோக்கி!

“….” கிஞ்சித்தும் என்னை இலட்சியம் செய்யாது சித்திரகுப்தனிடம் அளவளாவியவாறு இருக்கிறாளே என் தர்மபத்தினி!

“வைசாலி…” கர்ணகடூரமானது எனது குரல்.

“….”

‘என்னிடம் கடுகடுத்த சித்திரகுப்தனா அது…?’

என் அழைப்பைக் கண்டுகொள்ளாது சித்திரகுப்தனுடன் சிரித்துப் பேசிக்கொண்டு நிற்கிறாளே பாதகி. கல்லுபோல இருந்தக் கணவன் காற்றாய் மாறி நிற்கிறேன்… கொஞ்சமும் கலங்காமல் களிப்புடன் இருக்கிறாளே கல்நெஞ்சுக்காரி…! சித்திரகுப்தனிடம் விடைபெற்று அதோ… போகிறாளே…!

“வைஷு…” என் அழைப்பில் வைகுந்தமே அதிர்ந்திருக்கும் என்றுதான் நினைத்தேன்.

தன் வேலை பாதித்த வெறுப்பில் சித்திரகுப்தன் என்னைச் சினத்துடன் நோக்க, “பூவுலகின் பந்தம் அத்தோடு முடிந்துவிட்டது. எங்களது பணிக்கு இவ்வளவு நேரம் இடையூறாய் இருந்த உனக்குக் கொதிக்கும் நெகிழி காத்திருக்கிறது. அதில் குளித்துவிட்டு நரகத்துக்குள் வா” உத்தரவிட்டார் எமன். அவ்… ஓலமிட்டவாறு மனைவியை நாடும் நயனம்*. அதோ… தன் பயணத்தைத் தொடரப் போய்க்கொண்டிருக்கிறாளே அந்தக் கிராதகி…

சொர்க்கத்தின் வாசலில் வெண்ணிற ஆர்க்கிட் மலர்கள் அவள்மீது சொரிய, பொன்னிற ஆடைகளைத் தரித்திருந்த யுவன்கள் நடனமாடியபடி வந்து என் மனைவியின் கரம்பற்றி அழைத்துச் செல்கிறார்களே…. “வைஷூ….”

என்மீது கதகதப்பான இரு சொட்டுகள் விழ, நாசியில் சன்னமாக நுழைவது மருத்துவமனை வாடை அல்லவா?

********

பிராகிருதம் …. நிகழ்காலம்

ஆக்குரோதம் … மூர்க்கம்

ஆசாரவாசல் …. நுழைவாயில்

பிரகோபம் ….. கோபம்

கடிதில் …. விரைவில்

பாவித்து …. உபயோகித்து

பாரியாள் …. மனைவி

நயனம் …. கண்

‘முகமூடிகள்’ என்ற சிறுகதை நூலின் ஆசிரியர். தன் கட்டுரைகளுக்காகப் பரிசுகள் பெற்றவர். உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ‘இனிய தமிழ்க் கட்டுரைகள்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.

1 COMMENT

  1. கதை மிகவும் அற்புதமாக இருக்கின்றது ஆசிரியர். கொலையைக்காட்டிலும் இயற்கையை மாசுப்படுத்துவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை அழகாக அற்பதமாகக் கொண்டு சென்றுள்ளது அருமையாக இருக்கின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here