“பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என்பது பழமொழி. நாம் வாழ உணவு இன்றியமையாத ஒன்றாகிறது. இப்படிப்பட்ட அத்தியாவசியமான ஒன்றை அலட்சியமாக வீணடிப்பவர்களும் நம்மிடையே உண்டு. சாதாரணமாகப் பார்க்கும்போது இது ஒன்றும் பெரிய குற்றம் கிடையாது. சற்று ஊன்றி கவனித்தோமானால் இதிலுள்ள பாதகங்கள் நமக்கு விளங்கும்.

உலகில் எவ்வளவோ பேர் தீர்க்கவியலாப் பஞ்சத்தின் காரணமாக ஒரு வேளை உண்ண உணவின்றி உயிரை விடுகின்றனர். இந்நிலையில் நமக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கிறது என்றால் நாம் பாக்கியசாலிகளே!

பட்டினிச்சாவைப்பற்றி நாம் பேசும் வேளையில்தான், உலகில் உற்பத்தியாகும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. உணவை வீணடிப்பது என்பது வீடுகளில் ஆரம்பித்து, விருந்துபச்சார இடங்கள், உணவகங்கள் என்று நீள்கிறது.

வீடுகளில் தேவைக்கு அதிகமாகச் சமைக்கப்படும் பொருட்கள் குளிர்பதனப் பெட்டியை நாடுகின்றன. அலுப்பின் காரணமாகவோ மறதியினாலோ அவை பெரும்பாலும் குப்பைத்தொட்டிகளையே அடைகின்றன. மேலும் தேவைக்கதிகமாக வாங்கி சமைக்கப்படாத உணவுப் பொருட்களுக்கும் இதே நிலைதான்.

பெரும்பாலும் இப்போது விருந்துகளில் சுய பரிமாறல்களே இடம்பெறுகின்றன. ஆவலின் காரணமாய்த் தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள், வயிறு நிராகரித்ததன் காரணமாகக் குப்பைக்குப் போகின்றன.

உணவகங்களின் நிலையையோ சொல்லவே வேண்டாம்! குடும்பமாக வருபவர்கள், விருப்பப்பட்டதைத் தருவிக்கின்றனர். பெற்றோர், இந்த உணவு வகைகளை இந்தச் சின்னப் பிள்ளையால் சாப்பிட முடியுமா என எண்ணுவதில்லை. சில கவளங்கள் மட்டுமே உள்ளே அனுப்பப்பட்ட உணவு மீந்து குப்பைத்தொட்டியையே அடைகிறது. அதைப்பற்றிய நினைவு சிறிதுமின்றிச் செல்பவர்களைக் காண்கையில் வேதனையாகவே உள்ளது.

துபாயில் கராமா என்ற இடத்தில் “அஜந்தா ரெஸ்டாரென்ட்” என்ற உணவகம் இயங்கி வருகிறது. அங்கே “விரும்பும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். எடுத்த உணவை உண்ணுங்கள்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், வாங்கிய உணவை வீணடிப்பவர்கள் ஏறக்குறைய அந்த உணவின் விலைக்கேற்ப

அபராதத்தைச் செலுத்த நேரிடும். சமூகப் பொறுப்புள்ள இந்தியர் ஒருவரால் இந்த உணவகம் நடத்தப்படுகிறது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

ஜெர்மனியிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. உணவை வீணாக்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட, “நாங்கள் வாங்கிய உணவை வீணாக்க எங்களுக்கு உரிமையுண்டு” என்றனர் சம்பத்தப்பட்டவர்கள். “பணம் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் இந்த உணவுப் பண்டங்கள் இந்தத் தேசத்தின் சொத்து” என்று பதிலடி கொடுத்து அபராதம் கட்ட வைத்திருக்கின்றனர்.

நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கையிலும் நம் பேர் எழுதியிருக்கும் என நம் முன்னோர் சொல்லியுள்ளனர். நாம் உண்ணாமல் வீணடிக்கும் உணவின் நிலை? உணவை வீணடிப்பது பாவம் என்றனர் நம் முன்னோர். வீணாக்கும் ஒவ்வொரு பருக்கைக்கும் மேலோகத்தில் நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று சொல்லிப் புரிய வைத்தனர். இந்த அவசரக் காலத்தில் அத்தியாவசியமான ஒன்றைக்கூடப் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க நாம் தவறிவிடுகிறோம்.

உணவை வீணடிக்கக்கூடாது என்று பாலர் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு இங்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. இதனால் மாணவர்கள் மத்தியில் கடமையுடன் பொறுப்புணர்வும் ஒருங்கே வளருகிறது. இதுபோன்ற உன்னதமான செயல்களைத் தனி நபர்களும் பின்பற்றுவது சாலச்சிறந்ததாகும். வீடுகளில் சமைக்கும் உணவை வீணாக்காது பார்த்துக்கொண்டால் நல்லது. உணவகங்களில், மேசையை நிறைப்பதைக் குறிக்கோளாகக் கொள்ளாது தேவைப்படும் உணவை மட்டும் வரவழைக்கலாம். விருந்துகளில் நாம் சாப்பிடுவதற்கு ஏற்ப போதுமான அளவு உணவை எடுத்துக்கொண்டால் இந்தப் பிரச்சினைக் குறையும். உலகில் பல்வேறு காரணங்களால் பற்றாக்குறையின் காரணமாய் அல்லல்படும் மாந்தர்கள் மத்தியில்தான் நாமும் வாழ்கிறோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும். இதன் பலனாய் மக்களின் உழைப்பு வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படுவதுடன் இந்தப் பூமியையும் நம்மால் காக்க இயலும்.

உணவுப் பொருட்கள் எங்கோ இருக்கும் உழைப்பாளிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை தொழிலாளிகள் மூலம் சிங்கப்பூருக்கு வந்து சேருகிறது. அதை உணவாகத் தயாரிக்க, மற்றவர்களது பிரயாசைத் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட உணவை வீணடிப்பதால் நம்மை அறியாமலேயே பிற மனிதர்களுக்கும் இயற்கைக்கும் குந்தகம் விளைவிக்கிறோம். இதை வீணடிப்பது சரியா என்பதை நாம் உணர்ந்தால் போதும். உணவுகளை விரயமாக்குவது என்ற பேச்சுக்கு இடமில்லாது போகும்.

‘முகமூடிகள்’ என்ற சிறுகதை நூலின் ஆசிரியர். தன் கட்டுரைகளுக்காகப் பரிசுகள் பெற்றவர். உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ‘இனிய தமிழ்க் கட்டுரைகள்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.

1 COMMENT

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here