குறுகிய காலத்தில் தன் குடும்பத்தின் சிரமத்தைப்போக்கும் உற்சாக மந்திரமென நினைத்து, வாலிபத்தை தொலைத்தவர்கள் என்னைப்போல் ஏராளமானோர், இன்னமும் இந்த மண்ணைவிட்டுப் பிரிய மனமில்லாமல் இங்கேயே வசித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அதற்கான காரணங்கள் அதிகமென்றாலும், அவனது அடுத்தடுத்த தேவைகள் வாழ்கையின் நிலைப்பாட்டை மாற்றிவிடுகிறது…..

1990களில் ராஜா (வயது24) இக்கரைக்கு வந்த புதிதில், அவன் பட்ட பாடுகள் ஒருபுறமிருக்க, அதில் சக நண்பர்களின் எதார்த்தமான பழக்கவழக்கங்களை இன்றும் நினைத்து மனதுக்குள் புன்னகைத்துக்கொள்கிறான்.

எரவானத்தில் எட்டு படுக்கைகள். அதில் இரண்டு தாய்லாந்து நாட்டவர். இரண்டு பங்களாதேஷ் நாட்டவர். ராஜா ஒருவன் மட்டும் தமிழ்நாட்டு இந்தியன்.

“இன்று மாலை இன்னும் மூன்றுபேர், உன் சகோதரர்கள், வருகிறார்கள் அவர்களை மீதமுள்ள மூன்று படுக்கையில் நிரப்பிவிடு” என்று தத்தல் சிங்கிலீஸ்ல முதலாளி சொல்லிவிட்டுச் செல்கிறார்.

“ஓகே, பாஸ்” போட்ட ராஜா, சமையல்செய்யும் இடமான தரைத் தளத்தை, சிமென்ட் கலவை கொண்டு மேடு பள்ளங்களைச் சமன் செய்துகொண்டிருந்தபோது. யாரோ காரில் வந்திறங்கிய சத்தம் கேட்டும், தன்வேலையிலேயே குறியாக இருந்த ராஜா, கலவைக்குத் தண்ணீர் எடுக்க வெளியே வந்தபோதுதான் பார்த்தான், தன்னினச் சகோதரர்கள் மூன்றுபேர், அவர்களுக்குள் ஒருவரையொருவர் குறைசொல்லி, கடித்துக்கொண்டிருந்தார்கள்.

“அவன்பாட்டுக்கு ‘இதுதான் கம்பெனி’ன்னு கைய காட்டிட்டு, ‘படுக்கைப் பாத்திரத்தை இறக்கிக்கங்க’ன்னு சொல்லிட்டுப் போறான், நீ பாட்டுக்கு ‘ஓகே’ன்னு சொல்லி எங்களயும் இறங்கவச்சுட்ட, இப்ப யாரையின்னு போய் தேடுறது?”

ராஜா தன்னைத்தானே அந்த மூவரிடமும் அறிமுகம் செய்துகொண்டு, “இனிமே எல்லாமே அப்படித்தான் ! ‘மூணுபேர் வருவார்கள் தங்கவை’ன்னு எங்க முதலாளி சொல்லிட்டுபோனார் . அது நீங்களாகத்தான் இருக்கும், படுக்க பாத்திரங்கள எடுத்துக்கிட்டு உள்ள வாங்க!” என்று அழைத்துக்கொண்டு அவர்கள் படுக்கைக்கு வழிகாட்டினான். அப்போதே ஒருத்தர், “ஆத்தி… இது என்னப்பா, பரண்ல ஏறுற மாதிரி இருக்கு”ன்னு நக்கல் பேசியபடி மேல ஏற, “நீ வந்த நேரம், தனியாக தங்க இடமாவது இருக்கேன்னு பெருமைபட்டுக்கப்பு… நானெல்லாம் வந்தப்ப, வேலை செய்த இடத்தில வேலை முடிஞ்சதும் கூட்டிப் பெருக்கிட்டு, அங்கனயே சமைச்சு சாப்பிட்டு, மடக்கு கட்டில விரிச்சுப் போட்டு அங்கனயே தூங்கி எழுந்திருப்பேன்.. ” என்று ராஜா சொன்னதும் ஆசாமி கப்சிப்ன்னு ஆகிட்டார்.

அவர்களின் பேச்சுநடையை வைத்தே, அவங்க எந்தெந்த ஊர் காரர்கள்ன்னு ஊகிப்பது ராஜாவுக்கு எளிதாக இருந்தது. ராஜாவின் அப்பா வழி சொந்தம் பூராவும் அந்த சிவகங்கை மாவட்டத்தைச் சுற்றித்தான்.ஆளுக்கொரு வேலையென ஒரே சமையல்,ஒரே குடும்பமாக நாட்கள் நடைபோட்டன… பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் தனியாளாக இருந்த ராஜாவுக்கு தினமும் இரவு உணவு முடிந்ததும் சிறிதுநேரம் ஊர்ச்செய்தியைப் பேசி மகிழ, நாட்கள் இன்னும் வேகமாக ஓடலாயின.

மூன்றுபேருக்குமே திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. இதில் ராஜா ஒருவன் மட்டும்தான் பட்டணத்தில் வளர்ந்த ‘பேச்சிலர்’. மற்ற மூவரும் கிராமத்தவர்கள், மூன்றுவிதமான குணாதிசயம் கொண்டவர்கள். லெட்சுமணன் என்பவர் ‘சந்தேகம்’ என்கிற பெயரில் எப்பவும் ஏதாவது ஏடாக்கூடமான கேள்விகளைக் கேட்டு பரிதாபகரமாகப் பார்க்கும் கேரக்டர் .

ஒருமுறை, சீனப் பெருநாள் தினத்தை முன்னிட்டு பத்துநாட்கள் விடுமுறையில் இருந்த சமயம். தினமும் முதலாளி வரும்போது, நிறைய ஆப்பிள், ஆரஞ்சு, பே பழங்களென நிறைய கொடுத்துவிட்டுப் போவார். அதில் குறிப்பாக பச்சை நிற ஆப்பிள்கள் மட்டும் உடனே தீர்ந்துபோயிருக்கும். சரி, யாராவது தின்னுருப்பாங்கன்னு நினைச்சு கடந்துபோன ராஜாவுக்கு, அன்றைய தினமே உண்மை தெரியவந்துச்சு!

“ராஜாண்ணே.. ராஜாண்ணே .. ரெண்டுநாளா உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்னு நினைப்பேன், பேச்சுவாக்குல மறந்துடுவேன்!”

“அப்படி என்ன லெட்சுமணா உனக்கு சந்தேகம்?”

“கேட்பேன், என்னைத் திட்டக்கூடாது .. சரியா!

“சரி, கேள்!”

“வாழைப்பழம் பழுக்க, எத்தனை நாள்ண்ணே ஆகும்?”

“கொடாப்புல ஒருநாள் வச்சி, மறுநாள் சாக்கு போட்டு மூடிவச்சா, அடுத்தனாள் செவந்துடும்பா”

“மாங்கா, சீத்தாகா, கோவக்கா, அதெல்லாம்ண்ணே?”

“முத்தின காயாக இருந்தா, எல்லாமே இரண்டு, மூன்று நாளில் பழுத்திடும்ப்பா….”

“அது சரிண்ணே, இந்த பச்சை ஆப்பிள்காய் மட்டும் ஓருவாரமாகியும் பழுக்காம வதங்கிப்போய் சூம்பிப் போச்சுண்ணே.. இந்தா நீங்களே பாருங்கண்ணே!”

சிரிப்பு,கோபம், இரண்டையும் கடந்து, அவனது அறியாமைக்கு விளக்கம் தந்த அன்றை சம்பவம் இன்றும் பச்சை ஆப்பிளின் பசுமையாக புளித்து இனிக்கிறது!

அடுத்த இருவரின் அனுபவங்கள்?

கட்டுமானத்துறையில் பல ஆண்டு அனுபவமிக்கவர். வேர் பிடித்த மண்ணின் வாசனையும் வேரூன்றிய மண்ணின் வாசனையும் கலந்து மணக்கும் எழுத்து இவருக்குச் சொந்தம். ஃபேஸ்புக்கில் இவர் சலாம் வைக்காத நாட்கள் மிகக் குறைவு.

1 COMMENT

  1. பச்சை ஆப்பிள் காய் எப்போ பழுக்கும்? செம்ம காமடி!

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here