அவர் – அதை எப்படி செய்வது? இதை எப்படி கடப்பது? என்பதை எல்லாம், ஒவ்வொன்றாக ராஜாவிடம் கேட்டுக் கற்றுக்கொண்டவர்.

ஒருசில மாதங்களுக்குப் பிறகு, அதை ஏன் செய்யல, இதை ஏன் முடிக்கலன்னு ராஜாவையே வேலை வாங்கும் அவரது திறமையை கண்டு, ‘இவர் வெந்த அரிசியா! வேகாத அரிசியா! இல்ல வெந்தும்வேகாத அரைவேக்காடா!’ என்கிற சந்தேகத்தை ராஜாவின் மனதுக்குள் எப்போதும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அந்த மூன்றாவது கேரக்டரைக் கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்…..

அழகு! என்பது அவரது பெயர். ராஜாவவிட எட்டு வயது முதிர்ந்தவர், மூன்று ஆண்பிள்ளைகளுக்கு தந்தை. ஆனா, ஆளப்பார்த்தா இவருக்கு கல்யாணமாகி மூன்று குழந்தைகள் இருக்கா! என ஆச்சரியத்தில் வாய்பிளப்பவர்கள் ஏராளம்.

புதிதாக வேலைக்கு வந்த அந்த மூன்றுபேர்களில், அழகு மட்டும் கொஞ்சம் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர். எள்ளுன்னா, எண்ணையோடு வந்து நிற்பவர் அழகு!

அதுவே, நிறுவனத்தின் பெரியமுதலாளிக்கு (முதியவர்) ரொம்ப பிடித்துபோய்விட்டது. பெயர் வேற, கூப்பிட, கச்சிதமாக இருப்பதும் ஒரு காரணமாகச் சொல்லலாம் ! அந்தச் சீன முதியவர் ‘அல்கூ’ என பெயரைச் சொல்லி கூப்பிடுவதுகூட, அழகுதான்!

“யோவ் அழகு, என்னய்யா பெருசு உன்னை இவ்ளோ அழுக்காக்கி கூப்பிடுது!” என்று ராஜாகூட சில நேரங்கள்ள கிண்டலடிப்பதுண்டு. தமிழர் அல்லாதவர்கள் பேசும் தமிழும் அழகுதான்யா!

டெஃபுலேன்-ஹவ்காங்கில் செயல்படும் நிறுவனமென்பதால், நிறுவனத்தின் பாதுகாப்பை மனதிற்கொண்டு, வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனத்திலேயே தங்கவைத்து விடுவதுதான் 90களின் காலகட்டத்தில் வழக்கமாக இருந்தது.

அதில் இரண்டுவகையில் முதலாளிகளுக்கு நன்மை. வாடகை மிச்சம், பாதுகாவலர் சம்பளம் மிச்சம்.

ஊழியர்களுக்கும் அதுவே மிகவும் வசதியாக இருந்தது. கூடுதல் நேரம் வேலை செய்தாலும் தங்குமிடத்திற்கும், வேலைசெய்யும் இடத்துக்குமான போக்குவரத்து அலைச்சலில்லை. காலையில 7 மணி வரை, கட்டிலவிட்டு எழும்பத் தேவையில்லை, முதலாளிகளுக்கும்,ஊழியர்களுக்கும் இப்படியான ஒரு வித புரிதலில் நகர்ந்துகொண்டிருந்த காலம் அது.

அழகு, வேலைக்குச்சேர்ந்து ஒரு நான்கு மாதம்தான் ஆகியிருக்கும், கிட்டத்தட்ட பெரிய முதலாளியின் அந்தரங்க காரியதரிசியாகவே மாறியிருந்தார். காலையில கதவு திறப்பது முதல்,இரவு கதவு மூடுவதுவரை அனைத்தும் இந்த ஆல் இன் ஆல் அழகுதான்.

ஒருநாள், ராஜாவுக்கு மாலை 7 மணிவேலைமுடிந்து தங்குமிடம் வந்துவிட்டார்.

“என்னய்யா செட்டுமட்டும் வந்துருக்கு, அந்த ரெண்டு ஸ்பீக்கரையும் காணோம்!” (கிருஷ்ணன்,லெட்சுமணன்)

“ராஃபில்ஸ் பிளேஸ் பக்கம், அந்த மனுசன் கோபுரம் செஞ்சோம்ல.. அதுக்கு பெயிண்ட் வேலைய இன்னைக்குள்ள முடிக்கனுமாம் .. அதனால அவனுகளுக்கு இன்னைக்கு இரவு11 மணிவரையில் வேலை.”

“சரிய்யா அழகு! இன்றைக்கு என்ன சமையல் செய்வோம்?”

“என்னைய கேட்டா? எதையாவது செய். பத்திரமெல்லாம் கழுவி வச்சாச்சு. குக்கர்ல 4 கப் அரிசியும் போட்டாச்சு. அதுக்குமேல உன் இஸ்டம்பா ராசா!”

“சரி, இன்னைக்கு புளிக்குழம்பை வச்சு, முட்டை ஆம்லேட் போட்டுக்குவோம். காலையில அம்பலம் பொறிச்சு எடுத்துக்குவோம். என்ன, ஓகே வா?”

“ஓகே,ஓகே ..”

புளியைக் கொஞ்சம் ஊற வைத்துவிட்டு, காய்கறிகளை வெட்ட ஆரம்பிச்ச ராஜா, அழகிடம் பேசிக்கொண்டே சமைக்கத் தயாராகிக் கொண்டிருந்தான்.

“ஏம்பா ராசா , ஒரு சந்தேகம்!”

“என்னன்ணே!”

“மதியம் சாப்பாட்டு நேரத்துல ஞானத்துகிட்ட போன்ல பேசுனேன். நான் பீடிய வாயில வச்சுகிட்டே பேசுனத கண்டு புடிச்சுட்டாப்பா. பீடிய அதிகமா புடிக்காதிங்கன்னாளே. அதெப்படின்ணே,கண்டுபிடிக்க முடியும்?”

“நீதான் ஏதாவது ஒலறியிருப்பன்ணே..”

“அட இல்லப்பா ராசா, அந்த டெலிபோன் ஒயர் வழியா பீடி வாடை அவளுக்கு அடிச்சுருக்கு. அதான், அவ அவ்ளோ கரெக்ட்டா கேட்டுருக்கா! இந்த பேஃக்ஸ் அனுப்புறானுங்கள்ள .. அதுமாதிரிதான் இதுவும் நடந்துருக்கும்ன்னு நினைக்கிறேன்!”

“அய்யோ அண்ணே, இதுக்குமேல என்னால சிரிக்க முடியலன்ணே.. போய், அந்தப் புளியை கொஞ்சம் கரைத்து எடுத்துவாய்யா” ன்னு சொல்லிக்கொண்டே குழம்புக்கான தாளிப்புகளை கவனிக்க …

“அட, என்னய்யா! புளிய கரைச்சு எடுத்து வர இவ்ளோ நேரமா? சீக்கிரம் கொண்டு வாய்யா!”

“இந்தா, வந்துட்டேன். இந்தா… புடி” என்ற அழகை, மேலும் கீழுமாகப் பார்த்த ராஜா,

“என்னய்யா இது! வெறும் சக்கைய நீட்டுற, கரைச்ச புளித்தண்ணி எங்கய்யா!”

“அட, நீ புளித் தண்ணியவா கேட்ட? கரைச்சுட்டு வான்னுதான்னே சொன்னே, அதான் கரைச்சி விட்டுட்டு, சக்கைய எடுத்துட்டு வந்தேன்!”

ராஜாவிற்கு சிரிப்பு ஒரு பக்கம், கடுப்பு மறுபக்கம்.

“ஆமா, தெரியாமத்தான் கேட்கிறேன்ணே.. இதுக்கு முன்னாடி புளிக்குழம்பு வச்சத நீ பார்த்தே இல்லையாய்யா? இல்ல, உன் மனைவி வீட்டுல புளிகரைச்சு குழம்பு வச்சதேயில்லையா?”

“அட, போப்பா. நான் சிங்கப்பூர் வந்தபிறகுதான் சமையலயே நேரில் பார்க்கிறேன். என்னையப் போய்!”

“என்னைய்யா! கல்யாணம் செஞ்சு மூனு பிள்ளைகளைப்பெற்ற பெரிய மனுசன் பேசுற பேச்சாய்யா இது?”

“தம்பி ராசா, புளிய கரைப்பதற்கும் பிள்ளைய பெத்துகிடுறதுக்கும் என்னப்பா சம்பந்தம்!”

“இது மட்டும் நல்லா பேசுவன்ணே! ஆனா, எனக்குன்னு மூனுபேர் வந்து வாய்ச்சிங்க பாரு! ஒருத்தன் பச்சை ஆப்பிள அரிசி டப்பால பழுக்க வைக்கிறான். இன்னொருத்தன் சாமிக்கு வச்சுபடைக்கிற காகிதத்த நெசப்பணம்ன்னு பதுக்கி வைக்கிறான். இப்ப நீ என்னடான்னா, புளிய கரைச்சு, கீழ ஊத்திட்டு, சக்கைய கொண்டாந்து கொடுத்து குழம்பு வைடாங்கற! யோவ் அழகு சத்தியம்மா சொல்கிறேன்யா.. என்னோட ஆயுள் முடியும்வரை உங்களையெல்லாம் என்னால மறக்கவே முடியாதுய்யா!”

பிறந்த கூடுகள் வெவ்வேறாக இருந்தாலும், கடல்கடந்துவந்த ஊர்க்குருவிகளாக, ஒரே கூட்டில் கல கலப்பாக வாழ்ந்த காலம் பொற்காலம்தான்!

கட்டுமானத்துறையில் பல ஆண்டு அனுபவமிக்கவர். வேர் பிடித்த மண்ணின் வாசனையும் வேரூன்றிய மண்ணின் வாசனையும் கலந்து மணக்கும் எழுத்து இவருக்குச் சொந்தம். ஃபேஸ்புக்கில் இவர் சலாம் வைக்காத நாட்கள் மிகக் குறைவு.

3 COMMENTS

  1. ஆகா!… அருமையான கதை அண்ணா. படிக்கப்படிக்க நான் சிங்கப்பூர் வந்திறங்கிய ௨௦௦௪ஆம் ஆண்டிற்கே பின்னிழுத்துச் சென்றுவிட்டது…. வாழ்த்துகளும் மகிழ்வும்.

  2. //அந்தச் சீன முதியவர் ‘அல்கூ’ என பெயரைச் சொல்லி கூப்பிடுவதுகூட, அழகுதான்! //
    சிரிப்பை
    அடக்கி வாசித்து முடிப்பதற்குள் வெகுவாக சிரமப் பட்டுவிட்டேன். அருமை..அருமை..

  3. மிக சுவாரசியமான அனுபவங்கள் நிறைந்த நிகழ்வுகளை எங்களிடம் சுவைகுன்றாமல் பகிரும் எங்கள் நண்பர் ஏனைய வாசகர்களின் கருத்தையும் கவருவது போல் எழுதி வருவது மனதுக்கு திருப்தி அளிக்கிறது.
    அவரது அனுபவ பதிவுகள் தொடர்ந்து பதிப்பில் மலர்ந்து அனைவர் சிந்தையும் மகிழ்விக்க வேண்டுகிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here