இன்னொரு நண்பர். பெயர், கிருஷ்ணன்.

எழுதப் படிக்கத் தெரியாதவர். ஆனால், செய்கிற வேலையை ஒருதடவை பார்த்தால் போதும், செய்முறையை அப்படியே உள்வாங்கிக் கொள்வார். அடுத்தமுறை அந்த வேலைக்காரர் மாற்றிச்செய்தால்கூட, ‘என்னண்ணே முதல்ல அப்படி செய்தீர்கள், இப்ப மாற்றிச் செய்யுறிங்க?’ என்று எதிர்கேள்வி கேட்டு சரி செய்யுமளவுக்கு ஞானம் கொண்டவர். உருவ ஒற்றுமை, குரல்வளம், பேச்சுநடை அனைத்தும் நடிகர் செந்திலைப் போலவே இருப்பதலாலோ என்னவோ, தன்னுடைய துணையாளாக கிருஷ்ணனைக் கூடவே வைத்துக்கொண்டான் ராஜா.

ஏன் கிருஷ்ணனை கூடவே வச்சுகிட்டான்னா, ராஜா ஒரு ரஜினி பைத்தியம். அந்தக் காலகட்டத்தில் சினிமாவில் ரஜினி,செந்தில் ஜோடி டாப் (முத்து, வீரா, எஜமான், படையப்பா).

அன்று கிருஷ்ணனுக்கு மட்டும் கப்பெனிக்குள்ளேயே வேலை. ராஜா, மற்ற இருவருக்கும் வெளி வேலை.

சீனக் கம்பெனி. அன்றைய தினம், ஏழாம் மாதம் சாமி கும்பிடும் நாள். வழிபாடுகள் முடிந்த கையோடு, கோழி, வாத்துன்னு கிருஷ்ணனுக்கு செம விருந்து.

வெளி வேலை முடிந்து மாலை கம்பெனி திரும்பியபோது, லோரியிலேர்ந்து இறங்கியதுமே கிருஷ்ணன் வியந்து கேட்டான்.. “ராசாண்ணே, இது என்ன, என் உசரத்துக்கு தீவிட்டியெல்லாம் எரியுது? பக்கத்துல தகதகன்னு அனலாக ஏதோ தொட்டிக்குள்ள புகைஞ்சுகிட்டே இருக்கு!” என ஆச்சரியமாகப் பார்த்தபடி, ராஜாவிடம் கேட்டான்.

“அடேய், உங்கள வச்சிகிட்டு வேலை பார்க்கிறதிலெல்லாம் எனக்கு எந்தச் சிரமமும் இருந்ததில்ல. ஆனால், உங்க சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் அசந்து போயிடுவேன் போலயிருக்குடா” என்று ராஜா சலித்துக்கொண்டாலும், “அட ஆமால்ல, நீங்க சிங்கப்பூருக்கு புதுசுதானே..” என தனக்குத்தானே சமாதானம் செய்துக்கொண்டு, விளக்கமளித்தான்.

“இங்க சீனர்கள் அவங்க காலண்டர் வழக்கப்படி ஏழாம் மாசம் சாமி கும்பிடுறது வழக்கம். அதாவது, நம்மூரில ஆடி மாத படையல் மாதிரி. சிவலோகம் சென்ற முன்னோர்களெல்லாம் வரும்படியை எதிர்பார்த்து ஆவியாக காத்துக் கொண்டிருப்பார்களாம், அது அவங்க சமய நம்பிக்கை! அவங்களுக்குத் தேவையானதையெல்லாம் – செருப்புலேர்ந்து, கார், பைக், பணம், துணிமணி, செல்போன்வரைக்கும் அத்தனையையும் – அட்டை, காகிதங்களில் செய்து எரித்து விடுவாங்க. அது எல்லாம் எரிந்து ஆவியாக, ஆவியாக உலாவும் முன்னோர்கள் அதையெல்லாம் உபயோகப்படுத்திக்குவாங்களாம். மற்றபடி, பண்டம், பதார்த்தம், பழங்கள்ன்னு வச்சி படையல் செமயா செய்வாங்க. ஆனால், அதையெல்லாம் இவங்களே தின்னு காலி செஞ்சிருவாங்க. ஆக, நம்ம கிருஷ்ணனுக்கு இன்னைக்கு விருந்து பலமா இருந்திருக்கும் ! போய் முதல்ல அவனைத் தேடு.”

“இந்தா .. மேலதான் படுத்திருக்கார்ண்ணே!”

“என்னடா இது… சமையல் பத்திரமெல்லாம் கழுவாம அப்படியே கிடக்கு… மேல படுத்துருக்கானா? ஏலே தம்பி கிருஷ்ணா, என்னாச்சுடா உனக்கு? உடம்புக்கு ஏதும் சுகமில்லையா?” என்று கேட்டுக்கொண்டே ராஜா மேலே படுக்கையறைக்கு ஏறி வந்தான்.

“அட, உடம்பெல்லாம் நல்லாத்தான்யா இருக்கு. மத்தியானமா ஏதோ சாமி கும்புட்டானுங்க. அதோட, பச்சைக் கலர் டப்பாய, ஒரு அட்டைய குடுத்து எல்லாரையும் எடுத்துக்கச் சொன்னார் முதலாளி. பொரிச்ச கோழி, வாத்து, இறால் மசாலா, கொஞ்சம் சோரு எல்லாம் எடுத்து வச்சுட்டு, பச்சை டப்பாய (பீர்) இரண்டு போட்டேனா! அப்படியே கிர்ர்ன்னு சுத்திடுச்சு… அதான் அப்படியே பைய மேல ஏறிப் படுத்துட்டேன்…”

“ரெண்டு டப்பாய்க்கேவா!?”

“நம்ம உடம்பு, பித்த உடம்புப்பா, தாங்காது!”

“இந்த நாலுமாசத்தில ஒரு தடவகூட நீ டப்பா போட்டு நான் பார்த்ததேயில்லையப்பா! அப்புறம் எப்படி?”

“அதெல்லாம் உனக்குத் தெரியாம அப்பப்ப போடுவேன்பா!”

“அது சரி, நீ ஓ.சி பார்ட்டியாச்சே..”

“ஏய் அழகு, இன்னைக்கு எதுவும் சமைக்க வேணாம்பா.. அதான் கோழி, வாத்துன்னு நிறைய எடுத்து வச்சிருக்கேனே, அது போதும்பா!”

“அப்ப நாளைக்கு எதடா கட்டிட்டுப் போய் சாப்பிடுவே? ஒரு நாளைக்கு கடையில சாப்பிட்டுக்கிறாயா?” என்று அழகண்ணே எதிர்ப் புதிர் போட …

“சரிய்யா… எதையாவது கொஞ்சமா செய்துவிடு” என்று சொல்லி ராஜா குளியல்போடப் போய்விட்டான்.

இப்படியான கேலி கிண்டல்களுக்கிடையே, சிலநாட்களும் வேகமெடுத்தோடியது.

சிலவாரங்களுக்குப் பிறகு ஒருநாள் இரவு, உணவு முடித்த கையோடு, கேட்டுக்கு வெளியே ஃபோனும் கையுமாக, தன் குடும்பத்தாருடன் ராஜா பேசியபடியே நின்றிருந்தான். அங்கே வந்த கிருஷ்ணனைக் கண்டதும், கை சாடையில், ‘என்ன?’ன்னு ராஜா கேட்க, ‘பேசு,பேசு…பேசி முடி’ என கை சாடையாலே கிருஷ்ணன் சொல்ல, சில நிமிடங்களில் கைபேசியில் பேச்சுக்கு விடைபெற்றான் ராஜா!

“என்ன கிருஷ்ணா, இன்னும் படுக்கலயா? மணி பத்தைத் தாண்டியாச்சே…”

“இல்ல, உன்கிட்ட ஒரு சங்கதி கேட்கனும், அதான்!”

“சொல்லு, என்ன சங்கதி ?”

“நம்மூர் பணத்தையெல்லாம் முஸ்தபா மணி சேஞ்சர்ல மாத்திக்கிற மாதிரி, வேற நாட்டுப் பணத்தையெல்லாம் எங்க மாத்திக்குவாங்க?”

“எல்லா நாட்டுப் பணத்தையும் அந்த முஸ்தபா மணிச் சேஞ்சர்லேயே மாற்றிக்கலாம்டா கிருஷ்ணா! ஆமா, நீ எதுக்கு இப்ப இத கேட்கிற? உன்கிட்ட ஏதாவது வெளிநாட்டுப் பணம் இருக்கா?”

“ஆமா! யாருகிட்டயும் சொல்லிடாத… அன்னைக்கு கம்பேனில சாமி கும்பிட்டப்ப, கட்டுக்கட்டா பணத்தையும் போட்டு கொளுத்துனானுங்க. எங்கிட்ட ஒரு பெட்டிய கொடுத்துப் பிரிச்சு, பிரிச்சு வீசச்சொன்னாங்க. நான் அவனுங்களுக்குத் தெரியாம அஞ்சு கட்டு நோட்ட அமுக்கிட்டேன். அது அம்புட்டும் ஹாங்காங் டாலராம்பா!”

“ஆ, ஆ … சரி, இப்ப அத எங்கடா வச்சிருக்கே? போய் எடுத்துட்டு வாடா பார்ப்போம்!”

“இந்தா, நீயே பாரு!” கிருஷ்ணன் டாலர் கட்டுகளை ராஜாவிடம் நீட்ட….

“அடேய் … இது உண்மையான பணமில்லையடா! பணம் மாதிரியான வெறும் காகிதம்டா!! உலகத்தில எவனாவது உண்மையான பணத்தை எரிப்பானா? கொஞ்சமாவது யோசிக்கக்கூடாதா!”

“அவனுங்க பேசிக்கிட்டதக் கேட்டேனே … செலவுக்குப் பணமில்லாமல் ஆகாயத்துல ஆவியாக அலையிறவனுங்களுக்கு பணத்தை கொளுத்தி விடுறோம்ன்னு அவனுக பேசிக்கிட்டானுகப்பா!”

“அவனுக பேசிகிட்ட பாசையெல்லாம் உனக்குப் புரிஞ்சுடுச்சு?! ம்ம்ம் … நல்லவேள, இத முஸ்தாபாவுக்கு எடுத்துட்டுப்போய் சிரிப்பா சிரிக்காம, என்கிட்டயாவது கேட்கணும்ன்னு தோனுச்சே! அதை அப்படியே தூக்கி, அந்த தோம்புல போட்டுட்டுப் போய்ப் படு. மத்தத நாளைக்கு பேசிக்கலாம் …”

“அப்ப நீ வரல, படுக்க?”

இப்போது அந்த கிருஷ்ணன், இங்கு என்னோடு இல்லை. ஊருக்குப் போய்விட்டான். பல வருடங்கள் உருண்டோடிய நினைவுகளுக்கிடையில், இன்றும் அந்த ஏழாம் மாத சம்பிரதாயங்களின்போது, அவன் மட்டும் மறக்காமல் நமட்டுப் புன்னகையுடன் மனதுக்குள் வந்துபோகிறான்!

கட்டுமானத்துறையில் பல ஆண்டு அனுபவமிக்கவர். வேர் பிடித்த மண்ணின் வாசனையும் வேரூன்றிய மண்ணின் வாசனையும் கலந்து மணக்கும் எழுத்து இவருக்குச் சொந்தம். ஃபேஸ்புக்கில் இவர் சலாம் வைக்காத நாட்கள் மிகக் குறைவு.

1 COMMENT

  1. அருமை… கிருட்டிணனின் அறியாமை அவரை மறக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here