காலையில் தேக்காவுக்கு புறப்படும்போது “இன்றைக்காவது ஒழுங்கா இந்த ஜாக்கெட்டை ஆல்டர் பண்ணி தைச்சு வாங்கிட்டு வாங்க ” என்று ராரா முனியாண்டியின் மனைவி கொடுத்த புது ஜாக்கெட்டையும் அளவு ஜாக்கெட்டையும் ஒரு கருப்பு பையில் கையில் கொடுத்தார். அதை வைத்துக் கொண்டு அலைந்தவரைப் பார்த்தால், தேக்கா மார்க்கெட்டில் இறைச்சி வாங்கிட்டு, வீட்டுக்கு போக வழி தெரியாமல் இந்த ஆள் ஏன் இப்படி அலைகின்றாரோ என்று பார்க்கிறவர்களுக்குத் தோன்றியிருக்கலாம்.

‘இங்கேதானே இரண்டு மூன்று இடத்தில் தையல்மிஷனைப் பார்த்தோம் ஒன்றையும் காணோமே’ என்று முஸ்தபாவரை பராக்கு பார்த்தவாறு போனார். மறுபடியும் சிராங்கூன் ரோட்டிலேயே வந்த வழியே திரும்பும் போது, கஃப் ரோடு தாண்டி கணேஷ் டெக்ஸ்டைல் அருகே கிர்… என்ற தையல் மெஷினின் மெல்லிய சப்தம் கேட்டது. ‘இப்போதானே இந்த வழியாக போனோம் எப்படி கண்ணில் படாமல் போனது’ என்றெண்ணி “கொஞ்ச நேரத்துக்கு முந்தி இந்த வழியாக போனேன் கடை இல்லையே!” என்றார்.

“இந்தக் கடையில் ஆறு வருஷத்துக்கு மேல நான் இங்கேதான் இருக்கேன். நீங்க கடை இல்லேன்னு சொல்றீங்களே!” என்ற தையல்காரரின் நையாண்டி கேட்டு, “ஹி… ஹி… இப்பத்தான் கடை திறந்தீங்களா”ன்னு கேட்டேன்!

“ஆமா சார்… காலையில் பத்து பத்தரைக்குத்தான் கடை திறப்போம். இரவு பத்து பத்தரைக்கு கடை சாத்திடுவோம். இது ஆபீஸா என்ன ? எட்டு மணிக்கு திறந்து ஐந்து மணிக்கு அடைக்க!”

“இதை நீங்க எழுதிப் போட்டிருக்கலாமே சார். வேலை நேரம் காலை 10. 30 முதல் இரவு 10. 30 வரைன்னு”

“இதை எதுக்கு சார் எழுதிப் போடணும். இப்ப உங்க கிட்டே சொல்லிட்டேன். இனிமே ஞாபகம் வச்சுக்க மாட்டீங்களா என்ன?”

“சரி.. சரி.. உங்களுக்கு என்ன செய்யணும்?” என்று காரியத்தில் கண் ஆனார் கடைக்காரர்.

“இந்தாங்க இந்த இரண்டு புது ஜாக்கெட்டுகளையும் இந்த பழைய ஜாக்கெட் அளவுக்கு ஆல்டர் பண்ணிக் கொடுத்திடுங்க” என்று ஜாக்கெட்டுகளை மேஜை மீது வைத்தார்.

“உருப்படிக்கு எவ்வளவு ?”

“எப்பவும் வாங்கற மூணு வெள்ளிதான் !” என்றபடி ஜாக்கெட்டின் தையலை பிரிக்க ஆரம்பித்தார்.

ஒட்டு மொத்த சிங்கப்பூருக்கும் ஆல்டரேஷன் ரேட் மூணு வெள்ளிதான்கிறதில் ஒன்றும் ஆல்டரேஷன் இருக்காதாக்கும் என்று ராரா மனதில் எண்ணிக் கொண்டார்.

“இரண்டுமே ஊரில் தைச்ச மாதிரி இருக்கு.. அப்பவே அளவு சரியா கொடுத்திருக்கலாமே?”

“என்ன பண்றது. இங்கே நீங்க ஆல்டர் பண்ண வாங்கறதுதான் ஊரில் தையல் கூலியே. அதான் ஊர்ல இருந்து தைச்சுட்டு வர்றதையே வழக்கமா வச்சிருக்கா என் வீட்டுக்காரம்மா. ஆனாலும் பாருங்களேன் இரண்டு கடிகாரம் ஒரே நேரத்தை காட்டாதுன்னு சொல்லுவார்கள் அது மாதிரி சில டெய்லர்களிடம் இரண்டு சட்டைக்கு அளவு கொடுத்து தைக்கும் போதே ஒன்றுக்கொன்று வித்தியாசமாக தைச்சு கொடுக்கிறார்கள் !” என்று ஊர் தையல்காரர் மீது குறை சொல்ல..

“நீங்க சொல்ற மாதிரி எல்லாம் இல்லீங்க. அது பழைய பெண்டுலம் கடிகாரத்தின் காலம். இப்போ ஆன் லைன்லயே ஜாக்கெட் விக்குது. ”

‘ஆமாம், ஆன்லைனில் ஜாக்கெட் வாங்கினா ஆல்டரேஷன் பண்ண உங்ககிட்டேதானே வரணும்’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்ட ராரா அதை வெளியே சொல்லவில்லை.

“இதை எப்போ தைச்சு கொடுப்பீங்க?”

“கொஞ்சம் பக்கத்தால நில்லுங்கள். பத்து நிமிஷத்தில் தைச்சு தந்திடறேன். ” சும்மாவே எங்க போனாலும் வாயை வச்சுகிட்டு சும்மா நிற்க மாட்டார் நம்ம ராரா துணியை தைக்கிற வரைக்கும் அவரோட வாயைத் தைக்க முடியுமா என்ன?

“வர்றவங்க யாராவது,புது துணிகள் உங்களிடம் தைக்க கொடுப்பார்களா? இல்லை ஒன்லி ஆல்டரேஷன் மட்டும்தானா?”

“ஆல்டரேஷன் மட்டும் தாங்க! புதிய துணிகள் தைக்கிறதில்லை. இதுக்கே எனக்கு நேரம் சரியா இருக்கு!”

உருப்படிக்கு மூணு வெள்ளின்னு துண்டு துண்டா சம்பாதிக்கிறவங்க, மொத்தமாக பத்து பேர் கூலியை பல்க்காக சம்பாதிக்கலாமே இதை ஏன் வேண்டாம்கிறாங்க என்று வியப்படைந்தார் ராரா.

“உங்களுக்கு ரெகுலர் கஸ்டமர் இருக்காங்களா? இல்லே என்னைப் போல் வாக்கிங் கஸ்டமர்கள்தானா?”

“ரெகுலர் கஸ்டமர் இருக்காங்க. அவங்களும் முதலில் உங்களை மாதிரி வாக்கிங் கஸ்டமரா வந்து ரெகுலரா மாறினவங்கதான்!”

“எல்லோருக்கும் இப்படி நிக்க வச்சே தைச்சு கொடுத்திடுவீங்களா? இல்லை கலெக்‌ஷனுக்கு டைம் சொல்லி அப்புறம் கொடுப்பீர்களா?”
“வார நாட்களில் இந்த மாதிரி கொஞ்சம் ப்ரீயா இருப்போம். சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்போ சிலரிடம் லேட்டா வந்து வாங்கிக்கொள்ள சொல்லுவோம். ”

இப்போது ராராவுக்கு ஒரு பழைய விகடன் ஜோக் நினைவுக்கு வந்தது. குடை ரிப்பேர்காரன் கேட்ட கூலி அந்த பழைய குடையின் பெறுமதியை விட கூடுதலாக இருப்பதாகவும் ‘எனக்கு குடை வேண்டாம், நீயே வெச்சுக்கோ’ என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்.

“உங்களுக்கு ஒரு பழைய விகடன் ஜோக் தெரியுமோ?”

“நான் கேரளாவில் இருந்து வந்திருக்கேன். எனக்கு தமிழ் எழுத படிக்க வராது. பேசறது மட்டும்தான் !”

இதுவரை ஒரு பச்சை தமிழரிடம் பேசிக்கிட்டிருக்கோம்னு நாம நினைச்சது எவ்வளவு தப்பா போச்சு. சேட்டன் இப்படி தெளிவான தமிழ் பேசறாரே என்று எண்ணிக் கொண்டு, “ஒரு ஜீன்ஸ் பேண்ட் ஐந்து வெள்ளிக்கு விக்குது. அதுல காலை கொஞ்சம் வெட்டி தைக்கிறதுன்னா மூணு வெள்ளி கேட்கிறீங்க. இதுக்கு பேசாம வேற பேண்ட் எடுத்துக்கலாம்னு நினைச்சு யாராவது டெலிவரி எடுக்காமல் போனதுண்டா?”

“பழைய துணி தைக்க கொடுத்த பலர் திரும்ப வாங்காமல் போவதுண்டு. கொஞ்ச நாள் பார்த்திட்டு அவற்றை தோம்பில் இறக்கிடுவோம். ”

எதையேனும் கேட்டு வைக்கலாம் என்று எண்ணிய ராரா, “உங்க எதிர்கால லட்சியம்னு எதுனாச்சும் இருக்கா?” என்றார்.

“நான் ஆறு வருஷமாக எஸ் பாஸ்ல இங்கே துணி தைச்சுட்டு இருக்கேன். முதலாளி டன்லப் தெருவில் இருக்கார். இப்ப சிங்கப்பூரில் எஸ் பாஸ் ,இ. பி குறைச்சுகிட்டிருக்கதா சொல்றாங்க. எனவே இந்த வேலையில் நிரந்தரமாக ஓட்டினாலே போதும் வேற லட்சியமென்றெல்லாம் ஒன்றுமில்லீங்க. ”என்றபோது ராரா மனம் கொஞ்சம் கனத்தது.

“உங்க பேரை சொல்லவில்லையே!”

“பேரு சுரேஷ் வயசு 43 ஆகுது. ”என்றவர் “இந்தாங்க உங்க உருப்படிகள் இரண்டுக்கும் ஆறு வெள்ளி ஆகுது!” என்றபடி துணியை தந்தவரிடம், பணத்தை கொடுத்து துணியை வாங்கியவர், தேக்கா பஸ் ஸ்டாண்டு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அகத்திய முனி, பழமைவிரும்பி. இருந்தாலும், ஒரு புலம்பலோடு இந்தக் காலத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமிக்கவர். வாரம் ஓரிரண்டு முறையாவது தேக்காவை ரவுண்டு கட்டாவிட்டால் அவருக்கு நிம்மதியான தூக்கம் வராது …

1 COMMENT

  1. அகத்தியமுனி வாழ்க..!
    அவர்தம் பொருப்பில் கண்ணாயிருந்து சிங்கையில் நாம் சென்றடையா தேக்காவின் அகஸ்மாத்தான மூலைகளையும் மற்ற இடங்களையெல்லாம் தரிசிக்கும் பேரருள் புரிந்திடுவாராக..
    வாழ்க அகத்திய முனி.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here