நம்ம ராரா முனியாண்டிக்கு ரெஸ்டாரென்களில் சாப்பிட ரொம்பப் பிடிக்கும். அவர் மனைவிக்கோ எவ்வளவு பெரிய ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டாலும் வீட்டு சாப்பாடு மாதிரி இல்லையேன்னு புலம்புவதோடு, ‘காசை ஏன் கரியாக்கணும், அதுக்கு நல்ல ப்ரெஷ் காய்கறியாக வாங்கினால், வீட்டில் கறி ஆக்கிடலாமே’ங்கிறதைக் கொள்கையாக உள்ளவர்.

எப்போதாவது மனைவிக்குத் தெரியாமல் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, எசகு பிசகாக உளறி, மாட்டிக்கொண்டு முழிக்கும்போது ‘பொங்கித் திங்கறவனுக்கு பொண்டாட்டி தேவை இல்லை. ஓட்டலில் திங்கறவனுக்கு குடும்பம் தேவை இல்லேன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க? உங்களுக்கெல்லாம் எதுக்கு ஒரு குடும்பமோ ?’ என்று அவர் மனைவி திட்டுவார். அப்போது, ‘இனி ஜென்மத்துக்கும் ரெஸ்டாரெண்ட் வாசலில் கால் வைக்கக்கூடாதென்று தான் நினைப்பார் ரா.ரா. முனியாண்டி. இப்ப ராகவன் எதிர்ப்பட்ட மாதிரி, யாராவது குறுக்கே வந்து, அவரது தவத்தைக் கலைப்பதுண்டு.

பஸ் எடுக்க தேக்கா மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் நின்றவரிடம்

“என்ன முனிஸ், நல்லா இருக்கியா? பார்த்து எவ்ளோ நாள் ஆகுது!”

“அட, ராகவன்.. பாத்து எவ்ளோ நாளாகுது! நாலு மாசத்துக்கு முன்னாடி ஒருநாள் முனீஸ்வரர் கோயிலில் சந்திச்சது!”

“ஆமா, இன்னிக்கு ஒரு வேலையா தேக்கா வரப்போய்த்தான் உன்னைப் பார்க்க முடிஞ்சது. இல்லேன்னா, ஏதாவது கோவில் உபன்யாசத்தில்தான் உன்னைப் பார்க்க முடியும். வாயேன் லைட்டா சாப்பிட்டுட்டு அப்படியே பேசிட்டுப் போவோமே!”

“இந்தப் பக்கம் நல்ல ரெஸ்டாரெண்னா, ரேஸ் கோர்ஸ் ரோட்டுக்கோ, இல்லே, அப்படியே எதிர்ப் க்கமோ போகணும்! நான் வேற சீக்கிரம் வீட்டுக்கு போகணும்!” உள்ளுக்குள் ஆசையிருந்தும் பஸ் கார்ட் மட்டுமே பர்சில் இருந்ததால் ராரா லேசாக இழுத்தார்.

“தேக்கா மார்க்கெட் கடை ஒன்றில் இரண்டு பேரும் சாப்பிடுவோம். நீ இப்படியே பஸ் எடுத்து போயிடலாம்” என்றபடி கையை பிடித்து இழுத்த ராகவனை பின் தொடர்ந்து தேக்கா மார்க்கெட் உள்ளே நுழைந்தார் ராரா.

“என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு! இந்தக் கூட்டத்தில் உள்ளே போறதைவிட, சுலபமா இந்த முதல் கடையிலேயே சாப்பிட்டுடலாம்.” என்று சுட்டிக் காட்டியது ‘நேஹா டிபன் சென்டர்’ என்ற போர்டுடன், ஒரு பெரிய தள்ளு வண்டியை நிறுத்திய மாதிரி. சின்னதான ஒரு கடை.

“என்ன சார் வேணும் ?” உள்ளே இருந்தவர் கேட்க.

“ஆளுக்கு இரண்டு தோசை, ஒரு வடை!” என்று ராகவன் சொல்ல, வழக்கம்போல ராராவின் கண்கள் விலைப்பட்டியலைத் தேடியது. இரண்டு தோசை இரண்டு வெள்ளி, வடை ஐம்பது சென்ட் என்பதைப் படித்ததும் ‘அட, பரவாயில்லையே!’ என்று எண்ணியவாறு தோசை ஊற்றுபவரைப் பார்த்தார் ராரா.

ஒரு ஆள் மட்டும் உள்ளே நிற்கக்கூடிய சின்னத் தடுப்பில், ஒரு பக்கம் எண்ணெய் சட்டியும் பக்கத்திலேயே தோசைக் கல்லும் இருந்தது. தோசையை ஊற்றிய மாஸ்டர், அதனை எடுத்து ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளேட்டில் வைத்து, இரண்டு சட்னி, ஒரு சாம்பாருடன் வடையை வைத்துக் கொடுத்தார்.

“ராகவா உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ… இந்தக் கடையில் சென்டர்ல ஒரு ஆள் மட்டும் நிக்கிற இடத்தில் கிச்சன் இருக்கு. ஆனால் பல பெரிய ஹோட்டல்கள் இணைந்து ஒரே இடத்தில் சமைக்கிற பெரிய சென்ட்ரல் கிச்சன்னு ஒண்ணு நம்ம துவாசில் இருக்கு!” என்றார் ராரா.

“ஒரே இடத்தில் சமைச்சு, வேறு வேறு இடத்துக்கு போகுதா?”

“ஆமா, இதனால் ஆட்கள் செலவு மிச்சமாகுதாம்!”

“இங்கே தோசை மாஸ்டரே…தோசை ஊற்றி, பரிமாறி, காசும் வாங்கி போட்டுக்கிறார். மூணு ஆள் வேலையை ஒருத்தரே செய்றாரே!” என்று மாதவன் வியக்க,
‘இந்தக் கடை ஓனர் கொடுத்து வச்சவர்’ என்றெண்ணிய ராரா, “எத்தனை மணிக்கு கடையைத் திறந்து, எத்தனை மணிக்கு அடைப்பீங்க?” என்று தோசை மாஸ்டரிடம் பேச்சுக் கொடுத்தார்.

“காலையில் ஆறு மணிக்குத் திறந்து, இரவு பத்தரை மணிக்கு மூடுவோம்!”

“கடை ஓனர் எப்போ கடைக்கு வருவார்?”

அந்தக் கேள்விக்கு சிரித்தபடியே தோசை மாஸ்டர் “நான்தான்ங்க கடைக்கு ஓனரும்” என்றார்.

சற்று வியப்படைந்த ராரா, “அடடே, ஒரே ஆள் மொத்தக் கடையையும் பார்த்துக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்.

“இல்லீங்க, என்னோட மனைவியும் துணைக்கு இருப்பார். இப்ப அவர் வீட்டுக்குப் போயிருக்கார். இதைத் தவிர, வேலைக்கு ஒரு ஆளும் வச்சிருக்கோம்” என்றபடி, வடைகளை கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போட்டு கரண்டியால் எடுத்து, எண்ணெய் வடிந்த பின் கண்ணாடி ராக்கையில் டிஸ்ப்ளேயாக அடுக்கினார் தோசை மாஸ்டர் கம் ஓனர்.

“உங்க கடையோட சிறப்பு என்னங்க ?” என்று ஏதோ எதிரொலிக்குப் பேட்டி எடுப்பவர் மாதிரி கேட்டார் ராரா.

“என்னோட கடை மட்டுமல்ல, இதுமாதிரி சின்ன கடைகளோட சிறப்பே, ப்ரெஷ்தாங்க! மீந்து போனதை வைக்க ப்ரிஜ்ஜோ, ஆறிப்போனதை சூடு காட்ட மைக்ரோ ஓவனோ வச்சுக்கிறதில்லை. கடையில் இடம் ரொம்ப சின்னதா இருக்கதால், மளிகைப் பொருட்கள் முதல் காய்கறிகள்வரை எல்லாம் தினமும் ஒருநாளைக்கு என்ன தேவையோ அதை மட்டும் வாங்கிப்போம்!”

“தேக்கா முழுதும் சின்னதும் பெருசுமா ஏகப்பட்ட ரெஸ்டாரெண்கள் இருக்கு. உங்களை மாதிரி சின்ன கடைகளுக்கு வியாபாரம் தாக்குப் பிடிக்குமா?” என்று வினவினார் ராரா .

“வியாபாரம் எல்லாம் நல்லா இருக்குங்க. எங்க கடைக்கு ரெகுலர் கஸ்டமர் நிறையப் பேர் இருக்காங்க. தவிர, உங்களை மாதிரி புதுசா வர்றவங்க பலரும் டேஸ்ட் பிடிச்சு, அடிக்கடி வந்து ரெகுலர் கஸ்டமரா மாறிடறதும் உண்டு. சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறைன்னா உங்ககிட்டே இப்படிப் பேசக்கூட நேரமிருக்காது!” என்றவரிடம், ‘நேரம் போனதே தெரியலையே, வீட்டுக்கு லேட்டாகப் போனால் மனைவியிடம் திட்டு வாங்க நேரிடுமே’ என்று உணர்ந்தவராக

“ஆகா.. ரொம்ப சந்தோஷம்.உங்க பேர் என்ன என்பதை கேட்க மறந்திட்டேனே!” என்றார் ராரா .

“என்னோட பேர் ‘கருப்பையா’ங்க!” என்றார் கடைக்காரர்.

“பேருதான் கருப்பையா. மனசு ரொம்ப வெளுப்பையா!” என்று டி.ராஜேந்தர் மாதிரி எண்ணிய ராரா, “ஒரு வெள்ளிக்கு பக்கோடா மடிச்சு கொடுங்க!” என்று கேட்டு, அதை “இரண்டு பொட்டலமாக கொடுங்க!”என்று கேட்டு வாங்கினார் ராரா. அவர் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் அதற்கும் சேர்த்து காசு கொடுத்த ராகவனுடன் அப்படியே பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அகத்திய முனி, பழமைவிரும்பி. இருந்தாலும், ஒரு புலம்பலோடு இந்தக் காலத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமிக்கவர். வாரம் ஓரிரண்டு முறையாவது தேக்காவை ரவுண்டு கட்டாவிட்டால் அவருக்கு நிம்மதியான தூக்கம் வராது …

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here