சிராங்கூன் சாலையில் வேடிக்கை பார்த்தவாறு நடந்து கொண்டிருந்த ரா.ரா.முனியாண்டிக்கு அப்போதுதான் திடீரென அந்த விஷயம் நினைவுக்கு வந்தது. தேக்கா புறப்படும்போது அவர் மனைவி, “வரும்போது மறக்காமல் 2018 குருப்பெயர்ச்சி பலன் புத்தகம் வாங்கிட்டு வாங்க!” என்று சொல்லியிருந்தார்.

சும்மா சொல்லி இருந்தால்கூட பரவாயில்லை. நக்கீரன் பதிப்பகத்தில் போட்ட குருப்பெயர்ச்சி புத்தகம்தான் வேண்டும் என்று சொல்லி இருந்தார். நக்கீரன், அரசியல் செய்திகளுக்குத்தான் பிரபலம் என்று நினைத்திருந்தவருக்கு, அவர்கள் ஜோசியப் புத்தகம் போடுவதெல்லாம் குரு வரப் போய்தான் தெரியுது.

‘வீட்டு பெண்மணிகளுக்கு மட்டும் இந்த மாதிரி விஷயமெல்லாம் எப்படித்தான் முன்னாடியே தெரியுதோ!’ என்று வியந்தபடி, ‘இங்கேதானே எங்கேயோ ஒரு புத்தகக் கடை இருந்தது’ என்று தேடியபடி நடந்தார். பார்க்கும் கடையெல்லாம், போன்கார்டு கடைகளாகவும் நகைக் கடைகளாகவும் தெரிந்தது. ‘வாசலிலேயே வாரப் பத்திரிக்கைகளைப் போட்டு விற்பார்களே ஒரு கடையில்’ என்று எண்ணியபடி, நின்று நிதானமாக பார்த்துக்கொண்டு வந்தார். சூன்ஹாட் ஜூவல்லரிக்கு முன்னதாக, ஒரு கடை வாசலில் ஓரமாக புத்தகங்கள், முறுக்கு, தள்ளுவண்டி அருகில் தென்பட, பார்த்தவர் பரவசமானார்.

‘அட, நம்ம சுப்பிரமணியம் கடையாச்சே…’ என்று கடையை எட்டிப் பார்த்தார். கடையில் இருந்த முதலாளி பையன்களில் ஒருவர், “வாங்க சார்… என்ன வேணும், மளிகை சாமானா?” என்றபடி வரவேற்றார்.

“இல்லீங்க ஒரு புத்தகம் வேணும். என் மனைவி வாங்கி வரச் சொன்னாங்க.” என்றபோது, “என்னது? சமையல் புத்தகமா?” என்று கேட்க, ” இல்லீங்க, குருப்பெயர்ச்சி புத்தகம்” என்று சொன்னார் ரா.ரா.முனியாண்டி.

“குருப்பெயர்ச்சிதானே… இருக்குதுங்க!” என்று சொல்லி, இரண்டு மலேசிய ஜோதிடர்களின் புத்தகங்களையும் ஒரு சிவகாசி குருப்பெயர்ச்சி புத்தகத்தையும் காட்ட, “நக்கீரன்ல போட்ட புத்தகமாம்” என்று சொன்ன ரா.ராவை ஒரு மாதிரி பார்த்தவர், “நம்மகிட்டே இந்த வார நக்கீரன்தான் இருக்கு… குருப்பெயர்ச்சி இல்லை” என்றார்.

“முன்னாடியெல்லாம் கடைவாசல் முழுக்க பத்திரிக்கைகளா பரப்பி வச்சிருப்பீங்க. இப்ப என்ன முறுக்கு வண்டியா நிக்குது? நான்கூட உங்க கடையைத் தேடிக் கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். சட்டென்று பார்வையில் படலை” என்றார் ராரா.

“முன்ன மாதிரி இப்பவெல்லாம் புத்தகம் விக்கிறதில்லீங்க. ஞாயிற்றுக்கிழமை தேக்கா வாரவங்க வாங்கிற அரசியல் பத்திரிக்கைகளுடன் சரி. நாங்களே புத்தக விற்பனையை நிறுத்திடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கோம். அதனாலதான் புத்தகம் இருந்த இடம் முழுக்க, முறுக்கு வண்டியா நிறுத்தி வச்சுட்டோம். எல்லோரும் இப்ப ஆன்லைனில் படிச்சுடறாங்க போலிருக்கு” என்றார் கடைக்காரர்.

“அதெல்லாம் இல்லை. இப்ப படிக்கின்ற பழக்கமே குறைஞ்சுட்டு வருது. ஏதாச்சும் ஒரு விஷயம் சொன்னால், முன்னாடி எல்லாம், இது பற்றி புத்தகம் வந்திருக்கான்னு கேட்பாங்க. இப்ப என்னடான்னா யூட்யூபில் இருக்கான்னு கேட்கிறார்கள். படிக்கிறதுக்கு அவ்வளவு சோம்பேறிகள் ஆயிட்டாங்க” என்று படபடத்தார் ரா.ரா.

“குருப்பெயர்ச்சி பலனைக்கூட இப்போ ஜோசியர்கள் யூட்யூபில் சொல்றாங்களே!” என்றார் கடைக்காரர்.

“சொல்றாங்கதான். ஆனா புத்தகத்தில் படிக்கிற மாதிரி ஆகுமா சார்? ஒரு பரிகாரம் செய்ய வேண்டுமென்றால், புத்தகத்தை கையில் வச்சிகிட்டு கரெக்ட்டா அதே மாதிரி செய்திடலாம். யூடியூப்பில் கேட்டு செய்யப்போய், ஏதாச்சும் ஒண்ணு கிடக்க ஒண்ணு, தப்பாக பண்ணிட்டால் என்ன ஆகும்? என்று பதறிய ரா.ராவிடம், “சமீபத்தில் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில், வெறும் சமையல் குறிப்பு புத்தகங்களும் ஜோதிட புத்தகங்களும்தான் நிறைய விக்குது இலக்கிய புத்தகங்களுக்கு ஸ்டாலே இல்லைன்னு ஒரு பெரிய எழுத்தாளர் பேசி இருந்தாரே பார்த்தீங்களா?” என்று கேட்டார் கடைக்காரர்.

“எந்த புத்தகத்தில் வந்திருந்தது? நான் படிக்கலையே!” என்றார் ராரா.

“யூடியூப்பில்தான் வந்திருந்தது. பேஸ்புக்கில் பார்த்தேன்!” என்ற கடைக்காரரிடம், “புத்தகக்கடை வச்சிருக்கும் நீங்களே பெரிய எழுத்தாளர்களின் பேட்டியை யூடியூப்பில்தான் பார்க்கிறேன் என்றால், புத்தகங்கள் எங்கே விக்கும்? என்ற ரா.ரா, “ஒரு வாரம் சமைக்கிற மசலாதூள் பிராண்ட் மாற்றி வாங்கிப்போனால்கூட என் மனைவிகிட்ட திட்டு வாங்கி கட்டுபடி ஆகாது. இது ஒரு வருடம் பயன்படுத்தற ரெபரென்ஸ் புத்தகம். அவள் சொன்னதை வாங்கலேன்னா, எனக்கு சனிப்பெயர்ச்சிதான்” என்றார்.

“இருக்கிறது இந்த மூணு புத்தகம்தான்… உங்க மனைவியிடம் மறுபடியும் கேட்டுட்டு நீங்க வாங்க வரும்போது, இந்தப் புத்தகம் கண்டிப்பாக ஸ்டாக் இருக்காது. குருப்பலன் எல்லாம் ஒரு மாசம் முன்னாடியே காட்ட ஆரம்பிச்சுடும். அது மாதிரி, ராசி பலன் புத்தகங்களையும் முன்னாடியே வாங்கிடணும்” என்று கடைக்காரர் சொன்னது ரா.ராவுக்கு சரியாகவே பட்டது .

“அப்ப ஒரு மலேசிய ஜோதிடர் எழுதின புத்தகமும், ஒரு தமிழ்நாட்டு ஜோதிடர் எழுதின புத்தகமும் கொடுங்க” என்று சந்தோஷமாக பத்து வெள்ளி நோட்டை கொடுத்து விட்டு, “மூன்று வெள்ளி பாக்கிக்கு, முறுக்கு கொடுத்திடுங்க!” என்று கேட்டு வாங்கிக்கொண்டு நடையைக்கட்டினார் ரா.ரா.

அவர் பக்கத்துக் கடையைத் தாண்டும் முன்னர், “தம்பி, மேஜைக்கு கீழே இருக்கிற குருப்பெயர்ச்சி புத்தகத்தில் இன்னும் இரண்டை எடுத்து டிஸ்ப்ளேல வை!”என்று கடைப்பையனிடம் கடைக்காரர் சொன்னது ரா.ரா. முனியாண்டி காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை .

அகத்திய முனி, பழமைவிரும்பி. இருந்தாலும், ஒரு புலம்பலோடு இந்தக் காலத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமிக்கவர். வாரம் ஓரிரண்டு முறையாவது தேக்காவை ரவுண்டு கட்டாவிட்டால் அவருக்கு நிம்மதியான தூக்கம் வராது …

2 COMMENTS

  1. ஸ்கொயராகப் பாராட்ட வேண்டும் என்றால், இந்த ரவுண்டைப் பாராட்டலாம். சமமான இடைவெளியில் நகைச்சுவை தூவப்பட்டிருக்கும் பாங்கு, இந்த அகத்தியமுனி சமையல் கலைப் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவர் என்பதை உணரத் தருகிறது. சொன்னபடியான குருப்பெயர்ச்சி வாங்கிச்செல்லாவிட்டால் சனிப்பெயர்ச்சிதான் என்னும் இடத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை. தேக்காவின் ஒரு கடைக்கே இந்த முறுக்கென்றால், இன்னும் இருக்கும் ஏராளக்கடைகளையும் அக்குறுமுனி தன் காலால் அளந்து கையால் எழுத வேண்டுமே என்ற ஆர்வம் மேலிடுகிறது.

  2. ஜாதக நம்பிக்கையை நையாண்டி செய்யும் இந்த “ரவுண்ட் அப் ” கடைக்காரர்களின் வியாபார தந்திரத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இலக்கியப்புத்தகங்கள் விற்கவில்லை என்ற ஏக்கம் புத்தகக்கடைக்காரர்களுக்கும் இருக்கிறது என்பது இந்த ரவுண்டப் மூலம் தெரியவருகிறது.மக்கள் ரசனையை அகத்திய முனி கேலி செய்வது நல்ல பகடி. ஸ்ரீலக்ஷ்மி

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here