“கடந்த ஒரு வாரமாக, இணையம் வழியாகவும், தொலைபேசி மற்றும் இதர ஊடகங்கள் வழியாகவும் எனது கணவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கங்கள். இங்கே, இப்பொழுது என் கணவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த அனைவருக்கும் வணக்கங்கள்.” குற்றவாளி கூண்டில் இருக்கும் மாலினி அங்கு வைக்கப்பட்டிருந்த திரையில் தோன்றி பேசிக்கொண்டிருந்தார். மொத்த வழக்குமன்றமும், நீதிபதியும் அந்த காணொளியை மிகுந்த கவனத்துடன் பார்க்க தயாரானார்கள்.

மாலினியின் பேச்சு திரையில் தொடர்ந்தது.

“என்னை பல இடங்களில் என் கணவருடன் பார்த்திருப்பீர்கள் , ஆனால் அவர் மட்டுமே உங்களுடன் பேசி இருப்பார். முதல் முறை அவரின் முன், அவரின் அமைதியில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

வயதாகி விட்டது, நிறைய குடி, நோய் வாய்ப்பட்டு இறந்தார், என என் கணவரின் இறப்பு பல வகைகளில் ஊடங்களால் சித்தரிக்கப்பட்டு வருகிறது. அவரின் இழப்பு, அவர் வாழ்ந்து வந்த வலி மிகுந்த வாழ்க்கையின் முடிவு, அதனை ஆராயாமல் இருப்பதே அவரின் ஆன்மாவிற்கு செய்யும் நன்றி என்று கருதுகிறேன். என்னிடம் பலமுறை அவர் வருத்தத்துடன் கூறி இருக்கிறார், எழுத்தாளனாக இந்த சமுதாயமும், ஊடகங்களும், தன்னை சிற்றின்பம் தரும் போதை பொருளாகவும், சிரங்கு சொரியும் கருவியாகவும் தான் பயன்படுத்தி வருகிறதென்று.

நான் இங்கே அவற்றையெல்லாம், அவரின் ஆன்மாவாக பேச விரும்பவில்லை. உங்களை பொறுத்தவரை ஒரு படைப்பாளியின் இறப்பாக இதை சில இரங்கல்களுடன் கடந்து விட முடியும். ஆனால், நான் அவரின் வெற்றிடத்தில் எங்கள் இல்லற நினைவுகளோடு வாழ்ந்து கடக்க விரும்புகிறேன்.

அவருக்கு, நாசி லெமாக் மிகவும் பிடித்த உணவு, இப்பொழுது கூட எரி கிடங்கிற்கு அவருக்கு பிடித்த கடையின் வழியாக தான் அவரை கொண்டு வந்தோம். அந்த கடையை தவிர வேறு எங்காவது வாங்கி வந்தால், வாசனையிலேயே கண்டு பிடித்து விசிறியடித்து விடுவார்.

ஆம், அவர் பிடிவாதக்காரர், பிடித்தவைக் கிடைப்பதற்காக விடாமல் போராடுவார், அப்படி தான் என் அக்காவை பெண் பார்க்க வந்து, என்னை பிடித்து போய், அடம் பிடித்து திருமணம் செய்து கொண்டார். பெரிய எழுத்தாளர் என்பதால், என் அக்காவிற்கும் அவருக்கும் பெரிய அளவு வயது வித்தியாசம் இருந்தாலும், என் பெற்றோர் ஒத்துக்கொண்டனர். என்னை அனுப்ப அவர்களுக்கு மனமில்லை என்றாலும், அவரின் வற்புறுத்தலில் திருமணம் முடித்தனர். எங்களின் வாழ்க்கை, சில சமயம் அழகாகவும், சில சமயம் ஆரவாரமாகவும் சுவாரசியமாக சென்றது. இங்கே, இப்போது ஜோடியாக வந்துள்ள அனைத்து நண்பர்களது திருமணத்திற்கும் நாங்கள் சென்று ஆசிர்வதித்துள்ளோம்.

எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், தைரியமாக எதிர் கொள்வார். பொதுவாக எங்களை பற்றி எழும் குழந்தையின்மை விமர்சனத்திற்கும் அவரே முன்னின்று, கரையும் காகங்களை விரட்டியடிப்பார். ம்ம்ம்.. இனி நான் தனி மரம், கல் எரியப்படலாம், காயங்கள் காணலாம்.

அவரின் எழுத்திற்கு நான் தான் முதல் வாசகி, தொடக்கக் கல்வி மட்டுமே படித்த நான், அவரின் எழுத்துக்களை படிப்பதற்காகவே திருமணத்திற்கு பின் படிக்கும் திறனை வளர்த்துக் கொண்டேன். ஆனால் அது அவருக்கு தெரியாது. அவரின் முதல் வாசகி நான் என்பதும் அவருக்கு தெரியாது, ஆம் அவருக்கு தெரியாமல் தான் படித்து வந்தேன், அவருடைய எழுத்து என்னை எழுதும் அளவிற்கு வளர்த்து விட்டது.

ஒரு நாள், நான் எழுதியவைகளை பார்த்து விட்டு, மிகவும் பாராட்டி விட்டு இனி எழுதாதே, நீயும் எழுத ஆரம்பித்தால் என்னை யார் பார்த்து கொள்வார் என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டார். ஆனாலும், அவருக்கு தெரியாமல்”தேனீ’ என்ற பெயரில் எழுதி வந்தேன், ஆம் அந்த’தேனீ’ நான் தான். என்னுடைய கதைகளை என்னிடமே சிலாகித்து சொல்வார், பல முறை மின்னஞ்சலில் என்னுடன் தொடர்பு கொண்டுள்ளார். அவர் என்னை புகழ்ந்து, பெருமையாக பேசுவதை பார்க்கும் பொழுது வேடிக்கையாக இருக்கும். அவர் நல்ல ரசனையாளர், எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரை சார்ந்த கலைப்பொருட்களை வாங்கி வந்து வீட்டில் அழகு படுத்துவார். குறிப்பாக பெண் தெய்வ சிலைகள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும், எனக்கு பிறகு இதையெல்லாம் விற்று விடாதே, அரசிடம் ஒப்படைத்துவிடு என்று கூறுவார். எனவே, இனி அவரது படைப்புகளும், கலை பொருட்களும் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறிக் கொள்கிறேன். இறுதியாக, அவர் ரசித்த’தேனீ’ யாக, அவரிடம் ஒன்றே ஒன்று சொல்லி கொள்கிறேன்,”ஐ லவ் யு மிஸ்டர் ரைட்டர்” திரையில் காணொளி முடிந்து, கறுப்புத் திரை தோன்றியது.

“தேங்க் யு, மிஸ்டர் மாறன். யுவர் ஆனர், இந்த வீடியோ மாலினி அவரோட கணவரோட இரங்கல் கூட்டத்துல பேசுனது, இத அரசு வழக்கறிஞர் உங்க கவனத்துக்கு கொண்டு வந்தது ரொம்ப நல்லதா போச்சு. இதுல இருந்து அவங்க கணவர் மேல எவ்ளோ பாசம், மரியாதை வச்சுருந்தாங்கனு இப்ப உங்களுக்கு புரிஞ்சுருக்கும். எழுத்தாளர் நரேன், தற்கொலை தான் பண்ணி இருக்கார்னு மருத்துவ அறிக்கையும் சொல்லுது. எனவே, ஏற்கனவே கணவனை இழந்த துக்கத்துல இருக்கும் மேடம் மாலினியை, மேலும் காய படுத்தாம, அவர் மேல கொடுக்கபட்டிருக்கும் புகார்ல இருந்து அவர விடுவிக்கனும்னு கேட்டு கொள்கிறேன்.” என்று கூறி முடித்தார் மாலினியின் வழக்கறிஞர் சந்திரன்.

“நீங்க சொன்னது சரி தான் சந்திரன், எழுத்தாளர் நரேன் தற்கொலை தான் செஞ்சுருக்கார் அதுல எந்த மாற்றமும் இல்லை” என்று ஆரம்பித்தார் அரசு வழக்கறிஞர் மாறன்.

“யுவர் ஆனர், நீங்க பார்த்த இந்த வீடியோ நண்பர் சந்திரன் சொன்ன மாதிரி எழுத்தாளர் நரேனோட இரங்கல் கூட்டத்துல எடுத்தது தான். ஆனா, அவரோட வீட்டை சோதனை செஞ்சப்ப அவரோட கணினில எங்களுக்கு சில முக்கிய தகவல்கள் கெடச்சது, அதுல ஒண்ணு வீடியோல மாலினி பேசுன பேச்சோட ஸ்கிரிப்ட் காபி” என்று தனது வாதத்தை தொடர்ந்தார் மாறன்.

“யுவர் ஆனர், எழுத்தாளர் இறந்தது பிப்ரவரி 10, எங்களுக்கு கிடைத்த ஸ்கிரிப்ட் பைல், பிப்ரவரி 2 தேதி உருவாக்கப் பட்டிருக்கறதா, டெக்னிக்கல் டீம் ரிப்போர்ட் கொடுத்துருக்காங்க. தன் கணவரோட மரணத்துக்கு முன்னரே மேடம் மாலினி இதை தயாரித்திருக்க இருக்க வேண்டிய அவசியம் என்ன ? அப்ப அவர் தற்கொலை பண்ணிக்க போறாருன்னு முன்னரே அவருக்கு தெரியுமா, இல்ல இது திட்டமிட்ட கொலையா ? இதுக்கு மேடம் மாலினி தான் பதில் சொல்லணும் யுவர் ஆனர்”

மொத்த வழக்குமன்றமும், மாறனின் வாதத்தில் வைக்கப்பட தடயங்களை கேட்டு ஒரு நொடி அதிர்ந்திருந்தது. முகத்தில் ஆரவாரத்துடன் வழக்கறிஞர் சந்திரன் மாலினியை பார்க்க, அவர் தலை குனிந்தவாறே சாட்சி கூண்டில் நின்றிருந்தார்.”மாலினி, இதுக்கு உங்க கிட்ட பதில் இருக்கா, இல்ல மேல் விசாரணைக்கு நான் உத்தரவிட வேண்டியிருக்கும், நீங்க கடுமையான நிகழ்வுகளை சந்திக்க வேண்டி இருக்கும்” என்று கூறினார் நீதிபதி.

“அதற்கு அவசியமிருக்காது யுவர் ஆனர், இன்னொரு முக்கியமான தகவலையும் இப்ப நான் சொல்ல போறேன், வீடியோல சொன்ன மாதிரி’தேனீ’ இவங்க இல்ல” என அரசு வழக்கறிஞர் மாறன் சொல்ல, அனைவரும் ஆச்சர்யத்தில் வியந்தனர்.

“என்ன புதுசு புதுசா கதை சொல்றீங்க மிஸ்டர் மாறன், ஆதாரமில்லாம எதுவும் பேச கூடாது” என்று குரலை உயர்த்தினார் சந்திரன்

“அதற்கான போதியளவு ஆதாரம் என்கிட்ட இல்லை, ஆனால் இவங்க தேனீ இல்லைங்கறது மட்டும் உண்மை யுவர் ஆனர்” என்று மாறன் கூற, சந்திரன் எழுந்து “ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்” என்று பேச தொடங்க, தலை குனிந்திருந்த மாலினி பேச ஆரம்பித்தார்.

“ஆமா, நான் தேனீ இல்ல, என் கணவர்தான் அந்த எழுத்துக்களுக்கும் சொந்தக்காரர்” என்று கூற, அனைவரும் ஆச்சரியத்தில் மாலினி அடுத்து என்ன சொல்ல போகிறார் என்று வியந்து கவனித்தனர்.

“என் கணவர் அவருடைய எழுத்துக்களுக்கு மதிப்பு குறைந்து வருதுன்னு ரொம்ப ஆதங்க பட்டார். அவர் பாணியில் இருந்து மாற்றி எழுதினாலும், நரேன் ங்கிற பிராண்டிங் மக்கள் மனதில பதிஞ்சதால, அவரோட எழுத்துக்களுக்கு வரவேற்பில்லனு வருத்தப்பட்டார். அதனால தான் அவர், தேனீங்கற பேருல எழுத ஆரம்பிச்சார்.

ஒரு சில எழுத்தாளர்களுக்கு எழுதறதுக்கு போதை எப்படி தேவையோ, என் கணவருக்கு பெண் சிலைகள் பார்க்கும் பொழுது ஏற்படற உணர்வு அவருக்கு எழுதறதுக்கு தூண்டுதலா இருந்தது. அவருடைய தேனீ படைப்பு அனைத்துக்கும் பெண் சிலைகள் தான் தூண்டுதலா இருந்தது, அதற்காகவே நெறைய சிலைகள் வாங்க ஆரம்பிச்சார். ஒரு கட்டத்துல அது அவருக்கு சிலைகள் மேல இருந்த ஈர்ப்பு எல்லை மீறிடுச்சு.” என்று தன் பேச்சை தொடர்ந்தார் மாலினி.

“ஒரு நாள் இரவு, பதட்டதோட வீட்டுக்கு வந்தார், என்ன ஆச்சுன்னு கேட்டப்ப, அவருடைய தோள் பையில இருந்து சின்ன சிலையெடுத்து காட்டிட்டு, அழ ஆரம்பிச்சுட்டார். அவரால கட்டுப்படுத்த முடியாம, தன்னோட நண்பர் வீட்டுல இருந்து சிலைய எடுத்துட்டு வந்துட்டதாகவும், இப்ப என்ன பண்றதுன்னு தெரியலனு ரொம்ப பதட்ட பட்டார்.”

“இத முடிவுக்கு கொண்டுவரதுக்கு விடிய விடிய பேசுனோம். மன நல மருத்துவர பார்க்கலாம்னு சொன்னதுக்கு, வேணாம் படைப்பாளி மேலயும் அவனோட படைப்பு மேலயும் எந்த வித அழுக்கும் பதிய கூடாதுன்னு மறுத்துட்டார். அன்னைக்கு இரவே கணினில எதோ எழுதிட்டு இருந்தாரு, அன்னைக்கு தான் பிப்ரவரி 2, அதுக்கப்பறம் ஒரு வாரம் அவர் அந்த சிலைகளோட நேரம் செலவிட்டார். நிறைய எழுதிட்டே இருந்தாரு, என் கூட சகஜமா இருந்தார். பிப்ரவரி 10 தேதி காலைல, அவர நான் உயிரில்லாமதான் பார்த்தேன்.” பேசிக்கொண்டே இருந்த மாலினியின் குரல் தளுதளுத்தது.

“அவர் கைல இருந்தது தான் நான் வீடியோல பேசுன வார்த்தைகள். அவரோட பிரச்சினைக்கு அவரோட மரணம் தான் ஒரே தீர்வுனு, திட்டம் போட்டு தற்கொலை பண்ணிட்டார். இத்தனை நாள் அவரோட நான் வாழ்ந்தது, அவரோட நிழல்ல, அவரோட புத்தகங்களுக்கு மத்தியில ஒரு எலி மாதிரி ஓடிட்டு இருந்தேன், அவரு எனக்கென்னவோ ஒரு பெரிய பொறுப்ப தூக்கி கொடுத்துட்டு போன மாதிரி இருக்கு, அது தான் என்னோட தனி வாழ்க்கை.” என்று சில விசும்பலுக்கு பிறகு, சுதாரித்துக் கொண்டார் மாலினி.

வழக்கறிஞர் மாறன் எழுந்து பேச ஆரம்பிக்கையில், நீதிபதி குறுக்கிட்டு உணவு இடைவெளிக்குப் பிறகு வாதம் தொடரும் என்று அறிவித்தார்.
ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு, நீதிமன்றம் மீண்டும் கூடியது. வழக்கறிஞர் மாறன் தன வாதத்தை தொடர்ந்தார்.

“இது தான் உங்க கணவர் கடைசியா நண்பர் வீட்டுல இருந்து கொண்டு வந்ததா நீங்க சொல்ற சிலையா?” என்று ஒரு சிலையை காட்ட, மாலினி ஆச்சரியத்துடன் “ஆமா” என்று தலையசைத்தார்.

“யுவர் ஆனர், இந்த சிலை திருடப்பட்ட எழுத்தாளர் நரேனின் நண்பர் வீட்டில் இருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்”
திரையில் காட்சிகள் விரிய, அதில் மாலினியும் நரேனும், நண்பரின் வீட்டுக்கு செல்வதும், வீட்டிலிருந்து வெளியே வரும் பொழுது, மாலினி தனது தோள்பையில் அந்த சிலையை ஒளித்து எடுத்து வருவதும் தெரிந்தது.

வழக்கறிஞர் மாறன் மாலினியிடம் ”இதுக்கும் ஏதாவது கதை சொல்ல போறீங்களா மாலினி மேடம்”. என்றார். மொத்த நீதிமன்றமும் சில நொடித்துளிகள் ஸ்தம்பித்தது.

ஆழ்ந்த பெருமூச்சிற்கு பிறகு, “ஆமா கதை தான், எல்லாத்துக்கும் காரணம் கதை தான்.” என்று கூறிவிட்டு தன் பேச்சினை தொடர்ந்தார் மாலினி.

“புத்தகங்களுக்கும், சிலைகளுக்கும் நடுவில என்னோட வாழ்க்கை நகர்ந்துட்டு இருந்தது. அவரோட நிழலாவே இருந்தாதாலோ என்னவோ, எனக்கும் எழுதர பழக்கம் ஆரம்பிச்சது. ஆரம்பத்துல, என்னோட கதைகள படிச்சுட்டு குப்பைனு சொன்னவரு, நாளாக நாளாக பாராட்ட ஆரம்பிச்சாரு.

ஒரு நாள், விவரீதமா ஒரு விளையாட்ட ஆரம்பித்தோம். இரண்டு பேரும் சேர்ந்து ஒரு கதை எழுதலாம், அந்த கதைப்படி வாழலாம்னு முடிவு பண்ணோம். ஆளுக்கு ஒரு அத்தியாயம் எழுதனும், கணவனாக நானும், மனைவியாக அவரும் வாழனும்கிறது தான் விதி.

சிலைகள் அவருக்கு பிடிக்குங்கிறதால, அவரு எழுதிய முதல் அத்தியாயம் தான் நான் செஞ்ச சிலை திருட்டு. அவரு அதை அனிச்சையாக எழுதினாரா, இல்ல ஏதாவது உள்நோக்கத்தோட எழுதுனாரானு எனக்கு தெரியல.

இந்த சமயத்துல தான், இந்த இருட்டான, சுவையில்லாத வாழ்க்கையில இருந்து நான் வெளிய வரனும்னு ஆசை பட்டேன். என்னாலயும் எழுத முடியும்ங்கற திமிரும், அடையாளம் இல்லாமல் இருந்த எழுத்தாளர் ‘தேனீ’ங்கற பிம்பத்த உபயோகிச்சுக்கலாம்னு நம்பிக்கையும் இருந்துச்சு. அதுக்கெல்லாம், இந்த கதைக் களத்த உபயோகிச்சுக்கனும்னு என் மனசு சொல்லுச்சு. அதனால இரண்டாவது அத்தியாத்த சிலை திருடுனவனோட மனைவி தற்கொலை செய்யறதா எழுதுனேன்..

அதை சிரிச்சுக்கிட்டே படிச்ச என் கணவர், இந்த ஒரு அத்தியாயத்த மட்டும், அடுத்த அத்தியாயத்த எழுதிட்டு வாழறதா வேண்டுகோள் விடுத்தார், அவரு எழுதுன மூணாவது அத்தியாயம் தான் அந்த இரங்கல் கூட்டத்துல நான் படிச்சது” என்று கண் கலங்கினாள் மாலினி.

“தட்ஸ் ஆல் யுவர் ஆனர்” என்று மாறன் கூறி விட்டு இருக்கைக்கு வந்தமர்ந்தார்.

சில நொடிகள் சிந்தனைக்கு பின் நீதிபதி,”தற்கொலைக்கு தூண்டியதற்கான எந்த ஒரு குறிப்பிட்ட ஆதாரங்களும் இல்லாததாலும், சிலை திருட்டிற்கான நோக்கம் குற்றம் சாத்தப்பட்ட நபரின் மனநிலை சார்ந்திருப்பதாக இந்த நீதி மன்றம் கருதுவதால், குற்றம் சாத்தப் பட்டவரின் மனநிலையை மருத்துவரின் கவனித்திற்கு கொண்டு சென்று போதுமான சிகிச்சைகள் அளிக்குமாறு காவல் துறைக்கு இந்த நீதி மன்றம் உத்தரவிடுகிறது. மருத்துவரின் அறிக்கைக்கு பிறகு நீதிமன்றத்தை மீண்டும் அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்றார்.

மாலினி நீதிபதியின் மேசை மேல் வைக்கபட்டிருந்த சிலையை பார்த்தவாறே சில வினாடிகள் நின்றிருந்தாள்.

கணினிப் பொறியாளர். குறும்பட நடிகர், இயக்குநர். கதை, கவிதை என்று சிறகு விரிப்பவர்.

16 COMMENTS

 1. கடைசித் திருப்பம் அருமை! மாலினி எப்படி சமாளிக்கப்போகின்றார் என்று நானும் யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த கணவன் மனைவி இடம் மாறும் கதை கூட மாலினியின் instant கற்பனையாகவும் இருக்கலாம். நல்ல கதை

 2. மாலினியின் பேச்சு முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறது. கணவருடனான அவர் வாழ்க்கை பொய்யானதாகவே இருந்ததை இருவருமே உணரவில்லை என்பது சற்று நெருடுகிறது.

  • கருத்துகளுக்கு நன்றி. வயது வித்தியாசம், கணவனின் ஈகோ , முதலியவற்றால் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே ஒன்றி வாழவில்லை என்பதை ஆங்காங்கே குறிப்பிட்டிருக்கிறேன் .

 3. வித்தியாசமான கதை.நீதிமன்ற காட்சிகளை திரைப்படத்தில் பார்ப்பதுபோல ஓர் உணர்வு.ஆரம்பம் இரங்கல் உரை என்பதால் கதை முழுவதையும் Low note-லேயே வாசிக்க வைக்கிறது.மாலினி உண்மையே பேச மாட்டாளா என்ற எண்ணம் வந்தது.

 4. அப்பப்பப்பப்பப்பா… எத்தனை திருப்பங்கள்! சொல்லுக்குள் வாக்கியத்தைச் சுருக்கிவைத்த சூத்ரதாரி என்பதைப் போல, சிறுகதைக்குள் நாவலைச் சுருக்கிவைத்துவிட்டாரே…!

 5. கதை, விறுவிறுப்புடன் வாசகர்களை இழுத்து செல்கிறது.

 6. கதையும் கதாசிரியருமாகச் சற்றுக் குழப்பமாகவே உள்ளது. மாலினியின் பேச்சை நீதிபதி எப்படிப் புரிந்து தீர்ப்பளித்தார் என்று எனக்குப் புரியவில்லை…
  ஆனால் நல்ல விறுவிறுப்புடன் ஒரே மூச்சில் படிக்கும்படி உள்ளது. வாழ்க.
  ஒற்றுப்பிழைகள் நிறைய…
  எழுத்தாளருக்கு என் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  • கருத்துகளுக்கு நன்றி சார் . முடிவில் நீதிபதி தீர்ப்பளிக்கவில்லை , “மருத்துவரின் அறிக்கைக்கு பிறகு நீதிமன்றத்தை மீண்டும் அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்றே முடித்துள்ளேன். ஒற்றுப்பிழைகளை திருத்திக் கொள்கிறேன்.

 7. ஓவியர் ஜீவாவுக்குச் சிறப்பு வாழ்த்து. ஓவியம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஓவியம் நல்ல உயிரோட்டத்துடன் உள்ளது. வாழ்த்துகின்றேன்.

 8. தினமொரு கதை வாசிப்பில் நேற்று படித்தேன். இன்றும் மீள் வாசிப்பு கண்டது.
  இவர் கதைகள் தொழில்நுட்பம் சார்ந்திருக்குமென கூர்ந்து படித்தேன். ஒரு குறுநாவல் அல்லது நாவலாக வடிவு காண வேண்டிய படைப்பு. மிகவும் ரசித்துப் படித்ததால் இந்த ஆதங்கம். இவையெல்லாம் சதா சிந்தித்துக் கொண்டிருந்தாலே சாத்தியம். இவர் எழுத்தும் கருக்களும் வித்தியாசம். இவரிலிருந்து தனித்தன்மையான படைப்புகள் பல தமிழில் வெளிவர வாழ்த்துகிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here