தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் 74வது சந்திப்பு, 10 ஜூன் 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு, தோ பாயோ பொது நூலகத்தில் நடைபெற்றது. அமரர், எழுத்தாளர் பாலகுமாரனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள் வாசகர்கள். ப்ரியா கணேசன் சிறப்பாக வழி நடத்திய இந்த அங்கத்தில், கீழை அ.கதிர்வேல், வித்யா அருண், ஜெகதீஷ், விஜி ஜெகதீஷ், ஜீ.பி, தமிழ்ச்செல்வி, சுபா செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் பாலகுமாரனின் கதை, நாவல், அவருடனான அனுபவங்கள் உள்ளிட்ட பலவற்றையும் மனப்பூர்வமாகப் பேசினார்கள். பாலகுமாரன் வசனம் எழுதிய நாயகன், குணா, முகவரி ஆகிய படங்களின் சில நிமிடக் காட்சிகள் வாசகர்களோடு பகிரப்பட்டன.

பிரபல எழுத்தாளர் ரமேஷ் வைத்யா, ‘வாழ்விலிருந்து கதைகளைக் கண்டடைவது எப்படி?’ என்ற தலைப்பில் இணைய ஒளிவழி வாசகர்களோடு பேசினார். மற்றவர்களுக்குச் சாதாரண சம்பவமாகக்கூடிய ஒரு நிகழ்வு, எப்படி ஒரு எழுத்தாளனுக்குக் கதையாகிவிட முடியும் என்பதை எளிய உதாரணங்களோடு அவர் விளக்கிய விதத்தை வாசகர்கள் ஆழ்ந்து உணர்ந்தார்கள். நிகழ்ச்சி நடந்த அறையை வர்ணிக்கச் சொன்ன இடத்தில், அந்த உரை இருவழித் தொடர்பாக மாறி வாசகர்களையும் தன்னுள் ஓர் அங்கமாக்கிக் கொண்டது. தங்கமீன் கலை இலக்கிய வட்டத் தலைவர் பாலு மணிமாறன், எழுத்தாளர் ரமேஷ் வைத்யாவினுடனான இந்த உரையாடல், அடுத்த மாதமும் தொடரும் என்று குறிப்பிட்டார்.

குறும்பட அங்கத்தை அஷ்வினி செல்வராஜ் நடத்தினார். தற்போது தமிழ்த் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படும் இளம் இயக்குநர் நரேன் கார்த்திகேயனின் குறுப்படம் திரையிடப்பட்டது. அதன் கதை, திரைக்கதை, ஆக்கம் குறித்து டாக்டர் பாலகிருஷ்ணன் ராமநாதன், இந்துமதி, ஜோ என்கிற ஜோசப் உள்ளிட்டப் பலரும் தம் கருத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

‘தொலைதூரம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற ஜூன் மாதப் போட்டிக்கு 11 கதைகளும் 23 கவிதைகளும் வந்திருந்தன. அவற்றைப் பற்றிய விமர்சனங்களைப் பாலு மணிமாறன் வழங்கினார். போட்டிக்குத் தாம் எழுதிய கவிதைகளை ஜோ, கீதா பிரசன்னா, மதியழகன், பிரபாதேவி, இராம.தியாகராஜன், சாம்.சதீஷ்குமார் ஆகியோர் வாசித்தனர். கீதா பிரசன்னா, பிரபாதேவி, சாம். சதீஷ்குமார் ஆகியோர் &20 வெள்ளிப் பரிசைப் பெற்றனர்.

கதைகளுக்கான 10 முக்கியக் கூறுகளுக்குள், போட்டிக்கு வந்த கதைகள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் குறிப்பிட்டு, பாலு மணிமாறன் தன் விமர்சனத்தை முன் வைத்தார். மணிமாலா மதியழகன் எழுதிய ‘புதிய பயணம்’ என்ற கதை $50 வெள்ளி முதல் பரிசையும் இராம. தியாகராஜன் எழுதிய ‘தூரம் அதிகமில்லை’ என்ற கதை $40 வெள்ளி இரண்டாம் பரிசையும் தமிழ்ச்செல்வி எழுதிய ‘அப்ப…லேர்ந்து’ $30 வெள்ளி மூன்றாம் பரிசையும் பெற்றன. பரிசுகளை ACE International நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் ராமநாதன் வழங்கினார். அடுத்த மாதப் போட்டிகளுக்கான கருப்பொருள் – தேடல் என்ற தகவலோடு, தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் 74ம் சந்திப்பு நிறைவடைந்தது.

தகவலும், படங்களும்: தங்கமீன் பதிப்பகம்

தங்கமீன் பதிப்பகம், தங்கமீன் இணைய இதழ், தங்கமீன் கலை இலக்கிய வட்டம் இணைந்த பயணம்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here