‘சிவாஜி ஒரு நடிகர் மட்டுமல்ல. அவர் வரலாற்று நாயகர்களைக் காட்டிய வரலாறு’ என்று மெய் சிலிர்க்கிறார் ‘இளைய சிவாஜியின் புகழ் பேசும் சிவாஜி ரசிகன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வெங்கட்.

வானொலியில் தொடங்கி, தொலைக்காட்சியில் வலம் வந்தவர். பத்திரிகையாளர், பட்டிமன்றப் பேச்சாளர், கவியரங்கக் கவிஞர், நிகழ்ச்சி நெறியாளர் என்றும் சில முகங்கள். தற்போது சிவாஜி பாடல்களுக்கு ஆத்ம திருப்தியோடு அபிநயம் பிடித்து ஆடி வருகிறார் ‘நம்ம’ வெங்கட். இந்தப் பயணம் தமிழகத்திலிருந்து தொடங்கியது.

தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் பிறந்த இவர், இளம் வயதில் தீவிர எம்ஜிஆர் ரசிகர். வீட்டில் அம்மாவிடம் அழுது அடம் பிடித்து, எம்ஜிஆர் படத்துக்குக் கூட்டிப் போகச் சொல்வாராம். கையில் ஒரு சவுக்கை வைத்துக் கொண்டு, பள்ளிக்கூடத்தில் ‘நான் ஆணையிட்டால்..’ என்று பாட, சக மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் பாராட்டு குவியும். அப்படி இருந்த வெங்கட்டை சிவாஜி ரசிகனாய் மாற்றி இருக்கிறார் இவருடைய தந்தை.

வெங்கட், அப்பாவோடு சென்று மனோகரா படம் பார்த்ததும் கட்சி மாறிவிட்டார். ‘புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டு விழியிலே உலகத்தைக் காண்பவரே’ என்று பள்ளியில் ஒவ்வொரு வகுப்பாய் சென்று வசனம் பேச ஆரம்பித்திருக்கிறார். அவருடைய ஆர்வத்தைப் பார்த்த அப்பா, சிவாஜியின் வீர வசனப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதை வைத்து, பள்ளி விழாக்களில் மனோகரா, மராட்டிய சிவாஜி, சாம்ராட் அசோகன், திருப்பூர் குமரன் ஆகிய நாடகங்களை நடிக்க, பாராட்டுகள் குவிந்திருக்கின்றன.

‘மண்ணம்மா.. உம் மகன் சிவாஜி மாதிரியே பேசி நடிக்கிறானே…’ என்று தன் அம்மாவுக்கு கிடைத்த பாராட்டுதான் சிவாஜி ரசிகன் வெங்கட்டிற்கு வாழ்நாளில் மறக்க முடியாத பாராட்டு. பள்ளியிலும் கல்லூரியிலும் பெண்களைக் கவர, சிவாஜியின் காதல் வசனங்களையும் அவ்வப்போது பேசி அசத்திய இவர், 24 முறை பார்த்த படம், வசந்த மாளிகை. நண்பர்கள் அடிக்கடி ‘கெளரவம்’ பட வசனத்தைப் பேசிக் காட்டச் சொல்வி ரசித்திருக்கிறார்கள்.

பாட்டுக் கச்சேரி மேடைகளில் சிவாஜி வசனம் பேசி, அதில் கிடைக்கும் 10, 20 ரூபாய்களை சேர்த்து வைத்து கல்லூரிக்கு கட்டணம் கட்டி படித்திருக்கிறார் வெங்கட். ஒலி 96.8ல் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை’ பாடல் காட்சிக்கு அபிநயித்து நடித்திருக்கிறார். அப்போது, இவரைக் கடுமையாக குறை சொல்லும் வழக்கமுள்ள ஓர் அதிகாரி ஓடிவந்து கட்டிப்பிடித்து, “யோவ் .. அப்படியே சிவாஜி மாதிரியே இருக்குய்யா” என்று பாராட்டியது இவருக்கு இன்றும் மறக்க முடியாத அனுபவம்.

வீட்டில் மனைவியை அலாக்காகத் தூக்கி நடித்துப் பார்க்கும் வழக்கமுள்ள இவர், “காதல் பாடல்களுக்கு பெண்களோடு சேர்ந்து ஆடுவது ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமாத்தான் இருந்தது… என் மனைவி கொடுத்த ஊக்கத்தினால் அந்தக் கஷ்டம் காணாமப் போச்சி” என்கிறார் கண்சிமிட்டியபடி. அதை இவருடைய இளைய மகள் படம் எடுத்து போட, வீடே கலகலக்கும். வீட்டில் முழு ஆதரவு இருப்பதால் இவர் இயற்கையாக நடிக்க முடிகிறது என்கிறார்.

“அருள்மொழி, வனிதா, பிரேமா, சாந்தி என்று பலருடன் பாடலுக்கு ஆடி நடித்திருக்கிறேன். எல்லோருடனும் நடிக்கவே எனக்கு விருப்பம். சிங்கப்பூர் சரோஜாதேவிதான் உங்களுக்குப் பொருத்தமான ஜோடி என்று பலரும் சொல்கிறார்கள். அவர் பிடிக்கும் அபிநயம் சினிமா பார்ப்பதுபோல் இருக்கும். எந்தவித பேதமும் இல்லாமல், எல்லோருடனும் காட்சியில் ஒன்றி நடிப்பது அவருடைய சிறப்பு அம்சம்” என்று சிங்கப்பூர் சரோஜாதேவியை சக கலைஞராகப் பாராட்டுகிறார்.

“சிவாஜி என்றால் பெருத்த உருவம். நடக்க முடியாமல் நடந்தபடி, என்னம்மா… என்று இழுத்து பேசுபவர் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர் ஆரம்பத்தில் ஒல்லியாய் இருந்து, பிறகு கொஞ்சம் குண்டாகி, அதன் பிறகு கண கச்சிதமான ஒரு தோற்றத்துக்கு வந்து, அதன் பிறகு முதல் மரியாதை போன்ற படங்களில் பெரிய சைஸ் ஆகிப் போனார். கடைசி காலத்தில் மத்திமத் தோற்றத்துக்கு வந்தார். இப்படி சிவாஜியின் உருவத்தில் பல பரிணாமங்கள். தங்கச் சுரங்கம், என் தம்பி, வசந்த மாளிகை பொன்னூஞ்சல் போன்ற படங்களில் வரும் இளைய சிவாஜியை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பது என் ஆசை. அத்தகைய பாடல்களையே தேர்வு செய்கிறேன். இன்னும் ஒருபடி மேலே போய், மற்ற நடிகர்களின் புகழ்பெற்ற பாடல்களை எடுத்துக்கொண்டு, அதை சிவாஜி பாணியில் நடித்து வருகிறேன். சிவாஜியின் காதல் வசனங்களைப் பேசிக்காட்டும்போது, இடையில் என்னுடைய கவிதை வசனங்களைப் புகுத்தி விடுவேன். ஒரு பாடலை எடுத்துக்கொண்டு, எம்ஜிஆர், சிவாஜி என்று மாறி, மாறி அபிநயம் பிடித்தால் எப்படி இருக்கும் என்றும் யோசித்து வருகிறேன். நொடிக்கு நொடி மாறிவரும் உலகில், புதுமை இருந்தால்தான் மக்களைக் கவரமுடியும். கட்டபொம்மனை கண் முன்னே காட்டியவர். வ.உ.சியோடு நம்மை வாழ வைத்தவர். திருப்பூர் குமரனை திரும்பிப் பார்க்க வைத்தவர். சிவனைக் காண நம்மை கைலாயத்துக்கே அழைத்துச் சென்றவர். அப்பரடிகளை அறிய வைத்தவர். இப்படி சிவாஜியின் சிறப்புகளைச் சொல்ல வார்த்தைகள் போதாது. தமிழுக்கு உச்சரிப்பு இலக்கணத்தை வகுத்தவர். அதன் கம்பீர அழகை ரசிக்கச் செய்தவர் சிவாஜி ” என்று மிக லயித்து சிவாஜியின் சிறப்புகளைச் சொல்கிறார் வெங்கட்.

“சிவாஜி பாடல்களுக்கு அபிநயம் பிடிப்பதை, பணம், புகழ் சம்பாதிக்கும் ஒரு தொழிலாகச் செய்யவில்லை. யாருக்கும் நான் போட்டி இல்லை. யார் மீதும் எனக்கு பொறாமை இல்லை. அழைத்தால் வருவேன். கேட்டால் நடிப்பேன். இதையே நான் கடைப்பிடிப்பேன்” என்று சொல்லும்போது வெங்கட்டின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை இழையோடுகிறது.

தினமும் யோகா செய்வது இவருடைய வழக்கம். எப்படி இந்தப் பழக்கம் ஏற்பட்டது என்று கேட்டபோது, “கதாநாயகன் போன்ற தோற்றம் வேண்டுமென்று இரும்பைத் தூக்கினேன். கர்லாக் கட்டையைச் சுற்றினேன். சன் டிவியில் பார்த்து யோகா கற்றுக் கொண்டேன். இப்போது மற்றவற்றையெல்லாம் நிறுத்தி விட்டேன். கைவசமிருப்பது யோகா மட்டும்தான். நம்மிடம் இருக்கும் ஒரே சொத்து, நம்முடைய உடம்புதான். ‘உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்ற திருமூலர் மந்திரம தான் எனக்கு வேத வாக்கு. ஆரோக்கியத்துக்காக எதையும் தியாகம் செய்யலாம். எதற்காகவும் நம் ஆரோக்கியத்தை தியாகம் செய்யக் கூடாது.” என்ற அக்கறையான பதில் வெங்கட்டிடமிருந்து வருகிறது.

ஒலிக்களஞ்சியத்தில் பணியாற்றிய காலம் இவருக்குப் பொற்காலம். “பொன். மகாலிங்கத்தோடு இணைந்து நிகழ்ச்சிகள் செய்ததை இன்றும் மறக்க முடியவில்லை. ‘இன்று ஒரு தகவல்’, ‘தெரிந்ததில் தெரியாதது’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. நாங்கள் செய்தித்துறைக்கு மாற்றப்பட்டோம். செய்தியில் இரண்டு ஆண்டு வேலைசெய்துவிட்டு, வானொலியிலிருந்து விலகி விட்டேன். தமிழ்முரசில் சேர்ந்து அங்கு சிலகாலம் பணி செய்தேன். வாழ்க்கை நிரந்தரமில்லை என்பதைக் காலம் எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. எந்த வேலையிலும் நிரந்தரமாய் இருக்க அது என்னை அனுமதிக்கவில்லை.” என்று சொல்லும் வெங்கட்டின் குரல் எந்தச் சலனமுமற்று ஒலிக்கிறது.

போட்டி மிகுந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், கலை மீது ஆர்வம் கொண்டு, அதை ஒரு தவம்போல் மேற்கொள்பவர்கள் வெகுசிலரே. அப்படிப்பட்டவர்களால்தான் நம்மிடையே கலையும் மொழியும் உயிர்ப்புடன் இருக்கின்றன. அந்தச் சிலரில் முக்கியமானவராக மிளிர்கிறார் வெங்கட். சிவாஜி என்ற மாபெரும் நடிகரைத் தொடர்ந்து நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும் வெங்கட்டின் முயற்சிகள் தொடர, வாழ்த்துவோம்!

தங்கமீ பதிப்பகம், தங்கமீன் இணைய இதழ், தங்கமீன் கலை இலக்கிய வட்டம் இணைந்த குழுமம்.

1 COMMENT

  1. ஆஹா …அருமையான அறிமுகம்…முதல் முதலாக படிக்கிறேன் இவரைப் பற்றி…அறிமுகப்படுத்திய தங்கமீனுக்கு நன்றி…

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here