சிங்கப்பூரில் உள்ள எல்லாப் பிள்ளைங்களின் மனத்திலும் பள்ளிக்கூடம் என்றால் பசுமையாக நினைவில் நிற்பது பாலர்பள்ளியாகத்தான் இருக்கும். பாலர்பள்ளி வாழ்க்கை இருக்கிறதே, அது ஓர் அற்புதமான வாழ்க்கை. அந்தளவு சந்தோஷம் அங்கே அவர்களுக்கு கிடைக்கும். அதற்குப் பிறகு உள்ள பள்ளி வாழ்க்கை என்ன ஆனது என்று கேட்கலாம். நல்ல கேள்வி!

அடித்தளம் வலுவாயிருக்கும் கட்டடமானது எத்தகையப் பேரிடர் வந்தபோதும், விழாமல் தாக்குப்பிடித்து நிற்கும். கட்டடத்துக்கு அடித்தளம் இன்றியமையாததைப்போல பிள்ளைகளின் வாழ்க்கைக்கு ஆரம்பக் கல்வியானது அத்தியாவசியம் என்பதில் நமது அரசாங்கம் உறுதியாக உள்ளது. மனித வாழ்விற்குப் பிரதானமே கல்வி என்பதில் நமது அரசாங்கம் திடமாக இருப்பதால், இங்கு தேசிய வரவு செலவு தொகையில் சுமார் இருபது விழுக்காடு கல்விக்காகச் செலவிடப்படுகிறது. நம் நாட்டில் கல்வித்துறையில் சிறப்பு திட்டங்களுக்குப் பஞ்சமே இல்லை எனலாம். உதாரணத்திற்கு, மாணவர்கள் PSLEயில் எடுக்கும் மதிப்பெண்ணுக்குப் பதிலாக, விருப்பமான உயர்நிலைப்பள்ளிக்கு, அவர்களின் திறமையை வைத்து Direct School Admission (DSA) எனும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். மிகவும் நன்றாகச் செய்யும் மாணவர்களுக்கு தகுந்த வாய்ப்புகளை வழங்கி மேம்படுத்துகிறது அரசு.

உலகின் தலைசிறந்த கல்விமுறையைக்கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலாவது இடத்தை நம் நாடு பெற்றிருக்கிறது. இது மிகவும் பெருமைக்குரியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பெருமையும் நம் தேசத்தையே சாருகிறது.
நம் நாட்டில் எல்லா இடங்களிலும் தொடக்கப்பள்ளிகள் இருப்பினும், நன்கு பெயரெடுத்த பள்ளிகள் மேலேதான் பெற்றோரது பார்வை இருக்கும். பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள் இருப்பவர்களுக்குத்தான் பள்ளியில் இடம் கிடைக்கும். அதற்காகவே சொந்த வீட்டை விட்டுவிட்டு பள்ளிக்கு அருகிலேயே வீட்டைத் தேடி வருபவர்களும் உண்டு. அப்படியும் அந்தப் பள்ளிகளில் இடம் கிடைத்துவிடுமா? போட்டிகள் அதிகமாக, குலுக்கல் முறையில் வந்து நிற்கும். அந்தப் பிள்ளைக்கு அதிர்ஷ்டமோ, துரதிருஷ்டமோ இடம் கிடைப்பது குலுக்கலில் தீர்மானிக்கப்படும். ஒருவேளை அங்கு இடம் கிடைக்கா தருணத்தில் வேறு பள்ளிகளில் இடம் கிடைப்பதும் சற்று சிரமமாகவே ஆகும். அந்தக் காலக்கெடுவில் அங்கிருந்த பள்ளிகளில் உள்ள இடங்களும் பூர்த்தியாக, கிடைக்கும் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்கும் நிலைக்குப் பெற்றோர் வந்திருப்பர். ஒருவழியாகப் பள்ளிச் சேர்க்கை ஒரு முடிவுக்கு வரும்.

“வெறும் புத்தகம் படிப்பது மட்டும் படிப்பன்று, குழந்தைகளின் உள்ளார்ந்த ஆற்றலை தானாக மலரச் செய்வதே கல்வி” என்றார் சுவாமி விவேகானந்தர். இக்கூற்றுக்கு ஏற்றார் போலவே நம் சிங்கையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. முழுக்க முழுக்க மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலேயே இங்குள்ள பாடத்திட்டங்கள் இருக்கிறது. மற்ற நாடுகளைப்போல பாடத்தை மனனம் செய்து, தேர்வில் வினாக்களுக்குப் பதிலளிக்கும்முறை இங்கு கிடையாது. பாடநூல்கள் என்பவை அடிப்படை மட்டுமே. தேர்வில் வரும் கேள்விகள் அனைத்திற்கும் மாணவர்கள் சுயமாய் யோசித்துதான் விடையளிக்க வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக்கொண்டுதான் அவர்களது வகுப்புகளும் தீர்மானிக்கப்படுகின்றன. எல்லோருக்கும் ஒரே மாதிரி வகுப்பு என்றால் அங்கே மாணவர்களின் திறமைகள் குன்றிவிட வாய்ப்புண்டு. அதேசமயம் படிப்பில் பின்தங்கியிருக்கும் மாணவனை முன்னே கொண்டுவருவதற்கான சாத்தியங்களும் குறைந்துவிடும். இதன் பொருட்டுதான் மதிப்பெண்களை மையமாகக்கொண்டு வகுப்புகள் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு, அதற்குத் தகுந்த மாதிரி பாடங்களும் கற்பிக்கப் படுகின்றன.

தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு மட்டுமே பிள்ளைகளுக்கு நெருக்குதல் இல்லா ஆண்டாகும். அதைத் தாண்டியபின் வரும் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளைகளுக்குச் சவால் மிகுந்ததாகவே இருக்கும். இரண்டாம் வகுப்பில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைக்கொண்டு தரவாரியாக மாணவர்கள் பிரிக்கப்படுவர். அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் என ஆரம்பித்து, மிகக் குறைந்த அளவில் எடுத்தவர்கள் என்று வகுப்புகள் பிரிக்கப்படும். இளவயதின் காரணமாக இதனால் பிள்ளைகளுக்கு ஏதும் மனச்சுமை இல்லாது போனாலும், பெற்றோருக்கு பெரும் கலக்கத்தை அது கொடுக்கக்கூடும். தங்கள் பிள்ளை நல்ல வகுப்பில் இல்லையே என்ற கலக்கம் அவர்களைப் பாடாய்ப்படுத்த, எப்படியாவது பிள்ளையை முன்னே அழைத்து வந்துவிட வேண்டுமென்ற ஆவலில் பிள்ளைகளுக்கு நெருக்குதலை அளிக்கின்றனர். இதன் விளைவாக பலர், புற்றீசல்போல பல்கியிருக்கும் துணைப்பாட நிலையங்களை அணுகுகின்றனர்.

‘பெஸ்ட் கிளாஸ்’ எனும் தாரக மந்திரத்தை பிள்ளைகள் காதில் பெற்றோர் ஓத, படிப்பில் பின்தங்கியிருக்கும் பிள்ளைகளுக்கோ அவ்வார்த்தைகள் உலோகத்தை உருக்கி காதுகளில் ஊற்றினார்போலாகின்றது. பெற்றோர்களில் சிலர் தொடக்கநிலையில் முதல் சில ஆண்டுகள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, திடீரென நினைவு வந்ததுபோல பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் செய்கின்றனர்.

தொடக்கநிலை ஐந்திலேயே அடுத்த ஆண்டுக்கான பரபரப்பு ஆரம்பித்துவிடும். அடுத்த வருடம் PSLE. இந்த வார்த்தை அடிக்கொருதரம் வீடுகளில் கேட்கும். விளையாட்டுத் திடலுக்குச் செல்ல பிள்ளைகளுக்குத் தடையுத்தரவு போடப்படும். வீட்டிற்கு உறவினர், நண்பர்கள் வருகை குறையும். விடுமுறைகளில்கூட வீட்டுக்குள் முடங்கி புத்தகத்துக்குள் பிள்ளைகள் புகுந்து கொண்டிருக்க வேண்டி வரும். பள்ளிகளும் மாணவர்களுக்கு பாடச்சுமையை ஏற்ற, வீடும் நெருக்க நொந்து நூலாகும் பரிதாபத்தில் பிள்ளைகள்.

தொடக்கநிலை ஆறில் அடியெடுத்து வைத்துவிட்டால் போதும். வளர்ப்பு பறவைக்கு முளைக்கும் சிறகுகளை முற்றிலும் பிய்த்து வீசுவதுபோல, பிள்ளைகளின் சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்படும். நூற்றுக்கு மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் சிங்கப்பூரில் சிதறி இருக்க, மிகப் பிரபலமான நான்கைந்து பள்ளிகளின் பெயர்கள் மட்டுமே பெற்றோர் நினைவில் நிற்கும். அந்தப் பள்ளிக்குப் பிள்ளைகள் போக வேண்டும் எனும் ஆவல் காரணமாய் துணைப்பாட வகுப்புகளைப் பெற்றோர் சரண் அடைந்திருப்பர். வசதி உள்ளவர்கள் துணைப்பாட ஆசிரியரை வீட்டுக்கும் வரவைப்பர்.

பிள்ளைகள் தொடக்கநிலை ஆறை முடிப்பதற்காக பெற்றோர் பலர், வேலையிடத்தில் சம்பளமில்லா விடுப்பை எடுத்துக்கொண்டு பிள்ளைகளுக்கு கற்றுத்தரும் முயற்சியில் இறங்குகின்றனர். சில பெற்றோர் அதுவரை தாங்கள் செய்து வந்த வேலையைக்கூட விட்டுவிடுகின்றனர். அதனால் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியும் மறைமுகமாகத் தலைகாட்டுகிறது. இவ்வளவு செய்தும் பிள்ளையால் மதிப்பெண்களைப் பெற முடியவில்லையே எனும் ஆற்றாமையுடன் இருப்பதே பெற்றோரை மனச்சோர்வில் தள்ளிவிடுகிறது.

பொதுவாக பிள்ளைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இயல்பாகவே நன்கு படிக்கும் பிள்ளைகள், நெருக்குதல் அளிக்கையில் படிப்பவர்கள் மற்றும் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாதவர்கள் என வகைப்படுத்தலாம். இயல்பாகவே படிக்கும் பிள்ளைகள் அதிகச் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி இருக்காது. ஆசிரியர் கொடுப்பதை அக்கறையுடன் செய்து முடிப்பவர்கள், வெவ்வேறு பயிற்சிகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கின்றனர். சில பிள்ளைகளுக்குத் திறமை இருப்பினும் மற்றவைகளில், உதாரணமாக நண்பர்களுடனான விளையாட்டிலோ, தொழில்நுட்பச் சாதனங்களில் நுழைந்தோ வெளிவர முடியாது இருப்பர். இதைத் தவிர்க்க அவர்களது கவனம் சிதறவிடாது அவர்கள்மேல் பெற்றோர் கண் வைக்க, விளையாட்டுகள் மேலிருக்கும் ஆர்வத்தை விடுத்து படிப்பில் கவனத்தை திருப்புவர். சில மாணவர்களுக்கு இயல்பாகவே படிப்பென்றாலே பாகற்காயாய் இருக்கும். தங்களுடைய முயற்சியை சிறிதும் போடாமலே ‘ரொம்ப கஷ்டம்’ எனும் வார்த்தைகளைத் தோல்விக்கு காரணமாய் கைப்பிடித்து அழைத்துச் செல்வர்.

பெற்றோர் சிலர், ஆண்டு ஆரம்பித்த உடனே புத்தக விற்பனை நிலையம் சென்று பிள்ளைகளுக்குத் தேவையான துணைநூல்களை வாங்கி பிள்ளைகளின் தலையில் கட்டி விடுகின்றனர். போதாக்குறைக்கு அவ்வப்போது கண்ணில் படும் புத்தகங்களெல்லாம் வீடு வந்து சேர்ந்திருக்கும். இதற்கிடையில் முந்தைய ஆண்டின் சிறந்த பள்ளிகளின் தேர்வுத் தாள்கள் விற்பனைக்கு வந்திருக்கும். பிள்ளைகள் அவற்றைச் செய்யவும் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். பிள்ளைகள் பள்ளி முடிந்து, இணைப்பாட வகுப்பு இருந்தால் அதை முடித்து வருவதற்குள் சோர்ந்து போய்விடுகின்றனர். துணைப்பாட வகுப்புக்குப் போவது, மற்ற கலைகளைக் கற்றுக்கொள்வது என பிள்ளைகள் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இதில் நேரமின்மை காரணமாகப் பிள்ளைகள் பெற்றோர் தரும் அதிகப்படி வேலைகளைச் செய்ய இயலாது போகின்றனர்.

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமாய் அமையவேண்டி பெற்றோர், பிள்ளைகளைப் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பிள்ளைகளுக்கு இயல்பாய் ஆர்வம் இருக்கையில் கலைகளைக் கற்றுக்கொள்வதில் சிரமம் இருக்காது. கட்டாயத்திற்காகச் செய்யும்போது, காலத்தை கடத்துபவர்களும் உண்டு. DSA திட்டத்தின்கீழ் மாணவர்கள் சிறந்த உயர்நிலைப்பள்ளியில் உள்ளே நுழைந்துவிட வேண்டுமென்ற தவிப்பில் பெற்றோர் இயங்குவதால் பிள்ளைகளுக்குப் பெரும் சுமையாகிறது.

PSLEயை ஏதோ பூதம்போல நினைத்து தாங்களும் பயந்து, பிள்ளைகளையும் மிரட்டும் பெற்றோரும் நம்மிடம் உண்டு. எப்போதும் பிள்ளைகள் படித்துக்கொண்டே இருந்தால்தான் மதிப்பெண் எடுக்க முடியுமென நினைக்கும் பெற்றோரும் உண்டு. செய்வது எந்த வேலையாக இருப்பினும் இடைவெளி இல்லாது செய்தால் வேலை செய்யும் அளவானது குறைந்து கொண்டேதான் போகும். பிள்ளைகள் படிக்கும்போது ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு பத்திலிருந்து பதினைந்து நிமிட இடைவெளி அவர்களுக்கு இன்றியமையா தேவையாகும். அப்போது அவர்கள் விருப்பப்பட்டவைகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும். அது தொழில்நுட்ப கருவிகளில் விளையாடும் விளையாட்டாக இருந்தாலும் சரியே.

நம் நாட்டு கல்வி முறையென்பது சுலபமானது கிடையாது எல்லா பாடங்களிலுமே கண்களுக்குப் புலப்படாத சவால் ஒளிந்துகொண்டிருக்கும். அதைக் கண்டுபிடித்து முறியடிப்பவர்கள் மட்டுமே வாகைசூடுகின்றனர். தொடக்கநிலை ஆறு மட்டுமே சிரமம் நிறைந்தது எனும் போக்கை முதலில் விலக்க வேண்டும். ஒன்றாம் வகுப்புகூட சிரமமானதுதான், அந்தப் பிள்ளைகளுக்கு. அந்தந்த வயதிற்கு ஏற்றார்போல பாடத்தின் அளவு உயர்ந்துகொண்டே செல்கிறது. பிள்ளைகள் மட்டும் பாடத்தை கவனமாய் படித்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்பதற்கான வாய்ப்புகள் கிடையாது. என்னதான் பள்ளிகள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்தபோதிலும், வீட்டில் அந்தப் பிள்ளைக்கு தனிப்பட்ட கவனம் இன்றியமையா தேவையாகிறது. தொழில்நுட்பச் சாதனங்கள் மலிந்துவிட்ட இக்காலத்தில் பிள்ளைகளுக்கு இயல்பாகவே இவ்வகைச் சாதனங்களின்மீது ஈர்ப்பு உண்டாகிவிடுகிறது. கொஞ்சநேரம்தான் என்று கையில் எடுப்பவர்கள், அதற்குள் மூழ்கி வெளியில் வரமுடியாத நிலைக்கு உள்ளாகியிருப்பர். இதுமாதிரியான நேரங்களில் பெற்றோரது மேற்பார்வை பிள்ளைகளுக்கு அத்தியாவசியமாகிறது.

துணைப்பாட நிலையங்களுக்குச் செல்வது மட்டுமே மாணவர்களுக்குப் பயனளிக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. பாடங்களில் ஏகப்பட்ட சந்தேகங்கள் கொட்டிக்கிடக்கும். அதை வாரத்தில் இரண்டு நாட்கள் செல்லும் துணைப்பாட வகுப்புகளில் தீர்த்துக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே! தாமாக முன்வந்து ஐயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள பெரும்பாலும் பிள்ளைகள் தயங்குவர். மாணவர்களின் பொன்னான எதிர்காலம் மீது அக்கறைகொண்டு கற்பிக்கும் நிலையங்களும், காசுபண்ணுவதையே குறிக்கோளாகக் கொண்ட துணைப்பாட நிலையங்களும் இங்குண்டு. பின்னதில் மாணவர்கள் சேர்ந்துவிட்டால் அதனால் ஏதும் பயனில்லை. அவர்கள் தேர்வுத்தாளைக் கொடுத்துவிட்டு, செய்தபின் திருத்தி தருவதோடு கடமையை முடித்துக்கொள்வர். அதனால் நல்ல துணைப்பாட நிலையங்களை தேர்வு செய்வதும் பெற்றோருக்குச் சவாலாகவே இங்குள்ளது.

பெற்றோர், பிள்ளைகளின் படிப்பில் தங்களை இணைத்துக்கொண்டால், அவ்வப்போது அவர்களுக்கு ஏற்படும் ஐயங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு பிள்ளைகளுக்கு கல்வியில் நம்பிக்கை ஏற்படும். அதற்கெல்லாம் நேரமில்லையே எனும் பெற்றோரது கண்டனக் குரலும் காதில் விழவே செய்கிறது. இருந்தாலும் வேறு வழியில்லை. பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது தொடக்கப்பள்ளிகளின் முடிவுகளில் ஓர் அங்கமாக இருப்பதால் பெற்றோர் தங்களால் இயன்றளவு பிள்ளைகளுடன் இணைந்து கல்வியெனும் பாதையைக் கடப்பது இங்கு முக்கியமாகிறது. மாறாக பிள்ளைகளது முன்னேற்றம் அவர்கள் கையில் என்று விட்டுவிட்டால் திக்குத் தெரியாத பாதையைக் கடப்பதுபோல அவர்கள் நிலையாகிவிடும். தொடக்கப்பள்ளியெனும் பாதையை, பெற்றோர் ஆரம்பத்தில் கைப்பிடித்து அழைத்து வந்தால் பிள்ளைகளின் வாழ்நாள் பயணம் இனிமையாய் அமையும்.

‘முகமூடிகள்’ என்ற சிறுகதை நூலின் ஆசிரியர். தன் கட்டுரைகளுக்காகப் பரிசுகள் பெற்றவர். உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ‘இனிய தமிழ்க் கட்டுரைகள்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.

1 COMMENT

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here