று வயது மகனைக் கொண்டுள்ள தோழி ஒருவர் , அடுத்த பிள்ளை எப்போ? என கேட்போருக்கு எப்போதும் ,”இவன் ஒருத்தன வளக்குறதுக்கே போதும் போதும்னு இருக்கு. இதுல இன்னொன்னா?” என்று சலிப்பாகக் கூறுவார். இந்த பதில் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. இந்தத் தலைமுறைப் பெற்றோர் பலரின் பதிலும் இதுவாகவே இருக்கிறது. சில காலமாக இவ்வாறு எண்ணுபவர்களின் எண்ணிகையும் பெருகிக் கொண்டே போகிறது. இது குடும்ப நலனுக்கு மட்டுமல்ல சமூக நலனுக்கும் ஆரோக்கியமானதல்ல.

வயதாகி வரும் சமூகத்தால் உலக நாடுகள் பல சந்தித்து வரும் பிரச்சனைகளைப் பற்றி நாம் அறிவோம். டென்மார்க்கின் பயண ஏற்பாட்டு நிறுவனம் ஒன்று சமீபத்தில் செய்த பிரசாரத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம். இவ்வாறு அரசாங்கங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள ஊக்கப்படுத்திக் கொண்டே போனாலும் மக்களிடேயே அந்த ஊக்கம் குறைந்து கொண்டே வருவது வேதனை தரும் விஷயம்.

பொதுவாக ஒரே பிள்ளை போதும் எனப் பெற்றோர் முடிவு செய்யக் கூறும் காரணங்கள்:

1. நிதிப் பற்றாக்குறை
2. நேரமின்மை
3. சகோதரச் சிக்கல்கள்
4. உடல் நலக் குறைவு

நிதிப் பற்றாக்குறை:
பெரும்பாலான பெற்றோர் குடும்பத்தைத் திட்டமிடுகையில் அவர்களின் முடிவைப் பெருமளவு பாதிப்பது இந்த ஒரு காரணமே. சிங்கப்பூரில் ஒரு குழந்தை பிறந்தது முதல் 21 வயதாகும் வரை ஆகும் செலவு சராசரியாக 340,000 டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது (அனைத்து செலவுகளும் உள்ளடக்கியது அல்ல). இது பெற்றோருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தைத் தரக் கூடியதாய் இருக்கிறது.

அவர்களின் பயத்தைப் போக்கி அவர்களுக்கு கைகொடுக்க சிங்கப்பூர் அரசாங்கம்,. 2015 க்குப் பிறகு பிறக்கும் முதல் இரண்டு குழந்தைகளுக்கு 8000 டாலர் உதவிதொகையும் அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு 10000 டாலர் உதவித் தொகையும் அளிக்கிறது. இது தவிர பெற்றோர் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில் மேலும் பல உதவித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிள்ளைகளின் ஓய்வு காலம்வரை அவர்கள் சுகமாய் வாழச் சம்பாதிக்கும் வழக்கம் நம் இந்தியப் பெற்றோருக்கு உண்டு. அதை விடுத்து நம் பிள்ளைகள் தங்கள் சொந்த காலில் நிற்கவும் அவர்களைக் குறைவான வசதிகளைக் கொண்டு நிறைவாய் வாழவும் பழக்க வேண்டும்.

நேரமின்மை:
முன்னர் குறிப்பிட்டிருக்கும் நிதிப் பற்றக் குறையைச் சமாளிக்க பல வீடுகளில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லுகின்றனர். ஆகையால் அவர்கள் குழந்தைகளை காப்பகத்திலோ பணிப்பெண் கைகளிலோ ஒப்படைத்துச் செல்லும் நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர். முதல் குழந்தைக்கே தங்களால் சரியான நேரத்தை ஒதுக்க முடியவில்லை என குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் பலர், அடுத்த குழந்தையைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் அஞ்சுகின்றனர். அதிகரித்து வரும் படிப்புச் சுமையும் ஒரு காரணம். ஆனால் வேலை முடிந்து வீடு திரும்பும் பெற்றோர் தங்கள் தொ(ல்)லைபேசிகளுக்குக் கொஞ்சம் ஒய்வு கொடுத்தாலே இந்தப் பிரச்சனையைப் பெருமளவு சாமாளிக்க முடியும். நாம் அவர்களுக்கு ஒதுக்கும் நேரத்தின் அளவை விட, தரமே முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சகோதரச் சிக்கல்கள்:
ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கையில், இரண்டு பிள்ளைகள் பெற்று அவர்கள் இருவரும் போடும் சண்டைக்கு தாங்கள் எப்போதும் நடுவராக இருக்கப் நேரிடுமோ என்று அச்சம் கொள்கின்றனர் பலர். அதிலும் இன்றைய பெற்றோர் சிலர், அடுத்த குழந்தையைப் பற்றிய முடிவுகளைத் தங்கள் மூத்த குழந்தையிடம் கொடுத்து விடுகின்றனர். இதைவிட வேறு அபத்தம் என்ன இருக்க முடியும். மூன்று நான்கு வயதுகூட நிரம்பாத அந்தத் தளிர்களுக்கு, தனக்கு ஒரு தம்பியோ தங்கையோ வேண்டுமா என்பதை முடிவு செய்யும் முதிர்ச்சி இருக்குமா என அவர்கள் யோசிப்பதில்லை. நல்லவேளை நம் பெற்றோருக்கு இதுபோல் சிந்தனை வராததால் இன்று நம்மில் பலர் தப்பி பிறந்திருக்கிறோம். இல்லாவிடின் நம் மூத்த சகோதரர், என்றோ நம் வரவைத் தடுத்திருப்பார்.

உடல்நலக் குறைவு:
தாய்மார்கள் சிலரின் உடல் நிலை சில சமயம் இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் திடமுள்ளதாய் இருக்காது. இது ஒரு தவிர்க்க முடியாத காரணியாகி விடுகிறது.

முந்தைய பிரசவத்தின் கசப்புகள், காலம் கடந்த திருமணங்கள் என இன்னும் சில காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. தாயின் உடல்நிலை ஒத்துழைத்தால் மற்ற அனைத்து காரணங்களுமே நாம் முயன்றால் தாண்டி வரக் கூடியவை தான். அப்படித் தாண்டி வந்து, கட்டாயம் ஒன்றுக்கு மேல் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமென்ன என சிலர் கேள்வி எழுப்பலாம். உண்டு. அதுதான் உங்கள் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை நலன் என்பது.

ஒரு பிள்ளையை மட்டும் வளர்ப்பதில் பல சௌகரியங்கள் இருந்தாலும் ஒற்றையாய் வளர்வது அந்தக் குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கதான் செய்கிறது. தான் விரும்பிய அனைத்தும் கிடைத்து, தன் போக்கிற்கே தன் பெற்றோர் வருவதை கண்டு வளரும் குழந்தைகள், அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ளவதிலும் விட்டுக் கொடுப்பதிலும் சிக்கலைச் சந்திக்கின்றனர். தனக்கு வீட்டில் கிடைக்கும் பிரத்யேக கவனிப்பு வெளியில் கிடைக்காவிட்டால் முகம் சுருங்குகின்றனர். இவர்களுக்கு தோல்விகளை ஏற்று கொள்ளும் பக்குவமும் குறைவாகவே இருக்கிறது. சில பெற்றோரின் ஆசைகளையும் கனவுகளையும் தனியாளாய்ச் சமாளிக்க இயலாமல் மனம் கருகிப் போகும் பிஞ்சுகளும் உண்டு.

நமது குழந்தைகளின் எதிர்கால நல வாழ்விற்காகவென்று நாம் இன்று பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அதிக நேரம் நாம் அடிப்படைத் தேவைகள் தாண்டி ஆடம்பரத்தைத் தேடி ஓடுகிறோமோ என சந்தேகம் எழுகிறது. ஒரு தொலைக்காட்சி பிரபலம், ஒரு பொது நிகழ்ச்சியில் கூறியதுபோல் “ஒத்தப் பிள்ளைய பெத்து வச்சிட்டு அத ஒபாமா ஆக்கப் போறேன்” என்ற கனவுடன் அலைகிறோம். இது பெற்றோர் குழந்தைகள் இருவருக்குமே அழுத்தம் தரக் கூடியது.

பொருள் சார்ந்த உலகை மட்டும் பிள்ளைகளுக்குக் கற்பிக்காமல், சுற்றமும் நட்பும் சூழ வாழ்வதெப்படி எனக் கற்றுக் கொடுங்கள். நமது வேர்களை விட்டு பல்லாயிரம் மைல் தாண்டி வாழும் நம் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் சுற்றமாய் விளங்கப்போகும் தம்பி தங்கையரை இல்லாமல் செய்துவிடக் கூடாது. சமூகப் பண்புகளை அவர்கள் கற்றுக் கொள்ள வீட்டை விடச் சிறந்த இடம் கிடையாது. சகோதரர்களோடு வளரும் குழந்தைகள் ஒருதருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து அடுத்தவரிடம் அனுசரணையாய் இருக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகும் ஒரு துன்பம் என்றால் முதலில் வந்து நிற்பது கூடப் பிறந்தவர்களாகத்தான் இருக்கும். அப்படியொரு பந்தத்தை அவர்களுக்கு இல்லாமல் செய்வது அவர்களுக்கு இழைக்கும் பெரிய அநியாயமாய் இருக்கும்.

ஒரே பிள்ளையாய் வளர்ந்து அனைத்து சுகங்களும் கிடைக்கப் பெற்ற பல நண்பர்கள் வளர்ந்ததும் அந்தத் தனிமைத் துன்பத்தை மிகவும் வெறுப்பதையும் பார்க்கிறோம். சகோதர சகோதரிகளோடு வளர்ந்தவர்கள் சிறு வயதில் அண்ணன் தங்கைகளோடு தாங்கள் போட்ட செல்லச் சண்டைகளை நினைத்து நினைத்து ஆனந்தம் கொள்வதையும் காண்கிறோம்.

ஆகவே “ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு” என்று இருந்துவிடாமல், முடிந்தவரை அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வது, நாட்டிற்கும் வீட்டிற்கும் நலம் சேர்க்கும் செயல்.

தீவிர வாசகி. கதை, கவிதை, கட்டுரை என சிறகு விரிக்க இருப்பவர். இல்லத்தரசி.

2 COMMENTS

  1. அருமை! சமூகப் பொறுப்புணர்வுகளை அலசிய விதம் அருமை! வாழ்த்துகள்.

  2. கட்டுரையாசிரியர் பொருளாதார தேவைகள் பெருகி விட்ட இன்றைய சூழலில் இரண்டு குழந்தைகள் கொண்ட அளவான, அழகான குடும்பத்தின் அவசியத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.
    நம்பிக்கையுடனும், நிதானத்துடனும் இருவரும் ஒருமித்த குறிக்கோளுடன் இரு குழந்தைகளைக் கொண்ட கனவு குடும்பத்தை உருவாக்க முடிவெடுத்தால் முடியாததில்லை யென நம்பிக்கையளிப்பவர் அதிகக் குழந்தைகளுக்கும் ஆர்வங்காட்ட பரிந்துரைக்கிறார்.
    பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here