சமீபத்தில் இந்தியாவில் ஓர் உறவினரைச் சந்தித்தேன்.

சரவண பவன் இட்லி சாம்பாருக்கிடையே அவருடைய வேலையைப் பற்றி விசாரித்த போது, ‘வேலைக்கு என்ன ஶ்ரீஜி! வரலாற்றையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறோம்!’ என்றார் அவர்.

சரிதான், இதோ இன்னொரு பக்தர் என்று உள்ளுக்குள் உருண்ட ஏளனம் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவசர அவசரமாக, ‘நீ நினைக்கிற மாதிரி இல்லை! நான் சொல்வது வேறு!’ என்று விவரித்தார்.

விஷயம் என்னவெனில், அவர் தேசிய அளவில் பள்ளிகளுக்கான பாடநூல் தயாரிக்கும் நிறுவனத்தில், பாடங்களை எழுதும் / தயாரிக்கும் ஒரு கல்வியாளர்.

2014 வரை இப்படி எழுதப்பட்ட சரித்திரம்

இந்தியா…
பாரத நாடு பழம் பெரும் நாடு
எம்மதமும் சம்மதம்
எல்லா இந்தியரும் நம் சகோதர சகோதரிகள்
ஈஸ்வர அல்லா தேரே நாம்
குடியரசு தினம்
சுதந்திர தினம்
காந்தி ஜெயந்தி
ஆரஞ்சு மிட்டாய்

2014க்குப் பிறகு,

பாரதம்
உலகுக்கு எல்லாம் தந்த நாடு
இந்து தர்மம்
ஆரியபட்டர்
குடியரசு தினம்
சுதந்திர தினம்
படேல் ஜெயந்தி

என்று மேலிட அழுத்தத்துடன், மெதுவாக ஆனால் நிச்சயமாக மாற்றி எழுதப்படுகிறது என்று மெல்லியதொரு வருத்தத்துடன் கூறினார்.

தொடர்ந்து சில பல நொடிகள் இருந்த அந்த மெளனத்திற்கிடையே ஒரு மிடறு காப்பியைக் குடித்த பிறகு, ‘ஆனால், எனக்கு மோடிஜியைப் பிடிக்கும்!’ என்று அவர் முரண்படக் கூறியவுடன் ஏற்பட்ட வியப்பினால் நேர்ந்த பதிவு இது.

வந்தாரையா மோடி!

இந்தியா…

தொலைக்காட்சியிலும், இணையத்திலும், செய்தித்தாள்களிலும் வரும் பற்பல ஒற்றைப் பரிமாணச் செய்திகளுக்கு இடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பன்முக அற்புதம்.

நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்குள் நானூறு கருத்துக்கள் உண்டு.

125 கோடி பேர் இருக்கும் ஒரு நாட்டில்…

உணவுக்குப் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்துக்களுக்கும் பஞ்சமே இருக்காது; இருந்ததில்லை.

இடம், வலம்
ஏழை பணக்காரன்
மேல்சாதி கீழ்சாதி
விவசாயி தொழிலாளி
மதச்சார்பு மதச்சார்பின்மை

இப்படி எல்லா பக்கமும் கருத்து, கருத்து, கருத்துதான்.

சுதந்திரம் அடைந்ததிலிருந்து இடதுசாரிக் கொள்கைகளையும், சிறுபான்மையினரை அணைத்துச் செல்லும் கொள்கைகளையும் ஏட்டிலும் உதட்டிலுமாவது கடைபிடித்து, ‘ஊழல் இசைபட வாழ்தல்’ என ஆட்சியை நடத்தி வந்த காங்கிரஸ் கட்சியை இந்திய மக்கள் 2014ல் தோற்கடித்தனர்.

‘எமக்குத் தேவை ஒரு பலமான தலைவன்!’ என்று மக்கள் தேடும்போது கிடைத்தவர் பல வருடங்களாக குஜராத் மாநிலத்தை ஆண்டு வந்த பாரதீய ஜனதா கட்சியின் சூப்பர் ஸ்டார் நரேந்திர தாமோதரதாஸ் மோடி.

அத்வானி, வாஜ்பாய் போன்ற பெரிசுகளை சாமர்த்தியமாக ஓரங்கட்டிவிட்டு சிலபல குஜராத் பெரும் தொழிலதிபர்களின் பணப்பெட்டிகளின் சகிதம், முப்பரிமாணக் காட்சிகளாய் ஒரே சமயத்தில் பல இடங்களில் தோன்றி, ‘எல்லோருக்கும் முன்னேற்றம்’ என்ற முழக்கத்துடன் இந்தியக் கோடிகளின் மனம்கவர்ந்து ஆட்சிப்பீடத்தைப் பெரும் வெற்றியுடன் பெற்றார் மோடி.

ஒரு குஜராத்தியரின் சிங்கப்பூர் காதல்

ஆர் எஸ் எஸ் எனப்படும் இந்து சுயசேவைக் குழுவில் முக்கியத் தலைவராக இருந்த மோடி, அக்காலத்திலிருந்தே  சிங்கப்பூரை ஒரு முன்மாதிரி தேசமாகவும், அதன் முதல் பிரதமரான திரு லீ குவான் இயூ அவர்களை ஒரு ஆதர்ச தலைவராகவும் தன் மனத்தில் வரித்ததாகப் பல முறை கூறியிருக்கிறார்.

2015ல் திரு லீ மறைந்தபோது அவரது இறுதிச் சடங்குக்கு வந்திருந்து மரியாதை செலுத்தியது, பின்னர் அதிகார நிமித்தம் சிங்கப்பூருக்கு வந்தது, இந்தியக் குடியரசு தின விருதுகளில் சிங்கப்பூர் தலைவர்களுக்கு – ஜார்ஜ் இயோ, டாமி கோ – பத்ம விருது அளித்தது என்று சிறிய நாடாக இருப்பினும் சிங்கப்பூரை மதித்து வந்தது மோடி அரசு.

இந்தச் சூழ்நிலையில் சென்ற மாதம் நிகழ்ந்த மோடியின் சிங்கப்பூர் வருகை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது என்றே கூற வேண்டும்.

எப்போதும், ஒரு நாட்டுக்கு வருகை புரியும் வெளிநாட்டுத் தலைவர் அந்நாட்டுத் தலைவர்களுடன், ‘நான் உனக்கு இதைத் தருகிறேன், நீ எனக்கு அதைத் தா!’ என்று பேரம் பேசுவர். பின்னர், தம் நாட்டு வியாபார காந்தங்களுடன் அந்நாட்டு வி.கா.க்களை அறிமுகம் செய்து, ‘என் நாட்டுக்கு வாருங்கள். தேனும் பாலும் ஓடச் செய்கிறேன். உங்கள் கஜானா நிரம்பி வழியும்!’ என்று ஆசை காட்டி வெளிநாட்டு முதலீட்டைப் பெற முயற்சி நடக்கும்.

மிஞ்சிப் போனால் சிலபல கலை நிகழ்ச்சிகளும், அந்நாட்டில் உள்ள இடங்களுக்குச் சென்று சுற்றுலாப் பயணிகளாய் செல்ஃபி எடுத்து டுவிட்டரில் பதிவு செய்து ‘நானும் சமூக ஊடகங்களில் கில்லாடி’ என்று பலம் காட்டுவர் சிலர்.

இதைப் பதிவு செய்ய தம் நாட்டிலிருந்து ஒரு பெரும் படையும் கூட வர, அவர்களால் தங்கும் விடுதிகளின் பொருளாதாரம் உயரும். 😊

ஆனால், 2014ல் இருந்து பல முறை வெளிநாடுகளுக்குப் பறந்து கொண்டிருக்கும் திரு மோடி அவர்களின் அணுகுமுறை சற்று வித்தியாசமாக இருப்பதையே நான் உணர்கிறேன்.

ஆகக் குறைந்த நபர்கள் கொண்ட பயணக்குழு, இந்தியத் தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுத் தொழிலதிபர்களுடன் ஒன்றன் பின் ஒன்றாய் சந்திப்புகள், ‘இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் வரலாம். பயன் பெறலாம்!’ என்று தன்னம்பிக்கையுடன், கெஞ்சாமல் கூறும் அரைகூவல்கள், உலகெங்கிலும் இருக்கும் இந்திய மக்களை ஓரளவுக்குச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடத்தப்படும் பெருங்கூட்டங்கள்…

அதிலும் இந்தக் கூட்டங்கள் ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் படங்களின் துவக்கக் காட்சிகள் போல நுழைவுச்சீட்டுக்கள் மளமளவென விற்றுத் தீர்ந்துவிடுகின்றன என்பது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய செய்தி.

இம்முறை மோடிஜி வந்திருந்த போதும் அவ்வாறே நடந்தது.

மோடியின் வியாபார யோகாசனம்

மே 31 அன்று எம்பிஎஸ் அரங்கில் நிகழ்ந்த Inspreneur 2.0 (India-Singapore Entrepreneurship Bridge) என்ற இந்திய-சிங்கப்பூர் தொழில் முனைவோருக்கான ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 5000-பேர் அமரக்கூடிய அரங்கம் ஆரம்பத்தில் ஈயடித்தாலும், பின்னர் மோடிஜி வருகை நேரத்தின் போது நிரம்பியே வழிந்தது. நிகழ்ச்சியை ஒட்டி ஒரு சிறிய கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான இந்தியத் தூதரகம், சிங்கை தொழில் சம்மேளனம் மற்றும் சிங்கை உற்பத்தியாளர் சம்மேளனத்தார்.

புத்தாக்கத்தையும் தொழில் முனைப்பையும் முன்னிறுத்தியிருந்த இந்நிகழ்ச்சியில், சில சுவாரசியமான நிறுவனங்களையும் அவற்றின் பொருட்களையும் காண முடிந்தது. ஃபின்டெக் எனப்படும் நிதித்துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் இருப்பினும் என்னைக் கவர்ந்தது: இருசக்கர வாகனமோட்டிகளின் பாதுகாப்புக்காக ஒரு செயலியை உருவாக்கிய அகமதாபாத் பெஸ்ட் பள்ளியினைச் சேர்ந்த அம்மாணவர்களின் உற்சாகம்.

கூட வந்த மனைவிக்கோ சிங்கப்பூரினைச் சேர்ந்த தானியங்கி சப்பாத்தி செய்யும் கருவி (ரோடிமேடிக்)-இன் மேல் கண். அம்மா அடிக்கடி சொல்லும் பழமொழிதான் நினைவுக்கு வந்தது – வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் கண்; வண்ணாத்திக்கோ கழுதை மேல் கண்! 😊

பின், நிகழ்ச்சியின் நாயகராய் மோடியும், உபநாயகராய் சிங்கை அமைச்சர் திரு ஈஸ்வரனும் பங்கேற்க நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

முதலில் அனுசாசனம் என்ற தலைப்பில் ஒரு கலை நிகழ்ச்சி.

யோகசனத்தால் நம் உடலில் இருக்கும் சக்கரங்களை எழுப்ப  முடியும். ஏழு சக்கரமும் எழுந்திருக்க நாம் உன்னத நிலையை அடைவோம் என்பது இந்திய முன்னோரின் வாக்கு. அந்தப் பயிற்சியை பதஞ்சலி முனிவர் தன் சூத்திரங்களில் வழிவகைப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு சக்கரமும் யோகாசனங்களால் எழுப்பப்பட அதை ஒரு தாமரை மலர்வதற்கு இணையாகக் காட்டி, இறுதியாக ஆயிரம் இதழ்கள் உடைய தாமரை போன்ற ஏழாவது சக்கரம் திறக்கும்போது கிடைக்கும் ஞானம், தாமரை சூரியனைக் கண்டவுடன் அதற்கு ஏற்படும் உவகையைப் போன்றது என்ற நிஜம் கலந்த கற்பனையாய் – 49 பேர் கொண்ட குழுவால் யோகசனத்துடன் பரதநாட்டியம் வழங்கப்பட்டது. எப்போதும் ஒன்று போலவே பார்த்து வந்திருந்த நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு இடையே இது புதுமையாகவும் ஆழமிக்கதாகவும் இருந்தது. அதையே திரு மோடியும் கூறிப் பாராட்டியதாகக் கூறினார் இதை வடிவமைத்து வழங்கிய சிங்கை அப்சராஸ் ஆர்ட்ஸ் பள்ளியின் தலைவர் திரு அரவிந்த் குமாரசாமி.

தொடர்ந்து திரு ஈஸ்வரன் வரவேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் கல்வி மற்றும் அரசு நிறுவனங்களுடன் இந்தியா கையெழுத்திட்ட 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டன. அவை ஆயுதப்படை, கப்பற்படை ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, போதைப் பொருள் புழங்குதல் தடுப்பு, பொதுச்சேவைத் திட்டமிடுதல், தொழில் நுட்பர்களின் பரிமாற்றம் என்று பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஆழ்ந்த ஒத்துழைப்பை ஏற்படுத்த உதவும் என்று இந்தி பேசும் நல்லுலகம் கூறுகிறது.

பிறகு திரு மோடி, இந்தியாவிற்குள்ளும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கும் சுலபமான முறையில் பணம் அனுப்புவதற்கான மூன்று செயலிகளை (BHIM, RuPay, SBI app) முதல்முறையாக அறிமுகப்படுத்தினார். இதில் RuPay சிங்கப்பூரின் நெட்ஸ் பணப் பரிவர்த்தனை முறையுடன் இணைக்கப்படுவது  குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நெட்ஸ் மூலம் சுலபமாகச் சிங்கையில் RuPay அட்டை வழியாகச் செலவு செய்யலாம். அது போலவே இந்தியா செல்லும் சிங்கப்பூர் பயணிகள் நெட்ஸ் அட்டை மூலம் செலவு செய்யலாம்.

இவையனைத்தையும் முடிப்பதற்குள் பொறுமையிழந்த பலர் ‘மோடி மோடி’ என்று முழக்கமிடவும், இறுதியாக திரு மோடி தன் உரையை ஆற்ற மேடை ஏறினார்.

சுமார் 45 நிமிடங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றிய திரு மோடி முதல் 15 நிமிடங்கள், சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பிணைப்பைக் கோடிட்டுக் காட்டினார் – உயிர்த்துடிப்பான பொருளாதார முன்னேற்றம், சுற்றுலா, விமானத்துறை, ஸ்மார்ட் நகரம், யோகா பயிற்சி வகுப்புகள், நகரச் சீரமைப்பு மற்றும் வடிவமைப்பு, மின்னிலக்கமயமாக்குதல் என்று பல்வேறு களன்களில் இந்தியாவும் சிங்கையும் ஒற்றுமையாகச் சாதிக்க முடியும் என்று அழுத்தமாக வெளிப்படுத்தினார்.

பின்னர் தன் அரசு இந்தியாவில் கடந்த நான்காண்டுகளில் நடத்திய சாதனைகளைப் பட்டியலிட்டு – எல்லா கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு, நாடெங்கிலும் ஒரே பொருள் சேவை வரி அமலாக்கம், தொழில் முனைவோருக்கான சலுகைகள், முந்தைய ஆட்சியை விட வேகமாக சாலைகள் அமைப்பு என்று லேசான அரசியல் நெடியுடன் – தம் உரையை முடித்தார் திரு மோடி.

கட்டுரையாளர், தன் துணைவியாருடன் இந்தியப் பிரதமரின் நிகழ்ச்சியில்!

முன் கூறியது போல, அவரது பேச்சு – அவருக்கு ஒவ்வாத ஆங்கிலத்தில் இருந்தாலும் – ஒரு கை தேர்ந்த பேச்சாளருக்குரிய லாவகத்துடன் கேட்பவரின் நாடித் துடிப்பை அளந்து அதற்கேற்றார்போல் பேசிக் கவர்ந்தது. வழமைபோல நடு நடுவே கோட்டு சூட்டு அணிந்த பல கனவான்கள், புளகாங்கிதத்துடன் ‘மோடி மோடி’ என்று கூவ, இன்னும் சிலர் ‘பாரத் மாதா கீ ஜே’ என்று பாரத அன்னையை எழுப்ப, எனக்கு சிங்கப்பூரில் இருக்கிறோமா இல்லை சோலாப்பூரில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்தது என்பது மிகையல்ல. 😊

முடிந்து எழுந்து அங்கேயே வழங்கப்பட்ட இரவு உணவுக்குச் செல்லும் போது பல சிங்கப்பூரர்கள் ‘பரவாயில்லையே, இந்தியாவில் இவ்வளவு வாய்ப்பு இருக்கிறதே, நாம் ஒரு குழுவை அழைத்துச் சென்று பார்க்க வேண்டும்’ என்று பேசியதைக் கேட்க முடிந்தது. அதுவே மோடிக்கு ஒரு வெற்றிதான்.


நானும் ராஜதந்திரிதான்

அடுத்த இரண்டு நாட்களில் மோடிஜி, காந்தியடிகளின் அஸ்தியைக் கரைத்த க்லிஃப்போர்டு துறைக்கு அருகில் ஒரு நினைவுக்கல் நாட்டினார். சைனாடவுனில் உள்ள மாரியம்மன் கோவில், புத்தர் பல் ஆலயம், சூலியா மசூதி ஆகியவற்றுக்குச் சென்று வழிபட்டார். இது விளம்பரத்துக்காக, கண்துடைப்புக்காக எனறு ஒரு சாரார் கிண்டல் அடித்தாலும், எடுத்த முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும்.

அத்துடன் ஜூன் 1 அன்று நடைபெற்ற ஷாங்ரிலா சிறப்பு உரையில் அவர் மீண்டும் சிங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை வலியுறுத்தினார்.

நம் கடல்கள் பொதுவாகவும் பாதுகாப்பாகவும் இருப்பின்,

நாடுகள் எல்லா வழியிலும் தொடர்புடையதாக இருப்பின்,

சட்ட விதிமுறைகள் ஒழுங்காகக் கடைபிடிப்பின்,

பெரியன சிறியன என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா நாடுகளும் வளம் பெற முடியும்;

பயமின்றிச் சுதந்திரத்துடன் தம் தெரிவுக்களைச் செயலாக்க முடியும்… சிங்கப்பூரைப் போல…

என்ற முத்தாய்ப்புடன் அவர் தம் முத்திரைச் செய்தியை அளித்தார்.

மோடியின் பயணங்கள் வெற்றியா தோல்வியா?

ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த உறவினரின் முன்பின் முரணான கருத்துக்குப் பதிலை யோசித்துப் பார்க்கையில் மோடி உள்நாட்டில் ஒரு முகமும் வெளிநாட்டில் ஒரு முகமும் காட்டுகிறாரோ என்று தோன்றாமல் இல்லை.

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே என்ற ஒரு இந்தித் திரைப்படத்தில் ஷாருக் கான் பேசும் ஒரு பிரபலமான வசனம் வரும்.

படே படே தேஷோன் மே ஐஸீ சோட்டி சோட்டி பாத்தேன் ஹோதி ஹை (பெரிய பெரிய தேசங்களில் இது போல சின்னச் சின்ன விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்)

இந்தியாவுக்குள் நடைபெறும் சிலபல அக்கிரமங்களுக்கு எதிராக ஒரு சிறிய குரல் கூட எழுப்பாமல், மோடி இந்த வசனத்தைத்தான் அவர் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?

‘எனக்குப் பிடித்த லீ குவான் இயூ போல நானும் ஒரு அரசதந்திரியாக இருக்க வேண்டும். எதிர்ப்பவர் எப்போதும் கல் எறிவர். நான் என் பணியைச் செய்து கொண்டே இருப்பேன்,’ என்று அடுத்தடுத்து விமானப் பயணத்துக்குத் தயார் ஆகிவிடுகிறார் மோடி.

மொத்தத்தில் ஒரு இந்தியப் பிரதமர் நான்காண்டுகளில் இருமுறை சிங்கப்பூர் வருகை தந்தது இதுவே முதல் என்று நினைக்கிறேன்.

உலகின் ஆகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று…

ஆகப் பெரிய ஜனநாயக நாடு…

உலகின் வயதில் ஆக அதிகமான இளையர்களைக் கொண்ட நாடாகிய இந்தியா,

55 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட சிங்கையுடன் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறது என்றால்…

இந்தச் சின்னச் சிவப்புப் பொட்டு ஏதோ சரியாகச் செய்கிறது என்றுதானே அர்த்தம்?

 

மகன், கணவன், தந்தை, மனிதன் – இப்படி அனைத்து வேடங்களையும் சரியாகத் தரிக்க முடியாத ஒரு சராசரி. கிரிக்கெட் நடுவராய் பல்லாண்டுகள் பலரின் வாழ்வைக் குலைத்தவர். கைக்கு வந்தததை எழுதி அதை மற்றவர் ரசித்தால், ‘இவர்களுக்கு என்ன ஆயிற்று?’ என்று வியக்கும் ஓர் அப்பிராணி

8 COMMENTS

  1. அருமை. மிகவும் அழகாக எழுதப்பட்ட கட்டுரை. தமிழ் சிங்கப்பூரின் சீரிய நடையொற்றி இரசிக்கத்தக்க வகையில் இருப்பது மேலும் சிறப்பு.

  2. அடடே.. முதலாளி உங்களுக்கும் நோட்டா கூட போட்டி போட வாய்ப்பு கிடைச்சுடும் போல..

    • தம்பி தினேசு – நான் என்னிக்குக் கட்சி ஆரம்பிச்சு, மெம்பர் எல்லாம் சேர்த்து, சின்னம் புடிச்சு, பணம் தேடி… அடப் போப்பா…

  3. ஶ்ரீஜீ முக அழகாக எழுதியிருக்கிறாய். எந்த பக்கமும் சாயாமல் மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து எழுதப்பட்ட கட்டுரை. மிக்க நன்று. உன்னிடமிருந்து தமிழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .

    மூர்த்தி

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here