கட்டுமானத் துறையில் பணிபுரியும் பங்களாதேஷைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் முனைந்து தங்களுக்கான ஒரு நூலகத்தை நிறுவி, வெற்றிகரமாக நடத்திக் கொண்டும் வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி, இந்த நூலகம் றோவெல் (Rowell Road) ரோட்டில் உள்ள TWC2 அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் இயங்கி வருகிறது.

நூலகத்தை பற்றி:

தங்களின் தாய்மொழியிலுள்ள நூல்களைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தில் ஒன்றிணைந்த இந்த மூவர் குழு, தங்களின் கையிருப்பில் இருந்த 800 வெள்ளியைச் செலவு செய்து பெங்காலி நூல்களைத் தருவித்தனர்.

பிற மொழி பேசும் தங்களுடைய நண்பர்களுக்காகவும் தம்மை போன்ற பிற வெளிநாட்டு ஊழியர்களுக்காகவும் சீன, தாய், பஹாசா இந்தோனேசியா, பிலிப்பினோ, தமிழ்ப் புத்தகங்களைத் திரட்டி வருகின்றனர். தமிழ் புத்தகங்கள் வெகு சிலவே இதுவரை கிடைத்துள்ளன.

சிங்கையிலுள்ள யார் வேண்டுமானாலும் இந்த நூலகத்தில் இலவசமாக நூல்களை இரவல் பெற முடியும். மூன்று புத்தகங்களை ஒரு மாத காலத்திற்கு ஒரு நபர் இரவலாக பெறலாம். இரவலை நீட்டிக்க, புத்தகத்திலுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் அழைத்து சொன்னால் போதும்; இன்னுமொரு மாத காலம்வரை தவணையை நீட்டித்துக் கொள்ள முடியும்.

வாரயிறுதி நாட்களில் இந்த நூலகத்தில் அமர்ந்து புத்தகங்களை படிப்பவர்களும் உண்டு, இரவல் பெற்று தங்களின் விடுதிகளுக்கு எடுத்துச் சென்று படிப்பவர்களும் உண்டு.

அடுத்தக்கட்ட முயற்சியாக, நடமாடும் நூலகங்களையும் இவர்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். இரண்டு விடுதிகளில் இதுவரை இந்த முயற்சி செயலாக்கம் கண்டுள்ளது. அது, எதிர்பார்த்ததைவிட, பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த சேவையை இன்னும் சில வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகளுக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் நிறைய நூல்கள் தேவைப் படுவதால் உங்களிடம் ஓர் வேண்டுகோள்:

நீங்கள் வாசித்து முடித்த, உங்களுக்குத் தேவையற்ற, பழைய தமிழ்ப் பத்தகங்களை நன்கொடையாக கொடுத்து உதவுங்கள். கவிதை, சிறுகதை தொகுப்பு, கட்டுரை என எதுவாக இருப்பினும் ஏற்றுக்கொள்கிறோம் இந்தக் குழுவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, முகநூலில் Migrant Library Singapore என்று தேடவும் அல்லது தொண்டூழியரான என்னை 92990569 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பிற நடவடிக்கைகள்:

தேசிய நூலக வாரியம் இவர்களின் சேவையை அங்கீகரித்து, இக்குழுவினரை ஓர் வாசகர் வட்டமாக அறிவித்துள்ளனர்.

மாதந்தோறும், முதல் ஞாயிற்றுக்கிழமை, கெயலங் ஈஸ்ட் பொது நூலகத்தில் வாசகர் வட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நூலகத்திலும் இவர்கள் திரட்டிய சில புத்தகங்கள் இரவலாக கிடைக்கும். புத்தகங்கள்,  நூலக நடவடிக்கை அறையிலுள்ள ஓர் அலமாரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பதிவேட்டில் தங்கள் விவரங்களை நிரப்பிவிட்டு, இப்புத்தகங்களை இரவல் பெறலாம்.

உங்களின் உதவியோடு, இன்னும் பல நடமாடும் நூலகங்கள் இயங்கமுடியும் என்ற நம்பிக்கையில்….

புகைப்படங்கள் – Migrant Library Singapore இணையப்பக்கம்

இந்திய மரபுடைமை நிலையத்தின் தமிழ் பிரிவின் தலைமை தொண்டுழியர் சமூக பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். முதியோர் இல்லங்களிலும், கட்டுமான தொழிலாளர்களின் விடுதிகளிலும் சேவை செய்து வருகிறார். சுயதொழில் முனைவர். மௌண்ட்பட்டன் சமூக மன்றத்தில் இயங்கி வரும் ஆங்கில பேச்சாளர் மன்றத்தின் தற்போதைய தலைவர்

2 COMMENTS

  1. அருமையான செய்தித் தொகுப்பு. இதற்காக உழைத்த/ உழைக்கும் அனைவரையும் பாராட்டுகின்றேன். என்னால் முடிந்தளவு தமிழ் நூல்களைத் தர முயற்சி செய்கின்றேன். நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here