என்ன வகை நிகழ்வு என்றுகூட தெரிந்திருக்கவில்லை. நண்பர்களிடம் விசாரித்த போதும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. ஆனாலும் சட்டென்று திட்டமிட்டு போகச்செய்தது அந்த தலைப்பு.

மகாகவி பாரதி என்கின்ற பெயர் எப்போதும் என்னை கட்டியிழுத்துவிடும் ஒன்று. கூடவே வே மழலை என்றும் இருப்பதால், ‘அட குழந்தையையும் கூட்டிச்செல்லலாமே’ என்று ஒரு குதூகலம் ஏற்பட்டது. என் சுட்டிக்குழந்தை, உலகிலில்லாதே கேள்விகள் கேட்பாளே, ரசிப்பாளோ இல்லை தொந்தரவு செய்வாளோ என்ற தயக்கத்தையும் மீறி போகவைத்தது அந்த தலைப்பு தான்.

சற்று தாமதமாகப் போனதால் “ஓடி விளையாடு பாப்பா” வை தவற விட்டு விட்டோம். அந்த பாடல் முடியும் வரை வெளியில் இருக்க நேர்ந்தபோது அழுகை அழுகையாக வந்தது. நல்ல வேளையாக இரண்டாம் வரிசையின் ஓரத்திலேயே இடம் கிடைத்தது வசதியாகப்போய் விட்டது. ஒரு வேளை குழந்தை தொந்தரவு செய்தால் எழுந்து ஓடி விடலாம் என்று சற்று நிம்மதியாகவே அமர்ந்தேன்.

அது ஒரு நடன நிகழ்வு. பாரதியாரின் பாடல்கள் பரத நாட்டியத்திற்கு ஏற்றாற்போல தயாரிக்கப்பட்டு நாட்டியமாக அரங்கேறின. ‘நவீனத்துவ ‘, ‘பின்நவீனத்துவ’ பாங்குகள் இல்லாமல் முற்றிலும் மரபு ரீதியான பாரம்பரிய பாணியில் நடன அமைப்பு செய்யப்பட்டிருந்தது. நேர்த்தியான ஆடை அலங்காரம், அளவான ஒப்பனை, அடவு, அங்கசுத்தம் எல்லாம் இருந்தன. ஆனால் முகபாவம் மிகக்குறைவாகவே இருந்தது. குழந்தைகள் அடவுகளை சரியாக செய்து முடித்துவிட வேண்டும் என்ற பதற்றத்துடன் ஆடியதாகவே தோன்றியது. சிங்கை முழுவதுமே நடன நிகழ்ச்சிகளில் அரைமண்டிக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை என்று தான் தெரிகின்றது.

பாரதியின் வேடமிட்ட நெறியாளரின் கம்பீரமான தமிழ் என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பினும் பாரதியின் அறச்சீற்றத்தின் தொனி அந்த நெறியாள்கையில் இருக்கவில்லை. ஒருவேளை பாரதி வேடமிட்டதால் அதிகம் எதிர்பார்த்து விட்டேனோ என்னவோ. ஆனால் ஆச்சர்யப்படுத்திவள் என் குழந்தைதான். “அச்சமில்லை அச்சமில்லை” என்று நெறியாளரோடு இணைந்து அவளும் சொன்னபோது அத்தனை சந்தோஷமாக இருந்தது. நான் இதுவரை பார்த்திராத பாரதியாரின் அறிய புகைப்படங்களை திரையில் பார்க்க முடிந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

பாரதியார் வேடமிட்ட ஆண் குழந்தைகளும், குட்டிக்குட்டி கண்ணம்மாக்களுமாய் “அச்சமில்லை அச்சமில்லை” அழகாக நிறைவாக இருந்தது. அதே போல “மனதில் உறுதி வேண்டும்” பாடலும் நல் விருந்து.

“சின்னஞ்சிறு கிளியே” ஆரம்பத்ததும் கண்களிலிருந்து கொட்டத்துவங்கிய கண்ணீர் இறுதி வரை நிற்கவில்லை. தாயும் மகளுமாய் நடனக்கலைஞர்கள் இருவரும் மனதையும் அரங்கையும் மயக்கி நிறைத்தனர். நானும் என் குழந்தையும் எத்தனையெல்லாம் தொடர்பாடுகின்றோமோ அத்தனையுமாக இருந்தது. குறிப்பாக, முழு ஒப்பனையில் நகைகளையும் அணிந்திருந்த குழந்தையையும் தூக்கிக் கொண்டு நடனமாடுவது என்பது மிகவும் சிரமமான விஷயம். அதை கொஞ்சமும் வெளிப்படுத்தாமல் ஆடிய கலைஞருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் அவர் அபிநயத்தில் ஏன் தொடர்பே இல்லாமல் உதடு பிதுக்கியபடியே இருந்தார் என்று புரியவில்லை. அந்த குட்டிக்கண்ணம்மா அத்துணை அழகு. பாவம் குழந்தை ! மேடை பதற்றத்தையும் மீறி தன்னாலியன்ற அத்தனை சிறப்பான நாட்டியத்தை வழங்கியது.

“எத்தனை கோடி இன்பம்” தில்லானாவாக அதன் இயல்புக்கேற்ப விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. மங்களமும் நமஸ்காரமும் மேடையிலேயே செய்து காயத்ரி மந்திரத்தோடு நிறைவடைந்தது ஒரு முழுமையை அன்றைய நிகழ்ச்சிக்கு வழங்கியது.

நன்றியுரை தான் அதிர்ச்சியளித்தது. தமிழ் மொழி மாத நிகழ்வு; “தமிழைப்போல இனிது ஒன்றில்லை” என்று தன் வாழ்வெல்லாம் முழங்கிய தமிழ்க்கவிக்கான சமர்ப்பணம். அங்கே ஆங்கிலத்தில் நன்றியுரை. எத்தனை தான் சமாதானம் சொல்லட்டும். வயதானவர், ஒருவேளை வேற்றுமொழியை தாய்மொழியாகக் கொண்டவராக இருக்கக்கூடும், தமிழ் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருக்கக்கூடும் இன்னும் எத்தனை எத்தனை சமாதானம் சொன்னாலும் இது என் வரையில் மன்னிக்க முடியாத குற்றம். அந்த இடத்தில் இந்த நிகழ்வு அபத்தமானதாகவே ஆகிப்போனது எனக்கு.

கருவிலிருக்கையிலிருந்தே பாரதியை கேட்டுக்கொண்டிருக்கும் என் செல்லக்கண்ணம்மா ஆசை ஆசையாய் ஆர்வமாய் நிகழ்வை பார்த்ததும், பாடல்களை தானும் சேர்ந்து பாடியதும் தான் அன்றைய நிகழ்வுக்கு சென்றதற்கான முழு அர்த்தமுமாக இருந்தது எனக்கு. “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்” ஒரு தருணம் அது.

கம்பீரமும், அறமும், அன்பும், தமிழுமாய் வாழ்ந்து கொண்டிருந்து அவை அனைத்தையும் அப்படியே அனாதைகளாய் விட்டுவிட்டு அரை ஆயுளிலேயே போய்விட்ட அந்த மகாகவி என் மனமெங்கும் வியாபித்திருந்தான், சபை நாகரிகம் காரணமாக வெளி வரமுடியாமல் கண்கள் உள்ளிழுத்த என் கண்ணீரில் அபிடேகம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தான்.

புகைப்படங்கள்: தர்ஷனா கார்த்திகேயன்

நல்ல விமர்சகர். கட்டுரைகள் எளிதாக இவருக்கு வசப்படும். கதை, கவிதை நோக்கியும் இவருடைய பார்வை திரும்பியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here