“ராஜா, சம்பவம் நடந்த அன்னைக்கி நீ எங்க இருந்த….TNJ 2565 காருல போயிட்டுருந்த…. say yes or no…” “yes சார்”

“சம்பவம் நடந்த அன்னைக்கி அந்த கார ஒரு லாரில tow பண்ணிட்டு போயிட்டுருந்துருக்க…say yes or no…”

“yes சார்”

“சோ….சம்பவம் நடந்த இடத்துல நீ இருந்துருக்க sayyyy  yes or no…”

“yes சார்”

“சார்….ஒரு கேள்வி கேக்கலாமா சார்…”

“Go ahead”

“இந்த சம்பவம் சம்பவம்ன்னு சொல்றீங்லே அது இன்னா சார்”

“கொல…மேன் கொல… பிரான்சிஸ் அன்பரசன நீ கொன்னுருக்க”

அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் ”வண்ணத்திரை ஒளிவழியில்” ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

தொங்கப் போட்டிகொண்டிருந்த கால்களை டபக்கென்று மடக்கி சோபாவின் மேல் வைத்துக்கொண்டு அப்படியே அம்மாவின் மேல் சாய்ந்து கொண்டாள் மஞ்சு. அவள் உடல் லேசாக நடுங்குவது போல் இருந்தது.

“என்ன மஞ்சு”

“சும்மாதாம்மா, அந்த சீன் பார்த்ததும் ஒரு மாதிரியா இருக்கு” “இந்த சீன எத்…தன தடவை பாத்திருப்போம், என்னமோ இன்னைக்குதான் காதுல கொலன்னு கேட்ட மாதிரி பயப்படுற…” அம்மா நக்கல் அடித்தார்.

“ஆமாம், ஏன் ஆபீஸ் விட்டு வந்ததிலேர்ந்து ஒரு மாதிரியா இருக்க, வைபவ்வோட ஏதாவது சண்டையா” “அதெல்லாம் ஒண்ணுமில்ல”. அவளுக்கு காலையில் கண்ட காட்சியை நினைத்தாலே உடல் நடுங்கியது.

அடுத்தநாள் அதே இடத்தை கடக்கும்போது உடல் முழுவதும் ஒரு கணம் விறைப்படைந்து அப்படியே அதே இடத்தில் நின்றவள் மறுவினாடி தன்னை சுதாரித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக அந்த இடத்தை விட்டு அகன்றாள். எதிரே வந்த டாக்சியை கை காட்டி ஏறினாள.

“இன்டர்நேஷனல் பிளாசா” தன் அலுவலக இடத்தை சொல்லிவிட்டு இருக்கையில் அப்படியே சாய்ந்து கண்களை மூடினாள். நேற்று அந்த இடத்தில் நின்ற காவலர்களும், ஆட்கள் வராமல் தடுக்க சிகப்பு நாடாக்களைக் கொண்டு அந்த இடத்தைச் சுற்றி கட்டப்பட்டிருந்ததும் அவள் மனதில் காட்சிகளாக வந்து கொண்டிருந்தன. நினைக்கவே கூடாது என்று மண்டையை ஆட்டிக்கொண்டாள். “எப்படி…எப்படி நடந்தது..அப்படி செய்ய அவர்களுக்கு எப்படி மனது வந்தது, மனசு வலிக்காதது…உறுத்தாது….என்ன காரணமாக இருக்கும்” என்று மலர்கள் மலரும்போது ஒவ்வொரு இதழாக பட் பட் என்று விரிவது போல மண்டைக்குள் அடுத்தடுத்து கேள்விகள் வந்து கொண்டே இருந்தன. “ஐயோ தினமும் இதே இடத்தை கடந்தாக வேண்டுமே”  தலையை லேசாக ஆட்டினாள், இரு கைகளையும் கட்டிக்கொண்டு தன்னையே இறுக்கி பிடித்துக்கொண்டாள். டிரைவர் தன் இடக்கையால் கண்ணாடியை சரிசெய்து கொண்டே சாலையில் ஒரு கண்ணும் இவளை ஒரு கண்ணுமாக பார்த்தார்.

“நல்லவேளை அடுத்த மாதம் திருமணம் முடிந்து வைபவ்வுடன் செங்காங் வீட்டிற்கு சென்று விட்டால் இந்த இடத்தை கடக்க வேண்டிய அவசியமேயில்லை என்று நினைத்து தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

“வைபவ், இங்க சிக்ஸ்த் அவென்யு பக்கத்திலேயே வீடு வாங்கலாம், ப்ளீஸ், இருபது வருஷம், எனக்கு இந்த இடத்த விட்டு வரவே மனசில்ல வைபவ்” என்று அன்று கெஞ்சியவள் இன்று அந்த இடத்தைவிட்டு ஓட முடியுமா என்று பார்க்கிறாள்.

இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு நாள்

“அத்தை நான் வைபவ் பேசுறேன், மஞ்சுவுக்கு லேபர் பெயின் வந்துட்டு நான்  கூட்டிகிட்டு கேகே மருத்துவமனைக்கு போறேன்”

“ஓ!!அப்படியா, தனியா முடியுமா, நாங்க உடனே வரோம்”

“ஒன்னும் பிரச்சினை இல்லை, நான்  மேனேஜ் பண்ணிக்கிறேன், அங்க போயிட்டு என்ன நிலவரம்ன்னு சொல்றேன்” மழை வருவது போல் இருந்ததால் ஜன்னல்களை மூடிக்கொண்டே பதில் சொன்னான்.

“மெதுவா எழுந்திரு” குனிந்து மஞ்சுவை கிளப்பினான். ஒரு கையால் தன் வயிற்றை பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் சோபாவை அழுத்திப் பிடித்துகொண்டு உதடுகள் இரண்டையும் உள்ளே மடக்கியபடி எழுந்தாள் மஞ்சு.

கேகே மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு. பிறந்த குழந்தைகளின் அழுகையும் மருந்தின் நெடியும் பரவியிருந்தது. ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகளை போட்டு கசக்குவது போல சலசல என்ற பேச்சு. அறை எண் 512-ல் ஒரே மகிழ்ச்சியும் சிரிப்புமாக வைபவ்வின் பெற்றோரும் மஞ்சுவின் பெற்றோரும்.

மஞ்சு உறங்கிக் கொண்டிருந்தாள். தன் குழந்தையின் முதல் அலறலை கேட்ட பிரமிப்பிலும், அதேசமயம் சற்று முன் மஞ்சு அனுபவித்த மரண அவஸ்தையை பார்த்து வேதனை அவள்மேல் அதீத காதல், பரிதாபம், நெகிழ்ச்சி என்று கலவையான உணர்வுடன் இருந்தான் வைபவ்.

மெதுவாக கண் விழித்தாள் மஞ்சு. ஓரிரு வினாடிகள் எடுத்துக் கொண்டாள் சூழ்நிலையை உணர. மெல்ல அவள் அருகில் சென்று தன் இடக்கைக்குள் அவளின் வலக்கையை வைத்து மென்மையாக வருடியபடி கண்ணம்மா என்று குரல் தழுதழுக்க அழைத்தான் வைபவ். “மஞ்சு எப்படிம்மா இருக்க” பெற்றோர்கள் கேட்டார்கள். அவள் மெல்ல சிரிக்க முயன்று தோற்றுப் போனாள்.

சுகமான சுமையை இறக்கிய களைப்பு  அவள் முகத்தில் தெரிந்தது.

“பாப்பா எங்க” பாதி குரல் காற்றில் கலக்க கேட்டாள்.

“பாப்பாவ குழந்தைங்க அறையில வச்சிருக்காங்க”.

அதைக்கேட்ட மறுவினாடி ஒரு பதட்டம் அவளை தொற்றிக்கொண்டது. டபக்கென்று எழுந்து உட்கார்ந்து கீழே இறங்க முயற்சித்தாள். “ என் பாப்பா எங்க…என் பாப்பவ என்கிட்டே கொடுங்க!!என் பாப்பாவ என்கிட்ட கொடுங்க” கத்த ஆரம்பித்தாள். “மஞ்சு என்னாச்சு..பாப்பவ கொண்டு வருவாங்க..சொல்லிக்கொண்டே அவளை அமைதி படுத்த பார்த்தான் வைபவ்.

ஒருவித பீதி மஞ்சுவின் கண்களை கெளவியது. “என் குழந்தை….என் குழந்தை…”என்று கத்த ஆரம்பித்தாள். “இரும்மா கொண்டு வருவாங்க”.

அவள் எதையும் காதில் வாங்கவில்லை. “என் குழந்தையை கொடுங்க…என் குழந்தையை கொடுங்க…”அவளை கட்டுப்படுத்த பிடிக்கும் வைபவ் கைகளை உதறியபடி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தாள். அனைவரும் பயந்து போயினர். தாதி வந்தார். பின் மருத்துவர் வந்தார். குழந்தையை கொண்டு வந்து அவளிடம் கொடுத்தார்கள். கையில் வாங்கிய குழந்தையை இறுக்கி தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். “செல்லம்….கண்ணு… இனிமே நீ எங்கயும் போ வேணாண்டா என்கூடவே இரு..”கொஞ்சிக் கொண்டே அதன் நெற்றியிலும் தலையிலும் அழுந்த முத்தமிட்டாள்.

ரோஸ் நிற துணியில் சுற்றப்பட்டு குட்….டி பேபி போல்ஸ்டர் அளவுக்கே இருந்த அந்த குழந்தை திடீரென்று ஏற்பட்ட அந்த நசுக்களால் அந்த அறையே அதிரும்படி தன் பிஞ்சு தொண்டை கிழிய கத்தியது.

அவள் நடந்துகொள்ளும் விதம் சரியாகப்படவில்லை மருத்துவருக்கு. தாதியை கூப்பிட்டு காதில் ஏதோ சொன்னார். சிறிது நேரத்தில் மருந்து நிரப்பப்பட்ட சிரிஞ்சுடன் வந்தாள். ஊசி ஏறியது கூட தெரியாமல் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தாள். ஓரிரு நிமிடங்களில் தூக்கத்திற்கு சென்றாள் மஞ்சு.

தாதி மெல்ல குழந்தையை அவளிடமிருந்து வாங்கினார். அது இன்னும் ஈனஸ்வரமாகக் கத்திக்கொண்டிருந்தது. “பேபிய நர்சிங் ரூமுக்கு கொண்டு போங்க”.

அங்கு இருந்த அனைவரின் முகத்திலும் கலவரம். அனைவரும் என்ன கேட்கப் போகிறார்கள் என்று தெரிந்தே “ஏன் அவங்க இப்படி நடந்துகிட்டாங்க என்று தெரியல, கவனீச்சீங்களா அவங்க கண்களில் ஒருவித பயம் தெரியுது. அது அசாதாரணமா எனக்கு தோணுது….ம்…தூங்கி விழிக்கட்டும் பார்க்கலாம்”

மஞ்சு வைபவ் இரண்டு குடும்பத்திற்கும் முதல் பேரக் குழந்தை. அவள்  கர்ப்பம் என்று தெரிந்த நாள் முதல் குழந்தையின் வருகைக்காக வெளிநாடு சென்றுள்ள அப்பா பரிசாக தனக்கு என்ன வாங்கிக் கொண்டு வருவார் என்று பிள்ளைகள் காத்திருப்பது போல ஆர்வமாய் இருந்தார்கள். ஆனால் அவர்கள்  எதிர்பார்த்த ஒன்று, வந்த மகிழ்ச்சியேயின்றி ஒருவருக்கொருவர் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றார்கள்.

கொண்டாட்டமும் மகிழ்ச்சியுமாய் இருக்க வேண்டிய இரவு பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து அமைதியாகி விடும் மண்டபம் போல இருந்தது.

வைபவ் அவளைவிட்டு நகராமல் அவள் அருகிலேயே அமர்திருந்தான்.

மறுநாளும் மஞ்சு அதேபோல் நடந்து கொண்டாள். அவளை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவளை தூக்கத்திலேயே வைத்திருக்க வேண்டியிருந்தது. விழித்திருக்கும்போதும் அவளைத்தவிர குழந்தையை வேறு யாரிடமும், வைபவ்விடம் கூட தர மறுத்தாள். குழந்தைக்கு பவுடர் பால் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். மஞ்சுவுக்கு என்னாயிற்று என்று மனம் புழுங்கினான் வைபவ்.

அவள் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். அருகில் ஸ்டூலில் அவன் அமர்ந்திருந்தான். அவள் தலையை மெல்ல தடவியபடியே அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். தூங்கிக்கொண்டே இருந்ததால் முகம் சற்று வீங்கியிருந்தது. குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

“என்னடா உன் பிரச்சினை..உனக்கு என்னாச்சு..பாப்பா வந்தா அதப் பண்ணனும் இதப் பண்ணனும்ன்னு இருந்தியே, இப்ப என்னாச்சு.. உன்கிட்ட பாப்பவ கொடுக்கவே பயமாயிருக்கேடா..”

“வைபவ், பாப்பாவுக்கு நான் ரெண்டு வயசு வரைக்கும் பால் கொடுக்கப்போறேன், குட்டிம்மா நீ அம்மாகிட்ட பால் குடிச்சிட்டு தெம்பா இருப்பியாம், ஓகே பேபி” தன் வயிற்றை தடவிக்கொண்டே மஞ்சு கூறியது வைபவுக்கு நினைவுக்கு வந்தது. “பாரு உன் பாப்பா இப்போ பவுடர் பால் குடிக்கிறது” மனதிற்குள் அவளோடு பேசினான். அவனாலும் குழந்தையை ஆத்மார்த்தமாக கொஞ்ச முடியவில்லை. நெஞ்சு கனத்தது. தொண்டை அடைத்தது.

“மிஸ்டர் வைபவ், how is she now “ கேட்டபடியே வந்த டாக்டர் மஞ்சுவின் மற்ற டெஸ்ட் ரிசல்ட்களைப் பார்த்தார். Everything is normal, but why does she behaves abnormaly, we must find the reason. Can you come with me? அழைத்தபடி அவரின் அறைக்குச் சென்றார்.

“உட்காருங்க வைபவ்”. நுனி நாற்காலியில் அமர்ந்தான். ”ஏதாவது வாயிலே நுழையாத மருத்துவ பெயரை  சொல்லிவிடுவாரோ…பெரிய குண்டாகத் தூக்கி போடப் போறாரோ?” லேசாக வியர்த்தது.

“மிஸ்டர் வைபவ் மஞ்சுவுக்கு மனரீதியாகத்தான் பிரச்சினை இருக்கும் என்று சந்தேகப்படுறோம்.

சில பெண்கள், குழந்தை அப்பாவைப் போல் இருக்குமா..அம்மாவைப்போல இருக்குமா. காலு எப்படி இருக்கும் கை எப்படி இருக்கும்..என்ற கற்பனையிலும் தங்கள் குழந்தைகளை பார்க்க ஆவலிலும் இருப்பார்கள். சில சமயம் அந்த ஆவல் அதிகமாகி வேறு விதமாக நடந்து கொள்வார்கள். ஆனால் மஞ்சுவின் நடத்தையைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. “தன் குழந்தைக்கு ஏதோ ஆபத்து, குழந்தையை தான்தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது போல நடந்து கொள்கிறார்”.

“மிஸ்டர் வைபவ் மஞ்சு கர்ப்ப காலத்துல எப்படி இருந்தாங்க…. பேச்சுல…. நடத்தையில…. சாதாரணமா இருந்தாங்களா”

“ஆமாம்… சாதாரணமாதான் இருந்தாங்க..செக்கப் வரும்போது நீங்களே  பாத்துருப்பீங்க…ஆனா குழந்தையைப் பற்றி நிறைய பேசுவாங்க…இன்டெர் நெட்டுல ஏதாவது புதுசு புதுசா படிச்சிட்டு அதுபடி நடப்பாங்க…நான் என் குழந்தையை பத்திரமா பாத்துகுவேன்…அடிக்கமாட்டேன்….ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க”.

“அவங்க கர்ப்பமா இருக்கும் போது ஏதாவது வித்தியாசமா நடந்துதா, உங்க குடும்பத்திலோ அல்லது தெரிந்தவர்கள் குடும்பத்திலோ குழந்தை சம்பந்தமான அசாதாரணமான நிகழ்வுகள் நடந்ததா”

வைபவ் யோசித்தான். ”எனக்கு தோணலை டாக்டர்”

“தப்பா நினைக்காதீங்க….உங்க..ரெண்டு பேருக்குள்ள உறவு எப்படி இருந்தது? உங்ககிட்டகூட குழந்தையை கொடுக்க யோசிக்கிறாங்களே”

“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு டாக்டர். எனக்கு புரியுது. நாங்க நல்ல உறவோடுதான் இருந்தோம். பிரசவ தேதி நெருங்கியதும் நானும் விடுப்பு எடுத்துகிட்டு அவளோடதான் இருந்தேன். பிரசவத்திற்கு அவங்க அம்மா எவ்வளவோ வற்புறுத்தி அவங்க வீட்டிற்கு கூப்பிட்டதற்கு கூட போக மாட்டேன்னு சொல்லிட்டாங்க”

“ஆமாண்டி அதிசயமா நீதான் புள்ள பெத்துக்க போற…நாங்கெல்லாம் பெத்துக்கல…”மஞ்சுவின் தாயார் சொல்லியது நினைவுக்கு வந்தது.

“சாதாரணமா அவங்க எப்படி பயந்த சுபாவமா…சின்ன விஷயத்துகெல்லாம் பதட்டமாயிடுவாங்களா”

“கோபம் வரும். பயப்பட மாட்டாங்க.”

“ஓ!!…அப்படியா… நாளைக்கு மனநல ஆலோசகர் வந்து மஞ்சுவ பார்ப்பார். கவலை படாதீங்க. எல்லாம் சரியாயிடும். ம்.. எதுக்கும் நீங்க அவங்க இடத்தை கொஞ்சம் சோதனை பண்ணி பாருங்க…ஏதாவது க்ளூ கிடைத்தால் ட்ரீட்மென்ட் கொடுக்க வசதியா இருக்கும்”

வீட்டிற்கு சென்ற வைபவ் “எல்லாம் சரியாக இருந்திருந்தால் இந்நேரம் மஞ்சுவும் குழந்தையும் வீட்டுக்கு வந்திருப்பார்களே” நினைத்துக்கொண்டே  குழந்தைக்காக வாங்கி போட்டிருந்த கட்டிலை மெதுவாக தடவியபடி அறையை நோட்டமிட்டான். குழந்தைக்கு தேவையான உடைகள், நாப்பிகள், மற்ற குழந்தை பொருட்கள் எல்லாம் மேசைமேல் அழகாக அடுக்கி இருந்தன.

மஞ்சுவின் அலமாரியை திறந்தான். இதுநாள் வரை அவள் என்ன வைத்திருக்கிறாள் என்று எதுவுமே கண்டுகொண்டதில்லை.

என்ன தேடுகிறோம் என்ற ஒரு ஐடியாவே இல்லாமல் உடைகளை தள்ளி பார்த்தான். கீழ்வரிசையில் இருந்த காலணிகளை தூக்கி பார்த்தான். கைப்பைகளை நோண்டினான். மேல் தட்டில் சில பட்டு புடைவைகள் இருந்தன. எக்கி அவற்றின் அடியில் துளாவினான். கையில் ஒரு பேப்பர்  தட்டுப்பட்டது. அதே சமயம் இவன் துளாவியதில் ஒரு பேப்பர் கீழேயும் விழுந்தது. இரண்டையும் எடுத்தான். திடீரென்று இதயத்துடிப்பு அதிகமாகியது. அவசரமாக அதைப் பார்த்தான்.

“தமிழ் முரசு” கட்டிங் ஒன்று. “ஸ்ரெயிட் டைம்ஸ்” கட்டிங் ஒன்று. பிரித்தான். படித்தான்.

இரண்டிலும்சிக்ஸ்த் அவென்யூவில் குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தையின் சடலம். நாய் கெளவிக் கொண்டிருந்தது” என்ற செய்தி வெளியாகியிருந்தது.

குடும்பத்தலைவி. சிறுகதை எழுத்தாளர். பேச்சாளர் மன்றத்தில் ஆர்வமுள்ளவர். சமூக அமைப்புகளின் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் உதவிகளை மகிழ்வோடு செய்பவர்

4 COMMENTS

 1. என்னே சஸ்பென்ஸ் அடடா! சிந்தனை மாற்றம் மலர்கள் இதழ்களை விரிப்பது போல் என்னே உவமை.

  சிறப்பான கதை!

  மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  -அ. முஹம்மது பிலால்

 2. கதையின் தொடக்க யுக்தி அபாரம்.! கதைகள் படித்து பலகாலங்களாகி விட்ட எனக்கு இத்தைகய தொடக்கம் புதிது.
  கதையின் உரையாடல்கள் இயல்பாகவும், சுவாரஸ்யம் கூட்டுவதாகவும் இருக்கிறது. suspense- ஆர்வத்தைக் கூட்டி ‘டபக்’ கென்று முடிந்த போது சிரிப்புதான் தாங்கமுடியவில்லை.
  படைப்பாளருக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here