மலேசியாவில் ‘பாப்பாவின் பாவலர்’ என்று அழைக்கப்படும் முரசு நெடுமாறன் அவர்களின் நீண்ட நாள் கனவாக இருந்த இம்மாநாடு மலேசியத் தலைநகராம் கோலாலும்பூரில் 08.06.18 அன்று நனவானது. 10.06.18 வரை நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டில் கனடா,பிரான்சு ,இலங்கை, தமிழ்நாடு ,சிங்கப்பூர்,அமெரிக்கா, மலேசியா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த கட்டுரையாளர்கள் பங்கேற்றனர். இம்மாநாடு புத்துலக வளர்ச்சிக்கேற்பத் தரமான குழந்தை இலக்கிய வளர்ச்சியை நோக்கி என்னும் கருப்பொருளைக் கொண்டது. தமிழகம் உட்படச் சிறுவர் இலக்கியம் நலிந்து வருகின்றபடியால் வளர்ச்சிக்கு வழி காணவேண்டி இம்மாநாடு கூட்டப்பட்டது பொருத்தமே. சிங்கப்பூரின் சார்பில் முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி “ சிங்கப்பூரில் சிறுவர் இலக்கியம் – நலிவும் நன்னிலை நோக்கிய நகர்வும் “ என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கினார். சிறப்புப்பேருரையையும் சேர்த்து அறுபது கட்டுரைகள் மின்நூலாக அச்சிடப்பட்டு ஆய்வடங்கல் குறுந்தகடாக வழங்கப்பட்டது.

பெரும்பாலான கட்டுரைகள் சிறுவர்களுக்குக் கற்பிக்கும் முறை பற்றிக் கூறின. சிறுவர்க்குக் கதை கூறும் பாட்டிகள் இன்று முதியோர் இல்லங்களில் இருக்கக் கதைகேட்க வழியின்றிச் சிறுவர்கள் உள்ளனர். இன்று கூறப்படும் நவீன உத்திகளை அறுபதுகளிலேயே பயன்படுத்திக் கதை கூறிய பழனிமாமாவின்( அறிவியல் முனைவர் வி.எம் பழனியப்பன்) கதைகூறல் குறித்த அரங்கம் சிறப்பாக அமைந்தது. வழக்கம்போலப் பேராசிரியர் சி.இ.மறைமலை அவர்களின் சிறப்புரையும், பேராசிரியர் கண.சிற்சபேசன் அவர்களின் நகைச்சுவைப்பேச்சும் செவிக்கு விருந்தாயின.

நவீனத் தொழில்நுட்பக்கருவிகளும், ஊடகங்களும் சிறுவர்களின் மொழி கற்கும் ஆர்வத்தைக் களவாடிவரும் அவலம் குறித்த கவலை பெரும்பாலான அரங்குகளில் எதிரொலித்தது. தமிழகத்திலிருந்து வந்த குழந்தைகள் நால்வரின் திருக்குறள் கவனகம் வியக்கவைத்தது.அனைத்திற்கும் மேலாகச் சிறுவர்களின் அபாரமான திறமையை வெளிக்காட்டுவதாய் அமைந்தது சிறுவர்களே படைத்த

கலைநிகழ்ச்சி. முதலில் செல்லவேண்டாம் என நினைத்த நான் மூன்று மணி நேரம் அக்கலைநிகழ்ச்சியைக் கண்டுகளித்ததும் அற்புதமான நிகழ்ச்சியைத் தவிர்க்க நினைத்த என் அறியாமையை எண்ணி வெட்கினேன். மேடைப் பொறுப்பை ஏற்றவர் மட்டும் கவிஞர் முரசு நெடுமாறனின் மகன். நிகழ்ச்சி நெறியாளர் முதல் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்ற சிறுவர்களின் நடிப்புத்திறன், பேச்சாற்றல், இசைத்திறன், மொழிவளம் என எல்லா அம்சங்களும் சிறுவர்கள் திறமைகளின் கருவூலங்கள் என்பதைப் பறைசாற்றின. திருவிழாக்கூட்டம் போல் இல்லாமல் மாநாடு இலக்கு நோக்கிய பயணமாகச் சிறப்பாக நடைபெற்றாலும் இனிவரும் மாநாடுகளில் குறித்த நேரப்படி மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் வண்ணம் செயலாற்றவேண்டும். சுருக்கமாகச்சொன்னால் இந்த மாநாடு வெற்றிகரமான மாநாடுதான்.

தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். மலேசிய, சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மிதிலைப்பட்டிக் கவிராயர்கள், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் – ஆழமும் அகலமும், புதுமைப்பித்தன் இலக்கிய சர்ச்சை உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

3 COMMENTS

  1. மிகச்சரியாகவும் மிகைப் படுத்தப் படாமலும் சிறந்த முறையில் எழுதப்பட்டுள்ளது இந்தக் கட்டுரை. முனைவர் ஸ்ரீலெட்சுமி அவர்களுக்கு நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரியதாகுக. வி.மு.ப..

  2. ஏழு நாடுகளின் கட்டுரையாளர்களில் ஒருவராய் நம் சிங்கைக்கு சிறப்பு சேர்த்த முனைவர் அவர்களுக்கு பேரக்குழந்தைகளைப் பேனும் பாட்டன்களில் ஒருவனாய் நன்றி நவில்கிறேன்.
    சிங்கையை முன்னிறுத்தி மாநாட்டில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கான பரிந்துரைகளை சமர்ப்பித்துத் திரும்பிய முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி அவர்களை மனமாரப் பாராட்டி, வாழ்த்துவதில் உளம் பூரிக்கின்றேன்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here