இசை, நடன விருந்து கவிதை

செவிகளின் பயன் இசையன்றோ!
விழிகளின் விருந்து நாட்டியமன்றோ!

கண்மூடி இசை பருக உள்ளம் உருகும்
விழி திறந்து நடனம் பார்க்க உவகை கொள்ளும்

இன்பத்தின் இரட்டைப் பிறவி இசையானால்
துன்பத்தைத் துரத்தி விரட்ட நடனம் வேண்டும்

சோகம் கொல்லும் சாகசம் இசைக்கு உண்டு
பெரு மோகம் கொண்டு மகிழ்ச்சியுற நடனம் உண்டு

மழலையின் மொழியிலும் பண் உண்டு
சிறு குழந்தையின் நடையிலும் நடனம் உண்டு

இசையும் நடனமும் இயைந்து இணைந்தால்
உடலும் உள்ளமும் மகிழ்வுராதோ!

இவையிரண்டும் இப்புவிமேல் போதுமப்பா
பிற இன்பம் தேடி சொல்வோமோ நானிலத்தில்!

சின்மயி
மார்ஷ்லிங் உயர்நிலைப்பள்ளி
தமிழ்மொழி நிலையம்

 

எங்கும் இருந்த இசை

காற்றின் கவிதையாய் மிதந்தாய்
இடியின் தாளமாய் இசைத்தாய்
மழையின் பாடலாய் தோன்றினாய்
அலையின் சுருதியாய் சேர்ந்தாய்

மீண்டும் குழந்தையாய் பிறந்தாய்
தாயின் தாலாட்டாய் வளர்ந்தாய்
இளமையில் நண்பனாய் வந்தாய்
பருவ மாற்றத்தில் இணைந்தாய்

காதலுக்குத் தூதாய் சிறகடித்தாய்
காதல் தோல்விக்கும் தோள்கொடுத்தாய்
எங்கும் இருந்த இசையே
எனக்குள் ஏனோ இறந்தாய்!

க விஷ்ணு 
கான் யெங் செங் பள்ளி

 

இசை நீ

ஸ்வரங்களில் எழும் ராகமாய் மட்டுமல்ல – நீ…
என் தேகத்தை தீண்டிச் செல்லும் காற்றாய் – நீ…
மலர்களை தேடும் வண்டுகளின் ரீங்காரமாய் – நீ…
மாதவர் மணிக்கரத்தில் வலையோசையாய் – நீ…
கொஞ்சி விளையாடும் குழந்தையின் மழழை மொழியில் நீ…
மேடு பள்ளம் பாய்ந்தோடும் அருவியின் சத்தமாய் நீ…
சோலையில் சாய்ந்தாடும் மரங்களின் அசைவில் அழகாய் – நீ…
செடி கொடிகளை வாழ்விக்கும் மழையின் இரைச்சலாய் – நீ …
இந்த பார் முழுதும் பரவசமாய் ஒலிக்கும்
ஓசை முழுதும் எழிலான இசை – நீ…

செந்தில்குமார் ஹரீஸ்வரன்
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்காக, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஆதரவோடு நடத்தப்படும் இணையத்தளம்.
www.ilamaithamizh.com

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here