தன் வரலாறு தெரியாத எந்த இனமும் தனக்கான வருங்காலத்தைத் தீர்மானிக்க முடியாது என்று சொல்வார்கள். அதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டுள்ளது கவிமாலை சிங்கப்பூர்.

கடந்த 10 ஆண்டுகளாக வளர்தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் தமிழ் மொழி விழாவில் அங்கம் வகித்து வருகிறது. அதிலும் நிறைவு நாள் அன்று நடக்கும் இறுதி விழாவை நடத்தும் அரிய வாய்ப்பையும் தொடர்ந்து பெற்றிருக்கிறது.

அவ்வாறு தமிழ் மொழி விழாவின் அங்கமாக முத்தாய்ப்பான நிறைவு நிகழ்வாகக் கவிமாலை நடத்தி வரும் நிகழ்வு, ‘தமிழ்ச் சான்றோர் புகழ் போற்றும் விழா’-வாக திரு.வி.க, மு.வ, நாமக்கல் கவிஞர், உ.வே.சா போன்ற அறிஞர்களின் புகழ் போற்றும் விழாக்களைச் சிறப்பாக நடத்திப் பெருமைச் சேர்த்திருக்கிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தமிழ்ப்பணியாற்றிய சிங்கை முகிலன், விக்டர், முருகு சீனிவாசன் ஆகிய மூன்று தமிழ்ச் சான்றோர் போற்றும் விழாவாகவும், 2017- ஆம் ஆண்டு செந்தமிழ்ச் செல்வர் திருநாவுக்கரசர் புகழ் போற்றும் விழாவாகவும் சிறப்பாக நடத்தியது.

கவிமாலையின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக நடந்தேறியது தமிழ்மொழி விழா 2018-ல் கவிமாலை நடத்திய கவிதைத் திருவிழா.

‘கவிமாலை’ தலைவர், இறை.மதியழகன்

சிங்கையில் வாழ்ந்து மறைந்த தமிழ்க் கவிஞர்களையும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மூத்த தமிழ்க் கவிஞர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் படைப்புக்களை மக்களுக்கு மறு அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்தம் உழைப்புக்குத் தக்க மதிப்பை வழங்குவது. இரண்டாவது, மாணவர்கள் மட்டுமே பங்கெடுக்கும் ஒரு கவியரங்கத்தை நடத்துவது என்ற இருநோக்கங்களுடன் நடந்த கவிமாலையின் இலக்கு என்னவாக இருக்க முடியும்? கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைத்து, நிகழ்காலம் என்ற பாலமாகச் செயல் படவேண்டியதும் அதன் மூலம் ஒரு இலக்கியத் தலைமுறைத் தொடர்ச்சியை உறுதி செய்வதையும் தவிர!

இப்பொழுது முதல் வரியை மீண்டும் படியுங்கள். “தன் வரலாறு தெரியாத எந்த இனமும் தனக்கான வருங்காலத்தைத் தீர்மானிக்க முடியாது.

தமிழ்மொழி விழாவின் ஒவ்வொரு நாளும் “வரலாறும் வரிகளும்” என்ற தலைப்பில் முழுக்க முழுக்க சிங்கப்பூர்க் கவிஞர்களையும், அவர்தம் படைப்புகள், வாழ்க்கை வரலாறு, அவர்தம் ஒரு கவிதை ஆகியவற்றைப் பதிவு செய்கிற ஆவணப்படத் தொடர்த் திட்டமாக நடத்தி பெரிய சாதனையை ஆர்ப்பாட்டமாக செய்து முடித்திருக்கிறது கவிமாலை.

அதன் அடுத்த பணிக்கு அமைதியாகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் கவிமாலையின் தலைவர் திரு.இறை.மதியழகன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அதன் தலைவர் திரு ஸ்டாலின் குணசேகரன், ‘உலகத் தமிழர் படைப்பரங்கம்’ என்று ஒரு தனி அரங்கத்தைத் தொடங்கினார். அதன் முதல் வருட அரங்கத்திற்கு “தமிழவேள் கோ.சாரங்கபாணி அரங்கம்” என்று பெயரிட்டிருந்தது.

அந்த அரங்கத்தின் சுவர்களில் வெளி நாடுகளில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்களின் புகைப்படமும், அவர்தம் தமிழ்ப்பணிகள் படைப்புகள் வாழ்க்கைக் குறிப்பு அடங்கிய ஒரு சுவர்ப்படம் வைப்பதென முடிவு செய்யப்பட்டது. தனிப்பட்ட முறையில் தான் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் வாழ்ந்த சுமார் தலா 5 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைச் சேகரித்து தரும் பணியை ஏற்று அந்தத் தகவல்களைச் சேகரித்துத் தந்த அந்த அருந்தொண்டுதான் இந்த வரலாறும் வரிகளும் ஆவணப்படத்தொடரின் தூண்டுகோலாகக் குறிப்பிடுகின்றார் இறை மதியழகன்.

அந்தக் குறிப்புகள் அடங்கிய சுவர்ப்படங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் உலகத் தமிழர் படைப்பரங்கத்தில் இடம்பெற்று வருவது நம் சிங்கப்பூர் இலக்கியத்திற்குக் கிடைத்த பெருமையல்லவா!

மேலும் கவிமாலை 200-ஆவது விழாவின்போது 2016- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முழுவதும் வானொலியில் மாணவர்களைக் காலையிலும் மாலையிலும் ஒரு நிமிடம் ‘தமிழை நேசிப்போம் கவிதை வாசிப்போம்’ என்ற தலைப்பில் உள்ளூர்க் கவிஞர்களின் கவிதைகள் 31-யையும், மொழி பெயர்க்கப்பட்ட அயல் நாட்டுக் கவிதைகள் 31, என்று 62 கவிதைகளை வாசிக்கச் செய்தது கவிமாலை.

2017-ஆம் ஆண்டு தமிழ் மொழி விழாவைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் மாதம் முழுதும், கவிமாலைக் கவிஞர்களின் சிறந்த சிந்தனைகளை ‘முத்திரை வரிகள்’ என்று இணையத்தில் வெளியிட்டு வந்தது. அதன் வழி, தமிழ் மொழி விழாவில் கவிமாலையின் பங்கு ஒரு நாள் நிகழ்வாக மட்டும் இருந்துவிடாமல், தமிழ் மொழி விழா நடைபெறும் ஏப்ரல் மாதம் முழுவதும் இருந்தது. “தினமும் ஒரு வெளியீட்டைச் செய்து, அதன் வழி மக்களுக்கு நல்ல கருத்துக்களைக் கொண்டு செல்ல வேண்டும், அதை இந்த ஆண்டும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இடையறாது மனதில் தோன்றித் தொந்தரவு செய்ததுதான் வரலாறும் வரிகளும் திட்டம் உருவான ரகசியம்” என்று பெருமிதம் கொள்கிறார் இறை.மதியழகன்.

அயராத உழைப்பும், எதிர்பார்ப்பை மீறிய ஈடுபாடும், செயல்திறனும் குழு உணர்வும் கொண்ட எந்தத் திட்டமும் வெற்றியடையும் என்பது திண்ணம். அதை மெய்ப்பிக்கும் வகையில் வரலாறும் வரிகளும் திட்டம் வெற்றியடைய சிங்கப்பூரில் இருந்து கவிஞர் இராஜு இரமேஷ் ஒருங்கிணைத்த ஒரு குழுவும் தமிழகத்திலிருந்து இயக்குநர் திரு ந. அன்பரசு இயக்கிய ஒரு குழுவும் அருந்தொண்டாற்றின.

கவிஞர் இராஜு இரமேஷ் ஒருங்கிணைத்த குழுவில் கவிஞர்களின் நூல்விவரம் மற்றும் இணைய உதவிகளை கவிஞர் அ.இன்பாவும், தகவல் சேகரிக்கும் பணியை கவிஞர் லலிதா சுந்தர் மற்றும் கவிஞர் இராணி உதயகுமாரும், வசன உரை தயாரிக்கும் பணியை ஆசிரியை உஷா மற்றும் கவிஞர் ந,வீ.விசயபாரதியும் திறம்படச் செய்தனர். மேற்கண்ட குழு திரட்டிய தகவல்களை சரிபார்க்கும் பணிகளை புதுமைத்தேனீ திரு. மா.அன்பழகன், ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால், முனைவர் சுப.திண்ணப்பன் மற்றும் கவிஞரேறு அமலதாசன் ஆகியோரடங்கிய குழு செய்து கொடுத்து திட்டக்குழுவிற்கு நல்வழிகாட்டியது.

இயக்குனர் திரு.ந.அன்பரசுவின் தொழில்நுட்பக்குழுவில் திரு.முருகேசன்  இணை இயக்கம் செய்திட, திரு.பாலமுருகன் மற்றும் திருமதி புனிதா  ஆவணப்படத் தொடருக்குக் குரல் கொடுக்க, படத்தொகுப்பை திரு சமுத்திரக்கனி  மேற்கொள்ள சிங்கை இலக்கியத்தின் அரிய பொக்கிஷமான வரலாறும் வரிகளும் உருவானது. மேலும் இணையம் தொடர்பான பணிகளை கவிமாலை இணையதளத்தை உருவாக்கிய திரு.செல்வமுரளி திறம்பட செய்துகொடுத்தார்.

இந்தப் பட்டியலில் இல்லாத, இந்த திட்டத்திற்கு மிகவும் பயன்பட்ட, சில பின்னணிகளைக் கூறவேண்டும்.

சிங்கை எழுத்தாளர் பற்றி சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வெளியிட்டிருந்த நூல், முனைவர் சுப. திண்ணப்பன், முனைவர் சிவகுமரன், ஆய்வாளர்கள் திரு கோட்டி முருகானந்தம், திரு வி.ஆர்.பி.மாணிக்கம் போன்றோர் சிங்கைக் கவிஞர்களின் படைப்புகளைப் பற்றி வெளியிட்டிருந்த நூல்கள் வாழ்க்கை வரலாற்றைச் சேகரிக்க உதவின.

திரு அருண் மகிழ்நன்  முன்னெடுப்பில் நிறைவேறிய ‘மின் மரபுடைமைத் திட்ட த்தின் மூலம் தேசிய நூலக வாரியத்தின் இணையத்தில் இருக்கும் சிங்கப்பூர்க் கவிஞர்களின் நூல்களின் மின் வடிவப் பதிவுகள் பெருமளவு பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆவணப் படத்திற்காக நூல்களின் முன் அட்டை, பின் அட்டைகளின் புகைப்படங்களை அனுப்பி உதவிய, தேசிய நூலக வாரியத்தின் திருமதி சுந்தரி, திட்டம் துவங்கி உடனே அதனை ஆதரித்து மீடியாகார்ப் மின்னியல் வெளியீடான “செய்தி”என்ற செயலியில் வெளியீடாக அன்றாடம் வருவதற்குப் பரிந்துரை செய்த நூலக வாரியத்தின் திரு அழகிய பாண்டியன், அன்றாடம் ஆவணப் படத்தைப் பெற்று வெளியிட்டு உதவிய திரு சபா முத்து நடராசன் ஆகியோர்கள் கவிமாலையின் நன்றிக்குறியவர்கள்.

வரலாறும் வரிகளும்போல பரவலாகப் பேசப்பட்ட, இன்னொரு அங்கம் மாணவர் கவியரங்கம். எதிர்கால உலகத்தை வழி நடத்தப் போகிறவர்கள் மாணவர்கள்தான். வள்ளுவரின் ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’ என்ற சொற்றொடர் வலிமை வாய்ந்த இந்த உண்மையைத்தான் உரக்கச் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

எனவே அவர்களுக்கு நம்மை விடப் பன்மடங்கு அறிவும், ஆற்றலும் இருக்கும். அந்த ஆற்றலை ஒரு வழிகாட்டுதல் மூலம் கொண்டு வர இயலும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் மாணவர்களை மட்டுமே வைத்து ஒரு கவியரங்கத்தை நடத்த வேண்டும் என்ற திட்டம் உருவானது. ஒவ்வொரு மாணவரையும் ஒரு கவிமாலைக் கவிஞர் பொறுப்பில் விட்டுக் கவிதை எழுதவும் வாசிக்கவும் பயிற்சி அளிப்பது என்பது, அந்த திட்டத்தின் ஒரு வரி விளக்கம். இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு, முக்கியக் காரணம் ஆறு கவிமாலைக் கவிஞர்கள், ஆறு மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அந்த ஆறு கவிஞர்கள்.
1 ந.வீ.விசயபாரதி
2 கருணாகரசு
3 கி.கோவிந்தராசு
4 கோ. கண்ணன்
5 இன்பா
6 மதிக்குமார்

ஆறு மாணவர்கள்.
1. ஆரபி
2. ரிஷி
3. தனுஸ்ரீ
4. ஸ்ரீநிதி
5. அரிஷா
6. ஜெனியா

ஒவ்வொரு மாணவரும் சுவையான வரிகளை மிகத் தெளிவான உச்சரிப்போடு மேடையில் படைத்தது பார்வையாளர்களின் மிகச் சிறந்த ஆதரவைப் பெற்றார்கள். அந்த மாணவர்கள் தொடர்ந்து கவிதைகளையும் கவிதை நூல்களையும் வாசிப்பதன் மூலம் தனது கவிதை ஆர்வத்தை உயிர்ப்போடு வைத்திருந்து நாளை சிறந்த கவிஞர்களாக வரவேண்டும் என்பதே கவிமாலையின் நோக்கம்.

 

முத்திரை வரிகள், வரலாறும் வரிகளும் என இரண்டு தமிழ்மொழி விழா தந்த வெற்றி மற்றும் புகழை கவிமாலையைத் தொடங்கி இன்றும் வழிகாட்டி வரும் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, கவிமாலைக் காப்பாளர் புதுமைத் தேனீ அன்பழகன், இதற்காக மிகக் கடுமையாக உழைத்த கவிமாலைச் செயற்குழுவினர், கவிஞர்கள், படக்குழுவினர், உதவிய உற்சாகப் படுத்திய மனம் திறந்து பாராட்டிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறார் திரு இறை.மதியழகன்.

“விழா மேடையிலேயே முனைவர் சுப.திண்ணப்பன், இது கவிமாலை நடத்திய மாபெரும் சாதனை” என்று பறைசாற்றியதும், முன்னாள் கொள்கை ஆய்வுக்கழக இயக்குனர் திரு அருண் மகிழ்நன் மின்னஞ்சலில் அனுப்பிய பாராட்டும் சிங்கப்பூர் சமாதான நீதிபதி திரு.தினகரன் அவர்கள் பாராட்டியதும் மறக்க இயலாது. மேலும் முகநூலில் திரு அழகிய பாண்டியன் விழா முடிந்த உடனேயே பாராட்டியது விருது பெற்ற அளவிக்கு மகிழ்ச்சியை நிச்சயம் தந்திருக்கிறது. அதைக் கவிமாலைக்கும் உழைத்த அனைவருக்கும் இதன் வாயிலாகப் பகிர்ந்து மகிழ்கிறேன்” என்கிறார் இறை.மதியழகன்.

“நான் நினைத்த விளைவு இன்னும் வரவில்லை. அது வருவதற்கு இன்னும் பல தொடர் முயற்சிகளும், பத்தாண்டுகள் காத்திருப்பும் தேவை. அந்த விளைவு நிகழுமாயின் அப்போதுதான் இந்த வெற்றியையும் புகழையும் முழுமையாக நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும். நாங்கள் எதிர்பார்க்கிற விளைவு கவிமாலைப் பயிற்சியால், திட்டங்களால் இன்னும் பத்தாண்டுகள் கழித்து திறமையும் தரமும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற கவிஞர்கள் சிங்கையில் உருவாகியிருக்க வேண்டும். அதற்கு அந்த மாணவர்கள் தொடந்து கவிதைகளை வாசிக்க வேண்டும்” என்று நம்பிக்கையோடு இறை மதியழகன் தொடர்கின்றார்.

“சமுதாயத்தில் நாம் நினைக்கிற நல்ல விளைவுகள் நடக்க வேண்டும் என்றால் திருப்தியடையாத தொடர் முயற்சிகள் தேவை என்ற எண்ணத்தில் தோன்றிய வரலாறும் வரிகளும் ஏற்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு முதல் படிதான். இன்னும் பல்வேறு முயற்சிகளால் பலரும் அதைப் பயன் படுத்தும் விதத்தில்தான் அதன் வெற்றியிருக்கின்றது. உதாரணமாக தேசிய நூலகத்தால் நடைமுறைப் படுத்தப்பட்ட ‘மின் மரபுடைமைத் திட்டம்’ சில ஆண்டுகளுக்கு முன்பு அமல் படுத்தப்பட்டிருந்தாலும் அதன் பயன் பாடு குறைவாகவே இருந்தது. கவிமாலை இப்போது ‘வரலாறும் வரிகளும்’ என்ற திட்டத்தின் மூலம் அந்தக் களஞ்சியத்தில் உள்ள கவிஞர்களின் நூல்களைத் தனியாகக் கவிமாலை இணையத்தளத்தில் பட்டியல் இட்டு, சிங்கையின் அனைத்துக் கவிஞர்களின் கவிதை நூல்களையும் ஒரே இடத்திலிருந்து படித்துப் பயன் பெறும் வகையில் வசதி செய்திருக்கின்றது.

அந்தவகையில் இந்தத் திட்டம் சிங்கை மாணவர்களும் மற்றவர்களும் கவிதைகளை வாசிக்கவும், உலகில் உள்ள அனைவரும் சிங்கைக் கவிஞர்களைப் பற்றியும் அவர்தம் படைப்புகளை ஆராய்ச்சி செய்யவும் ஒரு நல்ல இணைப்புப் பாலமாக அமைந்திருந்திருக்கின்றது.

இதை கவிமாலை நமது சிங்கைக் கவிஞர்களின் சிந்தனை உழைப்புக்கு அளிக்கும் நன்றிக் கடனாகவும் பதில் மரியாதையாகவும், அவர்கள் அனைவர் உழைப்பையும் ஒருசேரக் கட்டிச் சிங்கை மக்களின் கைகளில் அன்பளிப்பாக வழங்கியதாகவும் கருதிப் பெருமை கொள்கிறோம்.

“வரலாறும் வரிகளும்” ஆவணப் படங்களையும், அவர்தம் படைப்புகளையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தொடர்ந்து காட்டி அதன் மூலம் அவர்கள் சிங்கை இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிக்க வழிகாட்டி உதவ வேண்டும் என்பதை, இங்கு ஆசிரியர்களுக்கு கவிமாலையின் தாழ்மையான வேண்டுகோளாக முன் வைக்கிறேன்.

இளைஞர்களின் மாணவர்களின் கவனத்தை தமிழ் இலக்கியத்தின் பக்கம் திருப்பி அவர்களைத் தொடர்ந்து கவிதை வாசிக்க வைக்கும் வகையில் அடுத்தடுத்த திட்டங்களை உருவாக்கி நடை முறைப்படுத்த எண்ணம் இருக்கிறது.

பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு வேலைவாய்ப்பு என இப்படி பல்வேறு கட்ட வாழ்க்கைப் படிகளில் முன்னேறிச் செல்லும் இளைஞர்களிடம் தமிழ் இலக்கியம் மற்றும் கவிதை ஆர்வத்தை உருவாக்கி உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் எனபது ஒரு மிகப் பெரிய சவால், அந்தச் சவாலுக்கான தீர்வாகக் கவிமாலையின் திட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்”

இவையெல்லாம் கவிமாலையின் தலைவரான இறை.மதியழகனின் எண்ணங்கள், கனவுகள், இலக்குகள்!

கவிமாலையின் அந்த நல்விருப்பம் நிறைவேற மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

நவீன வாழ்க்கையையும் தொன்ம வாழ்வின் அதிசயங்களையும் தன் கவிதைகளில் பிரதி எடுப்பவர். சமீபத்தில், ஆனந்த விகடனில் வெளியான அவருடைய கவிதை அதற்கு ஓர் உதாரணம். சிங்கப்பூர் தேசியப் புத்தக மேம்பாட்டு மன்றத்தின் தங்கமுனைப் போட்டியில், இவருடைய கவிதை, 2015ம் ஆண்டு ‘மதிப்பிற்குரிய’ குறிப்பிடலைப் பெற்றது.

1 COMMENT

  1. தங்கமீனின் தொடக்க நாளிற்குப்பின்னரே, சிங்கையின் தமிழமைப்புகள் பற்றி அறிந்த நான் கவிதையில் நாட்டமில்லாததால் அண்ணன் அன்பழகனாரின் மேலுள்ள அன்பாலும், அதன் வழி அன்னாரின் அமைப்பின் மேலுள்ள ஈர்ப்பாலும், மாதத்தின் கடைசி சனிக் கிழமைகளில் கவிமாலைக்குச் சும்மா சென்று வந்தவன்.
    ‘பூவோடு சேர்ந்த நாறும் மனம் பெற’ என்னில் பொருமையின்றி எனக்குத் தெரிந்த கதை படைப்பதிலேயே இப்பவும் என் கவனம். அன்று நான் சந்தித்து வந்த தம்பி மதிக்குமார் போன்ற எத்தனையோ கவிஞர்களின் கரம் பிடித்து நடைபயிலச் செய்த அண்ணன் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் விதை விருட்சமாகி தமிழ்ப் பருகுவோருக்கு நிழல் தந்து தமிழமுதம் படைக்கும் வல்லமை தந்த வரலாற்றை வளமாக்கும் முயற்சியில் இன்று முன்னிற்கும் அத்தனை தமிழிதயங்களையும் வாழ்த்திப் போற்றுகிறேன். தங்களின் முயற்சி திருவினையாக வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here