தமிழ்மொழி விழா 2018ல், இந்தியக் கலைஞர்கள் சங்கம் நடத்திய ‘கண்ணன் தூது’ நாடகத்திற்கு வசனம் எழுதியுள்ளார் செல்வி.அஷ்வினி செல்வராஜ். கதை, கவிதை என பல திசைகளிலும் சிறகு விரிக்கும் அவருக்கு, நாடக வசனம் – புதிய திசை. அந்த அனுபவம் எப்படி என்ற கேள்விக்கு, அவரிடமிருந்து கிடைத்த பதில்கள் இவை …

சிங்கப்பூர் இந்தியர் கலைஞர் சங்கத்தின் உறுப்பினரான கார்த்திகேயன் தொலைபேசியின் மூலமாக என்னைத் தொடர்புகொண்டு, “தமிழ்மொழி விழாவின்போது, கலைஞர் சங்கத்தின் நிகழ்ச்சியில் ‘கண்ணன் தூது’ நாடகம் அரங்கேறவிருக்கிறது, வசனங்களை எழுதித்தர முடியுமா?” என்று கேட்டார். அது எனக்கு மனமகிழ்ச்சியை கொடுத்தாலும், ‘படிப்பையும் புறப்பாட நடவடிக்கையையும் சமாளித்துக்கொண்டு வசனங்களை எழுதி முடிக்க இயலுமா’ என்ற சிறு அச்சம் இருந்தது. நாடகம் மேடையேறுவதற்கு இரண்டு மாதங்களே இருந்தன. இருப்பினும், ‘செய்கிறேன்’ என்று ஒப்புக்கொண்டேன்.

நாடகத்திற்கு வசனம் எழுதுவது எனக்கு மிகவும் மனநிறைவை அளித்தது. தமிழில் எதை எழுதினாலும், அதைப் பள்ளிப்பாடங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய பழக்கம் எனக்குண்டு. அரசியல் பாடத்தில் கற்றுக்கொடுக்கப்பட்ட சிலவற்றை, பாரதப் போருடன் தொடர்புபடுத்திப் பார்த்தபோது, புதுமையான கண்ணோட்டங்கள் கிடைத்தன (just war theory, geopolitical wars). அந்தக் கண்ணோட்டங்கள் எழுதுவதை சுவாரசியமானதாய் மாற்றியமைத்தன. மன்னர்கள் ஆண்டபோது நிலவிய அரசியலின், இன்றைய தொடர்ச்சிகளையும் மாற்றங்களையும் ஆராய்ந்து பார்ப்பது ஜாலியாகத்தான் இருந்தது!வசனம் எழுதும்போது, ஊர்களின் சமஸ்கிருத பெயர்களைக் குறித்தும், எந்த தகவல்களை சேர்க்கவும் நீக்கவும் வேண்டும் என்பது குறித்தும்தான் பெரும்பாலாக சந்தேகங்கள் இருந்தன. அதைத் தீர்க்க, மகாபாரதம் குறித்த புத்தகங்களிலிருந்து தரவுகளைத் திரட்டிய ஆய்வுக்குழுவினை இயக்குனர் உருவாக்கியிருந்தார். ஆய்வுக்குழுவினருடன் இருந்த ‘வாட்ஸ்ஆப்’ குரூப்பில் சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்திக் கொண்டேன்.

அத்தோடு வயதில் மூத்தவர்கள் பலர், என்னைப் பலவகைகளில் ஊக்கப்படுத்தி, வசனங்கள் மெருகேற உதவினார்கள். குறிப்பாக நாடகத்தின் இயக்குனர், வசனங்களை எவ்வாறு செம்மைப்படுத்தலாம் என்று பல கோணங்களில் சிந்தித்து, அதை என்னுடன் கலந்தாலோசிப்பார். நானும் அந்த யோசனைகளை உள்வாங்கிக்கொண்டு வரிகளாக எழுதிவிடுவேன்.

முக்கியமாக, ஒத்திகையின்போது, வசனங்கள் குறித்த இயக்குனரின் பார்வை எத்தகையது என்பதைக் கற்றுக்கொண்டேன். ஏனென்றால், கண்ணன் தூதில் நிகழும் வாக்குவாதங்களில், எந்த வரிகள் சட்டென்று வரவேண்டும், எந்த வரிகள் (நாடகத்தில் முக்கியமானவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுவதால்) அழுத்தமாக, நிதானமாக வரவேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

அரங்கேற்ற நாளன்று இரண்டு தேர்வுகளை எழுதி முடித்துவிட்டுதான் நிகழ்ச்சிக்குச் சென்றேன். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நாடகத்திற்கு மட்டுமல்ல, தமிழ் சார்ந்தவற்றில் ஈடுபடும்போது, அதற்கு சில எதிர்ப்புகள் வரும். அவற்றுக்கெல்லாம் பதில்கூறும் விதமாக வசனங்கள் அமைந்தது, எனக்குத் தனிப்பட்ட வெற்றி. நாடகத்தை பார்த்தபோது, எனக்கே சில இடங்களில் புல்லரித்தது. நாடக மேடையில் வசனங்கள் பேசப்படும்தான், எழுத்தின் வீரியம் விளங்கியது.

இந்த நாடகத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. நாடகம் முடிந்ததும் ரெ.சோமசுந்தரம் ஐயா, வசனங்களின் இலக்கணம் குறித்து சில கருத்துகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அவை மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. அடுத்தமுறை வசனம் எழுதும்போது, இலக்கணத்தில் அதிக கவனம் செலுத்தவும், வசனங்கள் மேலும் செழுமை பெறவும் அந்தக் கருத்துகள் துணைபுரியும்.

தற்போது தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவையின் இளையர் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஜூலையில் மாநாடு நடைபெறவுள்ளது. அதிலும் பொறுப்பில் இருக்கிறேண். தனிப்பட்ட முறையில் தமிழோடு பயணிக்கவேண்டும், அது எந்த தளத்தில் இருந்தாலும் சரி, சரியான வாய்ப்புகளை நோக்கி நகர்வது அவசியம் என்று நினைக்கிறேன். அந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, அதற்கான உழைப்பைக் கொடுத்தால், நிச்சயம் பலன் உண்டு என்பதை இந்த தமிழ்மொழி விழா எனக்கு உணர்த்தியுள்ளது. ஆதலால், தொடர்ந்து தளராமல் உழைப்பேன் .. என்று சொல்லி முடிக்கிறார் அஷ்வினி.

திறமையுள்ளவர்களுக்குப் பலரும் வாய்ப்புக் கொடுக்கத் தயாராக இருக்கும் நிலையில், தனக்கு உகந்தது எது என்பதைப் பற்றிய தெளிவோடும் அப்படித் தேர்வு செய்யும் இலக்குகளை நோக்கிக் கடினமாக உழைக்கும் மனதோடும் இருக்கிறார் அஷ்வினி. தெளிவோடு நடப்பவர்களுக்கு எல்லாத் திசையும் கிழக்குதானே?

புகைப்படங்கள்: அஷ்வினி செல்வராஜ்

தங்கமீ பதிப்பகம், தங்கமீன் இணைய இதழ், தங்கமீன் கலை இலக்கிய வட்டம் இணைந்த குழுமம்.

2 COMMENTS

  1. சிறப்பு ! அஸ்வினியின் தமிழ்ப்பயணம் மேலும் சிறக்க வாழ்த்துகள் !

  2. //தெளிவோடு நடப்பவர்களுக்கு எல்லாத் திசைகளும் கிழக்குதானே// உண்மை.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here