“இந்த இடுப்பு அளவை மட்டும் கொஞ்சம் லூஸ் பண்ணி தர்றீங்களா?” என்ற பெரியவரின் கையில் இருந்த பேண்ட்டை வாங்கி உடம்பு சரியில்லை என்று வந்த பேஷண்ட்டை பார்க்கும் டாக்டர் மாதிரி ஊடுருவி பார்த்த படி “அட்ஜஸ்ட் பண்ணிக்கிற மாதிரி வச்சுதான் தைச்சிருக்காங்க! ஊருல இருந்து தைச்சிட்டு வந்ததுங்களா?” என்றபடி இடுப்பு அளவை எடுத்துக்கொண்ட இளவழகன் “சாயாங்காலம் ஆறு மணிக்கு வந்து வாங்கிக்கோங்க!” என்றார்.

“சாயங்காலம் வர நேரமில்லை ருத்ர காளியம்மன் கோவிலுக்கு ஒரு உபன்யாசம் கேட்க போறேன். நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன் கூலியை கொடுத்திட்டு போயிடறேன். இந்தாப்பா இரண்டு வெள்ளி…”என்று நோட்டை நீட்டிய பெரியவரிடம், “கூலியை நீங்க துணி எடுக்கும்போது கொடுத்தால் போதும். இப்ப ஆல்டரேஷனுக்கெல்லாம் மூணு வெள்ளி வாங்கறோம். அதுவுமில்லாமல் வெட்டி உயரத்தை குறைக்கிறதுன்னாகூட பரவாயில்லை. இது முழுக்க பிரிச்சு அப்புறம்தான் தைக்க முடியும்.” என்று சொல்லிவிட்டு, அந்த பேண்ட்டை மடித்து தையல் மெஷினுக்கு அருகே வைத்திருந்த அட்டைப் பெட்டிக்குள் வைத்தார் இளவழகன்.

இளவழகன் என்ற பெயரைப் படித்து ஏதோ இளம் தையல் தொழிலாளியோ என்று நீங்கள் நினைத்தால், ஏமாந்து போவீர்கள்! வழமையாக தேக்கா வருபவராக நீங்கள் இருந்து, காளியம்மன் கோவிலில் சாமியை கும்பிட்டு விட்டு முஸ்தபாவில் சாமான் வாங்கவோ அல்லது பெருமாள் கோவிலுக்குச் செல்லவோ சிராங்கூன் சாலையில் நடக்கும்போது, நடக்க முடியாத பெரியவர் ஒருவர் இந்து ரோடுக்கு முன்னர் இருக்கும் ஆயத்த ஆடை கடை வாசலில், துணிகளைத் தைத்தபடி இருப்பதைப் பார்த்திருக்க முடியும்.

எப்போதும் தைத்துக்கொண்டிருப்பார். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கள் என்றால், சாப்பிடக்கூட நேரம் இருக்காது. காப்பியையோ அல்லது ஒரு டீயையோ இடைஇடையே குடித்தபடி, வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் இளவழகனின் தையல்மெஷினில், மோட்டார் இருந்தாலும் காலினால் மிதித்தபடி தைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

சில இரவுகளில் அந்த ஆயத்த ஆடை கடை பூட்டிய பின்னர்கூட வாசலில் தைத்துக் கொண்டிருப்பவர், வேலை முடிந்தபின்னர் மெஷினைக் கடை வாசலில் வைத்து மூடிவிட்டு, துணிகளைத் தன் கையுடன் எடுத்துச் செல்வதை, என்றாவது நீங்கள் பார்த்திருக்கலாம். எனவே, தெருவோரக் கடையாக இருந்தாலும் நீங்கள் நம்பி கொடுக்கலாம்; உருப்படிகள் உருப்படியாக இருக்கும்!

அன்று தேக்கா மார்க்கெட்டில் சாப்பிட்டுவிட்டு, சிராங்கூன் சாலையில் நடக்க ஆரம்பித்த இளவழகன் “என்ன பெரியவரே இன்றைக்கு கடை லீவா?” என்று கேட்ட குரலை பார்த்துத் திரும்பியவர், அது எப்போதோ தன்னிடம் துணி தைத்த பழைய வாடிக்கையாளர்களில் ஒருவர் என்பதை கண்டு, “நமக்கெல்லாம் ஏது தம்பி லீவு? எம் பொஞ்சாதி இறந்தப்போகூட மூணு நாள் கடை லீவுன்னு அட்டையில் எழுதி மெஷினில் ஒட்டி வச்சுட்டு, நான்காம் நாள் கடைக்கு வந்திட்டேன்!” என்றவரை சற்றே துணுக்குற்றுப் பார்த்தார் கேள்வி கேட்டவர். ‘அடடா இவரின் சோகம் தெரியாமல் கேட்டுவிட்டோமோ!’ என்ற மன உறுத்தல் ஏற்பட்டு அதற்காகவேணும் அவரிடம் நாலு வார்த்தைகள் பேச வேண்டுமே என்று அவருக்குத் தோன்றி இருக்கவேண்டும் …

“என்னா வெயிலு…” என்கின்ற மாதிரி “எவ்வளவு வருடங்களாக தையல் கடை வச்சிருக்கீங்க?” என்று கேட்டார்.

“அது இருக்கும் தம்பி, இருபது வருடங்களுக்கு மேல்…”

“ஆமா, நான் பார்க்க ஆரம்பித்த பத்து வருடங்களாக இருக்குதுன்னா, அதுக்கு முந்தியும் இருந்திருக்கும்தானே! சேவா எல்லாம் போக, கட்டுபடியாகுதா? இரண்டு வெள்ளி, மூன்று வெள்ளின்னு பொறுக்கி சேர்க்க வேண்டுமே!”

“சொன்னா நம்ப மாட்டீங்க … நான் முதன் முதலாக இந்தத் தெருவோர தையல் கடையை ஆரம்பிச்சப்போ, இந்த மிஷினைக்கூட அப்போ கடை வச்சிருந்த பெரியவர்தான் வாங்கித் தந்தார். ஆரம்பத்தில், அவங்க சின்ன சின்ன வேலைகளைப் பார்த்துக் கொடுத்து மிஷின் பணத்தை கழித்தேன். அப்புறமும்கூட, சில வருடங்கள் வாடகை கொடுக்காமல் சும்மாதான் அந்த இடத்தில் கடை வச்சிருந்தேன். வாடகை எல்லாம் ஏற ஆரம்பிச்சதும் கடையோட முதலாளிகளும் மாற ஆரம்பிச்சாங்க. ஒருத்தர் கரண்ட் செலவுக்கும் பராமரிப்புக்கும் தினம் இரண்டு வெள்ளிகள் வாங்க ஆரம்பித்தது… இன்னிய தேதிக்கு தினம் 30 வெள்ளின்னு வந்து நிக்குது!”

“மாசம் தொள்ளாயிரம் வெள்ளியா? கஷ்டமா இருக்குமே… ”

“அதெல்லாம் இல்லை தம்பி. தினமும் முதலில் சேருகின்ற பணத்தில் முப்பது வெள்ளிகள் எடுத்து வச்சிடுவேன். அப்புறம்தான் என்னோட செலவுக்குன்னு கையை வைப்பேன். மறுநாள் காலையில் கடை திறக்க வரும்போதே அதை கடைக்காரங்க கணக்கில் போட்டு விட்டுத்தான் வந்து கடையை திறப்பேன். இப்பக்கூட, இங்கே இருக்கிற மிஷினில் முப்பது வெள்ளியை போட்டுட்டு, இரண்டு தோசையும் ஒரு கோப்பியும் குடிச்சிட்டுதான் கடைக்கு போயிட்டிருக்கேன்!” என்றபடி கடையை நோக்கி நடையை கட்டிய இளவழகனுக்கு, வழக்கமாக வாடிக்கையாளர்கள்தான் ஒன்றிரண்டு பேர் காத்திருப்பார்கள். அன்று இவருக்காகவே காத்திருந்த மாதிரி, வாசலில் நின்ற கடைப்பையன், “சின்ன பாஸ் வந்திருக்கார். நீங்க வந்த உடன், உங்களை உள்ளே வரச் சொன்னார்.” என்று முதலாளியின் மகன் வந்திருப்பதை சொன்னான்.

“பெரிய முதலாளி வந்திருக்கார்ல?” என்று கேட்ட இளவழகனுக்கு சற்று குழப்பமாக இருந்தது. வாசலில் துணி தைத்துக் கொண்டிருக்கும்போது கடைக்குவரும் சின்ன முதலாளி, சிறு புன்னகை சிந்துவதுடன் சரி. கடை வாடகையை தினமும் வங்கியில் போட்டு விடுவதால், அதுகுறித்து அவர்கள் கேட்பதுகூடக் கிடையாது. சம்பிரதாயமாக, மாதம் இரண்டு முறை வங்கி ரசீதுகளை ஊசியால் கோர்த்து பெரிய முதலாளியிடம் கொடுப்பதை, அவரும் வாங்கி வைத்துக் கொள்வார் . இதுவரை கூடுதல் குறைவென்று எதுவும் சொன்னது கிடையாது. இன்றைக்கு எதுக்கு தனியே அழைக்கின்றார்? அதுவும் இருவரும் சேர்ந்திருக்கும் போது…. இவையெல்லாம் இளவழகன் மனதில் நொடியில் தோன்றி மறைந்த எண்ணங்கள்.

கடையின் உள்ளே ட்ரயல் ரூம் அருகே சின்னதாக ஒரு தடுப்பு உண்டு. கடை முதலாளி சாப்பிடுவதும் எப்போதாவது மதியவேளைகளில் சின்னதாக தூங்குவதும் அங்கேதான்…

“வாப்பா இளா .. உன்கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசணும்னுதான் இன்னிக்கு சீக்கிரம் கடைக்கு வந்தோம்.” இப்படி சொன்னது பெரிய முதலாளி.

“நீங்க சொல்லி இருந்தால் நானே வீட்டுக்கு வந்திருப்பேனே.. கொஞ்ச நாளாக வீட்டில் ஓய்வில் இருந்த நீங்க எதுக்கு வரணும்!”

“அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்… பல வருடங்களில் பல முதலாளிகள் மாறியும், கடை பேரும் வாசலில் கடை போட்டிருக்க நீங்களும் மட்டும் மாறலைன்னு.”

“உண்மைதாங்க! எனக்கு சொந்தம்னு சொல்லிக்க ,உங்களுக்கு அப்புறம் இந்த மெஷினும் என்னோட வாடிக்கையாளர்களும்தாங்க!”

“ஆனா… காலம் மாறிட்டிருக்கு பாருங்க. நாங்களும் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கு!” என்று பெரிய முதலாளி நிறுத்த, “இன்றைக்கு நாங்க இந்த இடத்துக்கு கொடுக்கின்ற வாடகைக்கு, நீங்க தினமும் கொடுக்கின்ற முப்பது வெள்ளியால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், சனி, ஞாயிறு, உங்க மிஷினைச் சுத்தி நிக்கிற கூட்டத்தால், எங்க கடையே வெளியே தெரிய மாட்டேன்குது. எங்களுக்கு இதனால ஏகப்பட்ட நஷ்டம்னுதான் சொல்லணும். போன வாரம் என்னைய பார்க்க கடைக்கு வந்த என்னோட ப்ரெண்ட், டாக்ஸியில் வந்து, கடை தெரியாமல் முஸ்தபாகிட்டேப் போய் இறங்கி போன் செய்தான். நான் போய் கடைக்கு கூட்டிட்டு வந்தேன். ‘இந்த கடையைப் பார்த்திட்டுத்தான் போனேன் … ஆனா அந்த டெய்லர் மட்டும்தான் தெரிந்தார்’னு சொன்னான் . இப்படி எத்தனை கஸ்டமர் வந்து கடை தெரியாமல் திரும்பி போனார்களோ!”

பெரிய முதலாளி குறுக்கிட்டு, “பாவம் இளா! அந்தக் காலத்து ஆசாமி. அவருக்கு இதெல்லாம் எங்கே தெரிய போகுது. அதாம்பா, நீ வேற இடம் பார்த்துக்க என்று சொல்லத்தான் உன்னை அழைச்சோம். கடையைப் புதுப்பிக்கும் வேலையை, பையன்கூட ஸ்டேட்ஸ்ல படிச்ச ஒருத்தர்தான் இன்டீரியர் டெக்கரேஷன் எல்லாம் செய்யப் போறார் ! அவர் வந்து பார்த்திட்டு சொன்ன முதல் சேதியே, இந்த பழைய தையல்மிஷினை அப்புறப்படுத்தினால்தான் கடைக்கு லுக் வரும்கிறதுதான்!”

உள்ளே எட்டிப்பார்த்த கடைப்பையன் “அண்ணே.. உங்களைத் தேடி ரெண்டு மூணு பேர் ஆல்டரேஷனுக்கு வந்திருக்காங்க. நான்தான் வெயிட் பண்ணச் சொல்லி இருக்கேன்.” என்று சன்னமான குரலில் சொல்ல, இளவழகன் காதில் விழற மாதிரியே, “பார்த்தீங்கள்ல… காலையில் கடைக்கு வர்ற முதல் இரண்டு கஸ்டமரும், இப்படி பழைய துணி தைக்கிற கேஸாக வந்தால், நாம எங்கே புதுத்துணி போணி பண்றது?” என்று சின்ன முதலாளி முணுமுணுத்தது இளவழகன் காதுகளில் ஈட்டியாய்ச் சொருகியது.

“இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நீ மெஷினை வேற இடத்துக்கு மாத்திக்கப்பா. நம்ம இரண்டு பேருக்கும் அதான் நல்லது”

“இப்படி திடீரென்று சொன்னால் நான் எப்படி வேற இடம் பார்க்க முடியும்? இருபது வருஷமாக நான் பழகிய இந்த மனிதர்களை விட்டுட்டு வேற எந்த இடத்திற்கு போய் புதுசாக நான் தொழில் ஆரம்பிக்க முடியும்? கொஞ்சம் கருணை காட்டுங்கள்… வாடகை வேண்டுமானாலும் சேர்த்து தர்றேன்!” தழு தழுத்தார் இளவழகன் .

“பார்த்தீங்களாப்பா .. என்னமோ இருபது வருஷம் இளா அக்ரிமெண்ட் போட்டு வாடகைக்கு இருந்தமாதிரி, நீங்க நோட்டீஸ் விடாமல் என்னைய எப்படி போகச் சொல்ல முடியும்னு கேட்கிறதை!”

“தம்பி அந்த அர்த்தமெல்லாம் வச்சு நான் பேசல. இன்னைக்கே என்னைய போகச் சொல்றதுக்கும் கடமைப்பட்டவங்க நீங்கள். கடவுள் நல்ல வழி காட்டுவார். முன்னமே கஸ்டமர் வந்திருக்கதா பையன் சொன்னான். நான் போய் கவனிக்கறேன்.” என்று வாசலுக்கு வந்தார் இளவழகன்.

“யாரோ ஆல்டரேஷன் கஸ்டமர் வந்திருக்கதா சொன்னே .. ஒருத்தரையும் காணோமே, போய்ட்டாங்களா?” என்று கடைப்பையன் பக்கம் திரும்பிக் கேட்டார்.

“இல்லே அண்ணே.. நீங்க வர நேரம் ஆனதும், அவங்க ஏதோ குழந்தைகள் துணி எடுக்கணும்னு எடுத்திட்டு அங்கே பில் போட்டுட்டு இருக்காங்க பாருங்க!”
கேஷ் கவுண்டரை பார்த்த இளவழகனிடம் “அண்ணே என்னதான் ரெடிமேட் துணிகள் எடுத்தாலும், உங்ககிட்டே ஆல்டர் பண்ணலேன்னா போட்டுக்கொள்ள முடியலை. அதான் நீங்க வர்றதுக்குள் குழந்தைகளுக்கு எடுக்க வேண்டிய துணிகள் கொஞ்சம் எடுத்தேன்!” என்று ஒரு பெண்மணி சொல்ல, கூட வந்த இன்னொரு பெண்மணி “அண்ணே .. நாங்க இங்கே துணி எடுக்க வர்றதே, பல வருஷங்களாக நீங்க இங்கே தைச்சுகிட்டு இருக்கதால்தான்.” என்றார்.

இதனைக்கேட்டபடி பார்த்துக் கொண்டிருந்த அப்பாவும் மகனும் கண்களால் எதையோ பேசிக் கொண்டனர். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த, பூக்கள் அலங்கரிக்கபட்டு ஊதுபத்தி மணக்க இருந்த சிறிய சாமி சிலைக்கு, ‘கடவுள் விட்ட வழி’ என்று சற்று முன்னர் இளவழகன் பேசியதை கேட்ட மாதிரி இருந்தது.

இவர் மூத்த எழுத்தாளர். பல ஆண்டுகால எழுத்து அனுபவம் உள்ளவர். ஆனந்தவிகடன், குமுதம் உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கைகளும் இவருடைய நகைச்சுவைத் துணுக்குகளை வெளியிட்டுள்ளன. தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர்.

10 COMMENTS

 1. பூவும்,நாரும்
  இணைந்தால் தான் மாலையாகும்.
  ரெடிமேட் ஆடைகளும் அப்படித்தான்….

  சிறு துரும்பும் பல்குத்த உதவும்
  என்பதை அண்ணன் கீழையார் அருமையாக தனக்கே உரிய பாணியில் நேர்த்தியாக தொடுத்துள்ள மலர் மாலை!

  கடவுள் விட்ட வழி….

  • பூவும் நாரும் இணைந்தால்தான் மாலையாகும்! இப்படி சொலவடைகளை அடுக்க உங்களால்தான் முடியும் நன்றி ஜீ(பி)!

 2. முதலாளிகளின் மனவோட்டத்தைக் காட்டும் அருமையான கதை.

  • மிக்க நன்றி! தங்களது அன்பான பின்னூட்டத்திற்கு !

 3. ஒரு நாளுக்கு 30$ யா? புதிய தகவல் எனக்கு. தையல்காரர் ஒருவருக்கு இடம் மாறுதல் என்பது வருமானத்தைப் பொருத்தவரை மிகச் சவாலான ஒன்று தான். நல்ல சுவாரஸ்யமான கதை. ஒரே மூச்சில் படித்து விடலாம். ஆனால் முடிவு இன்னும் சற்று அழுத்தமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.

  • ஒரு நாளுக்கு 30 வெள்ளி என்பது நான் விசாரித்து உறுதி செய்து எழுதியதுதான்! முடிவு இன்னும் சற்று அழுத்தமாக இருந்திருக்கலாம் என்ற தங்கள் கருத்து எனக்கும் ஏற்புடையதே! தங்களின் பின்னூட்டத்திற்கு எனது அன்பான நன்றியை தங்கமீன் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் !

 4. அன்றாடம் தொழில் செய்வோரின்
  நிச்சயமற்ற நிலைமை
  தெளிவாக தெரித்தது..அருமை

  • தங்களின் பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!

 5. சாமானியனின் வாழ்வியலையும், பெருநகரச் சூழலையும் அழகாக இணைத்து கதையாக்கிய விதம் அழகு!…

 6. தன் எழுத்து வன்மையை மிக இயல்பான நடையிலான சம்பாஷனைகள் மூலம் கதையை நகர்த்தி வெளிப்படுத்தியது நண்பர் கதிருக்கு கைவந்த கலை.
  தினம் ஒரு கதை படித்திட தீர்மானித்ததால் ஜீவாவின் நேர்த்தியான சித்திரத்துடன் கூடிய இக் கதையை படிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன். இறுதியில் கஸ்டமர் மூலம் கடையின் வியாபாரத்தில் இளவழகனின் அவசியத்தை வெளிப்படுத்தி கதையை முடித்த வித்தை அவரது படைப்பாற்றலை பறைசாற்றுகின்றது. சபாஷ் நண்பா..!

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here