“என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை, என்னால் மட்டுமே முடியும் என்பது தலைகனம். நம்பிக்கைக்கும், தலை கனத்துக்கும் இடையில் உள்ளதுதான் தன்னம்பிக்கை”

“வாழ்க்கையில் நம்பிக்கை மிக அவசியம். அதுவும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் மிக அழகானவளாகிறாள். தன்னுடைய தன்னம்பிக்கையால் மற்றவர்களிடமும் ஆற்றல், வலிமை நம்பகத்தன்மை போன்றவற்றை உருவாக்குகிறாள்.

தன்னம்பிக்கை என்ற தலைப்பில் திருமதி ஜாய்ஸ் கிங்ஸ்லி அவர்கள் தேசிய நூலக வாரியத்தில் 25/05/18 அன்று வழங்கிய பேச்சில் இப்படிப்பட்ட பல நல்ல கருத்துகளைக் கேட்க முடிந்தது.

‘தன்னம்பிக்கையே அழகு’ என்ற தலைப்பில் பேசும்போது தன் வாழக்கையையும் அவர் விளக்கிப் பேசினார். கட்டுப்பாடும், கண்டிப்பும் நிறைந்த குடும்பத்தில் தாய், தந்தையர் சொல்லைத் தட்டாமல் வாழப் பழகியவர். தடகள வீராங்கனையாகவும், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமும், ஆற்றல்களும் இருந்தபோதிலும் பெற்றோரின் பேச்சை நிராகரிக்க முடியாமல் போனதைக் கூறும்போது அவருடைய கண்களில் வருத்தம் தெரிந்தது.

ஒரு சராசரிப் பெண்ணாக, கணவன், புகுந்த வீட்டிலுள்ளவர்களிடம் எவ்வாறு நல்ல பெயர் எடுப்பது போன்ற நடவடிக்கைகளை பெற்றோர் சொன்னதை கற்றுக்கொண்டார். பின்னர், கோயம்புத்தூர் மாப்பிள்ளையை திருமணம் செய்து, அழகான கூட்டுக்குள்  அன்பான, சந்தோஷமான வாழ்க்கையை வாழத் தொடங்கினார். இரு குட்டி தேவதைகளுக்குத் தாயானப்பின், தந்தையின் வியாபாரத்தை கவனிக்க தொடங்கினார். இப்படியே, சில வருடங்கள் உருண்டோடின.

குடும்ப நண்பரான ராஜ்குமார் சந்திரா (ஜோதி ஸ்டோர் உரிமையாளர்) ஜாய்ஸின் தந்தையைக் காண வந்திருந்தபோது, “நீ ஏன் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றம் மரபுடைமை சங்கத்தில்(லிஷா) சேரக்கூடாது” என்று ஜாய்ஸிடம் கேட்க, தனக்குப் பயம் ஏற்பட்டதைக் கூறினார். பின்னர், எல்லோரும் கொடுத்த ஊக்கத்தினால் லிஷாவின் கூட்டத்திற்கு செல்ல ஆரம்பித்து சில பல மாற்றங்களுக்கான யோசனைகளைத் தந்து, மற்றவர்களின் நம்பிக்கையைப் பெற்று துணைச் செயலாளராக பதவியேற்றார்,

அதோடு நில்லாமல் லிஷா அமைப்பினர் இன்னொரு பதவியையும் கொடுக்க முன் வந்தனர். அதுதான் லிஷாவின் துணைக்குழுவான லிஷா பெண்கள் பிரிவுக்கான தலைமைப் பொறுப்பு. அதை, ஆகஸ்டு 2012ம் ஆண்டு ஏற்றக்கொண்டதோடல்லாமல் தன்னுடன் 11 பெண்கள் கொண்ட நிர்வாக குழுவை அமைத்து, இதுவரை 150க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் படைத்து சாதனை படைத்து வருகிறார். இப்பொழுது  லிஷாவின் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

லிஷா அமைப்பாளர்களில் உந்துதலால் லிஷா பேச்சாளர் மன்றத்தில் சேர்ந்து, அதன் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள பேச்சாளர்களைப் பார்த்து, அரண்டு, மிரண்டுத்தான் போயிருக்கிறார். அங்குள்ளவர்களில் பாதி பேர் இலக்கணம் பிறழாமல், இலக்கிய நயத்தோடு, சுத்தத் தமிழில் பேசுவதைப் பார்த்தபின். மிரளாமல் இருக்க முடியுமா? எப்படியோ தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, தன் படைப்பைத் தயார் செய்தாலும் பயத்தில் மூன்று இரவுகள் உறங்காமல் இருந்து, தன்னுடைய பேச்சுப் படைப்பை படைத்து, “சிறந்த பேச்சாளர்” விருதையும் பெற்றுள்ளார். அது, அவருடைய தன்னம்பிக்கைகும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றி!

பின்னர் சமூக மன்றத்தில் C2E(Community Emergency and Engagement Committee) சேர்ந்து நிறைய சமூக சேவைகளை செய்ததை பாராட்டியோதல்லாமல், ஐந்து வருட சேவைக்கான விருதையும் கொடுத்து குடிமக்கள் ஆலோசனைக் குழு (CCC)யிலும் சேர்த்துள்ளனர்.  அதன் பின் இவரிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. பீஷான் தொகுதியில், குறிப்பிட்ட வட்டாரத்தில் குடியிருப்பாளரகள் குழு இல்லாததால் அங்கு இவரை தலைவர் பொறுப்பை ஏற்க செய்தனர். மனம் தளராத ஜாய்ஸ், தன்னம்பிக்கையோடு, பல சவால்களை சந்தித்து, இரவு நேரங்களில் தனியார் விடூகளில் உள்ள நாய்களின் குரைப்புகளையும் மீறி, தன் பயத்தைத் தன்னம்பிக்கையால் வென்று, 12 பேர் சேர்ந்த குழுவை உருவாக்கி, அது வெற்றியோடு நடத்திக்கொண்டிருப்பதைப் பார்வையாளர்களிடம் விவரித்தபோது அவருடைய கண்களில் பெருமிதம் கலந்த சந்தோஷத்தைக் காணமுடிந்தது.

தன்னை மேம்படுத்திக்கொள்ள “பணியிட திறன்கள் மற்றும் தகுதிகள்” பயிற்சி பட்டறையில் சேர்ந்து “சர்வதேச மற்றும் வணிக பாணி பயிற்சியாளராகவும், மேம்பட்ட வண்ண பகுப்பாய்வாளராகவும் பயிற்சி பெற்றிருப்பதை தெரிவித்தார்.  அதோடு ’A’ class Corporates என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

A class corporates-ன் நோக்கம், தனிநபர்கள், சமூக மற்றும்  வணிக சூழல்களில் உள்ளவர்கள் தங்களை எவ்வாறு நன்கு தன்னம்பிக்கை வளரத்துக்கொள்வது. அதற்கென வகுப்புகள் எடுப்பதாகக் கூறினார் ஜாய்ஸ்.

இவர், பெருநிறுவன தொழிற்முறை ஸ்தாபகர்களுக்கும், உயர் மேலாண்மை அதிகாரிகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக தலைவர்கள், பிரபலங்கள், இளநிலை கல்லூரி,உயர்நிலை மாணவர்கள் மற்றும் இளம் சிறார்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்.

வியாபார உத்திகளாக, எந்த மாதிரி ஆடை அணியவேண்டும், ஒருவரை சந்திக்கும்போது எப்படி வரவேற்கவேண்டும், கை குலுக்கும் முறைகள் மற்றும் வகைகள், பழகும் விதம், உணவு உண்ணும் விதம், உணவருந்தும்போது தட்டு, கண்ணாடிக் குவளை, கரண்டி மற்றும் முள் கரண்டிகளைக் கையாளும் விதம், அது மட்டுமில்லாமல், தனி நபரின் பெயர் அட்டையைக் கொடுப்பது மற்றும் பெற்றுக்கொள்ளும் முறை போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்தது வந்திருந்த அனைவருக்கும் உபயோகமாக இருந்தது.

No matter who you are, etiquette is about giving and taking respect- Joyce Kingsly

நீ யாராக இருந்தாலும், மரியாதை கொடுத்து, மரியாதையை வாங்குவதே நல்ல பண்பு – என்பதே, ஜாய்ஸ் கிங்ஸ்லி நிகழ்ச்சியில் சொன்ன முத்தாய்ப்பான செய்தியாக இருந்தது.

புகைப்படங்கள்: பாலக்கிருஷ்ணன் ராமநாதன்

ஆடை ஆபரணங்களை இணையத்தின் வழி விற்பனை செய்கிறார். யூஹூவா சமூக மன்ற இந்திய நற்பணி குழுச் செயலாளர். கவிஞர், எழுத்தாளர்.

1 COMMENT

  1. தன்னம்பிக்கையே அழகு. தலைப்பைப் போலவே செய்தியும் அழகு. வாய்ப்புகள் அனைவரையும் தேடி வருவதில்லை. அதேபோல தேடிவரும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    வாழ்த்துகின்றேன்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here