கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு ஒன்பதிருக்கும். சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருந்த போது தங்கையிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி:

‘இன்னிக்கு சிஎஸ்கே ஜெயிக்குமா?’

சாதாரணமாக இந்த மாதிரி நிறைய வாழ்க்கைத் தத்துவ விசாரங்களைப் பற்றி நாம் பதிலளித்து வந்தாலும், இக்கேள்வி கொஞ்சம் யோசிக்க வைத்தது என்பதுதான் உண்மை.

ஏனெனில் கேள்வி கேட்டது திருமணமாகி ஒரு வாரமே ஆன தங்கை – அதுவும் தேனிலவுக்கு மொரீஷியஸ் சென்றவள். அங்கே மாலை நேரக் கதிரவனின் கதிர்களில் நனைந்து, பொன்னிற கடற்கரை மணலில் மணாளனுடன் கைகோர்த்து நடக்க வேண்டிய பெண், சிஎஸ்கே பற்றிக் கேட்கிறாளே என்ற ஒரு விந்தை கலந்த ஆச்சரியமே இந்தக் கட்டுரையின் ஆரம்பப் புள்ளி.

ஐபிஎல்: கிரிக்கெட்டின்_ஊபர்

கிரிக்கெட் விளையாட்டு என்றவுடன் லிவர்பூல் காற்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராஃபேயல் பெனிடெஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, ‘அது என்னங்க, பொண்டாட்டிக்கிட்டே விளையாடிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனா, அஞ்சு நாள் கழிச்சு வருவது எல்லாம் ஒரு விளையாட்டா?’

வெள்ளை உடையணிந்து, பாரதிராஜா படத்தின் தேவதைகள் மாதிரி மெதுவாகக் காலையிலிருந்து மாலை வரை ஆடி ஓய்ந்து, மீண்டும் அடுத்த, அடுத்த, அடுத்த, அடுத்த நாள் என்று ஐந்து நாள் டெஸ்ட் ஆடி முடித்தவுடன் ‘யார் ஜெயித்தார்?’ என்றால், ‘மன்னிச்சிடுங்க! யாருக்கும் வெற்றி தோல்வியில்லை!’ அப்படின்னு சொன்னா வெறியேறுமா ஏறாதா, நீங்களே சொல்லுங்க!

இப்படிப்பட்ட ஒரு விளையாட்டை ஐந்திலிருந்து ஒரு நாளாகக் குறைத்து, பின்னர் அதுவும் மண்டையை ஓட வைக்க, அருமருந்தாய் வந்தது டி20 எனப்படும் மூன்று மணிநேர ஆட்டம். கிரிக்கெட்டின் முகம் அன்றிலிருந்து அடியோடு மாறியது என்பது உள்ளங்கை நெல்லி.

இதற்கிடையில் 2007ல் டி20 உலகக் கோப்பையை, வேண்டா விருப்பமாக இந்தியா அனுப்பிய ஓர் இளையர் அணி பளீரென்று வெல்ல, அதற்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பைக் கண்டு விழித்துக் கொண்ட கும்பகர்ண கிரிக்கெட் வாரியம், அவசர அவசரமாக இந்தியாவில் ஒரு டி20 லீக் போட்டித் தொடரை நடத்துவதாக அறிவித்தது. அது ஏறத்த்தாழ குறைப்பிரசவமாய் வந்த ஐசிஎல்-ஐ (இந்திய கிரிக்கெட் லீக்) ஒட்டியே அமைந்தது.

ஆனால் என்ன, ஐசிஎல்க்கு பணமும் குறைவு; அதிகாரமும் குறைவு. அதனால் எடுபடவில்லை. நம் வீட்டில் நாம் சொன்னால் வேலை நடக்காது. அதுவே மனைவி சொன்னால் நடக்குமில்லையா, அது போலத்தான்.

இந்திய கிரிக்கெட் வாரியம் தன் ரத கஜ துரகபதாதிகளைக் களத்தில் இறக்கியவுடன் பிறந்தது ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக். என்னடா, இங்கிலீஷ் பிரீமியர் லீக் போலவே பெயர் இருக்கிறதே என்றால், அத்தனையும் ‘மார்க்கெட்டிங் சாமி, மார்க்கெட்டிங்!’

 எட்டு நகரங்கள். (சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, தில்லி, சண்டிகர் – பஞ்சாப், ஜெய்ப்பூர் – ராஜஸ்தான்)
 அதனை ஒட்டிய நவீனப் பெயருடன் அணிகள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் – CSK
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – RCB
மும்பை இந்தியன்ஸ் – MI
சன் ரைசர்ஸ் ஐதராபாத் – SRH
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – KKR
தில்லி டேர்டெவில்ஸ் – DD
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – KXIP
ராஜஸ்தான் ராயல்ஸ் – RR
 ஒவ்வொரு அணிக்கும் அம்பானி, ஷாருக் கான், சன் டிவி, இந்தியா சிமென்ட்ஸ் என்று புகழ்பெற்ற முதலாளிகள்.
 கண்கவர் சீருடைகள்.
 உலகெங்கிலும் இருந்து வீரர்கள் ஏலம் மூலம் தேர்ந்தெடுப்பு.
 எல்லா வீரர்களுக்கும் இதுவரை காணாத அளவுக்கு சம்பளம்.
 இளம் இந்திய வீரர்களுக்குக் கரையில்லா வாய்ப்பு.
 விளையாட்டில் புதுப்புது உத்திகள்.
 ஏறக்குறைய இரண்டு மாதத் திருவிழா

ஊபர் நுழைந்திலிருந்து வாடகை வண்டி ஓட்டும் தொழில் புரட்சிகரமாக்கப்பட்டது என்று மேலாண்மை நிபுணர்கள் பக்கம் பக்கமாய் பனுவல்கள் எழுதியுள்ளனர். அதுபோலவே ஐபிஎல், கிரிக்கெட்டின் ஊபராய் கடந்த 11 ஆண்டுகளாய் ஆட்சி செய்து வருகிறது என்பதே உண்மை.

ஐபிஎல் – வளர்ச்சி & தன்னம்பிக்கை

ஏப்ரல் 18, 2008 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த அந்த முதல் ஆட்டத்திற்குப் பின் ஐபிஎல் கிரிக்கெட் உலகில் மட்டுமல்ல மொத்த விளையாட்டு உலகிலும் விண்ணுயர வளர்ந்து விட்டது.

2009ல் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற இருந்ததால் பாதுகாப்பு காரணமாக, ஐபிஎல் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்து. அப்போது அந்நாட்டு அதிபர், ஐபிஎல் காரணமாக தென்னாப்பிரிக்கப் பொருளாதாரம் சுமார் நூறு மில்லியன் வெள்ளி வளர்ந்தது என்று கூறினார்.

சும்மா வேடிக்கை பார்த்தவன் அரசன் ஆனது போல, ஒரு முறை நடத்திய தென்னாப்பிரிக்காவுக்கே இவ்வளவு லாபம் என்றால், ஐபிஎல்-ஆல் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட வளர்ச்சியை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம். 2015ல் நடந்த போட்டியால் இந்தியப் பொருளாதாரம் 230 மில்லியன் வெள்ளி உயர்ந்தது என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புள்ளிவிபரம்.

2014ல் உலகிலேயே ஆக அதிகமான பார்வையாளர்கள் காணும் விளையாட்டு லீக், 2010ல் உலகிலேயே முதல்முறையாக யூடியூபில் நேரடி ஒளிபரப்பான லீக் என்று பல்வேறு விதங்களில் வளர்ச்சி பெற்ற ஐபிஎல், தான் மட்டும் வளர்ந்தோடு இல்லாமல், இந்தியாவில் பிற விளையாட்டுக்கள் வளரவும் வழிகாட்டியது ஆச்சரியமில்லை. காற்பந்துக்கு இந்திய சாக்கர் லீக், ஹாக்கிக்கு இந்திய ஹாக்கி லீக் என்று பூவோடு சேர்ந்த நாராய் அவையும் மணம் பெற, மொத்தத்தில் விளையாட்டு ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

ஐபிஎல்-ஐத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள், ‘இது நல்லா இருக்கே? நாமும் செய்தால் கொஞ்சம் பணம் பண்ணலாமே!’ என்று யோசித்து ஆரம்பிக்க, இப்போது பங்களாதேஷ், இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என்று எல்லோரும் டி20 ஜோதியில் ஐக்கியமானாலும், ஐபிஎல் மட்டுமே இன்னும் பிரகாசமாக எரிகிறது; ஒளி கொடுக்கிறது.

ஐபிஎல்-இன் இந்த இமாலயப் பொருளாதார வளர்ச்சி ஒரு புறமிருக்க, அதைவிட முக்கியமாக ஒரு அனுகூலத்தை இந்தியக் கிரிக்கெட் பெற்றிருக்கிறது என்று கிரிக்கெட் வாழ் நல்லுலகம் கற்பூரம் அடித்துச் சொல்கிறது.

அது உண்மை என்றே சொல்ல வேண்டும்.

அதை அறிய நாம் கொஞ்சம் கணக்கு போடலாம்.

ஒரு அணியில் 25 வீரர்கள் வரை இருப்பர். அதில் 7-8 வெளிநாட்டு வீரர்கள் போக மீதம் 18 இந்திய வீரர்கள் – அதிலும் இளையர்கள் இருப்பர். மொத்தம் 8 அணிகளில் ஏறக்குறைய 150 இந்திய வீரர்கள், நன்கு பயிற்சி பெற்றுத் தயார் நிலையில் இருப்பதால், மாற்று ஆட்டக்கார்கள் இந்திய அணிக்குள் வரக் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் காயம் காரணமாகவோ, ஆட்டத்திறன் குறை காரணமாகவோ எந்த ஒரு விளையாட்டாளரை இழக்க நேரிட்டால், அதற்கு பதிலாக பல வீரர்கள் ‘நான் ரெடி!’ என்று கூறுவது எந்த அணிக்கும் சாதகமே.

இவர்கள் அனைவருக்கும் பன்னாட்டு வீரர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து பொருத வேண்டிய கட்டாயம், வியர்வை சிந்தி அணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம், அவர்களின் திறமைகளை அருகில் இருந்து கற்கவோ எதிர் கொள்ளவோ கிடைக்கும் அரிய வாய்ப்பு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தத் தன்னம்பிக்கையின் காரணமாக இந்திய அணிகள் கடந்த பத்தாண்டுகளில் அதிக வேகத்துடனும், பயமின்றியும், ‘ஒரு கை பார்த்துவிடுவோம்!’ என்ற புத்துணர்ச்சியுடன் ஆடுகின்றன என்றால் அதற்கு முழு முதற் காரணம் ஐபிஎல்தான் என்பேன்.

டி20ல் நன்கு ஆடியதால் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்புக் கிடைத்து அதையும் தக்க வைத்துக் கொண்ட இந்திய வீரர்களின் (முடிவுறாத) பட்டியல் இதோ – அஜிங்க்யா ரஹாணே, கே எல் ராஹுல், முரளி விஜய், ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா…

ஐபிஎல்: தடங்கலுக்கு_வருந்துகிறோம்

சுவர்க்கத்திலிருக்கும் என் தாத்தா அடிக்கடி சொல்லுவார், ‘தரையில் படுப்பவன் பாயில் படுப்பதற்கும் பாயில் படுப்பவன் தரையில் உருளுவதற்கும் அதிக நேரம் எடுக்காது.’

அதாவது, ‘எதுவுமே அளவோடு இருக்க வேண்டும்; அளவோடு வளர வேண்டும். அப்போதுதான் நிலைக்க முடியும்.’ என்ற கோட்பாடுடைய அந்த சொலவடை எல்லா நிலைகளுக்கும் பொருந்தும் – ஐபிஎல் உள்பட.

மிகக் குறைந்த வயதில் கையில் அதிக பணம் புரளுவதால், தலைகால் தெரியாமல் ஆடிய பல வீரர்கள் வீணாய்ப் போனதும் ஐபிஎல்-ஆல்தான்.

ஒழுங்கான கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளும் இல்லாதால் கிரிக்கெட் சூதாட்டத்தில் அடிபட்டு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இரண்டு ஆண்டுகள் ஆட்டத்தை விட்டே விலக்கி வைக்கப்பட்டதும் ஐபிஎல்-ஆல்தான்.

அந்தச் சூதாட்டத்தின் காரணமாக ‘ஐபிஎல்-ன் தந்தை’ எனப்படும் லலித் மோடி (நரேந்திர மோடி இல்லைங்க!) ஊழல் குற்றச்சாட்டுக்கு பயந்து லண்டனில் ஒளிந்து கொண்டு அவ்வப்போது டிவிட்டரில் பாவலா காட்டுவதும் ஐபிஎல்-ஆல்தான்.

அவ்வளவு ஏன், இந்த வருடம் தமிழ்நாட்டுக்கு காவிரித் தண்ணீர் தர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆர்ப்பாட்டம் செய்து சென்னையிலிருந்து 6 போட்டிகளைப் பூனாவுக்கு மாற்றி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க எத்தனித்ததும் ஐபிஎல்-ஆல்தான் (அது ஈர்த்ததா அல்லது நீர்த்ததா என்பது சர்ச்சைக்குரிய கேள்வி 😊)

இன்றும், 60 போட்டிகள் கொண்ட லீக்கில் சில போட்டிகளின் போது எடுக்கப்படும் முடிவுகளும் அதனால் சிலபல அணிகளுக்குக் கிடைக்கும் உயிர்ப்பிச்சைகளும் பார்ப்பவர்களின் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வைப்பது என்னவோ உண்மைதான். அதனாலோ என்னவோ, சிலர், ‘ஐபிஎல் போட்டிகளை விளையாட்டாகப் பார்க்க வேண்டாம்; ஒரு பொழுது போக்காகப் பாருங்கள், ரத்த அழுத்தம் குறையும்,’ என்று மருத்துவ ஆலோசனை கூறுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஐபிஎல் – சிங்கப்பூரில் முடியுமா?

சிங்கப்பூரில் கிரிக்கெட் கொஞ்சம் மாற்றாந்தாய் பிள்ளையாகத்தான் கருதப்பட்டு வருகிறது. 125க்கும் மேலான அணிகள் சிங்கப்பூர் கிரிக்கெட் வாரியத்தின் லீக்கில் ஆண்டுதோறும் பங்கேற்கின்றன. இருப்பினும், தனக்கென ஒரு விளையாட்டரங்கம் இல்லாமல் இன்றும் வாரியம் தவித்து வருவதே நிதர்சனம். இதைத் தாண்டி இந்தியா, பாகிஸ்தான், ஶ்ரீலங்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் வார இறுதியில் தேக்காவை அடுத்த ஃபேரர் பூங்கா, ஜுரோங், பொங்கோல், செங்காங், பயனியர் பகுதிகளில் கிடைக்கும் வெட்டவெளிகளில் மட்டையும் பந்துமாக அலைந்து திரிவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

அதிலும் பயனியர் சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் குடியிருப்பில் உள்ள யார்க்கர் மைதானத்தில் அவ்வப்போது அவர்களுக்கென தொடர் போட்டிகளை நடத்தி வந்தவர் முன்னாள் இந்திய வீரர் திரு தர்மிசந்த் முலேவா மற்றும் முன்னாள் சிங்கை வீரர் திரு ஹர்னாம் சிங்.

அப்படிச் சிறப்பாக ஆடிய வீரர்களைக் கொண்டு, தஞ்சை சிசி என்ற அணியை சிங்கை சரவண பவன் உரிமையாளர் திரு ஶ்ரீராம் சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கினார், அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அந்த அணி படிப்படியாக முன்னேறி இன்று சிங்கப்பூர் கிரிக்கெட் லீக்கில் முதல் நிலை ஆட்டங்களில் பட்டையைக் கிளப்புகிறார்கள்.

சிங்கப்பூரின் தேசிய அணியும் கடந்த 20 ஆண்டுகளாகப் படிப்படியாக முன்னேறி தற்போது உலகத் தரவரிசையில் 23வது இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த சாகர் குல்கர்னி சில ஆண்டுகளுக்கு முன் டி20 போட்டி ஒன்றில் இரட்டைச் சதம் அடித்துச் சாதனை புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல. கடந்த ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்களில் சிங்கப்பூர் டி20 போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், 50-50 போட்டிகளில் வெள்ளியையும் வென்று சாதனை புரிந்தது.

இப்படித் தரம் உயர்ந்ததற்கு ஐபிஎல்லும் ஒரு காரணம். அதே பன்னாட்டுத்தர அளவில் இல்லாவிடினும், சிங்கப்பூர் கிரிக்கெட் கிளப், சிங்கப்பூர் இந்தியர் கழகம், சிலோன் விளையாட்டுக் கிளப் போன்ற அமைப்புகள், வருடந்தோறும் பல்வேறு போட்டித் தொடர்களை நடத்துகின்றன. இதில் சிங்கப்பூர் வீரர்கள் மட்டுமல்லாமல் புகழ் பெற்ற வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பதால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

ஆனால் இவையனைத்தும் சற்றேறக்குறைய ஒரு கண்காட்சிப் போட்டியாகவே இருந்து வருவதால் அவற்றின் முக்கியத்துவம் ஒரு மாற்றுக் குறைவுதான்.
90களிலும், 2000ங்களின் தொடக்கத்திலும் சிங்கையில் இந்தியா, ஶ்ரீலங்கா, மேற்கு இந்தியத் தீவுகள் போன்ற அணிகள் தொடர்களில் ஆடினாலும், இப்போது அத்தகைய போட்டிகளை நடத்தக் கூடாது என்று இந்திய மற்றும் உலக கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துவிட்டதால் இலவு காத்த கிளியாக ரசிகர்கள் மாறிவிட்டனர்.

சரி, ஐபிஎல் சிங்கப்பூருக்கு வர முடியுமா?

முடியும். முயன்றால் நிச்சயம் முடியும்.

2009ல் தென்னாப்பிரிக்காவுக்கும் 2014ல் சில ஆட்டங்களை துபாய்க்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் மாற்றம் செய்தது. அடுத்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடரின் போது பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. பாதுகாப்பு கருதி இடமாற்றம் நிச்சயம்.

தற்போது உலகக் கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவராக இருப்பது சிங்கப்பூரின் திரு இம்ரான் ஹமீது க்வாஜா அவர்கள். அவர் தன்னுடைய ஆழ்ந்த அனுபவத்தின் மூலமும், இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் அவருக்கு இருக்கும் நல்ல தொடர்புகளின் மூலமும் சிங்கப்பூருக்குச் சில ஐபிஎல் போட்டிகளைக் கொணர்ந்து வர முடியும்.

இதற்குச் சிங்கை விளையாட்டுக் குழுமத்துடன் உயர்மட்ட அளவில் ஒருங்கிணைந்து இப்போதிலிருந்து வேலை செய்தால் வெற்றி கிட்டலாம்.

*

ஐபிஎல் கோப்பையின் மேல் வடமொழியில் ஒரு அழகிய வாசகம் எழுதப்பட்டிருக்கும்.

யத்ர ப்ரதீபா அவ்சர ப்ராப்னோதிஹி

பொருள்: (ஐபிஎல்) திறமையும் வாய்ப்பும் இணையும் இடம்

எதையும் செய்யக்கூடிய திறனும் அதை வெளிக்கொண்டு வர வாய்ப்பும் அமைந்துவிட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஐபிஎல் சாட்சி.

சரி, கட்டுரையின் ஆரம்பத்தில் தங்கை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னாய் என்று கேட்கிறீர்களா?
வேறு என்ன சொல்வேன்?

‘தல தோணின்னா சும்மாவா? சென்னைதான் ஜெயிக்கும்! நீ கவலைப்படாமல் போம்மா!’

சொன்ன மாதிரியே ஜெயிச்சிட்டாங்க இல்லே! விசில் போடு!

அப்பாடா, இனிமே கொஞ்சம் சீக்கிரம் தூங்கலாம்.

என்ன சொல்றீங்க? காற்பந்து உலகக் கிண்ணமா?

அடப்பாவிகளா! நம்மை ஒருவழி ஆக்காமல் விட மாட்டாங்க போலிருக்கே!! 😊 ☹ 😊

புகைப்படங்கள்: IPLT20, BCCI

மகன், கணவன், தந்தை, மனிதன் – இப்படி அனைத்து வேடங்களையும் சரியாகத் தரிக்க முடியாத ஒரு சராசரி. கிரிக்கெட் நடுவராய் பல்லாண்டுகள் பலரின் வாழ்வைக் குலைத்தவர். கைக்கு வந்தததை எழுதி அதை மற்றவர் ரசித்தால், ‘இவர்களுக்கு என்ன ஆயிற்று?’ என்று வியக்கும் ஓர் அப்பிராணி

7 COMMENTS

 1. அருமை.

  IPLஇன் முன்னுரை அழகாகவும், எளிமையாகவும் இருக்கிறது.

  சிங்கப்பூரில் IPL – நினைத்துப் பார்க்கவே இனிக்கிறது. நல்ல யோசனை.

 2. Makes an interesting reading. In particular, I liked this line….அது ஈர்த்ததா அல்லது நீர்த்ததா என்பது சர்ச்சைக்குரிய கேள்வி 😊 Would have been nicer if you enhanced the profile of CSK by saying they followed to the core, the 2 lines of திருவள்ளுவர் – இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் !!

 3. நன்றி, மாதவன், ஆனந்த், ரமேஷ்.
  ரமேஷ்: good one ! சொல்லிக் காட்டி எதற்கு எரியும் கொள்ளியில் இன்னும் எண்ணெய்?

 4. “கிரிக்கெட் நடுவராய் பல்லாண்டுகள் பலரின் வாழ்வைக் குலைத்தவர்.”

  — என்னே ஒரு தன்னடக்கம்!!! 🤔🤔🤔😂😂😂

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here