பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக வாழ்க்கைப் போராட்டங்களை வெற்றியோடு வாகை சூடிய பின்னும், ஒரு போர் நமக்காகக் காத்திருக்கும். நம் அனைவரின் வாழ்க்கையில் அது ஒரு மிக முக்கியப் படிக்கல். அது என்னவென்று யோசிக்கிறீர்களா? அதுதான் வேலைச் சந்தைக்கு நம்மை அழைக்கும் நேர்முகத் தேர்வுகளாகும் (Interview). ஒவ்வொரு துறையும் அல்லது நிறுவனமும் வெவ்வேறு விதமான நேர்முகத் தேர்வை நடத்துகின்றன. அதில் வெற்றி பெற, நாம் அனைவரும் பொதுவான சில விஷயங்களைக் கடைபிடிக்கும் தேவையிருக்கிறது.

ஆள் பாதி, ஆடை பாதி என்பதைப்போல், மாணவர்களாகிய நீங்கள், நேர்முகத் தேர்வில் சிறப்பாகச் செய்ய, சிறப்பான தோற்றத்தில் மிளிர வேண்டும். இருப்பாலாரும் நேர்முகத் தேர்விற்கேற்ப ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து செல்வதை, ஓர் அவசியமான கூறாகப் (aspect) பார்க்க வேண்டும்.

ஆண்களுக்குரிய உடைகள்:

ஆண்பிள்ளைகள் தங்களின் தோற்றத்தை இன்னும் மிடுக்காகவும் தன்னம்பிக்கையாகவும் காட்ட என்ன செய்யலாம்?

நீங்கள் பணிபுரியக் கூடிய நிறுவனத்தின் உடை கொள்கையைப் ( Company Dress code) அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், பிறந்தநாள் விழாவிற்கோ அல்லது கேளிக்கைக் கொண்டாடங்களுக்கோ போவதைப்போல் உடைகளை அணியக் கூடாது.

* நேர்முகத் தேர்வுக்குக் கண்டிப்பாக டை (Tie) அணிவது சிறப்பு. மேலும் ,நீங்கள் அணியும் சட்டையும் கால்சட்டையும் டைக்குப் பொறுத்தமானதாக இருக்க என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

* உங்களது காலணிகளும் காலுறைகளும் பொறுத்தமான நிறத்தில் இருத்தல் வேண்டும். உதாராணத்திற்கு, மணி நிறத்தில் (Dark Blue) சட்டை அணிந்தால் அதைவிட மென்மையான நிறமான வெள்ளையில் கால்சட்டையை அணியலாம். மிக அழுத்தமான நிறங்களில் (Dark colours) சட்டையும் கால்சட்டையும் இருக்கக்கூடாது.

* நீங்கள் அணியும் உடைகள் சரியான அளவில் இருக்க வேண்டும். சட்டை, தொள தொளவென பெரிதாகவும் இருக்கக்கூடாது அல்லது மிக இறுக்கமாகவும் இருக்கக்கூடாது.

* மிக பளபளப்பக்கும் நிறச் சட்டையையும் டையையும் தவிர்ப்பது நல்லது.

* பானையில் சுருட்டி எடுக்கப்பட்ட சட்டையைப்போல் இல்லாமல், அணியும் ஆடைகளைச் சரியாக தேய்த்து ( iron) செய்து அணியவும்.

ஆண்களுக்கான முகப் பராமரிப்பும் சிகையலங்காரமும்:

நேர்முகத் தேர்வுக்குப் பொறுத்தமான ஆடைகளைத் தவிர, சிகை அலங்காரமும் இன்றியமையாதது ஆகும். நீட்ட முடி உள்ளவர்கள், முடியை விரித்துப்போட்டுப் போகக்கூடாது. அதைக் குதிரை வாலாகக் கட்டிக்கொண்டால் நல்லது. 🙂 தலைக்கேற்ற பராமரிப்புத் திரவத்தைப் பயன்படுத்தலாம். அளவிற்கு மீறி பயன்படுத்தினால், முகத்தில் எண்ணெய் வடிய ஆரம்பித்துவிடும். அருகிலுள்ள ஆண்கள் முடி பராமரிப்பு நிலையத்திற்குச் சென்று, மேலும் ஆலோசனை பெறலாம். அடுத்து, மீசை தாடி வைத்துள்ள ஆண்கள், அதைச் சரியான அளவில் சரிசெய்து வெட்டிக்கொள்ள வேண்டும். உங்களது முகப் பொலிவில், இது மிகவும் கைக்கொடுக்கும்.

பெண்களுக்குரிய ஆடைகள்:

* பெண்பிள்ளைகள் மேல்சட்டையோடு பாவடை (skirt) அணிந்தாலும் அல்லது கால்சட்டை அணிந்தாலும் நேர்முகத்தேர்வு நாளுக்கு முன்பே ஒரு முறை அணிந்து பார்க்கவேண்டும். அப்போதுத்தான் அளவு சரியாக இருக்கிறதா என்பதை, சரி பார்த்துக் கொள்ளலாம்.

* அதிக இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

* சூட் (Suit) எளிமையான, அழுத்தமான நிறத்தில் இருந்தால் சிறப்பு.

* மிகப் பளப்பளப்பான, குட்டையான இறுக்கமான ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. சில நிறுவனங்கள் தங்களின் பாவாடை அளவில் (length of skirt) குறை கூறலாம். இது போன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பது தேர்வுக்களத்தில் நல்லது.

* மேல்சட்டை நெஞ்சுப்பகுதியை அதிகமாகக் காட்டும்படி இருக்கக்கூடாது.

* ஆடைகேற்ற காலணிகள் சரியான வகையில் இருத்தல் வேண்டும். குறைந்த அளவு குதிக்கால் செருப்பை அணிந்தால் நல்லது.

* தகதகவென்று மின்னும் பொன்நகைகளை அணியாமல் இருப்பது சிறப்பு. எளிமையான நகை சிறந்ததாகும்.

* விரல்சாயம் (Nail Polish) அணியும்போது முதன்மை நிறங்களான (Primary colours) சிவப்பு, பச்சை , நீலம் ஆகியவற்றை நேர்முகத்தேர்வுக்குத் தவிர்க்கலாம். அழுத்தம் குறைந்த நிறங்களைப் (Lighter colours) பயன்படுத்திக் கொள்ளலாம்.

* பாரம்பாரிய ஆடைகள் அணிய நினைத்தால், உங்களது நிறுவனத்தோடு ஒருமுறை தொடர்புக்கொண்டு இதைப்பற்றிக் கேட்டுக் கொள்ளலாம்.

* பானையில் சுருட்டி எடுக்கப்படும் சட்டையைப்போல் இல்லாமல், அணியும் ஆடைகளைச் சரியாக அயன் செய்து அணியவும்.

பெண்களுக்கான முகப் பராமரிப்பும் சிகையலங்காரமும்:

ஆண்களைப்போல் பெண்களுக்கும் நேர்முகத் தேர்வுக்கேற்ற சிகை அலங்காரம் இன்றியமையாதது. நீட்ட முடி உள்ளவர்கள் முடியை விரித்துப் போட்டுப் போகக்கூடாது. அதைக் குதிரைவாலாகக் கட்டிக்கொண்டால் நல்லது. தலைக்கேற்ற பராமரிப்புத் திரவத்தைப் பயன்படுத்தலாம். முக ஒப்பனை ( make up) சரியான அளவில் போட வேண்டும். இதைப்பற்றி சந்தேகங்கள் இருந்தால் பெண்கள் முகப் பராமரிப்பு நிலையத்திற்குச் சென்று ஆலோசனை கேட்கலாம். முகப் பொலிவு பெறவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கவும் அவர்களின் ஆலோசனை உதவும்.

இருப்பாலாருக்கும் கருத்தில் கொள்ள வேண்டியவை:

பல் மற்றும் வாய்த்தூய்மை மிக முக்கியமாகும். வாய்த் துர்நாற்றம் தரக்கூடிய வெங்காயம், பூண்டு போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். மேலும், நாக்கைச் சுத்தம் செய்ய மறக்கக்கூடாது. இறுதியாக வாசனைத் திரவியங்களை (perfume) அளவோடு பயன்படுத்தவும். உங்களின் நேர்முகத் தேர்வாளர்களுக்குச் சுவாச எரிச்சலைக் கொடுக்கும் அளவிற்கு வாசனைத் திரவியங்களில் குளிக்க வேண்டாம்.

இளைய தளபதிகளே, இளைய மொட்டுகளே! எதிர்காலத்தில் உங்களது நேர்முகத் தேர்வுக்களத்தில் துடிப்பாகவும் மிடுக்காவும் தன்னம்பிக்கையாகவும் செயல்பட்டு, சிங்க நடைபோட்டு, சிகரத்தில் ஏற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

ஆசிரியர். நல்ல கதை சொல்லி. சிங்கப்பூர்த் தமிழ்ச் சூழலுக்கு பங்களிக்கும் தீராத ஆர்வமிக்கவர்.

1 COMMENT

  1. மிக அவசியமான ஆலோசனையைத் தந்துள்ள ஆசிரியருக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இவற்றில் கவனம் செலுத்தாத மெத்தனப் போக்கு நிறைந்த இன்றைய சூழலில் இது கச்சிதமாக, அவசியமான, அளவுடன் தெரிவித்துள்ளது மிக சிறப்பு.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here