இந்திரஜித்தின் கதைகள்  வாசகர்களோடு அவர்  பகிர விரும்பியதை இயல்பான நகைச்சுவை உணர்வோடு எநச் சிக்கலும் இல்லாமல் கொண்டு சேர்க்கின்றன.

கதைகளில் இரண்டு ரகம்: சில கதைகள் வெறும் சராசரி சம்பவங்களாக, வாசகர்களை அதிகம் பாதிக்காமல் கடந்து சென்று விடுகின்றன. ஒரு சில கதைகள், மாறுபட்ட கதைக்களம் அல்லது மாறுபட்ட சூழல் என்று வாசகர்களை ஈர்த்து, மீண்டும் ஒரு நிதானமான வாசிப்புக்கும் அதன் தொடர்ச்சியாக  சிந்தனைக்கும் இட்டு செல்கின்றன.

முற்றிலும் மாறுபட்ட பாத்திரப்படைப்பினால், மஞ்சன் (‘புதிதாக இரண்டு முகங்கள்’ தொகுப்பு) என் கவனத்தை ஈர்த்தது. கதையின் தலைப்பை வைத்து ஒன்றையும் ஊகிக்க முடியவில்லை.

சில நாட்களுக்கு முன், காதிப் ரயில் நிலையத்தின் உணவுக்கடை வாசலில் ஒருவரை பார்த்தேன். முப்பதுகளில் இருப்பார். காற்றில் தன் விரல்களால் ஏதோ எழுதிவிட்டு, பிறகு அழித்து மீண்டும் எழுதிக்கொண்டிருந்தார். எத்தனை பேர் கடந்து சென்றாலும் தன் கூட்டல் கழித்தலில் மட்டுமே மூழ்கி இருந்தார்.

இவரை போன்றவர்களைப் பற்றி யோசிக்க, கவலைப்பட, அவசர வாழ்க்கைச்சூழலில் அதிகம் பேர் இல்லையோ?

நம் அவசரத்தில், சில மணித்தியாலங்கள்கூட யோசிக்காமல் நாம் கடந்து போகும் ஒரு மனிதரைக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இந்திரஜித்.

வழக்கமான டாக்ஸி ஓட்டுநர், வீட்டுப்பணியாளர், கட்டுமான தொழிலாளி போன்ற கதாபாத்திரங்களைத் தவிர்த்து, பயத்தோடு தன் வாழ்க்கையை வாழும் ஒரு தெனாலியைத் தேர்வு செய்து எழுதியிருப்பதற்கு பாராட்டுகள்!

கதையின் முக்கிய பாத்திரம், ஒரே பாத்திரம் – கழுத்துக்கு கீழே, மேலே என்று எல்லாவற்றிலும் பயம் நிரம்பிய ரெங்கராஜ்.

அந்த கதாபாத்திரத்தின் குணாதியசத்தை சொன்ன விதம் மிக அருமை.

ரயில் அட்டையில் ஐநூறு வெள்ளிகூட ரொப்பத்தயார். இது வங்கி அல்ல டொங்கி என்று யாரும் சொல்வார்களோ என்று பயம். அட்டையில் ஐம்பது வெள்ளிக்கு கீழே இருந்தால், உடனே இன்னொரு ஐம்பது வெள்ளி நிரப்பிக்கொள்ள வேண்டும். கல்யாணம் செய்ய பயம், குழந்தைகள் பெற பயம் என்று எல்லாவற்றிலும் பயம்.

சரி. பயமுள்ள மனிதர் என்னதான் செய்யப்போகிறார் என்ற ஆவலில் படித்துக்கொண்டே போனேன்.

திடீரென்று ரயில் மேடையில் மஞ்சள் கோடு காணாமல் போய்விடுகிறது. பதைபதைக்க மஞ்சள் கோட்டைத் தேடி ஓடும் ரெங்கராஜை பாதுகாப்பு காவலர்கள் பிடிக்கிறார்கள். ஆனால் யாரும் இந்த மஞ்சனை விட்டுவிட்டு, மஞ்சள் கோடை தேடவேயில்லை.

எத்தனை சிறிய, மணியான கதை!. குறையாய் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒரு கதாசிரியராக, ரெங்கராஜின் பக்கத்தில் நம்மை நிற்க வைத்து, அவரின் உணர்வுகளை நமக்கு கடத்தியதில், இந்திரஜித்திற்கு முழு வெற்றி.

இதைப்போலவே மாறுபட்ட கதாபாத்திரத்தை கொண்டிருந்தது, ‘குடிமகனின் சொற்பொழிவு'(வீட்டுக்கு வந்தார்). நாம் எல்லாருமே எங்காவது ஒரு பொது இடத்தில் ஒரு குடிகாரரைக் கடந்து வந்திருப்போம். உள்ளே போன திரவம் மேலோங்கி இருக்கும் நிலையில், குடித்தவரின் வாயிலிருந்து, செந்தமிழா ஊற்றெடுக்கும்? தேக்கா நோக்கிச் செல்லும் பேருந்தில் உள்ள ஒரு தமிழ் பேசும் குடிகாரரைத் தன் கதையில்  நமக்குக் காட்டுகிறார் இந்திரஜித்.

எனக்கு பரிச்சயம் இல்லாத இந்திரஜித், நக்கல் தெறிக்க பேசும் இயல்பு கொண்டவராக இருப்பார் என்று இந்த கதையை வாசிக்கும்போது தோன்றியது இந்தக்கதை, படித்து சிரிக்க, ஒரு நீளமான நகைச்சுவைத் துணுக்குபோல இருந்தது. ‘சீனக்குடிகாரனைவிட, தமிழ்க் குடிகாரனைப்பார்த்தால் பயம் அதிகமாக இருக்கிறது. அவர் சொல்லும் எல்லாம் நமக்கு புரிந்து வேறு தொலைக்கும்! தமிழில் இத்தனை கெட்ட வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கிறதா? இவை அடுத்த தலைமுறைக்குப் போகுமா?’ போன்ற கவலைகள் ஆசிரியருக்கு.

பிரசங்கத்தை நிறுத்தாத குடிமகன், ஒரு இந்திய தாதி பேருந்தில் ஏறியதும் தன் பேச்சைப் பாதியில் நிறுத்திக்கொள்கிறார் “எதுக்கு நம்ம புள்ளைக்கு நேர கண்டதையும் பேசிக்கிட்டு?” என்று கதை முடிகிறது. வெகுஜன ரசிப்புக்கான கதை. ஆனால், பெரிதான தாக்கம் ஒன்றும் இல்லாமல் கடந்து விடும் ரகம்.

‘ஒரு மாணவனின் கடிதம்’ (வீட்டுக்கு வந்தார்) இறந்துபோனத் தன் தமிழாசிரியருக்கு ஒரு முன்னாள் மாணவர் எழுதும் கடிதமாக நீள்கிறது. மலேசியத்தமிழ் மாணவர்களின் வாழ்வியல் சிக்கல்களை ஆவணப்படுத்தும் சிறுகதையாக, ஒரு மாணவனின் கடிதம் இருக்கிறது. கதையில் உள்ள துயரங்களையும், நகைச்சுவையாகவே சொல்லி இருக்கிறார் இந்திரஜித். கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை மறைமுகமாகப் பல சவுக்கடிகள்.

“பதிமூன்று வயதிற்கு பிறகு முதலில் இருந்து ஆரம்பிப்பது சிரமமாக இருந்தது.” இந்த ஒரு வரியே, மலேசியாவில் தமிழ் பயிலும் மாணவர்களின் நிலையைச் சொல்லிவிடுகிறது.

கோ. புண்ணியவானின் ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலைப் போலவே, படிப்புக்கான சான்றிதழ் இல்லாமல், நல்ல வேலை கிடைக்காமல், கிடைத்த ஒன்றை பற்றிக்கொள்ளும் தமிழ் மாணவர்களின்  மனநிலையை விவரிக்கிறது.

‘உங்களிடம் படித்த நல்ல மாணவன், லோரி ஓட்டுகிறான். நான் ஒரு ஏமாற்றுச்சாமியாருக்கு  கையாளாக ஏமாற்றுகிறேன். அந்தச் சாமியாரும் உங்களின் முன்னாள் மாணவர். உங்களின் இறப்பு பற்றி சொன்னதும், முன்னாலேயே தெரிந்திருந்தால் கொஞ்சம்  கறந்திருக்கலாம் என்று வருத்தப்படுகிறார் சாமியார். உங்களை போலவே அவருக்கும் தொழில் பக்தி’ என்று முடிகிறது கதை.

எங்கும் பொய்யோ, தொய்வோ இல்லாத, உண்மை பிரதிபலிப்பு. அதனால், உலக வாசகர்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கும் கதை.

‘கீழே ஒரு மைனா’ (புதிதாக இரண்டு முகங்கள்) கவிதைபோல இருந்தது. கதையின் மையப்புள்ளி கதைசொல்லியின் மகளின் காலில் உள்ள ஊனம். கதை, ஒரு சடலத்தை, வீவக வீடுகளின் மாடியில் இறக்கும் தருணத்தைப் பின்புலமாகக் கொண்டது. சம்பவங்களின் கோர்வையாக சொல்லப்பட்ட இந்தக்கதையில், தேவைக்கு அதிகமான வாசக இடைவெளி இருந்தது,

ஒரு கதையை சிங்கையில் அதிககாலம் வாழும் ஒருவர் எழுதுவதிலும், புதிதாய் சிங்கப்பூருக்கு வந்தவர்கள் எழுதுவதிலும் – சூழலை உள்வாங்கி, வர்ணித்து எழுதும் விதத்தில், அதிக வித்தியாசம் இருக்கும். சிங்கையின் புதிய வரவுகள், படிக்க வேண்டிய கதை ‘உள்வரம்பு’ (புதிதாக இரண்டு முகங்கள்). சூழல் வர்ணனை வழியாக மட்டுமே கதையை நகர்த்த முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தக் கதை. உரையாடலே இல்லாத சிறுகதை இது.

முதல் பத்தி, தனிமை விரும்பியான குமாரின் பாத்திரப்படைப்புக்கு முழுபலம் சேர்க்கிறது. கதையில் வரும் குமார், புத்தகப்பிரியர்; புத்தக வெறியர். சீனப்பெண்ணை காதலிக்கும் குமாருக்கு, பெற்றோரின் அறிவுரைகள் நீள்கின்றன. எத்தனை தூரம் அரசு மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும், உறவோடும் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறதோ, அதற்கு எதிர் திசையில், தனிமை விரும்பிகளாக, மனிதர்கள் பயணிக்கும் நிதர்சனத்தை சொல்லி இருக்கிறது இந்தக்கதை.

ழகரம், மின்தூக்கி, திரு.நாய் ,காய்ச்சல், முஹூர்த்தம் , மின்னலின் பிள்ளைகள்  போன்ற கதைகள், ஒரு வாசிப்பிற்கு மேல் மறுவாசிப்புக்கு தூண்டும் ரகமாகவோ, புதியதாய் எதையோ சொல்வனவாகவோ இல்லை.

எதை எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை எழுத்தாளருக்கு இருப்பதை போல, எழுதும் எல்லாவற்றையும் படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் வாசகர்களுக்கு இல்லை. அதிகப்படியான நகைச்சுவை, வாசிப்பவர்களை ஒரு வித சங்கடமான மனநிலையில் கொண்டுபோய் சேர்க்கிறது. புதிய கோணத்தில் சிந்திக்கும் ஆற்றல் உள்ள இந்திரஜித், நகைச்சுவை உணர்வை மட்டுமே  தருகின்ற கதைகளை குறைத்து வேறு வகையான கதைகளையும் எழுதினால், அது சிங்கையின் இலக்கியச் சூழலுக்கு இன்னும் பலம் சேர்க்கும்.

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். நல்ல வாசகர். விமர்சகர். கட்டுரைகள், கதைகள் சார்ந்து மேம்பட்டு வருகிறார்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here