சிங்கப்பூரில் இணையம் வழி இலக்கியம் – கற்றல், கற்பித்தலில் சில செயல்முறை நகர்வுகள் பற்றிய அனுபவ ரீதியான செயல்கள், விளைவுகளைப் பற்றிய விரிவான பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை. தமிழ் கற்றல், கற்பித்தலில் இணையத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும் இன்றைய சூழலில், இவ்வனுபவங்கள், வாசிப்பவர்களுக்குள் புதிய சிந்தனைகளை விதைக்கும் என்று நம்புகிறோம்.

1. இணையத்திற்கு முந்திய தமிழ் இலக்கியச் சூழலும் தொப்புள்கொடி உறவும்
‘ஓரு போக்கு, ஒரு இலக்கு இல்லாவிட்டால், ஏன் நடக்க வேண்டும்?” என்று கேட்கிறார் மலேசியாவில் பிறந்து சிங்கப்பூரில் வாழும் எழுத்தாளர், கவிஞர் இந்திரஜித். ஓர் இலக்கை நோக்கை நோக்கி நடக்கும் இலக்கியமும், ஓர் இலக்கை அடைவதற்கான பல்வேறு வளங்களைக் கொடுக்கும் இணையமும் கை கோர்த்து நடப்பது தற்காலச் சூழலை ஆதரிக்கும் கேள்வி இது.

பல்வேறு வரலாற்றுச் சூழல்களின் வழி, நவீனமடைந்து வரும் பொருளாதாரச் சூழலின் வழி, மேம்படுத்திக் கொண்ட தகவல், தொழில்நுட்பத் திறன்கள் வழி, தமிழ்ச் சமூகம் இன்று உலகம் முழுவதும் பரவிச் சிறக்கின்றது. புதிய சூழலில் தம்மைத் தகவமைத்து நிலைகொண்டுவிட்டாலும், தம் வேர்களையும் தொன்மங்களையும் இழக்காமல் இருக்கிறது தமிழ் இனம். தாய் மண்ணின் புனைவுகளோடு, தம் புலம் பெயர் வாழ்வின் தரிசனங்கள் நிரம்பி வழியும் பதிவுகள் கொண்ட தற்காலத் தமிழ் இலக்கியம், அதன் மைய வேர்களுள் ஒன்று. இதை, தாய்த் தமிழகத்தோடு இருக்கும் தொப்புள் கொடி உறவும் தொடர்ந்த தமிழ் இலக்கிய வாசிப்பும் உறுதி செய்கின்றன.

2. இணையத்தின் வருகையும் உலகத்தமிழ் இலக்கியக் கதவுகளும்
இணையத்தின் வருகையால், மெல்ல மாறி வரும் தமிழ் இலக்கிய வாசிப்புச் சூழலை நாம் அறிவோம். அச்சிட்ட நூல்களின் வழி மட்டுமே நிகழ்ந்து வந்த இலக்கிய உறவின் காலம் முடிந்து விட்டது.

இணையத்தில் கிடைக்கும் தமிழ் நூல்கள், இணைய இதழ்கள், வெகுஜன சஞ்சிகைகளின் இணைய வடிவங்கள், தமிழ் இணையக் குழுமங்கள், தனி மனிதர்களின் முயற்சி சாத்தியமாக்கிய இலக்கியத் திரட்டுகள், அமைப்புகளின் இலக்கிய முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு கதவுகள் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களுக்குத் திறந்து கிடக்கின்றன. அவை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கிடையே ஓர் இடையறாத தொடர்பு இழையை ஏற்படுத்தியிருக்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வாசகருக்கு எளிதில் கிட்டாத உலகத்தமிழ் இலக்கிய வாசிப்பு அனுபவத்தை, இன்று இணையத்தின் வருகை சாத்தியமாக்கியிருக்கிறது.

இணையத்தின் வருகை தமிழ் இலக்கியச் சூழலில் நிகழ்த்தியிருக்கும் முக்கியத் தாக்கங்கள் என பின்வரும் சிலவற்றைக் குறிப்பிட இயலும்.

 • தேச எல்லைகளை உடைத்து, உலகத்தமிழ் இலக்கியச் சூழலை ஓர்மையாக்கியது
 • அச்சு நூல்களின் சார்பையும் அவற்றால் நிகழும் பொருளாதாரச் சுமையையும் மட்டுப்படுத்தியது
 • சிலருக்கு மட்டுமே காணக்கிடைத்த பல்வேறு தமிழ் இலக்கியத் தரவுகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது
 • வாசகருக்கும் எழுத்தாளருக்குமான இடைவெளியைப் பெருமளவு குறைத்தது
 • தமிழ் இலக்கியம் சார்ந்த உலகளாவிய உரையாடல்களை சாத்தியமாக்கியது
 • தனி நபர்களுக்கு மத்தியில் நிகழும் இலக்கியப் பகிர்வுகளை அதிகரித்தது

நூறு சதவிகிதம் என்ற அதிகபட்ச அளவை அளவீடாகக் கொண்டால், மேற்கூறிய ஆறு புள்ளிகளின் செயற் குறியீடுகள் வெவ்வேறு அளவில் அமையும். ஆனால், அச் செயல்கள் அனைத்தும் சுழியம் என்ற எண்ணைவிட்டு நகர்ந்து வெகுதூரம் வந்துவிட்டன. ஆரோக்கியமான அத் தமிழ் இலக்கியச் சூழலைச் சாத்தியமாக்கியது, இணையம்.

3. உலகளாவிய தமிழ் இலக்கிய வளர்ச்சியும் இணையத் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கும்
இணையம் எல்லையில்லா சாத்தியக்கூறுகளுடன் நம்முன் பிரமாண்டமாக நிற்கிறது. தொழில், பொருளாதாரம், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு என்று இணையம், தகவல் தொழில்நுட்பத்தின் அதீத சக்தியைப் பல்வேறு துறைகளும் பெருமளவில் பயன்படுத்துகின்றன. அவற்றின் பயன்பாட்டை மேலும் அதிகரிப்பதை நோக்கிய ஆய்வுகளுக்கு பல பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகின்றன. இந்நிலையில், உலகளாவிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு, பறிமாற்றத்திற்கு, இணையம், தகவல் தொழில்நுட்பத்தை நாம் எந்த அளவு பயன்படுத்துகிறோம் என்ற கேள்வியும் அதற்கான பதிலும் மிக முக்கியவையானவையாக ஆகின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட ஆறு புள்ளிகளும் வாசிப்பு என்ற அளவில் இணையத்தின் தாக்கத்தைப் பேசின. இக்கட்டுரையின் நோக்கம், தமிழ் இலக்கியத்தையும், வாழ்வியல் கூறுகளையும் கற்றல் கற்பித்தல் நோக்கில் நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை சிந்திக்கிறது. அந்நோக்கில், சிங்கப்பூரில் செய்யப்பட்ட சில சோதனை முயற்சிகளும் அவை இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்களிடம் விட்டுச் சென்ற தாக்கங்களும் உங்கள் பார்வைக்கு வைக்கபப்டுகின்றன.

உலகம் முழுவதும் தமிழ் இலக்கியத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் நடந்து வருவதை அறிவோம். நாம் அதன் பங்காளிகளாகவும் இருந்து வருகிறோம். போட்டிகள், பயிற்சிகள், பயிலரங்குகள், மேடை நிகழ்ச்சிகள் என அவற்றுக்குத்தான் எத்தனை வடிவங்கள்? ஆனால், ‘உள்ளூரில் உள்ளவர்களால், உள்ளூரில் உள்ளவர்களுக்கு’ நடத்தப்படும் முயற்சிகள் என்ற அளவில் அவை நின்றுவிடுவதையும் நாம் அறிவோம். கொண்டாட்டங்கள் போன்று முடிந்துவிடும் அம்முயற்சிகளால் நீடித்த இலக்கிய, பண்பாட்டு உணர்வுகளை பங்கேற்பவர்களின் மனத்தில் விட்டுச்செல்ல முடிவதில்லை. அவர்களை படைப்பாளர்களாக மாறுவதற்கான காரணங்களையும் தூண்டலையும் தர முடியாத அவை, சிறு சிலிர்ப்புகள் மட்டுமே.

4. இணைய வழி இலக்கிய முயற்சிகளுக்கு வாய்ப்பாகும் சிங்கப்பூர்
இணையத்தின் பேராற்றலை, தமிழ் இலக்கிய கற்றல் கற்பித்தலுக்காக பயன்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயத்தேவை. அவை சார்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு முயற்சிகள் நடைபெறினும், தொடர் முன்னெடுப்புகளும் பரிட்ச்சார்த்த தேடல்களும் குறைவாகவே உள்ளன. வளர்ந்த நாடுகளுள் ஒன்றாகிவிட்ட சிங்கப்பூரில் இணையம் சார்ந்த தமிழ் இலக்கிய முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படிப்பட்ட சில முயற்சிகளை இளமைத்தமிழ். காம் இணையத்தளத்தின் வழியாகவும், தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் வழியாகவும் நாம் முன்னெடுத்தோம். அம்முயற்சிகள், இணையம் வழி கதை, கவிதைகள் முறையை மாணவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் கற்பிப்பதும் அவர்கள் அதை கற்றுக் கொள்வதும் சாத்தியம் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளன.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவில் தமிழ் வளர்க்கும் தொடர் பணியில் இருக்கும் அமைப்பு, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு. சமூக அமைப்புகளோடும் பங்காளித்துவ அமைப்புகளோடும் சேர்ந்து தமிழ் வளர்ப்பது அதன் பணி. அவ்வமைப்பின் ஆதவில் மாணவர்களை இலக்காகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள், முயற்சிகள் நடைபெறுகின்றன. மாணவர்கள் தமிழ் கற்றுக் கொள்ளும் ஒரு மையமாக விளங்குகிறது, உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம். இவை இரண்டோடும் இணைந்து, தமிழ் இலக்கிய இணைய வழி சோதனை முயற்சிகள், சில புதிய தெளிவுகளை நமக்குத் தந்தன.

5. மாணவர்களை இலக்காகக் கொண்ட இணையம் சார் தமிழ் இலக்கிய கற்றல், கற்பித்தல் முயற்சிகள்
தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவோடு, தங்கமீன் பதிப்பகம், இருபதிற்கும் மேற்பட்ட பள்ளிகளில் கதை, கவிதை எழுதும் முறைகளைக் கற்பிக்கும் பயிலரங்குகளை 2011ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறது. அவை குறுகிய நேரப் பயிற்சிகள் அல்ல. தினமும் இரண்டு மணி நேரம் என, மொத்தம் பன்னிரெண்டு மணி நேரம் நீளும் நீண்ட பயிலரங்குகள். சில நாட்கள் இடைவெளியில் தினமும் இரண்டு மணிநேரம் என நடந்த இப்பயிலரங்குகள், இடைப்பட்ட காலத்தில், கற்றவற்றைப் பற்றி சிந்தித்து, புதிய கேள்விகளை எழுப்பும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கின. இப்பயிற்சிகளுக்கு இணையத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள், வளங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

 • எழுத்தாளர்கள், கவிஞர்களுடனான ஸ்கைப் உரையாடல்
 • யூடியூபில் கிட்டும் திரைப்படங்கள், குறும்படங்கள், பாடல்கள் இன்னும் பிற

ஒரு பெருநகரான சிங்கப்பூரில் இருக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கும் வாழ்வனுபவங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடங்கிவிடும் வாய்ப்புள்ள நிலையில், நடப்பிலுள்ள கற்பித்தல் முறைகள் வழி கதை, கவிதைகளை அவர்தம் முழு ஈடுபாட்டுடன் கற்கச் செய்வது சிரமமே. அவர்களுடைய கற்பனையையும் ஆர்வத்தையும் ஒரு சேரத் தூண்டும் சவால்கள் அப்பணியை இலகுவாக்குகின்றன. கதை, கவிதை கற்பித்தல் சார்ந்த இரு உதாரணங்களைப் பார்ப்போம்…

5A. மாணவர்களுக்கான, இணையம் சார் கதை கற்பித்தல் அனுபவம்
ஒரு கருவை, ஒரு சம்பவத்தைக் கொடுத்து மாணவர்களைக் கதை எழுதச் சொல்வது நடப்பிலுள்ள எளிய உத்தி. ஒரு கதையின் பாதியைச் சொல்லி, மீதியை அவர்களை ஊகித்து எழுதச் சொல்வது போன்ற வேறு சில உத்திகளும் நடப்பில் உள்ளன. குறைந்த வாழ்வனுபவமும் சொல்வளமும் உள்ள பல மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி அவநம்பிக்கைக்குள் அமிழ்த்திவிடும் சிக்கல் இவ்வுத்திகளுக்கு உண்டு. படைப்பிலக்கியத்திற்குள் வரும் இளையர்களுக்கு நாம் முதலில் தர வேண்டியது – நம்மால் முடியும் என்ற நம்பிக்கை.

இச்சூழலில், ஒரு கதையைக் காட்டி, அதை எழுத வைத்தல் என்ற மாற்று உத்தியைப் பயன்படுத்தி கற்பிக்கும் வாய்ப்பைச் சிந்தித்தோம். இணையத்தில் யூடியூப் வழியாகக் கிடைக்கும் திரைப்படத் துணுக்குகளும் குறும்படங்களும் அதற்குத் துணைநின்றன. ஒரு கதை எழுத, கரு, கதாபாத்திரங்கள், பின்புலம், கதை சொல்லும் உத்தி போன்றவை அடிப்படையாக அமைகின்றன. அவற்றைப் பற்றி மாணவர்களுக்கு விளக்க ‘தேவர் மகன்’ படத்தில் தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் உணர்வுப்பூர்வமான உரையாடல் காட்சியையும் ‘பாட்சா’ படத்தில் கதாநாயகன் தன் தங்கைக்கு கல்லூரியில் இடம் கேட்டுப் பேசும் கதாநாயக பிம்பத்தைப் பிரமாண்டமாக வெளிப்படுத்தும் காட்சியையும் திரையிட்டுக் காட்டினோம். மாணவர்கள் ஏற்கனவே பார்த்திருந்த அப் பிரபலமான காட்சிகளின் திரையிடலுக்குப் பின் எழுப்பிய கேள்விகளின் வழி, அக்காட்சிகளில் அவர்கள் கண்ட கதையின் அடிப்படைக் கூறுகளை அவர்களைக் கொண்டே சொல்ல வைத்தது, மகிழ்வளித்த அனுபவம்.

அடுத்த நிலையில் மாணவர்களுக்கு, யூடியூபிலிருந்து ‘சைனா டீ’ என்ற குறும்படம் திரையிட்டோம். கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயலும் ஒரு முதியவர், விஷம் குடித்துவிட்டு வரும் வழியில், ஒரு கடையில் வாங்கிக் கொடுக்கும் சைனா டீயால் விஷமுறிவு ஏற்பட, பிழைத்துக் கொள்வதே கதை. படம் பார்த்தபின், அப்படத்தின் கதையை மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப, அவரவர் மொழியில், அவருக்கேற்ற அளவில் எழுத நிர்பந்தங்களற்ற உரிமை வழங்கப்பட்டது. இருபத்தி ஐந்து மாணவர்களுள்ள அவ்வகுப்பில், அனைத்து மாணவர்களும் அக்கதையை எழுதி முடித்தார்கள். வெவ்வேறு மொழித்திறன் கொண்ட அம்மாணவர்களுள் எவரும் அக்கதையை அரைகுறையாக எழுதி விட்டுவிடவில்லை என்ற நிலை எங்களுக்கு நிறைவளித்தது. ‘ஒரு குறும்படத்தைப் பார்த்து அதன் கதையை எழுதுவது போலதான், சுற்றி நிகழும் சம்பவங்களைப் பார்த்து, அவற்றைக் கதையாக எழுதுவதும்’ என்ற நம்பிக்கையை மாணவர்கள் பெற்றார்கள்.

இச்சோதனை முயற்சி இதோடு நின்றுவிடவில்லை. மாணவர்கள் ‘சைனா டீ’ குறும்படத்தைப் பார்த்துவிட்டு எழுதிய கதைகள் மின்னஞ்சல் வழி, மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் மதிப்பீட்டிற்கு அனுப்பினோம். மறுநாள் அவர் தனது மதிப்பீட்டை மாணவர்களோடு பகிர்ந்து கொள்ள ஸ்கைப் வழித் தொடர்பைப் பயன்படுத்தினோம். முகம் பார்க்கும் வாய்ப்பளிக்கும் இந்த இணைய உரையாடலின் வழி, அவர் ஓவ்வொரு மாணவரின் கதையிலும் உள்ள சிறப்பு அம்சங்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய இடங்களையும் சுட்டிக் காட்ட, ஒவ்வொரு மாணவரின் முகத்திலும் நாம் கண்டது, மகிழ்ச்சியும் நம்பிக்கையும். அவர்களுள் ஓரிருவராவது நல்ல எழுத்தாளர்களாக உருவாகி சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கையளித்து, அப் பரிட்சார்த்த முயற்சி. விஷம் குடித்து மயங்கிக் கிடக்கும் பெரியவரைப் பற்றி, ஒரு மாணவர் – ‘அவர் சிறிது நேரம் இறந்துவிட்டார்’ என்று எழுதியது நினைவில் இன்றும் நிற்கிறது.

5B. மாணவர்களுக்கான, இணையம் சார் கவிதை கற்பித்தல் அனுபவம்
கவிதை, பாடல் எழுதும் முறை கற்பித்தலுக்கும் யூடியூபில் காணக் கிடைக்கும் பல்சுவைப் பாடல்களும் திரைப்படப்பாடல்களும் பெரும் துணையாக அமைந்தது இன்னொரு இணைய அனுபவம். அழுகு என்ற தலைப்பைக் கொடுத்து ஒரு கவிதை எழுதச் சொன்னால், இருபது மாணவர்கள் உள்ள வகுப்பில் எத்தனைபேர் எழுதுவார்கள்? இரண்டு முதல் ஐந்துபேர் எழுதுவார்கள் என்பதே யதார்த்த நிலை. இந்நிலையை மாற்ற நாங்கள் யூடியூபில் இருக்கும் இரண்டு திரைப்படப் பயன்படுத்தினோம்.

 • 1. கவிஞர் வைரமுத்து எழுதிய ‘கண்ணுக்கு மை அழகு’ என்ற பாடல்.
 • ‘மழை மட்டுமா அழகு. சுடும் வெயில் கூட ஒரு அழகு’ என்று சொல்லும் அமரர், கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல்.

இவ்விரண்டு பாடல்களிலும் மாணவர்களுக்குப் பிடித்த வரிகளை, அவை ஏன் பிடிக்கின்ற என்ற காரணத்தோடு பகிரச் சொல்ல, அப்பகிர்வின் வழி, கவித்துவம் என்றால் என்பதை விவரிப்புகள், விளக்கங்கள் இல்லாமல் உணர்ந்தார்கள் மாணவர்கள். அதற்குப்பின் பயிற்றுவிப்பாளர், ‘அழகே அழகு’ என்ற நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளைப்போல், தான் எழுதிய சில வரிகளை மாணவர்களுக்குச் சொன்னார். அவ்வுத்தி, ‘இவரால் அதைப் போன்ற வரிகளை எழுத முடியுமென்றால், நம்மாலும் எழுத முடியுமே’ என்ற எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைத்தது. அவர்களிடம் ‘அழகு’ என்ற தலைப்பில் அப்பாடலைப்போன்ற வரிகளை எழுதச் சொன்னபோது, எங்களை ஆச்சரியமூட்டிய பல வரிகள் அவர்களிடமிருந்து வெளிப்பட்டன. அவற்றை வகுப்பாசிரியரிடம் பகிர்ந்து கொண்டோம். ஆனால், ‘ஆசிரியர் இல்லாத வகுப்புகள் அழகு’ என்ற குறும்புக்கார மாணவரின் வரியை மட்டும் அவரிடம் சொல்லவில்லை. இவ்வகுப்பிலும் எல்லா மாணவர்களும் கவித்துவ வரிகளை எழுதினார்கள். இரண்டு வரி தொடங்கி, இருபது வரி வரை, அவை அமைந்தன. இன்னொரு வகுப்பில், திரைப்படப் பாடகி பத்மலதா, நாட்டுப்புறப் பாடல்களில் பல்வேறு வகைகளையும் ஸ்கைப் வழியாக மாணவர்களிடம் பாடிக்காட்ட, ‘அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு’ என்ற நாட்டுப்புறப்பாடலின் சாயலில் மாணவர்கள் தம் சொந்த வரிகளை எழுதுவதும் நடந்தது.

மேற்குறிப்பிடப்பட்டவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இணையம் சார்ந்த வளங்களை தமிழ் இலக்கியம் கற்றல், கற்பித்தலுக்கான பல முயற்சிகளைத் தங்கமீன் அமைப்பும், இளமைத்தமிழ்.காம் இணையத்தளமும் சிங்கப்பூர்ச் சூழலின் செயல்படுத்தி வருகின்றன.

5C. மாணவர்களின் படைப்பாக்கத் திறனை வளர்க்க இணையத்தளம் வழி வாய்ப்பளித்தல்
சிங்கப்பூர் தமிழ் மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவோடு, தங்கமீன் அமைப்பு நடத்தும் இணையத்தளம், இளமைத்தமிழ்.காம். உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் தமிழ் வழி படைப்பாக்கத்திறனை மாதாந்திர போட்டிகளின் துணையோடு வளர்க்கும் தளம் அது. கதை, கவிதை, கட்டுரை, புகைப்படம், காணொளி ஆகிய ஐந்து பிரிவுகளில் மாதந்தோறும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் தலா $30 சிங்கப்பூர் வெள்ளி மதிப்புள்ள மூன்று பரிசுகள் என, ஒவ்வொரு மாதமும் மொத்தம் $450 வெள்ளி மதிப்பிலான 15 பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

‘ஒரு நாள் காலை எழும்போது பறவையாகிவிட்டதை உணர்கிறீர்கள். அந்த நாள் முழுவதற்குமான வாழ்க்கையைக் கதையாக எழுதுங்கள்’ என்று சொல்லும் கதைப்போட்டி, ஒரு மழையில் தனது நாய் நனைந்துவிடாமல் குடைபிடிக்கும் சிறுமியின் புகைப்படத்திற்கான கவிதை, ‘இணையத்தில் என்ன என்ன தேடுகிறீர்கள்’ என்று கேட்கும் கட்டுரை என, மாணவர்களின் படைப்பாக்கத் திறனைத் தூண்டி, தமிழ் இலக்கியத்தின்பால் ஈர்க்கும் இணைய வழி வாய்ப்புகள் இளமைத்தமிழ்.காம் இணையத்தளத்தில் இருக்கின்றன.

இத்தளம், விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்திலிருந்து தம்முடைய படைப்புகளைப் பதிவு செய்யலாம் என்ற சுதந்திரத்தை மாணவர்களுக்குத் தருகிறது. அவர்களுடைய படைப்புகள் இணையத்தில் பகிரப்படும்போது, தானும் படைப்பாளியாகிவிட்ட நம்பிக்கையைத் தருகிறது. அந்தப் படைப்புகள் பாராட்டப்படும்போது, அவற்றுக்குப் பரிசு கிடைக்கும்போது, தமிழ் இலக்கியப் படைப்பாளியாக இயங்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் படைப்புகளைத் தம்முள் கொண்டு, சிங்கப்பூர்த் தமிழ் மாணவர்கள் தொடர்ந்து தம் படைப்பாக்கத் திறனை வளர்த்துக்கொள்ளும் இணையம் சார்ந்த இலக்கிய முன்னெடுப்பாக அமைந்திருக்கிறது, இளமைத்தமிழ்.காம்.

6. வாசகர்களை இலக்காகக் கொண்ட இணையம் சார் தமிழ் இலக்கிய கற்றல், கற்பித்தல் முயற்சிகள்
வருடந்தோறும் சிங்கப்பூரில், அரசாங்க ஆதரவில், திரு.ஆர்.இராஜாராமைத் தற்போதையத் தலைவராகக் கொண்டு இயங்கும் அமைப்பான வளர்தமிழ் இயக்கம், ‘தமிழ்மொழி விழா’வை நடத்துகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், ஏப்ரல் மாதம் முழுவதும் நடக்கும் இவ்விழாவில், பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். தங்கமீன் அமைப்பு, 2012ஆம் ஆண்டு விழாவில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைக் கொண்டு, இரண்டு நாள் ‘சிறுகதைப் பயிலரங்கு’ ஒன்றை நடத்தியது. அதன் நீட்சியாக, தேசிய நூலக ஆதரவில் உருவானது – தங்கமீன் வாசகர் வட்டம். வாசகர்களுக்கு சமகால இலக்கியத்தை அறிமுகப்படுத்துவது, மாதாந்திர கதை, கவிதைப் போட்டிகளின் வழி வாசகர்களை எழுத்தாளர்கள் என்ற நிலைக்கு உயர்த்துவது ஆகியவை அதன் இரு முக்கிய நோக்கங்கள். பின்னாளில் அதற்கு தேசியக் கலை மன்றத்தின் நிதி ஆதரவும் கிடைத்தது.

மாதாந்திர சந்திப்புகளில், படித்ததில் பிடித்தது, கவிதை ரசனை, குறும்படம், நாடக பாணி கதை வாசிப்பு, கதை-கவிதை விமர்சனம் போன்ற அங்கங்களின் வழி வாசகர்கள் இலக்கியத்தோடு தம் திறனை தரம் உரசிப் பார்ப்பது வழக்கம். 2012ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை அற்பதுக்கும் மேற்பட்ட மாதச் சந்திப்புகளை நடத்தி, தற்போது தங்கமீன் கலை இலக்கிய வட்டம் என்ற பெயர் மாற்றமும் கண்டுவிட்ட, இந்த அமைப்பு இணையத்தைத் தம் இலக்கிய நடவடிக்கைகளுக்குக் கை கொண்டது சமீப காலத்தில்தான். அதற்கு உதவியது – ஸ்கைப்.

6A . ஸ்கைப் வழி நிகழ்ந்த இலக்கியக் கலந்துரையாடல்கள்
வெளிநாடுகளில் உள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்களை சிங்கப்பூருக்கு நேரில் அழைத்து வந்து நிகழ்ச்சிகள், பயிலரங்குகள் நடத்துவது பல்வேறு நடைமுறைச் சிரமங்கள் நிறைந்த பணி. அதற்கான தீர்வாக அமைந்ததுதான், ஸ்கைப். இதைப் பயன்படுத்துவதன் வழி, எளிதில் சிங்கப்பூருக்கு வரும் வாய்ப்பற்ற பல படைப்பாளிகளோடு கலந்துரையாடும் வாய்ப்பும், அதன் பலனாக வாசகர்கள் இலக்கியச் செழுமை பெற முடியும் என்ற சிந்தனையும், தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் ‘ஸ்கைப் வழி – கலந்துரையாடல்’ நிகழ்ச்சிக்கு வித்திட்டது. அம்முயற்சிகளின் தொடக்க முனையாக அமைந்தவர், ‘உயிரெழுத்து’ மாத இதழின் ஆசிரியர் சுதீர் செந்தில்.

அதைத் தொடர்ந்து, ‘உயிர்மை’ ஆசிரியர், கவிஞர் மனுஷ்யபுத்திரனோடு நவீன கவிதைகள் குறித்தும், கலை இலக்கிய விமர்சகர் இந்திரனோடு கலை இலக்கியச் சூழல் குறித்தும், கவிஞர் ஆத்மார்த்தி, கவிதாயினி மனுஷி போன்றவர்களோடு தற்காலக் கவிதைகளின் போக்கு பற்றியும், திரைப்படப் பாடலாசிரியர் ரமேஷ் வைத்யாவோடு சிறுவர் இலக்கியம் படைப்பது சார்ந்தும் ‘ஸ்கைப்’ உரையாடலை நிகழ்த்தி இருக்கிறோம். அவை ஒரு மணிநேரக் கால அளவில் அமைந்தன. உலகளாவிய நிலையில், தமிழ் இலக்கிய கற்றல், கற்பித்தல் குறித்த புதிய சிந்தனைகளை இம்முயற்சி உருவாக்கி இருப்பதை சில பின்னூட்டங்களின் வழி உணர முடிகிறது. இன்னும் சில வருடங்களுக்குள், சில திரைகளைத் திறந்து இளையர்களுக்கான மேடைகளைக் காட்டும் இன்னும் பல இணைய முயற்சிகள் உருவாகும் என்பது நம் நம்பிக்கை.

6B. மின்னஞ்சல் & ஸ்கைப் வழி நடந்த இருமாதச் சிறுகதைப் பயிலரங்கு
சிறு முயற்சிகள் மட்டுமின்றி, இரண்டு மாத காலம் நீண்ட, இணைய வழி சிறுகதைப் பயிற்சி & பயிலரங்கு ஒன்றையும் 2017ஆம் ஆண்டு தமிழ்மொழி விழாவில் பரிசோதித்துப் பார்த்தோம். முதல் இரண்டு மாத காலப் பயிற்சியில் சிறுகதை, கரு, தொடக்கம், பின்புலம், கதாபாத்திரங்கள் உள்ளிட்ட எட்டு கூறுகளாக பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு கூறுக்கும் பங்கேற்ற வாசகர்கள் பயிற்சிக் கதைகளை எழுதினார்கள். ஒரு கதைக்கூறுக்கு ஒரு பயிற்சியாளர் என, உலகளாவிய நிலையில் எட்டு எழுத்தாளர்கள் இம்முயற்சியில் பங்கேற்றார்கள். வாசகர்கள் எழுதிய ஒவ்வொரு பயிற்சிக்கதையும் மின்னஞ்சல் வழி, பொறுப்பான எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றுக்கான விமர்சனங்களையும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் மூத்த எழுத்தாளர்கள், வாசகர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.

இரண்டாம் நிலையில், ஒரு முழு நாள் சிறுகதைப் பயிலரங்கு, அதே வாசகர்கள், அதே வழிகாட்டி எழுத்தாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஜெயந்தி சங்கர், மாதங்கி, கணேஷ் பாபு ஆகியோர் நேரடியாகவும் எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, சுதீர் செந்தில் போன்றோர் இந்தியாவிலிருந்தும், எழுத்தாளர் கே.பாலமுருகன் மலேசியாவிலிருந்தும் ‘ஸ்கைப்’ வழியாக இப்பயிலரங்கில் பங்கேற்றார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கதைப் பிரிவைப் பற்றிய பயிற்றுவிப்பாளர்களின் விளக்கங்களும் வாசகர்களின் முகம் பார்த்துச் சொன்ன விமர்சனங்களும் இணையம் சாத்தியமாக்கிய புதிய தொடக்கம். இனி இப்படித்தான் உலகத்தமிழ் இலக்கியச் சூழல் இருக்கப் போகிறது என்பதை அப்பயிலரங்கு நெடுக நம்மால் உணர முடிந்தது.

நிறைவு
இணைய வளங்களான மின்னஞ்சல், யூ டியூப், ஸ்கைப் போன்றவற்றின் வழி உலகளாவிய இலக்கிய இணைப்பு மற்றும் பறிமாற்றத்தின் சாத்தியக்கூறுகளை முன்னெடுத்த இம்முயற்சிகள், பெருங்கடலின் சிறுதுளிகளே. ஆனால், ‘எந்த ஒரு நீண்ட பயணமும், நாம் எடுத்து வைக்கும் முதல் அடியிலிருந்துதான் தொடங்குகிறது’ என்பதை உணர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகள். எல்லைகளில்லா சாத்திங்களோடு நம் முன் நிற்கும் இணையம், தகவல் தொழில்நுட்பத்தைச் சரிவரப் பயன்படுத்தி, தமிழ் மொழியையும், இலக்கியத்தையும், பண்பாட்டையும் நம் சுய அடையாளத்தையும் இன்னொரு தலைமுறைக்கு விட்டுச் செல்லும் கடமை, ஒரு நவீன உலகில் வாழும் வாய்ப்பைப் பெற்ற நம் ஒவ்வொருவருக்கும் உண்டு!

*

5 COMMENTS

 1. Excellent sir.நல்வாழ்த்துக்கள்! தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! வாழ்க தங்களது தமிழ் பணி

 2. படைப்பு மிகுந்த ஆக்ககரமானதாகவும் இன்றைய சூழலில் தேவையானதாகவும் சிறந்த பயனுள்ளதாகவும் உள்ளது. கருத்துக்களும் இன்னபிற செய்தித் தொகுப்புக்களும் மாணவர்களுக்கு மட்டுமின்றி தனியார்வலர்களுக்கும் சிறந்த வழிகாட்டும் வகையில் அமையப்பெற்றுள்ளது! மிக்க நன்றி!

 3. தமிழுக்கு நீங்கள் செய்துவரும் சேவை மெய்சிலிர்க்க வைக்கின்றது. பகிர்ந்து கொண்டதற்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.
  உ.வே சுவாமிநாத ஐயர் அன்றைய இலக்கியங்களைத் தேடி தொகுத்தது போல் இந்த நவீன உலகின் தமிழ் இலக்கியங்களை ஒன்று சேர்க்கும் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

 4. தமிழின் இனிமையான, பிரம்மாதமான ல(க)ட்டுரை. இணையத்தின் வழியாக, தமிழ் இதயங்களின், நாடி நரம்புகளின் வழியே மின்னஞ்சல் செய்து, ஒவ்வொரு தமிழ் மரபணுவிலும் உள்ள திறனை ஊக்கப்படுத்தி, திறமையை வளர்த்து, படைப்புகளை வடிக்கத்துாண்டும் சிங்கப்பூரின் தங்கமீன் மற்றும் இளமைத்தமிழ்.காமின் அரிய, அற்புத செயல்பாடுகளை நான் மனமார பாராட்டி வாழ்த்துகிறேன். கதை, கவிதை போன்ற படைப்புகளின் உருவாக்க சக்தியினை இளையவர்கள் மனங்களிலிருந்து தோண்டி எடுப்பதற்காக, கிணற்று நீரில் ஆழத்தில் தவறிப்போன வாளியை எடுக்கப் பயன்படும் பாதாள கரண்டி போல, திரைப்படக் காட்சிகள், பாடல்களைப் பயன்படுத்தி வெளிக்கொணரும் முயற்சியும், அதன் வெற்றியும் மெய்சிலிர்க்கச்செய்கிறது. ஒரு வாசல் மூடினால் மறு வாசல் திறப்பது இயற்கையின் பேரம்சக்கூறு. கால ஓட்டத்தின் விரைந்த சுழற்சிக்கேற்ப நுால்களைப் புரட்டும் சமூகத்தின் குறைபாடு, இணையத்தைத் திறந்து நிறைவெய்துகிறது. அதற்கான பிறவிக்கடமையை செவ்வனே செய்துவரும் என் அன்பிற்கினிய மாப்ள மணிமாறனை எவ்வளவு பாராட்டினும் தகுதும். தமிழ் உலகத்தின் வயதை ஒத்த தெய்வீக மொழி. இசை மொழி, நாகரிக மொழி, கலாச்சார மொழி, பண்பாண்டி மொழி, அன்பின் மொழி, அழகிய மொழி. ஆகவே, தமிழ் என்றென்றும் வாழும். எதிர்காலத்தில் உலகையே ஆளும் என்று வாழ்த்துகிறேன். நன்றி. அன்புடன், கவிஞர் செ.திராவிடமணி.

 5. பிழைத்திருத்தம்…….அதற்கான பிறவிக்கடமையை செவ்வனே செய்துவரும் என் அன்பிற்கினிய மாப்ள மணிமாறனை எவ்வளவு பாராட்டினும் தகும். தமிழ் உலகத்தின் வயதை ஒத்த தெய்வீக மொழி. இசை மொழி, நாகரிக மொழி, கலாச்சார மொழி, பண்பாட்டு மொழி, அன்பின் மொழி, அழகிய மொழி. ஆகவே, தமிழ் என்றென்றும் வாழும். எதிர்காலத்தில் உலகையே ஆளும் என்று வாழ்த்துகிறேன். நன்றி. அன்புடன், கவிஞர் செ.திராவிடமணி.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here