அது ரியோ ஒலிம்பிக்ஸிற்குச் சற்று முன் நடந்த சிங்கப்பூர் ஒபன் பேட்மிண்டன் போட்டி.

சிறுவயது முதலே நான் பேட்மிண்டன் ரசிகன். பிரகாஷ் பதுகோன் (ஆமாம், பிரபல நடிகை தீபிகா பதுகோனுடைய அப்பாவேதான்) இந்தியாவின் பாட்மிட்டன் ஜாம்பவான். அவர், கருப்பு, வெள்ளை டி.வியில் பிடிப்பான காற்சட்டை அணிந்து, டென்மார்க்கின் மார்டன் ஃபிரோஸ்டோடு உலக பாட்மிண்டன் அரங்கில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த காலம் முதலே அதன் ரசிகன் என்றால், என் வயதையும் ஓரளவு ஊகித்து விடுவீர்கள்.

அவருக்கு அப்புறம் வந்தவர் கோபிச்சந்த். பிரகாஷைப் போலவே மதிப்புமிக்க ஆல் இங்கிலாந்து பாட்மிட்டன் போட்டியில் வென்றவர். அந்தப் போட்டியைப் பார்க்கும்போது, காலம் டி.வியை கலருக்கு மாற்றிவிட்டது. சிங்கப்பூரில் கிளமெண்டி வீட்டில் அமர்ந்து டி.வியில்தான் அந்த இறுதிப் போட்டியைப் பார்த்தேன்.

பிரகாஷ் நளினமாக விளையாடக்கூடியவர். வெளியே செல்லும் பந்துகளைத் துல்லியமாகக் கணிப்பார். வலையை ஒட்டி அவர் போடும் பந்துகள் எதிரியை ஏமாற்றி, தரையைத் தொட்டுவிடும். இந்தத் திறன்களோடு, துள்ளிக்குதித்து, பந்தை ‘ஸ்மாஷ்’ செய்யும் அசுர பலம் கோபிச்சந்திடம் இருந்தது.

அது அந்தக் காலம்.

சிங்கப்பூர் ஓபன் போட்டிக்கு ஒரு பயிற்றுவிப்பாளராக வந்திருந்தார் கோபிச்சந்த். அவருடைய மேற்பார்வையில், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஶ்ரீகாந்த் & பி.வி.சிந்து அப்போட்டியில் விளையாடினார்கள். அதுதான் ஒலிம்பிஸிற்கு முன் சர்வதேச அரங்கில் திறனைச் சோதிக்கக் கிடைக்கும் முக்கியமான இறுதி வாய்ப்பு.

நான் பார்க்கப்போனபோது, ஒரே நேரத்தில் மூன்று கோர்ட்டுகளில் மூன்று போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. அதில் ஒன்றில், ஶ்ரீகாந்த் ஒரு ஹாங்காங் வீரரோடு விளையாடிக் கொண்டிருந்தார். ஶ்ரீகாந்தின் திடமான உடலும் உறுதியான, செதுக்கப்பட்டது போன்ற கால்களும்தான் முதலில் கவனத்தை ஈர்த்தன.

அன்று அவருடைய விளையாட்டில் ஒரு பதட்டமிருந்தது. சில அற்புதமான ஷாட்ஸ் அடித்தார். ஆனால், பல தவறுகள். ஓரமாக அமர்ந்து கோபிச்சந்த் காட்டிய கை சைகைகள் அன்று எடுபடவில்லை. நேர் செட்டுகளில் தோற்று வெளியேறினார் ஶ்ரீகாந்த். கோபிச்சந்தின் முகத்தில் ஒரு சோகம் வந்து அமரக் கண்டேன். தோளில் பையை மாட்டிக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார். அவர் நடந்து வந்தது, நானிருந்த பக்கம்.

அவர் மனநிலை எனக்குப் புரிந்தது. இருந்தாலும் அவரோடு புகைப்படம் எடுக்க அதுவே நல்ல வாய்ப்பு. மெல்ல அவரை நெருங்கி, ‘குட் லக் இன் தி ஒலிம்பிக்ஸ்’ என்று கைகுலுக்கினேன். அவர் உதடுகள் புன்னகையித்தாலும் மனம் ஶ்ரீகாந்தின் தோல்வியை நினைத்துக் கொண்டிருப்பது புரிந்தது. ‘இதே அரங்கில் நீங்கள் சிங்கப்பூர் வீரர் சுசிலோவுடன் விளையாடியதைப் பார்த்த பழைய ஞாபகம் வருகிறது’ என்றேன். சின்னதாய் அந்தக் கண்களில் ஓர் ஒளி. அப்போது அவரோடு எடுத்த புகைப்படம்தான் இது.

ரியோ ஒலிப்பிக்ஸில், ஶ்ரீகாந்த் கால் இறுதிச் சுற்றில், சீன வீரர் லின் டானிடம் மூன்று செட்களில் போராடித் தோற்றதும் பி.வி. சிந்து வெள்ளி வென்றதும் நீங்கள் அறிந்த பிரபலமான கதைகள்தான்!

*
சினிமா, அரசியல், கலை, இலக்கியம், விளையாட்டு, பொருளாதாரம் என பலவற்றிலும் பிரபலமானவர்களை, நாம் வியக்கும் மனிதர்களைச் சந்திப்பதென்பது நம்முடைய இயல்பான கனவுதான்.

அப்படி நாம் வியந்த மனிதர்களை, சந்திக்கும் வாய்ப்பும் அதிர்ஷ்டவசமாக நமக்குக் கிடைத்துவிடும். அப்படி நீங்கள் சந்தித்த பிரபலம் யார்? சந்திப்பதற்கு முன் என்ன மனநிலையில் இருந்தீர்கள்? சந்தித்தபோது என்ன நடந்தது? என்ன பேசினீர்கள்? – இதையெல்லாம் ஒரு சிறு கட்டுரையாக எழுதி எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அச்சந்திப்பு சிங்கப்பூரில் நிகழ்ந்ததாக இருந்தால், சிறப்பு. கட்டாயம் அந்தப் பிரபலத்தோடு நீங்கள் எடுத்த புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.

சுவையான அனுபவங்கள், தங்கமீன் இணைய இதழில் புகைப்படங்களோடு வலையேற்றம் காணும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
thangameen@hotmail.com

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here