நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய பெருமையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் செம்மொழியான தமிழ்மொழியை கொண்டாடுவோம், அதனை ஆவணப்படுத்துவோம் அதே வேளையில் எல்லோரும் ஒன்றிணைந்த ‘ஒரு நாடு, ஒரு மக்கள்’ என்ற பெருமையைக் கட்டிக்காப்போம் என்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் திரு விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

திரு ஏபி ராமன் அவர்கள், திருமதி சவுந்திர நாயகி வைரவன் அவர்களுடன் இணைந்து எழுதிய ‘சிங்கையில் தமிழும் தமிழரும்(எனது பார்வையில்)’ என்ற தமிழ் நூலும், திருமதி சவுந்திர நாயகி வைரவன் அவர்கள் திரு ஏபி ராமன் அவர்களுடன் இணைந்து எழுதிய “The Tamil Community and the Making of Modern Singapore”(சிங்கப்பூரை நவீனமாக்கிய தமிழ்சமூகத்தினர்) என்ற ஆங்கில நூலும் 13-மே-2018 அன்று காலை சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இம்மாதிரியான நூல்கள் தம் முன்னோர்கள் செய்த தியாகத்தையும், நம் பாராம்பரியத்தையும் எடுத்துச் சொல்லும் என்றும் தன்னுடைய முன்னோர்கள் நான்கு தலைமுறையினருக்கு முன்னர் இந்தியாவில் இருந்து சிங்கைக்கு குடிபெயர்ந்த வரலாற்றையும் நினைவுகூர்ந்தார்.

சிங்கப்பூருக்கான இந்திய தூதுர், சிங்கப்பூருக்கான இலங்கையின் துணைத்தூதர், இந்து அறநிலையத்துறை தலைவர் என பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

காலையில் விமானம் நிலையம் செல்ல நேரிட்டதால் சற்றே தாமதமாக, திரு நா ஆண்டியப்பன் அவர்கள் பேசும் பொழுதே நிகழ்ச்சிக்கு சென்றேன். அதற்கு முன்னர் பேசிய, சுப திண்ணப்பன் அவர்கள் பேச்சைௐ கேட்கும் வாய்ப்பை இழந்தேன். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் தலைவரான திரு நா ஆண்டியப்பன் தன்னுடைய உரையில், “நான் எழுத்தாளராவது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கிறேன், நான் இன்னும் எழுத்தாளர் ஆகவில்லை போலும். ஏனென்றால் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் இல்லை” என்று சுட்டிக்காட்டினார். சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் கௌரவத் தலைவர் திரு கே கேசவபாணி, கவிமாலைக் காப்பாளர் திரு மா அன்பழகன், இந்நூலின் பிழை திருத்தத்துக்கு உதவி புரிந்த திரு சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இரு நூல்கள் குறித்தும் தி மீடியா, தயாரிப்பாளர் திரு முகம்மது அலி, இந்து அறநிலையத்துறையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு த ராஜசேகர், இருவரும் கலந்துரையாடினர்.

திரு ராஜசேகர் புத்தகம் குறித்து கூறும்போது, இரு நூற்றாண்டுகால வரலாற்றைச் சுருக்கமாக ஒரு புத்தகத்தின் பொருளடக்கம் போன்று திரு ஏபி ராமன் கொடுத்திருக்கிறார் என்றும் ஒவ்வொரு அத்தியாத்தையும் மேலும் விரிவுபடுத்தி தனியாக புத்தகம் போடலாம் என்றும் கூறினார்.

இப்புத்தகம் ஒரு தகவல் திரட்டு, திரு ஏபி ராமன், தன்னுடைய காலகட்டத்தில் நடந்ததை அவதானித்து ஒரு காலக் கணிதன் போன்று பத்திரப்படுத்தி கொடுத்திருப்பதாக கருத்துரைத்தார் திரு முகம்மது அலி.

‘இப்படி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற தன்னை அணுகி இந்நூல் எழுதியதற்கு முக்கியமான காரணமாக திருமதி சவுந்திர நாயகி வைரவன் இருந்தார் என்றும் இந்நூல் ஆய்வு நூலல்ல, 1950ல் சிங்கை வந்து இன்றுவரை பத்திரிக்கையாளனாக இருக்கும் என்னுடைய அனுபவ நூல்’ என்று தனது ஏற்புரையில் திரு ஏபி ராமன் அவர்கள் கூறினார்.

பின்னர் நன்றியுரையாற்றிய திருமதி சவுந்திர நாயகி வைரவன் இந்நூல் ஆய்வு நூலல்ல என்றும் ஆனால் பல தகவல்கள் அடங்கியுள்ளதாகவும் கூறினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களையும் நூல் உருவாக உதவி புரிந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறினார்.

திரு ஜி டி மணி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். மதிய உணவுடன் இனிதே விழா நிறைவுற்றது.

நிறைய பேருக்கு ஆங்கில நூல் குறித்து குழப்பம் உள்ளது. அதற்கு காரணம் அது குறித்த சரியாக நிகழ்வில் விளக்கப்படவில்லை.

எனது பார்வையில் இரு நூலும் ஒரே அட்டைப்படத்தை கொண்டிருந்தாலும் ஆங்கில நூலில் 25 அத்தியாயங்களும், தமிழ் நூலில் 19 அத்தியாயங்களும் உள்ளன. படங்களும், செய்திகளும் சற்றே மாறுபட்டிருக்கின்றன.

சிங்கையில் நடக்கும் எந்த ஒரு தமிழ் நிகழ்வையும் உடனுக்குடன் முகநூலில் எழுதி வருகிறார் திரு ஏ பி ராமன் அவர்கள். உடலுக்கு வயதானலும் என்றும் கற்றுக்கொள்ளும் மனநிலையுடன் முகநூலில் பதிவிட கற்றுக்கொண்டு தமிழ்மொழியை பலருக்கும் கடத்தி மகிழ்கிறார். ஒரு விபத்தின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டாலும் தன்னைத் தொடரும் பலருக்கும் செய்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்கள் மூலம் செய்தி சேகரித்து பதிவு செய்கிறார். அதோடு வீட்டில் ஓய்வில் இருக்கும் காலத்தில் ஓய்வெடுக்க விரும்பாமல் நூல் எழுதியது அவரின் உழைப்புக்கு ஒரு சான்று. நல்ல உடல்நலத்துடன் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

படங்களுக்கு நன்றி : Thiyaga Ramesh, Geebee Bhaskey

பன்னாட்டு நிறுவனப் பணியில் இருக்கிறார். தமிழ், சமூக அமைப்புகள் பலவற்றிலும் பங்களித்து வருகிறார். இந்திய நற்பணிக்குழுவில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. நல்ல கவிஞர்.

1 COMMENT

  1. நன்றி சொல்ல மட்டுமே நான் லாயக்கு! காரணம், இது நான் எழுதிய நூல் ஆயிற்றே! தாம் சண்முகம் போன்றவர்களை ஒய்வின்றிப் பணியாற்ற, ஓய்வு பெற்றவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here