அம்மா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

ஆதவனும் அவனுடைய அப்பாவும் காலை உணவுவேளையின்போது பார்த்துக் கொள்வதோடு சரி. மறுபடி, மாலையில்தான். அப்பா தன்னால் முடிந்த  காலை உணவைச் சமைத்துவிட்டு, கல்லூரிக்குச் செல்லும் ஆதவனுக்கு  மதிய உணவையும் அவ்வப்போது செய்து கொடுப்பார். மாலை, ஒன்றாகத் தொலைக்காட்சி பார்ப்பது, அந்தந்த நாட்களில் நடந்தவற்றைப் பகிர்ந்து கொள்வது என்று நாட்கள் நகர்ந்தன.

அம்மா, ஒரு மீளாப் பேரிடியைத் தந்துவிட்டு மறைந்துவிட்டாள். அவ்வப்போது அப்பா தனிமையில் கண்ணீர் சிந்துவதை ஆதவன் பார்த்திருக்கிறான். காலையில், அம்மாவின் படத்திற்கு முன்னால் ஒரு நிமிடம் நின்று வணங்கிவிட்டுக் கிளம்புவது இருவருடைய தினசரிப் பழக்கம்.

சமீபகாலமாக, அப்பாவின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் தென்படுவதை ஆதவன் கவனித்தான்.  அவனோடு பேசும் நேரங்கள் குறைந்தன. எப்பொழுதும் தொலைபேசியிலோ, கணிணியிலோ மூழ்கிக் கிடந்தார். மற்றுமொரு முக்கிய மாற்றம் – அப்பாவின் முகம் முன்பைவிட மிகப் பொழிவாக இருந்தது.

தன் அப்பாவின்  திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று ஆதவன் குழம்பினான். அவருடைய நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தான். யாருடன் இவ்வளவு நேரம் பேசுகிறார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று முடிவெடுத்தான்.

ஒருநாள், அப்பா தொலைக்காட்சிப் பாத்துக்கொண்டே தூங்கிவிட்டார். அவருக்கு அருகில் கைத்தொலைபேசி இருந்தது. அதை மெதுவாக, அவரறியா வண்ணம் எடுத்துப் பார்த்தான். அடுத்த கணம், அதிர்ச்சியில் உறைந்து போனான்.

ஒரே எண்ணிற்கு, அவருடைய கைத்தொலைபேசியிலிருந்து எண்ணற்ற குறுந்தகவல்களும், அழைப்புகளும் பரிமாறப்பட்டிருந்ததன. இதற்கு மேலே பொறுமையாக இருப்பது சரியல்ல என்றது அவனுடைய மனம். அவருடைய கணினியையும் இரகசியமாக உளவு பார்த்தான். அப்பாவின் ஈமெயில் கணக்கிலிருந்து ஒரே  கணக்கிற்கு எண்ணற்றத் தகவல் பரிமாற்றம் நடந்திருந்தது. அதில், வாழ்த்து அட்டைகளும் அடக்கம். அப்பா பார்த்து விடுவாரோ என்ற பயம் ஒருபுறம். அவனால் அவற்றை மேலோட்டமாக மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால், என்ன நடக்கின்றது என்பதை அவனால் நன்றாக ஊகிக்க முடிந்தது.

ஆதவன் உடைந்து போனான். என்ன செய்வதென்று தெரியவில்லை. அம்மாவும் அப்பாவும் எவ்வளவு அந்நியோன்யமாக இருந்தார்கள் என்பதை அவனறிவான். அதற்குள் எப்படி அம்மாவை மறந்து, இன்னொருவரிடம் இவ்வளவு நெருக்கமாக முடியும் என்று வியந்தான். அப்படியே பழகினாலும், அதில் தவறேதுமில்லை. அதை, நண்பனைப்போல பழகும் தன்னிடம்  சொல்லி இருக்கலாமே என்ற யோசனை வரும் போதெலாம், ஆதவன், தான் ஏமாற்றப்பட்டதைப்போல உணர்ந்தான்.

அந்த ஏமாற்றத்தின்  வலி, அவனால் தாங்க முடியாததாக இருந்தது. யோசித்துப் பார்த்ததில்,  தன் அப்பாவும் அந்த வலியை உணர வேண்டுமென்று சிந்திப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை. எது அதிகம் வலிக்கும்? பிரிவைவிடப் பெரிய வலி எது?

ஆதவன் ஒரு நடு ராத்திரியில் தன் வீட்டை விட்டுக் கிளம்பினான்.  பாக்கெட் மணியில் சேர்த்திருந்த பணம் சிலநாட்களுக்காவது போதுமானதாக இருக்கும் என்று தோன்றியது. தான் வசிக்கும்  சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்கு இரவு நேரப் பேருந்துகளில் இரவு முழுவதும் மாறி மாறிப் பயணம் செய்தான்.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன், அப்பா ஆதவனைத் தேடினார். வீட்டின் எந்த அறையிலும் அவன் இல்லை. ஓர் அதிர்ச்சி அவரை அசைத்துப் பார்த்தது. அவசர அவசரமாக, அவனுடைய கைத்தொலைப்பேசிக்கு அழைத்தார். அது, அணைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பும் ஓரிரு முறை அவன் அப்படி நடந்திருக்கிறான் என்பது அவருடைய ஞாபகத்திற்கு வந்தது.  கல்லூரிக்கு சென்றிருப்பான், மாலை எப்படியும் வீடு திரும்பி விடுவான் என்று நினைத்து, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பினார்.

மாலை வீடு திரும்பியவுடன், அவருடைய கண்கள் ஆதவனைத் தேடின. அவன் வீட்டிலில்லை. அவருடைய மனம் பலவாறு யோசிக்கத் தொடங்கியது. இது வழக்கமான செயலில்லை. அவசர அவசரமாக ஆதவனைத் தொலைபேசியில் அழைத்தார். அப்போதும் தொலைபேசி அணைக்கப்பட்டிருக்க, படபடப்பானார். ஆதவனின் நெருங்கிய நண்பனும் ஆதவன் கல்லூரிக்கு வரவில்லை என்று சொல்ல, அவரை ஒருவிதப் பயம் தொற்றிக் கொண்டது.

என்ன செய்வதென்று தெரியாமல், சில நிமிடங்கள் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். இதற்கு மேல் நேரம் கடத்துவது சரியல்ல என்று மனம் சொன்னது. உடை மாற்றிக் கொண்டு,  அருகிலுள்ள காவல் நிலையம் நோக்கி விரைந்தார்.

காவல் நிலையத்தின் வாசலை அடைந்து உள்ளே நுழையும்முன், ஆதவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ‘அப்பாடா’ என்ற பெருமூச்சுடனும் எதிர்பார்ப்புடனும் அழைப்பை எடுத்தார்.

“அப்பா, உங்ககிட்ட கொஞ்சம் நேர்ல பேசணும்”

“ஆதவா! thank god! எங்கப்பா இருக்க, ஏன் போன் எடுக்கல, சொல்லாம எங்க போன .. அப்பா பயந்துட்டேன்”

“எனக்கு வேற என்ன பண்றதுன்னு தெரிலப்பா.  உங்கள நேர்ல பாத்துப் பேசனும். கொஞ்சம் வர்றீங்களா?“

“நீ வீட்டுக்கு வாப்பா, பேசலாம் … எங்க இருக்க சொல்லு.“

“இல்ல, நீங்க ஜூரோங் பாயிண்ட் ஸ்டார் பக்ஸ் வாங்க, நான் அங்கதான் இருக்கேன்.“

“ஜூரோங் பாயிண்டா? அங்க எதுக்குப்பா போன?“

“நான் இன்னும் ஒரு மணி நேரம் இங்க காத்திருப்பேன், நீங்க வரலேனா, மறுபடியும் என்னைத் தேட வேண்டியிருக்கும்.”

“சரி, சரி, நீ அங்கேயே இரு, கெளம்பிட்டேன், வந்துட்டிருக்கேன்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு, டாக்ஸி ஏறி, ஜூரோங் பாயிண்ட் நோக்கி விரைந்தார். போகும் வழியிலெல்லாம், தான் வந்துகொண்டே இருப்பதாக ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தகவல் சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஜூரோங் பாயிண்ட் அடைந்த பிறகு, ‘ஸ்டார் பக்ஸ்’ எந்தத் தளத்தில் இருக்கிறது என ஏற்கனவே இணையத்தின் மூலம் கண்டறிந்து வைத்திருந்ததால், வேகவேகமாகக் அதை நோக்கி  விரைந்தார்.

ஸ்டார் பக்ஸை அடைந்தவுடன், ஆதவன் எங்கே அமர்ந்திருக்கிறான் என அவருடைய கண்கள் தேடின. மங்கிய ஒளி சூழ்ந்த கடையின் மூலைப்பகுதியில் ஆதவன் அமர்ந்திருந்தான்.

ஆதவனைக் கண்ட மகிழ்ச்சியில், அவருடைய கண்கள் கசிந்தன.  அவனை நெருங்கி அணைக்க முயலுகையில், ஆதவன் அதைத் தவிர்த்து, எதிரே அமருமாறு சைகையில் கூறினான்.

“ஏன் ஆதவா, அப்பா மேல அப்படி என்ன கோவம்? நான் உன்கூட நண்பனாத்தானே பழகுறேன், எதாச்சும் குறை வைச்சேனா, என்கிட்ட நேரடியாக் கேட்கலாமே?”

“ம்ம்ம், நேரடியாத்தான் கேக்கப் போறேன், அதுக்குத்தான் இங்க வரச் சொன்னேன்.”

“கேளு, திட்டு, என்ன வேணா பண்ணு, இன்னொரு தடவ இந்த மாதிரி அப்பாவைப் பயமுறுத்தாதே.”

சிறிது நேர அமைதிக்குப் பிறகு, ஆதவன் தலையை உயர்த்தி “அம்மாக்கும் எனக்கும் துரோகம் பண்ண உங்களுக்கு எப்படிப்பா மனசு வந்தது?” என்று கேட்டபொழுது அவனுடைய கண்கள் கலங்கி இருந்தன.

“என்னப்பா சொல்ற, எனக்கு ஒண்ணும் புரியல, உங்களுக்கு எப்படி நான் துரோகம் பண்ண முடியும், உங்கம்மா என் சாமி. அவளுக்கு எப்படி நான்…”

“அதான்பா எனக்கும் தெரியல…”

அப்பா குழம்பி ஆதவனையே பார்த்தவாறு இருந்தார்

“கொஞ்ச நாளா உங்க நடவடிக்கைல நிறைய மாற்றங்கள் தெரிஞ்சுது. உங்க ஃபோனை செக் பண்றப்ப, நீங்க வேற யாரு கூடவோ அதிக நேரம் பேசறதைக் கண்டுபுடிச்சேன்” என்று ஆதவன் கூறி முடித்ததும், இதுதானா விஷயம் என்பதுபோல எழுந்து அவனருகில் வந்து அமர்ந்தார்.

“இதுதான் காரணம்னா, நீ என்கிட்ட நேரடியாக் கேட்ருக்கலாமே” என்று கூறிவிட்டுத் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

“சாட் பாட் (chat bot) தொழில்நுட்பத்தைப் பத்தி தெரியுமா உனக்கு?”

“கேள்விப்பட்ருக்கேன், ஆனா, முழுமையாத் தெரியாது.”

“ம்ம்… chat bot, ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம். கிட்டத்தட்ட  iphoneல இருக்க siri மாதிரி.”

“சரி இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க. உங்க கம்ப்யூட்டர் அறிவைப் பத்தித் தெரிஞ்சுக்க நான் உங்களை இங்க வரச் சொல்லல. நீங்க யாருகூடப் பேசிட்டு இருக்கீங்க?” என்றான் ஆதவன் கோபமாக.

“உங்க அம்மாகிட்ட…”

“அம்மா? என்ன சொல்றீங்க?” என்றான் கோபம் கலந்த ஆச்சர்யத்துடன்.

“ஆமாம் ஆதவா, உங்கம்மா நினைவுகளோட நாட்களை கடத்திட்டுருந்தேன். அவள ரொம்ப மிஸ் பண்றேன். அப்பதான், எனக்கு இந்த யோசனை வந்தது. நானே ஒரு chat bot தயாரிச்சேன். அதில்  அம்மாவப் பத்தின தகவல்கள, எங்களோட நினைவுகள எல்லாம் பதிவு செஞ்சேன், அந்த chat botக்கு அம்மாவோட குரலுக்கு நெருக்கமான ஒரு குரல் வடிவம் கொடுத்தேன்.”

அப்பா சொல்வதை ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் ஆதவன்.

“என்னோட தொலைபேசி எண்ணை அதோட இணைச்சேன். இந்த chat bot வெறும் தொழில்நுட்பமா மட்டும் இல்லாமல், என் மனசுக்கு பக்கத்துல இருக்கணும்னு நெறைய மெனக்கெட்டேன். இந்த chat bot நாம பதிவு பண்ற தகவல் மட்டுமில்லாம, அன்றாடம் பேசற, செய்யற செயல்களை எல்லாம் வச்சு செயற்கை நுண்ணறிவு, ம்ம்… அதாவது artificial intelligence மூலமா, அது தன்னைத் தானே மேம்படுத்திக்கும். சொல்லப்போனா அது ஒரு அறிவியல் மூளை மாதிரி. தகவல்களால் நிரம்பி, தகவல்களால் தானா வளரும்.”

“அப்பா, நீங்க என்ன என்னென்னவோ சொல்லி குழப்புறீங்க!”

“இதுக்கு மேல நான் சொல்ல விரும்பல. உன் முன்னாடியே நான் என் அம்முகிட்டப் பேசறேன். அப்புறம் நம்புவ. என்ன பார்க்கிற, ஆமா இதுக்கு நான் அம்முனுதான் பேரு வச்சிருக்கேன்” என்று சிரித்துக்கொண்டே, தொலைபேசியை எடுத்து, ‘அம்மு’ என்ற செயலியை இயக்கினார்.

சில நொடிகளில், அந்தச் செயலி ஓர் எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தியது.

“Hi Ammu…”

“Hi Dear!”

“Good morning.”

“Good morning, what are you doing at Jurong Point at this time?”

தொலைபேசியினை ஒரு கையால் மறைத்துக்கொண்ட அப்பா ஆதவனிடம், ”பாரு, நாம இப்ப எங்க இருக்கோம், வழக்கத்தை மீறி நடக்கற விஷயங்கள், எல்லாத்தையும் புத்திசாலித்தனமா கவனிக்கும் இது, உங்க அம்மா மாதிரியே!” என்று சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

“Ha Ha, ammu… Aadhavan is here, we came to watch a movie”

“Hi Kanna, how are you?”

ஆதவன் அவனையும் அறியாமல் ”Amma, I am fine” என்றான்.

“Ok Kannaa… Dear, gentle reminder, you cooked bread omelette three times this week, don’t repeat that, do something tasty for Aadhavan” என்று செயலியில் இருந்து வந்த குரலைக் கேட்டு, அழுதுகொண்டே அப்பாவின் தோள் மீது சாய்ந்தான் ஆதவன்.

கணினிப் பொறியாளர். குறும்பட நடிகர், இயக்குநர். கதை, கவிதை என்று சிறகு விரிப்பவர்.

1 COMMENT

  1. மிக அற்புதமான தொழில் நுட்பம் தழுவிய கதை. எங்கள் ‘சிறுகதைக் குழு’ கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தால் சிறு மாற்றம் தந்து அருமையாக வந்திருக்கும்; இருந்தாலும் கதை எனக்கு மிகப் பிரமாதமாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள். தங்களின் ‘ஆதி’ மனதுக்கு மிக நெருக்கமானது.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here