சிங்கப்பூர்த் தமிழ்ப் பேச்சாளர் மன்றங்கள் உலக அளவில் பிரசித்தம். இளையர்களின் பேச்சாற்றலை வளர்ப்பது அதன் ஒரு நோக்கமெனில், பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ள வயது ஒரு தடையல்ல என்பது அதனுடைய மறுபார்வை. அதற்கு உதாரணமாகத் திகழ்பவர் திருமதி. ஹேமா மித்ரா.  65 வயதான அவர், பேச்சாளர் மன்றப் போட்டிகளில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார். இளைய வயதுப் போட்டியாளர்களும் ஆச்சரியமாய்ப் பார்க்கும் அவரிடம் பேசினோம் …

“என் பெற்றோருக்கு ஒரே பெண்ணானதால் ராணிபோல வளர்க்கப்பட்டேன். சிறு வயது திருமணம், குடும்பம், என்று பாரதி சொன்ன வேடிக்கை மனிஷியாய் வாழ்ந்து குடும்பப்பொறுப்பை செம்மையாய் செய்தேன். இரண்டு மகன்கள். இருபது வருடங்கள் முன்பு, என் மூத்த மகன் வேலை கிடைத்து இங்கே வந்தான். நானும் அவனுடன் வசிக்க இங்கு வந்தேன்

பள்ளியில் படிக்கும் போது, பேச்சு போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறேன். பள்ளி நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால், திருமணத்திற்குப் பிறகு அதிலொரு இடைவெளி விழுந்தது. ஈராயிரத்தி நான்காம் ஆண்டு (2004) சிங்கையில் நடந்த அரட்டை அரங்கம் நிகழ்ச்சி நடந்தது. அதில் பேச, கிடைத்த பாராட்டுகள் மீண்டும் பேச்சின்மீது ஆர்வத்தை உண்டாகின. தீவெங்கும் நடக்கும் பட்டிமன்றங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். வசந்தம் ஒளிவழியில் இதயம் பேசுகிறது என்ற பேச்சு நிகழ்ச்சியில்கூட கலந்துக்கொண்டேன். இங்கு நடந்த நீயா நானா நிகழ்ச்சியிலும் பங்குப்பெற்றேன். பேச்சுத் திறனை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேகம் பிறந்தது.

நீயா நானா நிகழ்ச்சியில், பேச்சாளர் மன்றத்தை சேர்ந்த திரு. ரங்கபிரசாத் கலந்துகொண்டார். அவர் என் பேச்சை ரசித்து மன்ற நிகழ்ச்சிக்குப் பார்வையாளராக வரும்படி அழைத்தார். அந்த மன்றக்கூட்டம் மிகவும் பிடித்ததால், பேச்சாளர் மன்றத்தில் உறுப்பினரானேன். பேச்சாளராக இருந்த நான், மன்றம் கொடுத்த பயிற்சியால் பேச்சை ஆளுபவளாக மாறி, போன வருடம் வட்டார அளவிலான பேச்சு போட்டியில் முதல் பரிசுபெற்றேன். இந்த வருடம், மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில், முதல் பரிசும், அரங்கப்பேச்சில் மூன்றாவது பரிசும் பெற்றேன். இந்தப் பரிசுகள், எந்தத் திறனையும் கற்றுக் கொள்ள, மேம்படுத்திக் கொள்ள, வயது ஒரு தடையல்ல என்பதை உணர்த்தின.

நான் நிறைய புத்தகங்கள் படிப்பது என்னுடைய இன்னொரு பழக்கம். முகநூலிலும் பல பயனுள்ள கட்டுரைகளைப் படித்து அறிவை வளர்த்துக்கொள்கிறேன். எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் தளமாகவும் முகநூல் இருக்கிறது. என் எழுத்து ஆர்வத்தைத் தீர்த்துக்கொள்ள முகநூலில் அடிக்கடி பதிவுகள் போடுவேன். முகநூல், இரண்டு கூர்முனையுள்ள கத்தி. அது பயன்படுத்துபவரின் அறிவு மற்றும் விவேகத்தை பொறுத்தே அது ஒரு வரமா சாபமா என்பது தீர்மானிக்கப் படுகிறது. அதில் வரும் பயனுள்ள பதிவுகளைப் படித்து, தன் அறிவை வளர்த்துக்கொண்டால், அது நேரத்தின் பயன். பொழுதுபோக்காக படித்து, “like” பொத்தானை அழுத்தினால் – நேர விரயம்.

பெண்கள் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் குடும்பம் மற்றும் பிள்ளைகள் என்று சுயம் தொலைத்து விடுகிறார்கள். நானும் அதில் ஒருத்தி. அதைத் தாமதமாக உணர்ந்தேன். பிறந்தோம், இறந்தோம், என்பதல்ல வாழ்க்கை. நிறைய சாதித்து, நம்மை நிரூபித்து, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும் என்ற உத்வேகமே வயதைப் பற்றிக் கவலைப்படாம் என்னை இயங்க வைக்கிறது.

பெண் என்பதில் பெருமைக்கொள்வது, அளவில்லா தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி. அனைவரையும் அன்பால் அரவணைத்து, ஒவ்வொருவரிடமிருந்தும் நல்லவைகளை உள்வாங்கி என்னை மேம்படுத்திக்கொள்வது. “Life is a journey towards perfection” என்பவற்றைக் கொள்கையாகக் கொண்டு நடை போடுகிறேன்.

இன்றைய இளைய தலைமுறைக்கு நான் சொல்ல விரும்பவது என்னவென்றால், ‘நீங்கள் அதி புத்திசாலிகள். ஆனால், மனதளவில் மென்மையானவர்களாக இருக்கிறீர்கள். சிறு தோல்வியிலும் துவண்டுவிடுகிறீர்கள். தோல்வியே வெற்றிக்கு முதல் படி. எவ்வளவு முறை விழுந்தீர்கள் என்பதல்ல கணக்கு. எவ்வளவு உத்வேகத்துடன் எழுந்தீர்கள் என்பதே வெற்றி. விதையாக புதைக்கப்பட்டாலும், விருச்சமாக உயருங்கள். திறமையுடன், மன உறுதி மற்றும் விடாமுயற்சி இரண்டையும் பற்றிக்கொண்டு வாழ்வில் உயருங்கள்.” என்று உற்சாகமும் தன்னம்பிக்கையும் தெறிக்கப் பேசுகிறார் திருமதி ஹேமா. அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. எதையும் புதிதாகக் கற்றுக் கொள்ள, தொடங்க வயது ஒரு தடையள்ள என்ற மனநிலையோடு அவரிடமிருந்து விடைபெறுகிறோம்!

புகைப்படங்கள்: ஹேமா மித்ரா

குடும்பத்தலைவி. சிறுகதை எழுத்தாளர். பேச்சாளர் மன்றத்தில் ஆர்வமுள்ளவர். சமூக அமைப்புகளின் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் உதவிகளை மகிழ்வோடு செய்பவர்

1 COMMENT

  1. பெண்கள் 40களுக்கு மேல் நிறைய நேரம் கிடைக்கிறது. பயனுள்ள வகையில் இப்படி செலவு செய்யலாம்.ஐயோ என்னால முடியாது..பயமாயிருக்கு..எங்க மாமாவுக்கு பெண்கள் கருத்து சொன்னாப்புடிக்காது..இவை அனைத்தையும் கடந்து .திருமதி மித்ராவை பார்த்தாவது வீண்அரட்டைகள் அடிக்காமல் வெளியுலகத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள் என நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here