ஓருயிர் உயிரினம் பூமியில் உருவான காலத்திலிருந்து இன்று வரை அந்த பரிணாம வளர்ச்சியின் தகவல்களை உள்ளடக்கி தொன்று தொட்டு வருவது தான் மரபணு. இதில் உயிரினத்துக்கு தேவையான உடல் ரீதியான வேலைகளின் ஆணைகளும், உடல் கட்டுமானத்திற்கு தேவையான ஆணைகளும் குறியீடுகளாக பதிந்திருக்கின்றன.

மனித உடலில் சுமார் ஒரு ட்ரில்லியன் செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லிலும் முழு மரபணு தொகுப்பும் இருக்கின்றது. ஒரு செல்லில் உள்ள மரபணு இழைகளை இணைத்து வைத்தால் கிட்டதட்ட மூன்று மீட்டர், ஒரு காரின் நீளம் இருக்கும். இவ்வளவு நீளமான இழைகளை ஒவ்வொரு செல்லில் உள்ள நியூக்ளியஸில் எப்படி சிக்கலில்லாமல் வைத்துக்கொள்வது? இதற்கு இயற்கையே ஒரு முறையை கண்டுபிடித்து நூல் கண்டு போல் சுற்றி வைத்திருக்கிறது. ஹிஸ்டோன் எனும் ஒரு புரதத்தின் மேல் இருக்கமாக சுற்றி இருக்கிறது. இது போல் பல ஹிஸ்டோன்களை சுற்றி இருப்பதால் இது பார்ப்பதற்கு சில்க் த்ரெட் நெக்லஸ் போலிருக்கும்.

அது சரி இதை பற்றி இப்போது தெரிந்து என்ன செய்வது என்ற கேள்வி தானே கண் முன்னே வருகிறது. இந்த டி.என்.ஏ வைப்பற்றி தெரிந்து கொண்டால் நம் உடலை நன்றாகப் பாதுகாக்க முடியும்.

முறுக்கிய கயிற்று ஏணி போலிருக்கும் இரண்டு இழைகளான மரபணு இழைகள் நான்கு விதமான அடிப்படை மூலக்குறுகள் கொண்டவை. கணினியில் தகவல்களை பைனரி கோடு முறையில் சேமிப்பது போல், இதில் அடினோசின், தைமின், குவனொசின், சைடொசின் என்ற புரதங்களால் ஆனவை. ஏ, டி, ஜி, சி எனப்படும் இவை நான்கும் வெவ்வேறு வரிசையில் சேரும்போது அதில் ஒரு செய்தியை அல்லது ஆணையை பதிய வைக்க முடியும். ஒலியிழையில் ஒலியை பதிவு செய்வது போல் இதுவும் செயல்படுகிறது.

உடலிலுள்ள செல்களை நடத்துவதற்கு புரதங்கள் தேவை. மரபணுக்களில் உள்ள ஆணைகளை தேவையான நேரத்தில் நிறைவேற்றி தேவையான புரதத்தை உண்டாக்கிக் கொள்கிறது நம் உடல். புரதம் தயாரிப்பது மட்டுமின்றி கண், மூக்கு மற்றும் பிற உறுப்புகளின் அமைப்பு, நிறம், நாம் நடந்து கொள்ளும் விதம் போன்ற குணங்களையும் மரபணுவில் காணலாம். புரதம் சாப்பிடுவதன் அவசியத்தை உணர்ந்திருப்போம். நாம் சாப்பிடும் மீன், முட்டை, பால், தானியங்கள் மற்றும் பீன்ஸ்களில் உள்ள புரத்த்தை உடல் உடைத்து நமக்கு தேவையான விதத்தில் புரதமாக செல்களில் பயன் படுத்திக்கொள்கிறது. தசைகளும், உறுப்புகளும் பெரும்பாலும் புரத உட்பொருட்களால் ஆனவையே. அதனால் நாம் தேவையான அளவு புரதங்கள் உட்கொள்ளவில்லையானால் பழைய செல்களை புதுப்பிக்கும் பணி தாமதமாகும். நோய்வாய்ப்படவும் நேரிடலாம். ஆதலால் சரியான அளவு புரதம் உட்கொள்ள வேண்டும்.

இந்த படங்களில் கண்டு இதை கற்பனை செய்ய கடினமயிருந்தால் உங்களுக்கு ஒரு ராட்சச அளவு டி என் ஏ வை நீங்கள் நேரில் காண வாய்ப்பிருக்கிறது. மரீனா பேயில் உள்ள ஹெலிக்ஸ் பாலத்திற்கு ஒரு முறை போய்வாருங்கள். அங்கு முறுக்கிய கயிற்று ஏணிக்குள் நடந்து சென்று ரசிக்கலாம். உலகில் மொத்தம் பத்து இடங்களில் மட்டுமே இது போன்ற மரபணு போல் வடிவமைக்கப்பட்ட மாடல்கள் உள்ளன. அதில் சிங்கையில் உள்ள பாலமும் ஒன்று.

ஹெலிக்ஸ் 2010 ம் ஆண்டு திறக்கபட்ட இது மரீனா பேயை நோக்கி வளைந்த தோற்றத்தில் மரீனா சென்டரையும், பே ஃப்ரண்டயும் இணைக்கிறது. ‘த ஹெலிக்ஸ்’ என்று பெயரிடப்பட்ட இந்த பாலம் சிங்கப்பூரிலேயெ ஆக நீண்ட நடைபாலம். இது 2010 ல் திறக்கப்பட்டது. இந்த பாலத்தை மார்ச் 2006 ம் ஆண்டு கட்டுவதற்கு தீர்மானித்தார்கள். மரீனா பே பகுதியில் இருக்கும் பல இடங்களில் ஒன்றான யூத் ஒலிம்பிக் பார்க்கின் அருகே இடம் முடிவானது. முதலில் சிங்கப்பூர் மீன்பிடி தீவாக இருந்ததை நினைவு கூறும் விதமாக இந்த பாலத்தை ஒரு பெரிய மீன் வலை போல வடிவமைக்க நினைத்தர்கள். பின் அந்த யோசனையை கைவிட்டு மரபணு போல் வடிவமைத்தனர். இது உயிரையும், வாழ்வின் தொடரையும், புதுப்பிப்பு மற்றும் வளர்சியையும் குறிக்கிறது. இரண்டாயிரத்தி ஏழாம் ஆண்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பித்து, அறுபத்தி எட்டு மில்லியன் செலவில் கட்டப்பட்டது.

280 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் தனித்தன்மையான டுப்லெக்ஸ் வகை இரும்பில் செய்யப்பட்டது. இந்த வகை இரும்பு உருவத்திற்கு பலம் கொடுத்து பராமரிப்பு தேவைகளையும் கணிசமாக குறைக்கிறது. பதினாறாயிரம் பேரை ஒரே நேரத்தில் தாங்கும் திறன் கொண்டது. கீழே படகுகள் செல்வதற்கு வசதியாக  நீர்மட்டத்திலிருந்து சுமார் ஒன்பது மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஹெலிக்ஸ்களை கொண்ட இந்த பாலம் மூன்று மாடி உயரம் கொண்டது. இதில் இருக்கும் இரும்பு குழாய்களின் மொத்த நீளம் இரண்டாயிரத்தி இரு நூற்று ஐம்பது மீட்டர்கள்.

பெஞ்சமின் ஷியர்ஸ் பாலம், சிங்கப்பூர் ஃப்ளையர், எஸ்ப்லனேடு அரங்கம், மரினா பே சாண்ட்ஸ், கலை அறிவியல் அருங்காட்சியகம் இவற்றுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த ஹெலிக்ஸ் பாலம்.

எஸ்ப்லனேடு அரங்கத்திலிருந்தும், நகர மன்றத்திலிருந்தும் மரீனா பே சாண்ட்ஸ் கட்டிடத்துக்கு செல்லும் நடைபயணிகள் விரைவாக செல்ல இந்த பாலம் உதவுகிறது. அருமையான  நகரக் காட்சியை காண்பதற்காக ஐந்து இடங்களில் பார்வையாளர் மாடங்கள் கட்டப்பட்டுள்ளான. இந்த பாலத்திலிருந்து தேசிய தின வாண வேடிக்கையை காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது மாணவர்களின் கலைப்படைப்புகளை வைக்கும் வெளிப்புற காட்சியகமாகவும் திகழ்கிறது.

மனித ஜீனோம் ப்ரோஜெக்ட்

குறிப்பிட்ட ஜீவராசியின் ஜீனோம் என்பது அவற்றில் உள்ள  நியுக்லியோட்டைடு ஜோடிகளின் எண்ணிக்கையை குறிக்கும். மனித உடலில் இவை எட்டு பில்லியன் இருக்கின்றன. வாழ்க்கைக்கு தேவையான அத்தனை தகவல்களும் அதில் இருக்கும். எந்த இடத்தில் என்ன ஜீன்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ள ஜீன் சீக்வென்சிங் என்ற முறையை பின்பற்றுகிறார்கள். இதனை முழுவதுமாக நூலகம் போல் சேகரித்து கணினியில் பதிவிட்டிருக்கிறார்கள். 1990 களில் ஆராய்ச்சியாளர்கள் இந்த மகத்தான பணியைத் தொடங்கினார்கள். மனித ஜூனோம் வரைபடம். உலகிலுள்ள ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஒருமித்து இந்த பணியை பதிமூன்று வருடங்கள் செய்தனர். அதன் முடிவில் மனித உடலில் ஜீன்கள் எப்படி செயலாற்றுகின்றன என்பதை பற்றி தெளிவான அறிவு கிடைத்தது. அவற்றின் வடிவம், குணங்கள், அமைப்பு மற்றும் செயல்களை பற்றி நுட்பமாக தெரிந்து கொள்ள முடிந்தது. அது போல் வியாதிகளின் தன்மையும், அவை குணமாகும் தன்மையும் கூட தெரிந்து கொள்ள இப்போது முயன்று கொண்டிருக்கின்றனர்.

பூமியிலேயே மனிதன் தான் புதிரான, சிக்கலான உயிரினம். மனிதனுக்கு சிம்பன்சி அல்லது எலியின் ஜீனோம் எண்ணிக்கையை விட சிறிதே அதிகம். ஆனால் மனித உடலில் உள்ள மொத்த ஜீனோம் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் வெட்டுக்கிளிக்கு 180 பில்லியன் ஜோடிகளும், சாலமாண்டருக்கு 765 பில்லியன் ஜோடிகளும் ஜீனோம் உள்ளது.

மரபணுவியலில் புத்தம் புதிய ஆராய்ச்சிகள் ஆன்மீகவாதிகளும், தத்துவ வேதாந்திகளும் காலங்காலமாக கதறி வரும் சில விஷங்களுக்கு சிறு சாளரத்தை திறந்து வைத்திருக்கிறது.

அது ஒரு உயிருள்ள மரபணுவின் இருப்பு அதைச் சுற்றியுள்ள சுத்தவெளியில் பெரிய அளவில் மாற்றத்தை உண்டு செய்கிறது. அதாவது அந்த மரபணுவின் தோற்றத்திலேயே அங்கிருக்கும் ஃக்வாண்டம் அணுக்கள் வரிசையாக நிற்கின்றன. மற்றொரு ஆராய்ச்சியில் ஒரு மனிதனின் மரபணுவை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து அந்த மனிதனை ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு ஒரு கட்டடத்தில் வைத்து அவனுக்கு பல காட்சிகள் திரையிடப்பட்டது. அந்த காட்சிகளுக்கு தக்கவாறு அவனுடைய உடலில் ஏற்படும் மாற்றங்களைப் போலவே கண்ணாடி பாட்டிலில் இருக்கும் மரபணுவிலும் மாற்றங்கள் பதிவாகியிருக்கிறது.

நம் மொத்த ஜூனோமில் இரண்டு சதவீதம் தான் உபயோகிக்கப்படுகிறது. மற்றவை எல்லாம் உபயோகம் இல்லாத சேமிப்புக்கிடங்காகவே இருக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் இந்த வகை ஜீன்கள் இனவிருத்தி செய்யும் போது சில சமயம் உபயோகப்படும் என கண்டுபிடித்திருக்கிறார்கள்.

டாக்டர் சோஹன் ராஜ் டாடெர் என்பவர் ஜெயின மத கோட்பாடுகளில் கர்மாவும் மரபணுவியலும் என்ற அராய்ச்சியை முடித்து புத்தகம் வெளியிட்டுள்ளார். இதில் அவர் பல மதங்களில் கர்மாவைப்பற்றிய தகவல்களை அலசியிருக்கிறார். ஜெயின மத கோட்பாடுகளையும், தத்துவங்களையும் விளக்கி, அவற்றை மரபணுக்களுடன் ஒப்பிடுகிறார். இதைப் பற்றி மேலும் படிக்க, The Jaina Doctrines of Karma and the Science of Genetics என்ற புத்தகத்தில் காணலாம். இந்த தலைப்பிற்கு முற்றிலும் புதிய அணுகுமுறையை இந்த புத்தகம் தருகிறது.

டி என் ஏ ஃபிங்கர் ப்ரிண்டிங்

இன்றைய குற்றவியல் துறை விஞ்ஞானிகள் மரபணுவை பயன்படுத்தி குற்றங்களை கண்டுபிடிக்கிறார்கள். ரத்தம், முடி அல்லது பிற மனித உறுப்புகள் குற்றம் நடந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டால் போதும் சந்தேகத்துக்குரியவர் அல்லது பாதிக்கப்பட்டவர் யாரென கண்டு பிடித்து விடலாம். ஒவ்வொரு மனிதருக்கும், தாவரத்திற்கும், விலங்கிற்கும் கூட கைரேகை போல் மரபணுவும் தனித்துவமானது. ஒத்த இரட்டையர்கள் தவிர வேறு யாருக்கும் அவை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்த தடயங்களில் உள்ள மரபணுக்கள் சோதனைசாலையில் சின்னச்சின்ன அளவுகளில் உடைக்கப்டும், ஜெல் எலெக்ட்ரோ போரெசிஸ் முறையில் அளவு வாரியாக பிரிக்கப்பட்டு பிங்கர் ப்ரிண்ட் செய்யப்படுகிறது. தடயத்தில் உள்ளதையும், சந்தேகப்படுபவரின் டி என் ஏ ஃபிங்கர் பிரிண்டையும் ஒப்பிட்டு உறுதி செய்து கொள்வார்கள். இது போல் குற்றங்களை கண்டுபிடிக்கும் முறை 1990 ம் ஆண்டிலிருந்து சிங்கையில் செயல்பட்டு வருகிறது.

குற்றங்கள் மட்டுமல்லாது மரபணுக்கள் தந்தை, தாய் மற்றும் நெருங்கிய சொந்த காரர்களை அடையாளம் காணவும் பயன்படுகிறது. கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு வரப்போகும் நோய்களை முன் கூட்டியே கண்டறிந்து சரி செய்யவும் உதவுகிறது. இன்னும் பலப்பல ஆராய்சிகளும், புதிய கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன.

புகைப்படங்கள்: அபிராமி சுரேஷ்

தமிழும், படிப்பும், எழுத்தும் இவருக்கு மிகவும் பிடிக்கும். அறிவியல் புனைவுகள் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. இவருடைய சிறுகதைகளும் கவிதைகளும் பரிசுகள் பெற்றிருக்கின்றன.

1 COMMENT

  1. நல்ல கட்டுரையை கொடுத்து இருபத்தினைந்து ஆண்டுகளுக்கு முன் படித்த விலங்கியல் பாடத்திட்டத்தின் பதிவுகளை ஞாபகத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.மேலும் இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து எமுதவும் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here