என்னுள் குடிகொண்டிருக்கும் அந்தக் கேள்விக்குச் சரியான பதில் எப்பொழுது கிடைக்கும் என்ற ஆவல் என்னை இன்னும் இவ்வுலகில் இயக்கிக்கொண்டிருக்கிறது.  சொல்லப் போனால் அது பொறுமை கலந்த ஆவல்.  எதற்கும் உலகில் எல்லையென்பது உண்டு.  பொறுமை அதற்கு விதிவிலக்கல்ல.  ஆசைக்கு என்னவோ இந்த விதிவிலக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை.  ஆகையால் பொறுமை, சில வேளைகளில் எல்லைகளைத் தொட்டாலும் ஆசை என்ற தீ அதை எரித்து, வாழ்க்கையை ரசிக்கச் செய்துகொண்டிருக்கிறது.

“நான் யார்?” என்பது ஒரு கடினமான கேள்வி.  காரணம் என்னவென்றால் அதற்கு எளிதில் விடை காண முடியாது.  பலரிடம் நான் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பார்த்திருக்கிறேன்.  “உங்களுக்கு வேற வேலை இல்லையா?” என்ற பதிலே பெரும்பாலான நேரங்களில் என்னை வந்து சேர்ந்திருக்கிறது.  அதைப் பற்றிக் கவலை இல்லை எனக்கு.  எப்படியாவது இதற்கு விடை கண்ட பிறகே மரணிக்கவேண்டும் என்பது நான் சற்று முன் கூறிய ஆசையின் ஒரு நீட்டிப்பு.

என் நீண்ட நாள் நண்பனான ஜோசஃப் வர்கீஸை நான் சந்திக்க நேரிட்டது.  எதார்த்தமாக நிழந்த சந்திப்பு எனது வாழ்க்கையில் ஒரு திருப்பமுனையாக அமைந்தது.  ஜோசஃப் பேய்கள், ஆவிகள் சம்மந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் ஓர் ஆய்வாளன்.  உலகில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, பலதரப்பட்ட மனிதர்களிடம் பேசி, அவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறான்.  ஓரிரு முறை ஆவிகளுடன் பேசிய அனுபவமும் அவனுக்கு உண்டு.  இது வரமா அல்லது சாபமா என்றுகூட ஜோசஃப் பல முறை எண்ணிப் பார்த்ததுண்டு.

ஜோசஃபுடன் பேசிக்கொண்டிருப்பது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.  “வேறு வேலையில்லையா?” என்று கேட்கும் மக்களுக்கு மத்தியில் எனக்கு ஆர்வமூட்டுகின்ற ஒரு விஷயத்தையே தனது முழுநேர வேலையாகக்கொண்டிருக்கிறான் என்ற ஒரு மகிழ்ச்சிதான்.

ஜோசஃப் தனது குடும்பத்தினரின் எதிர்ப்புளைத் தாண்டியே இந்த வேலையை மேற்கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரிய வந்தது.  அவ்வாறு செய்வதற்கு மன உறுதி வேண்டும்.  ஜோசஃபிடம் அது அதிகமாகவே இருந்தது.

உணவுக்கடை ஒன்றில் அமர்ந்துகொண்டே நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.  ஜோசஃப் பசியில் உணவை வேகமாக உண்டுகொண்டிருந்தான்.  ஜோசஃபிடம் நான் கேள்வி கேட்க ஆரம்பித்தேன்.

“ஜோசஃப், ஆத்மாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”  அவன் சிரித்துக்கொண்டே, “என்ன ரஹீம், நீயும் ஆராய்ச்சி ஏதாவது செய்யப்போறியா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் இல்லை ஜோசஃப்.  வெகுநாட்களாகே என்னுள்ளே இந்தக் கேள்வி என்னை உறுத்திக்கொண்டே இருக்குது.  உன்னிடம் சில விடைகள் கிடைக்குமென்று நினைக்கிறேன்.”

“ரஹீம், இந்தக் கேள்விக்கு இதுவரைக்கும் யாரும் முழுமையா விடை கண்டுபிடிச்சதே இல்ல.  இருந்தாலும் பல கோணங்ளில் இதைப் பார்க்கலாம்.  மனிதனுக்கு ஆத்மா என்ற ஒரு பொருள் உண்டு.  இந்தக் கருத்தை முதன் முதலில் சொல்லியவர் சாக்ரடீஸ்.  ஒவ்வொரு மனிதனிலும் இந்த ஆத்மா குடிகொண்டுள்ளது.  மனிதனின் செயல்கள் அனைத்தும் இந்த ஆத்மாவைப் பொறுத்தே அமைகின்றது.”

“ஜோசஃப், பெரும் சிந்தனையாளரான சாக்ரடீஸுக்கும் ஆத்மாவில் நம்பிக்கை இருந்ததா?”

“அவருடைய நம்பிக்கை எல்லாம் என்றும் அறிவு சார்ந்ததே.  ஒருமுறை சாக்ரடீஸிடம் ஒருவர் ஆத்மாவின் தொழில் என்னவென்று கேட்டார்.  அதற்கு அவர் பகுத்துணருதலே ஆத்மாவின் தொழில் என்று அழகாகக் கூறினார்.”

“ஜோசஃப், நல்லது கெட்டதை நிர்ணயிப்பது நமது ஆத்மாவென்றால், தவறு செய்வது ஆத்மாதானே? ஏன் நாம்  தண்டிக்கப்படுகிறோம்?”

“ரஹீம், இது மிகவும் கஷ்டமான ஒரு கேள்வி.  ஆத்மாவைப் பொறுத்த வரையில் நிறைய பேரு பல கேள்விகளுக்கு விடைகள் இல்லாமதான் தவிச்சிட்டு இருக்காங்க.  பெரும்பாலான மதங்களைப் பார்த்தோம் என்றால் ஆத்மாவும் ஆவியும் ஒன்றுதான் என்று சொல்கின்றன.  அவ்வளவு ஏன், அரிஸ்டாட்டல் கூட அதைத்தான் நம்புறாரு.”

நான் சற்று முன்பு சொன்னது போல, மனிதனுக்கு ஆத்மா என்ற ஒரு பெயரும் உண்டு அல்லவா?  அந்த அடிப்படையில் நமது சட்டமும் சரி, வெவ்வேறு மதங்களைச் சார்ந்த குருக்களும் சரி, மனிதனையும் ஆத்மாவையும் வெவ்வேறாகப் பார்ப்பதில்லை.  சட்டமும் நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.  அதற்கும் அதே  காரணம்தான்.”

“ஜோசஃப், ஆனால் எல்லா மதங்களும் ஆத்மாவில் நம்பிக்கை கொண்டுள்ளன என்று எப்படிக் கூற முடியும்?  எனக்கு ஆத்மா மீது ஆர்வம் இருக்கிறது.  ஆனால் நம்பிக்கை இல்லை என்று வைத்துக்கொள்வோம்.  அல்லது ஆத்மா மீது நம்பிக்கை இருக்கிறது.  ஆனால் ஈடுபாடு இல்லை என்று வைத்துக்கொள்வோம்.  இதை நம் நீதிமன்றமோ சட்டமோ ஏற்றுக்கொள்ளுமா?”

“ரஹீம், என்ன இப்படிச் சொல்லீட்ட?  கிட்டதட்ட எல்லா மதங்களுக்கும் ஆத்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு.  உங்க இஸ்லாம் மதத்திலும் ஆத்மாவுக்கு அழிவே கிடையாதுன்னு சொல்லப்பட்டிருக்கு.  ஆத்மாவை நீங்க ‘ரூஹ்’ என்று அழைக்கிறீங்க.  அவ்வளவுதான் வித்தியாசம்.  திருக்குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்குன்னா, இந்த ‘ரூஹ்’ இறைவனுடைய முழு நிர்வாகத்தில் இருக்கக்கூடிய ஒன்று.  மனிதர்களுக்கு இதைப்பற்றிய ஞானம் மிகவும் சிறிதளவே கொடுக்கப்பட்டிருக்கிறது.”

“அப்படின்னா, மற்ற மதங்கள் சொல்லும் கருத்து என்ன?”

“கிறிஸ்துவ மதமும் ஆத்மா என்பது தார்மீக வகையிலும் ஆன்மீக வகையிலும் தத்துவ ரீதியிலும் உடலோடு மிகவும் நெருக்கமுடையது என்கிறது.  கத்தோலிக்கர்கள் ஆத்மா என்பது மனிதனின் ஆன்மீகக்கோட்பாட்டின் சின்னம் என்று கருதுகிறார்கள்.  பகவத் கீதையிலும் கிருஷ்ணபகவான் ஆத்மாவைப் பற்றிக் கூறியிருக்கிறார்.  அதாவது ஆத்மாவுக்குப் பிறப்போ இறப்போ கிடையாது.  ஆத்மாவுக்கு அழிவும் கிடையாது.  உடல் இறந்த பின் ஆத்மா இறப்பதில்லை.  போதுமா ரஹீம்?”

“நன்றி ஜோசஃப்.  உன்கூட நேரம் கழிக்கிறது பல்கலைக்கழகத்துல விரிவுரை கேட்பது மாதிரி இருக்குது.”

“என்ன ரஹீம், அந்த அளவுக்கு நா உன்ன அறுத்துட்டேனா?”

“அப்படி சொல்லவில்லை ஜோசஃப்.  நிறைய தகவல்களைப் பெற முடிஞ்சிது.  அதைத்தான் சொன்னேன்.  இருந்தாலும் எனக்குச் சந்தேகங்கள் முழுமையாகத் தீரவில்லை.”

“ரஹீம், நல்லா கேளு.  நாம ஒரு விஷயத்தப் பற்றி அதிகமாக யோசிச்சிக்கிட்டே இருந்தா அந்த விஷயம் நம்மை நிம்மதியா வாழ விடாது.  எனக்கு இது பொழப்பு.  அதனாலச் செய்யுறேன்.  நீ உன்னை ரொம்ப வருத்திக்காத.  வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்.  பார்ப்போம் ரஹீம்.”

“சரி ஜோசஃப், மறுபடியும் சந்திப்போம்.  போயிட்டு வா.”  என்று கூறிவிட்டு, நான் ஜோசஃப் அமர்ந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே எதோ சிந்தனையில் இருந்தேன்.  ஜோசஃபிடம் இவ்வளவு விஷயங்களைப் பற்றிக் கேட்டேன்.  ஆனால் அவனுடைய கருத்தைக் கேட்காமல் விட்டுவிட்டேனே என்ற ஆதங்கம் என்னுள் குடிகொண்டது.   மீண்டும் அவனைச் சந்திக்கப் போகிறோம் என்று எண்ணுகையில் மனம் சற்று ஆறுதல் அடைந்தது.  என் முன் யாரோ இருவர் வந்து அமர்ந்தனர்.  இங்கு யாராவது அமர்ந்திருக்கிறார்களா என்று ஒரு வார்த்தை என்னிடம் கேட்டிருக்கலாம்.  கூடிய விரைவில் உலகத்தில் மரியாதை என்பது அகராதியில் மட்டுமே இருக்கக்கூடிய ஒன்றாகும் என்று சொன்னால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.  அவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுவிட்டு நான் புறப்பட்டேன்.

அன்றிரவு ஏனோ உள்ளமும் எண்ணமும் குழப்ப நிலையிலேயே இருந்தன.  காரணம் தெரியவில்லை.  ஜோசஃபுடன் நெருங்கிய ஒரு தொடர்பு ஏற்பட்டது போல் ஓர் உணர்வு.  ஜோசஃபுடன் பேசிக்கொண்டிந்த 2 மணிநேரம் எப்படித்தான் பறந்து போனது என்று எனக்கும் தெரியவில்லை.

மனைவி சுட்ட கோதுமை தோசை, நெல்லிக்காய் துவையலின் வாசம் வீடு முழுதும் நிறைந்து இருந்தது.   மோப்பம் பிடித்துக்கொண்டே அறைக்குச் சென்றேன்.  அசதியாக இருந்தது.  அதிகமாக யோசித்ததனாலோ என்னவோ தெரியவில்லை.  சாய்ந்த சில நொடிகளிலேயே நனவுலகம் பிரிந்தேன்.

ஜோசஃப் என் கண் முன் படுத்திருந்தான்.  அவனுடைய கண்கள் மூடியவண்ணம் இருந்தன.  அவனருகில் யாருமில்லை.  இடம் பார்ப்பதற்கு அவனுடைய வசிக்கும் அறைபோல் இருந்தது.  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த பாடலின் அதிக சத்தமும் அவனைப் பொருட்படுத்தியது போலத் தெரியவில்லை.  அப்பொழுதுதான் ஜோசஃபின் மனைவி அவனருகே வந்தாள்.  அவள் பதற்ற நிலையில் காணப்பட்டாள்.  சுவர்க்கடிகாரத்தையும் வீட்டு வாசலையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.  ஏதோ ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அவள் இருக்கிறாள் என்று மட்டும் எனக்குத் தெரிந்தது.

சில நொடிகளில் என் அறையில் நான் கண் விழித்தேன்.  என்னைத் தூக்கிவாறிப்போட்ட ஒரு காட்சி.  நான் படுத்திருந்த கட்டில் என் முன் காட்சியளித்தது.  என் மனைவியும் குழந்தையும் படுத்திருந்தார்கள்.  இரவு நான் சாய்ந்த அதே இடத்தில் என்னைக் காணவில்லை.  என் ஆத்மா தூங்கிக்கொண்டிருந்த என்னை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறதா?  ஆத்மாவுக்கு இவ்வளவு சக்தியா?  நான் இருப்பது மயக்க நிலையா அல்லது உறக்க நிலையா? ஒன்றும் புரியவில்லை.  இரவு அப்படியே கழிந்தது.

என் மனைவியின் கையில் இருந்த கண்ணாடிக் குவளை அவள் கை தவறிக் கீழே விழுந்து நொறுங்கிய சத்தம் என் கபாலத்தைச் சிதற வைத்தது.  என்னை எழுப்பியது என் மனைவிதான்.  என் ஆத்மா என்னைப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்துவிட்டதை எண்ணி வியந்தேன்.

ஜோசஃபுடைய வீட்டுக்கு அவசரமாகச் சென்றேன்.  வாசலில் நின்றுகொண்டு அவனை அழைத்தேன்.  பதில் வரவில்லை.  நீண்ட நேரம் ஆனது.  ஜோசஃபின் மனைவி, மேபல் வீட்டினுள் யாரிடமோ பேசும் சத்தம் மட்டும் கேட்டது.  “அவரு இப்ப மருத்துவமனையில இருக்காரு. அவருக்கு ராத்திரி முடியாமப் போச்சு.”

இதைக் கேட்டதும் மருத்துவமனைக்கு விரைந்தேன்.  ஜோசஃப் இருக்கும் அறைக்குச் சென்றேன்.  அவனால் பேச இயலாத நிலை.  மாரடைப்பினால் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அவன் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தான்.    வேதனையில் மருத்துவமனையை விட்டுக் கிளம்பினேன்.

நான் கண்டது கனவா? யாரிடம் கேட்பது?  யாரிடம் இதைப் பற்றியெல்லாம் பேசுவது என்று தெரியவில்லை.

ஒரு மாதம் கழிந்தது.  ஜோசஃப் பரிபூரணமாகக் குணமடைந்து வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான்.  அவனைப் பார்க்கச் சென்றிருந்தேன்.  நலம் விசாரித்த பிறகு, நான் கண்ட கனவைப் பற்றி அவனிடம் சொன்னேன்.

“ரஹீம், இது கண்டிப்பாகக் கனவு இல்லை.  ஆத்மா என்றால் என்ன என்று கேட்டுக்கொண்டிருப்பாயே? அந்த அனுபவம் உனக்கு மிக விரைவாகவே கிடைக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.”

“கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு ஜோசஃப்.” என்று நான் கேட்டுக்கொண்டேன்.

“இங்க பாரு ரஹீம், நாம் தூங்கும் போது நம் உடலை விட்டு நம் ஆத்மா பிரிவது சாத்தியம் என்று ஆய்வாளர்கள் சொல்லுறாங்க.  அதனால்தான் தூக்கத்துல விநோதமான விஷயங்கள் நமக்குத் தெரியுது.  நம்முடைய ஆத்மா வேற ஆத்மாக்களையோ மனிதர்களையோ பார்க்கும்போது அந்தக் காட்சிகள் நமக்கும் கனவுகள் மூலமாகத் தெரியுது.”  என்று சொல்லியவாறு ஜோசஃப் செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டே தன் கால்களை நீட்டி அமர்ந்திருந்தான்.

செய்தித்தாளின் பின்பக்கம் என்னை நோக்கியிருந்தது.  இறந்தவர்களின் படங்களையும் தகவல்களையும் கொண்ட இரங்கல் செய்திகளைத் தாங்கிய அந்தப் பக்கத்தை நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.  என்னுடைய புகைப்படம் தாளின் ஓர் ஓரத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தது.  என் புகைப்படத்துக்கு மேல் ‘2-ஆம் ஆண்டு நினைவு’ என்ற சொற்களும் அச்சிடப்பட்டிருந்தது.

சிரித்துக்கொண்டே நான் ஜோசஃபிடமிருந்து விடைபெற்றேன்.

நான் இன்னும் இறக்கவில்லை.  என் ஆத்மாவின் திசையறியாப் பயணம் மேலும் தொடர்கிறது…..  தேடலும் கூட.

ஆசிரியர் தொழிலில் 17 ஆண்டுகள். கவிதை, சிறுகதை எழுதுவதில் ஈடுபாடு. பேய்க் கதைகள் என்றால் என் மகள்களுக்குக் கொள்ளை ஆசை. எனவே, ஒரு திகில் நாவல் எழுதும் முடிவில் இருக்கிறார்.

4 COMMENTS

  1. சிறப்பான நடை. யாரும் தொட அஞ்சும் ஒரு கருப்பொருள். எனினும், மேலோட்டமாக கூற்ப்பட்டிருக்கிறதோ என நினைக்கிறேன். கதையில் பிடிப்பில் கொஞ்சம் தளர்வு தெரிகிறது.

  2. எளிய நடையில் வாசிக்க அற்புதமான அமைந்திருப்பது சிறப்பு…

  3. முதல் வாசிப்பில் குழப்பம். இரண்டாவதில் யுக்தியின் புரிதல். மூன்றாவது வாசிப்பில் யார், எங்கு, என்ன நடக்கிறதென்ற தெளிவு. நான்காவது வாசிப்பில் கதையின் ஓட்டத்தில் இணைந்து வியந்தேன், ரசித்தேன். பாராட்டுகிறேன்.

    மிக அருமையாக திட்டமிட்டு, காட்சிப்படுத்தி, ஒன்றி சிந்தித்தால்தான் கதை புரியும் என்று prove செய்து விட்டார் ஆசிரியர். அது அவர் சிரத்தையுடன், சிந்தித்து இதையெல்லாம் இப்படி காட்சிப் படுத்தினால்தான் நம்பகத்தன்மை உண்டாகுமென்று கதையை நகர்த்திச் சென்றிருப்பது மிக அற்புதம். சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு வியக்கும் வகையில் வடித்திருக்கிறார்.

    Hats off Sir..!

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here