(சிங்கப்பூரில் இளைஞர் குழுவொன்றின் மனப்பூர்வமான முயற்சி – ‘ஆதி’ குறும்படம். பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதை – ‘அஸ்வத்தாமா’. இந்த இரண்டு கதைகளும் ஏதோ ஓர் புள்ளியில் சந்திக்கின்றன. அதை , அலசி, விமர்சிக்கிறார் வித்யா அருண். இங்கு பகிரப்பட்டுள்ள குறும்படத்தை முழுமையாகப் பார்த்தபின், இவ்விமர்சனத்தைப் படித்தால், அதன் சுவாரஸயம் அதிகம்தான்!)

சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட ‘ஆதி’ என்ற குறும்படத்தை, சமீபத்தில் பார்த்தேன்.

அது ஒரு பிரிவு உபசார நிகழ்வு. அப்போது, ஓர் அறைக்குள் நடக்கும் உரையாடலாக காட்டப்படும் இந்தப் படத்தில், ஆதி என்ற முக்கிய கதாபாத்திரத்தை சுற்றி அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் அறிவியல், இலக்கியம், பூகோளம் என்று அவரவர் துறையில் வல்லுநர்கள். விடைபெற இருக்கும் ஆதி, தான் பத்தாயிரம் ஆண்டுகளாக நாடோடி வாழ்க்கை வாழும் ஒரு மனிதன் என்றும், தன் நீண்ட வாழ்க்கையில் பல விதமான கலாச்சாரங்களையும், பல நிலங்களில் வாழும் மனிதர்களையும் கடந்து வருவதாக அவர்களிடம் சொல்ல, அவர்களுக்கு அதிர்ச்சி. தான் பெரும்பாலும் தனிமையை விரும்புவதாகவும், பலவிதமான விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதிய இடத்தில் தன்னை புகுத்திக்கொள்வதாகவும் சொல்கிறார் ஆதி.

வழக்கமாக, ஆங்கில படங்களில் மட்டுமே பார்க்க முடிகிற வித்யாசமான சிந்தனைக் களத்துக்காகவும், உரையாடல்களின் வழி பகிரப்படும் அறிவியல், வரலாற்றுத் தகவல்களுக்காகவும் இந்தக் குறும்படத்தைத் தாராளமாகப் பாராட்டலாம். ஆனால், இக்கதையில், நம்பிக்கை சார்ந்த விஷயங்களைத் தீவிரமாக ஆராயாமல், எதையாவது சொல்லிக் கடந்துவிடலாம் என்ற அரைகுறை மனநிலையைப் பார்க்க முடிந்தது.

இந்தக் குறும்படத்தில், ‘கிருஷ்ணராக, சோழ சாம்ராஜ்யத்தில் ஒரு கட்டிடக்கலை வல்லுனராக, புத்தரின் சிஷ்யராக நான் இருந்திருக்கிறேன்’ என்று சொல்லும் ஆதி கதாபாத்திரம், வரலாறு, கட்டுக்கதைகளாய் அமைக்கப்படுவதைக் கண்டும், தான் பெரிதாய் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வது வேடிக்கைதான். அரிதான பிறவியை வைத்துக்கொண்டு அலைந்த இம் மனிதன், அதிசயமே ஆனாலும், ஒன்றும் சாதிக்கவில்லையோ என்று தோன்றியது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, தில்லி பல்கலையில் பேராசிரியராகவும், வார்சா பல்கலையில் இந்திய தத்துவத்தையும் கற்பித்தவர். ராமானுஜரை பற்றியும், இயேசுவை பற்றியும் புத்தகம் எழுதியவர். சமீபத்தில் படித்த இவரது சிறுகதைத் தொகுப்பில், ‘அஸ்வத்தாமா’ என்ற கதையைப் படித்தேன். இந்த கதையை அவர் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னே எழுதியிருக்கக்கூடும்.

கதையில் ஒரு முதியவர், அதிகாலையில் ஒரு சில நாட்களில் மூன்று மணிக்கும், ஒரு சில நாட்களில் நான்கு மணிக்கும் எழுந்திருக்கிறார். முதுமைபடுத்தும் பாட்டில், காலைக்கடன்தான் அவரை எழுப்பிவிடுகிறது. காலையில் மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைப்பயிற்சிக்கு செல்லும் அவர், கருப்பு அங்கி அணிந்த , வயதை நிர்ணயிக்க முடியாத, ஒரு மனிதரை சந்திக்கிறார்.

அந்த மனிதர், துரோணரின் மகன், ‘அஸ்வத்தாமா’. பாண்டவர்களின் படை வீட்டுக்குத் தீ வைத்து அவர்களை அழித்ததால், கிருஷ்ணரின் சாபத்துக்கு ஆளானவர். கிருஷ்ணரின் முதல் சாபம், அஸ்வத்தாமாவுக்கு சாவே கிடையாது!

அஸ்வத்தாமா, தான் விரும்பிய மனிதர்கள் அத்தனை பேரும் போன பின்னரும், தான் மட்டும் இருப்பதால், இந்த சிரஞ்சீவியாய் இருக்கும் நிலை எத்தனை துயரமானது என்று விவரிக்கிறார். இந்த புள்ளியில் மட்டும் – ஆதி குறும்படமும், இந்தச் சிறுகதையும் ஒரே சிந்தனை ஓட்டத்தில் இருக்கின்றன.

இரண்டாவது சாபம், திட உணவாய் எதையும் சாப்பிட முடியாது. ஆனால் பசி என்ற உணர்வு எப்போதும் இருக்கும். நாம் நீத்தாருக்கு நீரும், எள்ளிட்ட பிண்டமும் படைப்பதை நினைத்துக் கொண்டேன்.

மூன்றாவது சாபம், நாடோடி வாழ்க்கைதான் வாழ வேண்டும். ‘விசா இல்லாமல் எல்லா நாட்டுக்கும் போய்வருவது வரம்தானே?’ என்று கதையில் வரும் முதியவர் கேட்கிறார். அஸ்வத்தாமா சொல்வார், “நினைத்த நேரத்தில் என்னால் ஒரு இடத்துக்குப் போக முடியாது. என் மனம், ஒரு நிலையில் இல்லாமல் அலைந்துகொண்டே இருக்கும். இது எனக்கு சாபம்தான்!”

மன்னர்கள் ஆண்ட காலத்துக்கும், மக்களாட்சிக்கும் ஒன்றும் வேறுபாடு இல்லை என்பார் அஸ்வத்தாமா. ‘நாற்காலி சண்டை எப்போதும் இருந்திருக்கிறது. கலை வியாபாரம், கல்வி, வியாபாரம் எல்லாமும் எப்போதும் இருக்கிறது’ என்பார்.

ஆதி குறும்படம், ஒரு காலத்தில் மக்கள் நீண்ட ஆயுளோடு, தங்களின் மூளையை அதிகம் பயன்படுத்தும் சமூகமாக இருந்திருக்கிறார்கள் என்று பழைய காலத்தின் பெருமையை உயர்த்திப் பேசுகிறது. முதியவரான பெண் பாத்திரத்தின் அப்பா, ஆதி என்று முடியும் இக்குறும்படத்தின் படத்தின் முடிவோ, நம்பும்படியாக இல்லை.

இந்திரா பார்த்தசாரதி, தன் கதையில், அஸ்வத்தாமா குருக்ஷேத்திர போரின் நினைவுகளால், இரவில் ஒரு வித வெறி ஏற்படுவதால், மனிதர்களே இல்லாத இடத்தில்தான் இரவில் தங்குவதாகச் சொல்கிறார். தன் சாபவிமோசனத்திற்காக யாரையும் கொல்லாமல் நகரும் ஒவ்வொரு இரவுக்கும், ஒரு பூவை, தன் பையில் சேர்ப்பதாகச் சொல்கிறார். எங்கும் நெருடாமல், புராணக்கதைகளோடு இந்தப் பிரார்த்தனை ஒத்துப் போகிறது.

திருவீழிமிழலை தலத்தில் திருமால் ஆயிரம் மலர்களை கொண்டு சிவபெருமானை அர்ச்சித்ததாகத் தலப் புராணம் சொல்கிறது. தவறிய ஒரு கதாபாத்திரம் மனம் திருந்தும் அறத்தைப்பற்றிய பார்வை அது. ‘பிறவி பெருங்கடல் நீந்த, இறைவனடி மட்டுமே துணை’ என்று திருக்குறள் சொல்லும் அதே விஷயத்தைத்தான் இந்திரா பார்த்தசாரதியும் சொல்கிறார்.

கதையின் முடிவில் முதியவர் அயர்ந்து தூங்கிவிடுகிறார். வாசலில் அழைப்புமணி அடிக்க, வரும் வேலைக்காரப்பெண் ஒரு பை நிறைய பூக்கள் கதவில் மாட்டி இருந்ததாகச் சொல்கிறாள். கதைப்படி, அஸ்வத்தாமா சாப விமோசனம் பெற்றுவிட்டார் என்ற அர்த்தத்தில், பை நிறையப் பூக்களைப் பார்ப்பார் முதியவர். கற்பனையே ஆனாலும், சிந்தனையின் நோக்கத்தில், ‘வெள்ளை பூக்கள், உலகம் எங்கும் மலர்கவே’ என்ற பாடலை பாராட்டுவோருக்கு, இந்தச் சிந்தனையும் அதே நோக்கத்தில்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பல்வேறு மனிதர்களின் அறிவுப் பகிரல்களை உரையாடலுக்குள் புகுத்தி, முப்பத்தெட்டு நிமிடங்களாக நீளும் இந்தக் குறும்படத்தை, இன்னும் குறைந்த நேரத்தில், ‘அஸ்வத்தாமா’ போன்ற இன்னும் அழுத்தமான, ஆதாரமான சிறுகதைகளைக்கொண்டே எடுத்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது!

புகைப்படங்கள்: ‘ஆதி’ குறும்படக்குழு

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். நல்ல வாசகர். விமர்சகர். கட்டுரைகள், கதைகள் சார்ந்து மேம்பட்டு வருகிறார்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here