கேரளாவில் ஒரு வாரம் குடும்பத்தோடு ஊர் சுற்றிவிட்டு, சிங்கை வந்த அடுத்த நாளே, வாய் வழியாகவும் வேறு வழியாகவும் மாறி மாறி என் உடல் சைரன் ஒலி எழுப்பத்தொடங்கியது. பெட்டியில் எடுத்து வந்த புது உடைகள், அப்பளம், ஊறுகாய் உள்ளிட்ட  எதையும் வெளியே எடுக்கக்கூட நேரம் இல்லை.

சஹாராவின் வெயில் நாளைப்போல, உடலின் வெப்பநிலை நாற்பதில் நின்றது.

புன்னத்தூர் கோட்டையில் ஒரே இடத்தில் பார்த்த அறுபத்து ஐந்து யானைகளையோ, ஆலப்புழாவில் படகுவீட்டில் சுற்றித்திரிந்த சந்தோஷத்தையோ, குருவாயூர் கிருஷ்ணனைக் கண்ணாரக் கண்ட புண்ணியத்தையோ எண்ணிப்பார்க்க முடியாமல், அப்பர் சொல்வதுபோல, ‘குடரோடு துடக்கி முடக்கியிட்ட’ காய்ச்சலைச் சபிக்காமல் என்ன செய்வது?

என்ன சாப்பிட்டாலும் அதிகபட்சம் பத்து நிமிடங்களில் வெளிவந்த சுழற்சிகள், நான்கு நாட்களாகத் தொடர்ந்தன. காய்ச்சல் மாத்திரைகளை வேண்டிய அளவு கபளீகரம் செய்துவிட்டேன்.

பொது மருத்துவரிடம் போனோம். அவர் இப்போதுதான் படித்து முடித்தவர் போலிருந்தார்! ஆண்டிபயாடிக் மாத்திரைகளைத் தருவார் என்று நினைத்தோம்.

“நாடித்துடிப்பு சீராக இல்லை. கூ டெக் புவாட்டின் அவசரநிலைப் பிரிவிற்குப் போய்விடுங்கள்” என்று ‘கோமளாஸுக்கு போய்விடுங்கள்’ என்று சொல்வதைப்போலச் சொல்லிவிட்டார். புதிதாக எங்கள் பேட்டையில் துவக்கப்பட்டது ‘கூ டெக் பூவாட்’ மருத்துவமனை. புத்தம் புதிய மருத்துவமனையின் திருக்கதவு தாள் திறந்ததும், போய் இடம் பிடிப்பது பெரும் பாக்கியம்தான் என்று நினைத்தபடி போனேன்.

மருத்துவமனையில் தொடக்க நிலை சோதனைகளுக்குப் பின்னர் ‘உள்நோயாளி’ப் பிரிவில் என்னை அனுமதித்துவிட்டார்கள். பிரசவத்துக்குப் போகும்முன்னர் பார்த்த அதே பார்வையோடு, இரவு இரண்டு  மணிக்கு, என் கணவருக்கு விடைகொடுத்தேன். வீட்டில், ஒன்றரை வயது மகனை பணிப்பெண்ணோடு விட்டுவிட்டு வந்திருந்தோம்.

இரவு தூங்க முடியாமல் தூங்கி, காலையில் கிரீச்சிட்ட திரைச்சீலை விலகல்களில் நான் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தேன். தன்னந்தனியே இருக்க இருக்க, பயம் மட்டுமே ஒரே துணையானது. ரத்த முன்மாதிரிக்கு அடிக்கடி குப்பிகளில் ரத்தத்தை நிரப்பினர். எனக்குள் நோயாக அவதாரம் எடுத்த பேராத்மா, டெங்குவா அல்லது வேறு ஏதாவது வகை காய்ச்சலா என்ற ஆராய்ச்சி முடிவு தெரிய, நான்கு நாட்களாவது ஆகும் என்று சொன்னார்கள்.

காலையில் எனக்கு உப்பு போடாத ஓட்ஸ் கஞ்சி வந்தது.

காலை எட்டுமணிக்கு, கணவர் தூக்கமில்லாத கண்களும், என்றைக்கும் இல்லா நெற்றித் திருநீறும், குங்குமமுமாக என்னைப் பார்க்க வந்தார். அவருடைய  மேலாளருக்கு, அலாவுதீன் கதையில்வரும் ஜீனியைப்போல, கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு பிறகு அவர், என்னைத் தனியாக விட்டுவிட்டு அலுவலகம் போகவேண்டிய சூழல்.

காய்ச்சலின் தாக்கத்தினாலும் கொடுக்கப்பட்ட அதிவீரிய மருந்துகளாலும், கசப்பை  மட்டுமே என்  நாக்கு உணர்ந்தது. எதிர்க்கட்டிலில் இருந்த முதிய பெண்மணி, இந்தியர். அவருடைய வீட்டிலிருந்து ஆட்கள் வருவதும் அவரோடு பேசிக்கொண்டிருப்பதுமாக இருந்தனர்.

அந்த முதாட்டி, தொடக்கப்பள்ளிப் பிள்ளைகளை மாலை நேரங்களில் பராமரிப்பதாய்ச் சொன்னார். அவருடைய சொந்தங்கள் அவருக்கு கைகொடுத்து உதவினர். தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் “குழந்தைங்களுக்கு என்ன செஞ்சு கொடுத்தீங்க? சமாளிக்க முடியுதா?” என்று அக்கறையோடு கேட்டவாறு இருந்தார்.

அந்த மூதாட்டியின் கணவரும் பக்கத்துக்கு வார்டில்தான் இருந்தார் என்பது துரதிர்ஷ்டமான சுவாரஸ்யம். அவருக்குக் காலில் எலும்பு முறிவு. இவருக்கோ உயர் ரத்த அழுத்தம். “எங்க வீட்டுக்காரரை நினைச்சு கவலையா இருந்துச்சு. சரியா தூங்க முடியல. இப்படி ஆஸ்பத்திரில வந்து கிடப்பேன்னு நினைக்கல” என்றார். என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

எனக்கோ என் குழந்தை சித்தார்த்தின் முகம் மட்டுமே மனத்தின் முன் நின்றது. மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டுவரக்கூடாது என்று சொல்லிவிட்டனர். என் மடியில் படுத்தே தூங்கும் குழந்தை. ஒவ்வொரு நாளும் பாட்டுப் பாடித் தூங்க வைப்பேன். என் வீட்டுப் பணிப்பெண் தீபா, தினமும் கைபேசியில் அழைத்துக் கவலைப்படாமல் இருக்குமாறு சொல்லிக்கொண்டிருந்தார்.

நான்கு  நாட்களுக்குப்பிறகு, எனக்கு டெங்கு இல்லை என்பது உறுதியானது. ஆனால் ஜுரம் குறையாததால், அது ‘மோசமான சால்மோனெல்லா தாக்குதல்’ என்றார்கள். சுத்த சைவமான எனக்கு, இந்தியப் பயணத்தின்போது, வெளியே  சாப்பிட்ட இடங்களில்  உள்ள சுகாதார குறைச்சலால் அந்தக் காய்ச்சல் வந்திருக்கலாம். முதல் கட்ட சோதனை முடிவுகள் தெரிந்தபிறகு, எனக்கு அடுத்த கட்ட சோதனைகள் ஆரம்பமாகின.

அதற்கு பிறகு, என்னைப் பார்க்க வந்த தாதிகள் அனைவரும் முகமூடி அணிந்தே வந்தார்கள். என் படுக்கைக்கு நேரே, ‘சால்மோனெல்லாவால் பாதிக்கப்பட்டவர்’ என்ற பதாகையை வைக்கப்பட்டது. யாருடைய புன்னகையும் என் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏற்கனவே, தனியாய் இருக்கிறோம் என்ற சுய பச்சாதாபத்தில் தவித்த என்னை, இந்த அறிவிப்புகள் மேலும் சோகத்திற்குள்ளாகின. பலரும் ஒரு வார்த்தைக்கு மேல் பேச முடியாமல், அவரவர் வேலையில் கவனத்தோடு ஓடிக்கொண்டிருந்தனர்.

ஒரு வாரத்துக்கும் மேலாகியிருக்கும்.

ஒரு நாள் திருமதி சாந்தா, காலைநேரத் தாதியாக வந்தார். “என்னடா செய்யுது? சாப்டீங்களா?” என்று அவர் அன்பொழுகக் கேட்ட அந்தப்பொழுதில், என் கண்ணிலிருந்து கண்ணீர் தானாகக் கொட்டத் தொடங்கியது.

“சீக்கிரம் வீட்டுக்குப் போய்டலாம். இன்னும் ஜுரம் விடலியே. வீட்ல சின்னப்பிள்ளை இருக்குல்ல. காய்ச்சல் இறங்குனதும் போலாம்” என்று எனக்கு ஆறுதல் கூறினார். அவர் என்னோடு சகஜமாகப் பேசப்பேச, மனம் திறந்து பலவற்றையும் பேசினோம். அவர் தன் வீட்டுக் கதைகளையும், இந்தியாவிற்குத் தான் போனதேயில்லை என்பதையும் சொன்னார்.

படுக்கையிலேயே இருந்ததால் கால்கள் முற்றிலும் சோர்ந்து போய், நின்ற முயற்சி செய்தால் மயக்கம் வந்தது. என்னைத் தாங்கிப் பிடித்து, குளிக்க உதவினார். ஒரு தாயாக, நான் என்னை நல்லபடியாகத் தற்காத்துக்கொள்ள வேண்டியதன்  அவசியத்தை வலியுறுத்தினார். லேப்டாப், கைப்பேசிகளை முற்றிலுமாக நகர்த்தி ஓரமாக வைத்து, என்னை முழு ஓய்வு  எடுக்கச் சொன்னார்.

என்னைப் பெற்றவர்களின் பிரார்த்தனைதான், தனியாய்த் தவித்த எனக்கு அக்கறையாய் உதவும்  ஒருவரைப் பக்கத்தில் கொண்டுவந்து நிறுத்தியது என்று நினைத்துக் கொண்டேன். “உன்  வயசுல எனக்கு  ஒரு பொண்ணு  இருக்கு” என்று சொன்னவர், அன்பால் என் தாயானார். என்னைப்போலப் பலருக்கும் அவர் உதவி இருக்கிறார் என்பதை அவருடைய பேச்சிலிருந்து நான் அறிந்து கொண்டேன். சீன, சைவ வகை உணவுகள் சுத்தமாக என் நாக்கில் சேராததை கண்டவர், இந்திய சமையல்காரரிடம் சொல்லி, ரசமும், காய்கறியும் செய்து அனுப்ப வைத்தார்.

‘அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை’ என்பார்கள். எங்கோ நாங்கள் செய்த கொடைதான், என் தலைக்கு மேல் குடையாய் எனக்கு நிழலானது.

பதினோரு நாட்களுக்கு பிறகு வீட்டுக்குப் போனதும், நான் வந்தது நிஜம்தானா என்ற குழப்பத்தில், மெதுவாக என் கன்னத்தைத் தடவிய என் மழலையை, இறுக அணைத்துக் கண்ணீர் விட்டேன்.

எது நடந்தாலும் அரவணைத்து, ரத்தபந்தம் இல்லாவிட்டாலும் நம்மீது  அன்பு காட்டுபவர்களைக் கொண்ட சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையும் உடல்நலத்தில் இனியொருமுறை பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற தற்காப்புத் தீர்மானமும் இந்த நிகழ்ச்சி நடந்து ஐந்து வருடங்கள் ஆனபின்பும் உயிர்ப்போடு மனதில் இருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். நல்ல வாசகர். விமர்சகர். கட்டுரைகள், கதைகள் சார்ந்து மேம்பட்டு வருகிறார்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here